ட்டவிரோத மதமாற்றுத் தடை அவசரச் சட்டம்  (Prohibition of Unlawful Conversion of Religion Ordinance ) 2020 என்ற சட்டத்தை பாஜக ஆளும் மாநிலமான உத்தரப் பிரதேசம் சமீபத்தில் நிறைவேற்றியது.  அதனைத் தொடர்ந்து, மத்திய பிரதேச மாநிலமும் இச்சட்டத்தை அவசரச் சட்டமாகக் கொண்டுவந்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் இந்தச் சட்டம் நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் கடந்த ஓரு மாதத்தில் மட்டும் சுமார் 14 வழக்குகளில் 51 பேரைக் கைது செய்துள்ளது உ.பி. அரசு. அதில் இன்னுமும் 49 பேர் சிறையில் உள்ளனர்.

மத மாற்றத்திற்கு எதிரான சட்டம் என்ற பெயரில்  உ.பி-யில் ஆளு பாஜக அரசால் அறிவிப்க்கபட்டிருந்தாலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாக இருக்கிறது இந்தச் சட்டம். இந்தச் சட்டத்தை அவசரச் சட்டமாகக் கொண்டு வந்துள்ளது யோகி ஆதித்யநாத் அரசு.

படிக்க :
♦ அமர்த்தியா சென் : மாற்றுக் கருத்துக்களை ஒடுக்கி வரும் மோடி அரசு !
♦ ” லவ் ஜிகாத் ” சட்டத்தை அமல்படுத்தும் பாஜக மாநில அரசுகள் !

அமெரிக்காவில் கருப்பினர்களுக்கும், ஜெர்மனியில் யூத மக்களுக்கும் எதிராக கொண்டுவரப்பட்ட சட்டங்களைப்போன்று கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்தன்மை கொண்டது இச்சட்டம். சிறுபான்மை மக்களை ஒடுக்கி அவர்களை அச்சத்தில் ஆழ்த்துவதோடு, மத நல்லிணக்கம் பேணும் பெரும்பான்மை மதத்தினரையும் அச்சுறுத்துகிறது இச்சட்டம்.

கட்டாய சட்டவிரோத மத மாற்றத்திற்கு எதிரான சட்டம் என்று சொல்லப்பட்டாலும், உத்தரப் பிரதேசத்தில் இது அழைக்கப்படும் பெயர் லவ்-ஜிகாத் தடுப்புச் சட்டம்தான்.

லவ் ஜிகாத்

லவ் ஜிகாத் என்று சொல்லப்படுவது இந்து பெண்களை முஸ்லிம் ஆண்கள் காதலிப்பது போல் நடித்து அவர்களை திருமணம் செய்து மதம் மாற்றம் செய்வதுதான் என்கின்றன சங்க பரிவார அமைப்புகள். மேலும், இத்தகைய மதமாற்றத்தைத் தடுத்து இந்து பெண்களின் நலன் காக்கவே உத்திரபிரதேச அரசு லவ் ஜிகாத்க்கு  எதிரான  லவ் ஜிகாத் எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது என்று இச்சட்டத்திற்கு நியாயம் கற்பிக்கின்றன.

ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்டம், 18 வயதுக்கு மேலான ஆணும், பெண்ணும் அவரவரது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் உரிமையை அனைவருக்கும் வழங்கியிருக்கிறது. மத நடவடிக்கைகளுக்கான சுதந்திரத்துக்கும் (Freedom of Religious acts), கண்ணியம் மற்றும் சமத்துவத்தைப் பாதுகாக்கும் அரசியலமைப்புக் கொள்கைகளுக்கும் விரோதமாக இருக்கிறது.

தனது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்துக் கொள்ள அனைவருக்குமான உரிமையை அரசியல்சாசன சட்டம் வழங்கியிருந்தாலும், இந்த புதிய லவ் ஜிகாத் எதிர்ப்பு அவசரச் சட்டத்தின் படி ஓரு இந்துப் பெண் முஸ்லிம் ஆணை திருமண செய்ய வேண்டுமானால் ஓரு மாதத்திற்கு முன்பே ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதிப் பெற்றிருக்க வேண்டும். அப்படியில்லை எனில் அது சட்டவிரோத திருமணமாகக் கருதப்படும். இதை மீறி திருமணம் செய்யும் ஆணுக்கு 5 வருட சிறைத் தண்டனையும் ரூ. 15,000 அபராதமும் செலுத்த வேண்டும்.

