புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்தில் ஒரு இளைஞரின் புகைப்படம் அதிக கவனத்தைப் பெற்றது. ‘இரத்தத்தை உறையவைக்கும் கடுங்குளிரில், மேலாடையின்றி, ஒருவர், தனது முதுகில் புல்வாமா வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களின் பெயர்களையும், வந்தே மாதரம் என்றும் பச்சை குத்தியிருந்த’ புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இந்த படத்தினை சமூக ஆர்வலர் ஜாகிர் தியாகி (Zakir Tyagi) தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு நான் (அலிஷன் ஜாஃப்ரி) பார்த்த ஒரு கோரமான காணொலியை இந்த புகைப்படம் எனக்கு நினைவூட்டியது. ஆனால், இந்த படத்தில் உள்ள நபரின் முகம் தெரியாததால் நான் ஜாகிரை அணுகினேன். இதை அவர் Lallantop-லிருந்து எடுத்ததாக தெரிவித்தார். பின்னர் இந்த படத்தை எடுத்தது பி.டி.ஐ.யின் புகைப்பட பத்திரிகையாளர் ரவி சவுத்ரி என்று தெரிந்ததும் அவரை நான் தொடர்புகொண்டேன். அப்போதுதான் இந்த படத்தில் உள்ள நபர் விஜய் இந்துஸ்தானி என்பது உறுதியானது.

படிக்க :
♦ இன்றைய பாசிச நிலை குறித்து மோடியின் முன்னாள் பக்தர் !
♦ காவி பயங்கரவாதம் : முன்னாள் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கின் ஒப்புதல் வாக்குமூலம் !

விஜய் தனது முகநூல் பக்கத்தில், ஏபிபி நியூஸ், ஆஜ் தக், ஜீ நியூஸ், நியூஸ் 24 ஆகியவற்றின் வீடியோக்களை பகிர்ந்துள்ளார். இந்த சேனல்களில் விவசாயி தலைவர் ராகேஷ் டிக்காய்ட்டுடன் பேசுவதை நாம் காணமுடியும். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து அரசாங்கத்திற்கு தனது இரத்தத்திலேயே கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். தனது மார்பில் “நாங்கள் CAA, NRCயை ஆதரிக்கிறோம்” என்ற வாசகத்தை பச்சை குத்தியுள்ள விஜய், இப்போது அதனை வெளிகாட்ட விரும்பவில்லை. அதனால், அவ்வாசகம் பொறித்திருந்த இடத்தில் “நான் விவசாயிகளை நேசிக்கிறேன்” என்ற வாசகத்தை ஒரு காகிதத்தில் எழுதி ஒட்டியிருப்பதை காணமுடியும்.

2020-ம் ஆண்டு தொடக்கத்திலும், விஜய் இந்துஸ்தானியுடைய வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில் ஷாகின் பாக்கில் CAA-விற்கு எதிராக நடத்தப்பட்டு வந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை 48 மணி நேரத்திற்குள் போராட்ட களத்திலிருந்து வெளியேற வேண்டும் என்றும் அவ்வாறு வெளியேறாவிட்டால், அதன் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார் விஜய்.

CAA-க்கு எதிரான போராட்டம் பெருமளவில் வெடித்தபோது வடகிழக்கு டெல்லியின் பல பகுதிகளில் முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதலும் கும்பல் வன்முறையும் அதிகரித்தது. கலவரத்தின் மையப்பகுதியான மாஜ்பூரில் நடந்த வன்முறை வெறியாட்டத்தில் விஜய் இந்துஸ்தானி முஸ்லீம்களை அச்சுறுத்தி வந்ததை நாம் காணமுடியும். அதில் அவர், “பாகிஸ்தானை சேர்ந்த நீங்கள் டெல்லியை விட்டு ஓடிவிடுங்கள் இல்லையேல், மோடிஜி மற்றும் விஜய் இந்துஸ்தானி உங்களை வெளியேற்றிவிடும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்று முஸ்லீம்கள் மீதான அவதூறு பிரச்சாரத்தில் இறங்கினார் விஜய் இந்துஸ்தானி.

அவரது முகநூல் பக்கத்தில் கடந்த டிசம்பர்-பிப்ரவரி மாதம் வரை பதிவிட்டிருந்த அனைத்து பதிவுகளையும் நீக்கியிருக்கிறார். ஆனால் பிப்ரவரி 22 ஆம் தேதி அவர் பதிவிட்டிருந்த வீடியோ ஒன்றில், “யாராவது இந்தியாவில் வாழ விரும்பினால் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழங்குங்கள்” என்று விஜய் கூறும் வீடியோ ஒன்றை நாம் காணலாம்.

