அறிவுத் துறையினரை முடக்கத் துடிக்கும் இந்துத்துவ பாசிஸ்டுகள் !

கன்னட எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஓய்வு பெற்ற பேராசிரியரும் பகுத்தறிவாளருமான கே.எஸ்.பகவானின் ”ராமர் கோயில் ஏன் தேவையில்லை” (Rama Mandira Yeke Beda) என்ற நூல் சமூகத்தின் ஒரு பிரிவினரின் உணர்வினை புண்படுத்துவதாகக் கூறி, பொது நூலகத்திற்கு வாங்கும் நூல் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது கர்நாடக அரசு.

“இந்த நூல் பொதுமக்களின் (இந்துக்களின்) உணர்வினை புண்படுத்தக்கூடும். எனவே இவ்வகையான புத்தகங்களை பொது நூலகத்தில் வைக்க நான் ஒருபோதும் ஊக்குவிக்க மாட்டேன்” என்கிறார் கர்நாடக கல்வித்துறை அமைச்சர் எஸ்.சுரேஷ் குமார்.

படிக்க :
♦ அருந்ததிராய் நூல் நீக்கம் : கருத்துக்களைக் கண்டு அஞ்சும் சங்க பரிவாரம் !

♦ கர்நாடகா : பாடத்திட்டத்தில் இருந்து திப்பு சுல்தான் வரலாற்றை நீக்கிய பாஜக !

இந்துத்துவா வலதுசாரி கும்பல் சமூக ஊடகங்களில் இப்புத்தகத்திற்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தை தொடங்கிய பிறகுதான், இப்புத்தகத்தை தேர்வு செய்த கன்னட எழுத்தாளர் டொட்டரங்கே கவுடா (Doddarange Gowda) தலைமையிலான பொது நூலக புத்தக தேர்வுக்கான கமிட்டி கே.எஸ்.பகவானின் புத்தகத்தை வாங்குவதற்கான பரிந்துரையை திரும்பப் பெற்றிருக்கிறது.

இராமாயணம் மற்றும் ராமர் கோயில் குறித்த அரசியல் விமர்சனத்தின் தொகுப்பான இப்புத்தகம், “சமூகத்தின் ஒரு பிரிவினரின் மத உணர்வுகளை புண்படுத்துகிறது” என்பதால் தேர்வுப் பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது என்று புத்தக தேர்வுக்கான கமிட்டி ஜனவரி 19, 2021 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கே.எஸ்.பகவானின் ”ராமர் கோயில் ஏன் தேவையில்லை” (Rama Mandira Yeke Beda) என்ற நூல்

“பொது நூலக பட்டியலில் இருந்து எனது நூல் நீக்கப்பட்டதை நான் கடுமையாக கண்டிக்கிறேன். பொது நூலகம் என்பது எல்லோருக்குமானது; அங்கு அனைத்து வாதங்களையும் படிக்க எல்லோருக்கும் உரிமை உண்டு. பொது நூலகத்தை ஒரேயொரு சித்தாந்தத்திற்காக இந்த அரசாங்கம் எப்போதும் பணயம் வைக்க முடியாது” என்கிறார் எழுத்தாளர் பகவான்.

“இந்த இரண்டாண்டுகளில் எனது புத்தகம் ஏற்கனவே மூன்று பதிப்புகள் முடிந்து, நான்காவது பதிப்பிற்கு சென்றுவிட்டது. மக்களின் மத உணர்வினை புண்படுத்தக்கூடாது என்பதே எனது நோக்கம். இந்த புத்தகத்தை படித்து பாருங்கள், வால்மீகியின் இராமாயண எல்லைக்குட்பட்டே நான் எழுதியுள்ளேன்” என்கிறார் அவர்.

‘ராமன் மது அருந்துகிறான்’ என்ற எழுத்தாளர் கே.எஸ்.பகவானின் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த வரியைக் கண்டித்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இணையதளத்தில் ஒன்றான இந்து ஜாக்ரன் வேதிகே (Hindu Jagran Vedike) கடந்த 2019-ஆம் ஆண்டே புகார் ஒன்றை அளித்திருந்தது; மேலும் அப்புத்தகத்திற்கு தடையும் கோரியது.