உண்மையில் இந்தச் சட்டம் கட்டாய மத மாற்றத்தைத் தடுப்பதற்காக கொண்டுவரப்படவில்லை என்பதை இச்சட்டம் உத்தரப் பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப் பட்டதிலிருந்தே புரிந்து கொள்ளலாம். இச்சட்டம் நடைமுறைக்கு வரும் முன்பே திருமணம் செய்து கொண்ட இந்துப் பெண் – முஸ்லீம் ஆண் தம்பதியினர் திருமணத்தைப் பதிவு செய்யச் சென்ற போது அங்கு வந்த இந்து அமைப்பால் தாக்கப்பட்டு, முசுலீம் கணவரும் அவரது சகோதரரும்  இரண்டு வாரங்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்தப் பெண்ணை அரசு காப்பகத்தில் வைத்து தொல்லை கொடுத்தனர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக அந்தப் பெண்ணின் கரு கலைந்தது. இது ஒரு உதாரணம் மட்டுமே, உத்தரப் பிரதேசத்தில் இச்சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட கைதுகள் அனைத்தும் இத்தகைய பின்னணியைக் கொண்டவையே.

சட்டமும் சமூகநீதியும்

நம் நாட்டில் சாதி, மத மறுப்புத் திருமணங்கள் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாகவே நடக்கின்றன. இத்தகைய மதமாற்றத் தடைச் சட்டங்கள் இத்தகைய திருமணங்களையும் தடுத்து நிறுத்தும் வேலையையே செய்யும். மேலும் சிறுபான்மைச் சமூகத்தினரை அடக்கி ஒடுக்கவும் இது வழிவகை செய்கிறது. மேலும் பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்று முன்னேறும் சூழலிலும் கூட அவர்களது வாழ்க்கையை அவர்களே தீர்மானிப்பதை இச்சட்டம் தடை செய்கிறது.  இதனை நோக்கமாகக் கொண்டே சங்க பரிவார அமைப்புகள் இச்சட்டத்தைக் கொண்டுவந்துள்ளன.

கூடுதலாக, உத்தரப் பிரதேச போலீசு இச்சட்டத்தை அமல்படுத்துவதில் குண்டர்களைப் போலவே நடந்து கொள்கிறது. 1961-ம் ஆண்டில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஆனந்த நரேன் முல்லா, இந்திய காவல் துறையை ஓரு “ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் கும்பல்” போல் நடந்து கொள்வதாகக் குறிப்பிட்டார்.

உ. பி அரசாங்கம் அத்தகைய அவதானிப்புகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதில் உயர்நீதிமன்றத்தின் கருத்து காவல்துறையின் செயல்திறனைக் குறைத்து மதிப்பிடக்கூடும் என்ற அடிப்படையில் நீதிபதி ஆனந்த நரேன் முல்லாவின் கருத்தை நீதிமன்றம் நீக்கியது.

படிக்க :
♦ ஹிட்லரின் நியூரெம்பர்க் சட்டங்களின் மறுவடிவம்தான்  ‘லவ் ஜிகாத்’ தடைச் சட்டம் !
♦ முசுலீம்கள் பசுக்களை வளர்ப்பதும் ’ லவ் ஜிகாத் ‘ தானாம் !

ஆனால் எதார்த்தத்தில் நீதிபதி ஆனந்த நரேனின் கருத்துக்களை உண்மை என்றே போலீசு நிரூபிக்கிறது. அதற்கு லவ் ஜிகாத் தடுப்புச் சட்டங்களை செயல்படுத்தும் போலீசின் செயல்முறைகள் நல்ல சான்றாக அமைகின்றன.

இச்சட்டமானது எந்தவித ஜனநாயக கொள்கையுடனும் உடன்படாமல் மதத்தின் பெயரால் பாகுபாட்டை வளர்க்கவும் முசுலீம் மதம்சார்ந்த மக்களை தவறானவர்களாக சித்தரிக்கவும் முயல்கிறது. இந்த சட்டமானது இந்தியாவின் மதச் சார்பற்ற தன்மையையும் இறையாண்மையையும் கேள்விக்குட்படுத்துகிறது.

இந்திய சமுதாயத்தின் பன்முகக் கலாச்சார தன்மையை சீர்குலைப்பதாகவும், இயற்கை நீதிக்கு புறம்பானதாகவும் இச்சட்டம் இருக்கிறது. இந்திய அரமைப்பில் இது போன்ற சட்டங்கள் சமூகத்தை பின்னுக்கு தள்ளுவதோடு மட்டுமில்லாமல் அடக்குமுறைகளுக்கும் வழிவகுக்கும் தன்மையைக் கொண்டது.

உ.பி, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து பாஜக ஆளும் மாநிலங்களான அரியானா, அசாம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் இச்சட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சமூக நீதியையும், அரசியல் சாசனத்தையும் காக்க வேண்டுமெனில், இத்தகைய சட்டங்களுக்கு எதிராகப் போராட வேண்டியது அவசியமாகும்.

நன்றி : National Herald , Article-14

சிந்துஜா
சமூக ஆர்வலர்

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க