விஜய் ஹிந்துஸ்தானி

விஜய் இந்துஸ்தானின் சமூக ஊடக Profile-ஐ மேலோட்டமாக பார்த்தாலே, அவரது பல தவறான தகவல்களையும், இஸ்லாமிய வெறுப்பு பதிவுகளையும் நாம் காணமுடியும். மேலும், அவர் லவ் ஜிகாத்துக்கு எதிரான சட்டங்களுக்கு ஆதரவாக பிரச்சாரமும் செய்துள்ளார். CAA-க்கு ஆதரவளித்து விஜய் பதிவிட்டிருந்த பதிவுகளை தீவிர வலதுசாரி தீபக் ஷர்மா பகிர்ந்திருக்கிறார். இப்படி இந்துத்துவா பிரச்சாரத்தில் தீவிரமாக செயல்பட்டிருந்த விஜய் அண்மையில், போராடும் விவசாயிகளுக்கு எதிராக பதிவிட்டிருந்த தீபக்கின் ட்விட்டினை கண்டித்து விமர்சித்துள்ளார்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிவரும் விவசாயிகளை பல இந்துத்துவா கும்பல் அச்சுறுத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு, இந்துத்துவ சித்தாந்தவாதியான ராகிணி திவாரி, “மீண்டுமொரு ஜஃப்ராபாத் பார்க்க நேரிடும், CAAக்கு எதிராக போராடியவர்களுக்கு நடந்தது போன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிக் கொண்டு வருபவர்களுக்கும் நடக்கும்” என்று எச்சரித்தார்.

திவாரியின் வெறுப்பு பேச்சு, வடகிழக்கு டெல்லி கலவரத்தின்போது போராடுபவர்கள் மீது அவர் கற்களை வீசும் வீடியோக்கள், அவர் விடுத்த கொலைமிரட்டல்கள் ஆகியவை சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், முகநூலில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பின் தொடர்ந்துவரும் வலதுசாரி செல்வாக்குள்ள விஜய் இந்துஸ்தானி என்ற விஜய் குமார், மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்ட களத்தில் நிற்பது என்பது நம்பமுடியாத ஒன்று.

மோடி அரசாங்கத்தின் மீதான விஜய்யின் அதிருப்தியும், அவரின் இந்த மாற்றத்திற்கான காரணம் என்ன என்பதையும் பார்க்கலாம்.

தீவிர வலதுசாரி அமைப்புடன் தொடர்பு கொண்டுள்ள நீங்கள், எப்படி விவசாயிகள் போராட்டத்தை ஆதரிக்கிறீர்கள்?

விஜய்: நான் அந்த அமைப்பில் இருந்தேன். ஆனால் விவசாயிகளை காலிஸ்தான் ஆதரவாளர்கள் என்று அவர்கள் கூறியபிறகு அவர்களுடன் தொடர்புகொள்ள என்ன இருக்கிறது? நாடு முழுவதும் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தபோது நமக்கு உணவு வழங்கியவர்கள்மீது இன்று அவதூறு பரப்புகிறார்கள். நான் விவசாயி மகன். என் அப்பாவும், தாத்தாவும் விவசாயிகள். அதனால்தான் இப்போராட்டத்தை ஆதரிக்கிறேன்.

புல்வாமா தாக்குதலில் இறந்தவர்களின் பெயர்களை உங்கள் முதுகில் பச்சை குத்திக் கொள்ள உங்களை தூண்டியது எது?

விஜய்: புல்வாமாவில் பயங்கரமான தாக்குதல் நடந்து நான்கு நாட்களுக்கு பிறகு, அத்தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் பெயரை நான் பச்சை குத்திக்கொண்டேன். நம்மை பாதுகாக்க தங்கள் உயிரைப் பணயம் வைத்த துணிச்சலான இதயங்களுக்கான எனது அஞ்சலிதான் இது. இந்தியர்கள் அனைவரையும் நான் எனது குடும்பமாக கருதுகிறேன். அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு, கண்காணிப்பு இருந்தபோதிலும் இதுபோன்ற தாக்குதல் எவ்வாறு நிகழ்ந்தது என்பது எனக்கு புரியாத புதிராக இருக்கிறது.

பாஜக தேசியவாத கட்சி என்றும், நீங்கள் தேசியவாதி என்றும் கூறிக்கொள்கிறீர்கள். பாஜகவின் ஆதரவாளராகவும் குரல் கொடுத்துவந்தீர்கள். பிறகு உங்களிடம் எப்படி இந்த மாற்றம் ஏற்பட்டது?

