வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சூழலியல் செயற்பாட்டாளர் க்ரேட்டா தன்பர்க் மற்றும் அமெரிக்க பாடகர் ரிஹானா ஆகியோர் வெளியிட்ட கருத்துக்கள், உலகம் முழுவதையும் இந்திய விவசாயிகளின் போராட்டத்தை நோக்கித் திரும்பச் செய்தன. இதைக் கண்டு பொறுக்க முடியாத மோடி அரசோ, தனது பாதந்தாங்கி விளையாட்டு ‘வீரர்களையும்’ சினிமா பிரபலங்களையும் ஊடகங்களையும் களத்தில் இறக்கி விட்டதும் நாம் அறிந்ததே.

அச்சமயத்தில் இந்திய விவசாயிகளின் நியாயமான போராட்டத்தை ஆதரித்து எடுத்துச் வேண்டிய போராட்ட வழிமுறைகளையும், முழக்கங்களையும் அடங்கிய கூகுள் ஆவணத் தொகுப்பு ஒன்றை சூழலியல் செயற்பாட்டாளர் க்ரேட்டா தன்பர்க் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த ஆவண (ஆயுதத்) தொகுப்பை (டூல் கிட் – Tool Kit) அவர் வெளியிட்டதைத் தொடர்ந்து, அதையே தனது அந்நிய சதிக் கோட்பாட்டுக்கு ஆதரவாக எடுத்துக் கொண்டு கிரேட்டா தன்பர்க்-கிற்கு எதிராக வழக்கு பதிவு செய்தது டெல்லி போலீசு.

படிக்க :
♦ முதலாளித்துவ பெருந்தொற்றிலிருந்து மீள்வது எப்படி ?
♦ நூல் அறிமுகம் : பீமா கோரேகான் – பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீர வரலாறு || மு. இனியவன் || முரா. மீனாட்சி சுந்தரம்

கூகுள் ஆவணத் தொகுப்பில், அதில் அனுமதியளிக்கப்பட்டவர்கள் அனைவரும் மாற்றங்களை மேற்கொள்ளலாம். அப்படி சில மாற்றங்களைச் செய்த இந்திய சூழலியல் செயற்பாட்டாளர்களுக்கு எதிராகவும் வழக்குப் பதிவு செய்தது டெல்லி போலீசு. பெங்களூருவைச் சேர்ந்த 21 வயது செயற்பாட்டாளரான திஷா ரவி என்பவரைக் கைது செய்து ஐந்து நாள் போலீசு காவலில் எடுத்துள்ளது டெல்லி போலீசு. இவரைத் தவிர மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் நிகிதா ஜேக்கப் மற்றும் சாந்தனு ஆகிய இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் அவர்களை அடுத்ததாக கைது செய்யவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் திஷா ரவி குறித்து தொடர்ச்சியாக அவதூறுகளையும் அவர் மீதான பாலியல் ரீதியான தாக்குதல்களையும் இணையத்தில் செய்து வருகிறது சங்க பரிவாரத்தின் ட்ரோல் படை.

விவசாயிகள் போராட்டத்திற்கு உலகம் முழுவதும் பெருகிவரும் ஆதரவை, இந்தியாவுக்கு எதிரான அந்நிய சதி என்பதாகக் காட்டி வருகிறது. அதாவது இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திடவிருக்கும் இந்த வேளாண் சட்டத்தை எப்படியாயினும் நிறுத்திவிட வேண்டும் என்று ‘அந்நிய சக்திகள்’ விரும்புவதாகவும் அதற்காகவே வெளிநாட்டு பிரபலங்களைத் தூண்டிவிட்டு இது போன்று விவசாயிகள் பிரச்சினையை பூதாகரமாக்குவதாகவும் அதிகாரப்பூர்வமாகவும், உதிரிகள் மூலமாகவும் ஒரு பார்வையை உருவாக்க முயற்சிக்கிறது இந்திய அரசு.

ஆனால் உண்மை என்னவெனில், இந்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களே அந்நிய சக்திகளின் விருப்பத்திற்காகத்தான். உலக வர்த்தகக் கழகம் மற்றும் உலக வங்கியின் உத்தரவுகளை நிறைவேற்றும்படிதான் இங்கு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுகின்றன. வேளாண் திருத்தச் சட்டம் மட்டுமல்ல, சுற்றுச் சூழல் தாக்கம் குறித்தான சட்டத் திருத்தங்கள் முதல் இனி வரவிருக்கும் நீர் மேலாண்மைச் சட்டங்கள் அனைத்துமே ஏகாதிபத்திய நிதி மூலதனக் கும்பலின் நலனுக்காக உருவாக்கப்படும் சட்டங்களே. அதில் இந்திய அரசின் ‘பேரன்பைப்’ பெற்ற அதானியும் அம்பானியும் உடனடியான பலன் பெறுகிறார்கள் என்பதில்தான் மோடியின் ‘தேச நலன்’ அடங்கியிருக்கிறது. மற்றபடி இந்தச் சட்டங்கள் அனைத்துமே ‘அந்நிய சக்திகளின்’ நலனுக்காக உருவாக்கப்பட்டிருப்பவையே.