கே.எஸ்.பகவான்

“பதிப்பகத்தாரால் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர், கே.எஸ்.பகவானின் புத்தகத்தினை வாங்க புத்தக தேர்வுக்கான கமிட்டி முடிவு செய்தது. அப்புத்தகம் ஒரு பிரிவினரின் உணர்வுகளை புண்படுத்தும்படி இருந்தாலும், வாசகர்களுக்கு பல்வேறுப்பட்ட கருத்துகளை வழங்கக்கூடும் என்பதால் இப்புத்தகம் எங்களது பொது நூலகத்தின் ஒரு பகுதியாக இருக்கவேண்டும் என்று நாங்கள் கருதினோம்” என்ற கவுடா, இந்துத்துவ சக்திகளிடமிருந்து பல்வேறு எதிர்ப்புகள் வந்ததால், தற்போது நூல் பெறும் பரிந்துரையை திரும்பப் பெற்றிருக்கிறோம் என்கிறார்.

30 ஆகஸ்ட், 2015-ம் ஆண்டு அறிஞரும் கன்னட பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான எம்.எம்.கல்புர்கி இந்துத்துவா கும்பலால் கொலை செய்யப்பட்ட சிறிது காலத்திலேயே எழுத்தாளர் பகவானுக்கும் சமூக ஊடகங்கள் மூலம் கொலை மிரட்டல் பல வந்திருக்கின்றன.

2017-ம் ஆண்டில் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட பின்னர், கர்நாடக சிறப்பு விசாரணைக் குழு (SIT) நடத்திய விசாரணையில் எழுத்தாளர் பகவானைக் கொலை செய்ய திட்டம் தீட்டியிருப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்கள். இத்திட்டத்தின் பின்னணியில் இருந்த இந்து யுவசேனா உறுப்பினர் ஒருவரை சரியான நேரத்தில் கைது செய்ததன் மூலம் கொலை நடக்காமல் தடுக்கப்பட்டிருக்கிறது.

விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பாஜக உறுப்பினர்கள் சிலர் ராமர் கோயிலுக்கு நிதி திரட்டுவதற்காக அண்மையில் எழுத்தாளர் பகவானின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். இது குறித்து எழுத்தாளர் பகவான் கூறுகையில், “மரியாதைக்குரிய விதத்தில் நான் அவர்களை வரவேற்று, ராமர் கோயில் கட்ட நிதி கொடுக்க மாட்டேன் என்றதோடு, எனது புத்தகத்தை படிக்குமாறும் பரிந்துரைத்தேன்” என்கிறார் எழுத்தாளர் பகவான்.

படிக்க :
♦ அதானி அவதூறு வழக்கு : பத்திரிகையாளர் பரஞ்சோய் குகா தாக்குர்தாவுக்கு கைது வாரண்ட் !

♦ அம்பலமானது அர்னாப் மட்டுமல்ல ! பாசிசத்தின் ஊடகக் கூட்டும்தான் !

சமீபத்தில் எழுத்தாளர் அருந்ததிராய் எழுதிய Walking with the comrades என்ற புத்தகம் இந்துத்துவா கும்பலின் அச்சுறுத்தலால் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது பொது நூலகப் பட்டியலில் இருந்து எழுத்தாளர் பகவானின் புத்தகம் நீக்கப்பட்டிருக்கிறது. சகல துறைகளிலும் காலூன்றி இராமராஜியத்தை நிறுவத் துடிக்கும் பாஜக இந்துத்துவா கும்பல். கீழிருந்து மக்களைத் திரட்டி போராடுவதன் மூலமே இந்துத்துவ பாசிச சக்திகளை வீழ்த்த முடியும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.


ஷர்மி
செய்தி ஆதாரம் : The Wire

1 மறுமொழி

Leave a Reply to புதுநிலா பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க