விஜய்: பிஜேபி கட்சியின் ஆதரவு என்பது விவசாயிகளுக்கோ, இராணுவ வீரர்களுக்கோ அல்ல, பெரிய கார்ப்பரேட்டுகளுக்குதான். மோடிஜி எங்களை காந்தி வழியை பின்பற்றுங்கள் என்கிறார். ஆனால் அவரது அமைச்சர்களோ கோட்சேவை ஆதரிக்கிறார்கள். இது என்ன தேசியவாதம்?

காசுக்கு வேலைசெய்யும் பிஜேபியின் ஐடி செல், புதிய வேளாண் சட்டத்தை விவசாயிகள் ஆதரிப்பதாக சமூக ஊடகத்தில் பொய் பிரச்சாரத்தை பரப்பிக் கொண்டு வருகிறது. சமூக ஊடகத் தாக்கம் தலைத்தூக்கியுள்ள இந்த காலத்தில் பொய் செய்திகளை அதிகமாக பரப்பமுடியும். இங்குள்ள விவசாயிகள் யாரும் தேச விரோத நடவடிக்கையில் ஈடுபடவில்லை. ஒரு விவசாயி என்ற முறையில் சொல்கிறேன், அரசாங்கத்தின் இந்த கொள்கைகள் எனது குடும்பத்திற்கு பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளன.

படிக்க :
♦ வர்த்தமனம் படத்துக்குத் தடை : மாணவர் போராட்டம் பற்றிய படம் என்பதால் தேசவிரோதமாம் !
♦ அமர்த்தியா சென் : மாற்றுக் கருத்துக்களை ஒடுக்கி வரும் மோடி அரசு !

பாஜக அரசு மின் கட்டணத்தை உயர்த்துகிறது. ஆனால் 2013-லிருந்து விவசாயிகளுக்கு கரும்பு விலை உயர்த்தப்படவில்லை. பெரும்பாலான விவசாயிகள் இச்சட்டத்தை எதிர்ப்பதால், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஹனுமான் பெனிவால் தெரிவித்துள்ளார்.

ஷாகின்பாக்கில் நடந்த சாலை மறியலை எதிர்த்தீர்கள். இங்கு மட்டும் எப்படி ஆதரிக்கிறீர்கள்?

விஜய்: போராட்டத்தால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தது என்பதால் அன்று எனது எதிர்ப்பினை தெரிவித்தேன். இப்போது இந்து, முஸ்லீம் என அனைத்து அகதிகளும் பாகுபாடின்றி பாதுகாக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் அந்த மசோதாவில் அப்படி எதுவும் இல்லை. அதை நீங்கள் படித்தீர்களா? இதற்கு மேல் CAA எதிர்ப்புப் போராட்டம் பற்றி சொல்ல விரும்பவில்லை. நான் இப்போது அவர்களின் (பாஜக) எந்தப் பிரிவையும் ஆதரிக்கவில்லை.

CAA சார்பு ஆர்ப்பாட்டங்களில் அவர் கண்ட காட்சி மற்றும் பங்கேற்றது குறித்து சொல்ல விஜய் மிகவும் தயக்கம் காட்டினாலும், இந்த விவசாயப் போராட்டத்தில் அரசாங்கம் மற்றும் நாட்டின் பிரதான ஊடகங்கள் பற்றிய தனது கண்ணோட்டத்தை மாற்றிக் கொண்டதாக தெரிவித்தார். விவசாயிகளின் அமைதியான போராட்டத்தினை கொச்சைப்படுத்தும் ஆர் பாரத், ஆஜ் தக் மற்றும் ஜீ போன்ற செய்தி சேனல்களை குறிப்பிட்டார். ஒருவேளை அந்த சேனல்களை நம்பியதனால் CAA மற்றும் சிறுபான்மையினர் குறித்த தனது கருத்தை அவர் உருவாக்கியிருக்கலாம்.


கட்டுரையாளர் : அலிஷன் ஜாஃப்ரி
தமிழாக்கம் : ஷர்மி
நன்றி : The Wire

1 மறுமொழி

  1. இது ஒரு மகிழ்ச்சியான செய்தி. வலதுசாரி ஊடகங்களின் வெறுப்பு பிரச்சாரங்களில் இவரைப்போன்று பலர் நம் தேசத்தில் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். வேற்றுமையில் ஒற்றுமை காணும் தேசம் நம்முடையது. ஆனால், இன்று அதற்கான ஆபத்தை சங்கபரிவாரங்கள் தொடர் போய் பிரச்சாரங்களால் உருவாக்கி வருகின்றனர். வினவு போன்ற மைக் குறைவான ஊடகங்களே சங்கிகளின் பொய் பிரச்சாரங்களை உடைத்து சுக்குநூறாக்கி இருக்கின்றன. வினவின் ஊடக பங்களிப்பை நாம் எப்போதும் மதிக்கின்றோம், பெருமை கொள்கின்றோம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க