சுவாதி சதுர்வேதி

தற்போது வேளாண் சட்டங்களுக்கு எதிரான இந்திய விவசாயிகளின் போராட்டத்தை முடக்குவதற்காக இந்த ‘டூல்கிட்’ விவகாரத்தை கையில் எடுத்து அதனை வைத்து விவசாயிகள் போராட்டத்தையே அந்நிய நாட்டு சதி என்று முத்திரை குத்த முயற்சிக்கிறது மோடி அரசு.

ஒரு வேலையை முறையாகச் செய்ய திட்டமிடுவதற்கு அது தொடர்பான தகவல்கள், அந்த வேலைக்கான செய்முறை உள்ளிட்டவற்றைத் திட்டமிட்டுச் செய்வது என்பது முதலாளித்துவத்தின் அடிப்படையான நடைமுறையே. அவ்வகையில் விவசாயிகளின் போராட்டத்தின் முக்கியத்துவத்தை ஆதரிக்கும் ஆர்வலர்கள் தமது ஆதரவை முறையாகவும், அழுத்தமாகவும் தெரிவிக்க இத்தகைய “டூல் கிட்” களை உருவாக்குவது இயல்பு. அதனை ஏதோ சதி போலவும், அந்த சதியை இவர்கள் கண்டுபிடித்தது போலவும் காட்டுவதன் மூலம்தான் இந்தப் பூச்சாண்டி கதையை வைத்து தாம் மேற்கொள்ளும் கைதுகளை நியாயப்படுத்தியிருக்கிறது. குறிப்பாகச் சொல்வதெனில் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களை மிரட்டவே திஷா ரவியைக் கைது செய்திருக்கிறது மோடி அரசு. “டூல் கிட்” பூச்சாண்டியெல்லாம், சாதாரண மக்களை மிரளச் செய்வதற்கான ”அர்பன் நக்சல்” போன்ற சொல்லாடல் ஆயுதங்களே.

இத்தகைய டூல்கிட் முறைகளுக்கு இந்தியாவின் முன்னோடியே பாஜக – ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்க பரிவாரக் கும்பல்தான். மோடி ஆட்சியில் அமர்ந்த 2014-ம் ஆண்டு முதல் சங்கபரிவார்த்தின் ட்ரோல் படைகளின் ஆட்சிதான் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்தது.

மோடி அரசின் காவி பயங்கரவாதத்தை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்களும் செயற்பாட்டாளர்களும் அசிங்கப்படுத்தப்பட்டனர்; மிரட்டப்பட்டனர்; கொல்லப்பட்டனர். இந்துத்துவ ட்ரோல் கும்பலால் மிரட்டப்பட்ட பத்திரிகையாளர் சுவாதி சதுர்வேதி, இது குறித்து விரிவான ஒரு புலனாய்வு செய்து “I am a Troll” எனும் நூலை எழுதியுள்ளார். அதில் இந்த ட்ரோல்கள் செயல்படும் முறை பற்றியும் விரிவாக எழுதியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்க பரிவாரக் கிரிமினல்களின் கும்பல் கொலைகள், பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல், மாணவர்கள் மீதான தாக்குதல் ஆகியவற்றுக்கு வலு சேர்க்கும் விதமாகவும், நியாயம் கற்பிக்கும் விதமாகவும் சமூக வலைத்தளங்களில் கருத்துருவாக்கம் செய்வதை திட்டமிட்டு செய்து வந்தது சங்க பரிவாரக் கும்பல்.

குறிப்பான ஒவ்வொரு விவகாரங்களிலும் பரப்பப்பட வேண்டிய பொய்கள், போலியாக வெட்டி ஒட்டப்பட்ட வீடியோக்கள் ஆகியவற்றை தொகுத்து அளிப்பதற்கு பாஜக ஐ.டி. விங் உருவாக்கி வைக்கும் “டூல் கிட்”-ஐ, பாஜக ஐ.டி. விங்கின் கீழ் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ட்ரோல்கள் எடுத்துக் கொண்டு அதனை அப்படியே பரப்புகின்றனர்.

ஆகவே சமூக வலைத்தளப் பரப்புரைகளைப் பொறுத்தவரையில் டூல்கிட்டுகள் ஒன்றும் புதியவை அல்ல. இத்தகைய “டூல் கிட்”களில் உண்மைச் செய்திகள் இருக்கின்றனவா? அல்லது பொய்ச்செய்திகள் இருக்கின்றனவா என்பதுதான் அதன் நோக்கத்தையும் தன்மையையும் தீர்மானிக்கின்றன.
அந்த வகையில், கிரேட்டா தன்பர்க் பகிர்ந்த அந்த “டூல் கிட்டில்” அப்படி என்ன “தேசவிரோத சதித் திட்டம்” இருந்தது என்பதை வெளியே எடுத்துச் சொல்வதில் என்ன தயக்கம் இந்த அரசுக்கு?

படிக்க :
♦ விவசாயிகள் போராட்டத்தை திட்டமிட்டு கொச்சைப்படுத்தும் பி.ஜே.பி ட்ரோல்கள் !
♦ பானுகோம்ஸ், சுமன் சி ராமன், ட்ரோல்கள் : மோடியின் சைபர் சேனாவில் 2 கோடி வேலை வாய்ப்பு !

அப்படி எதையும் எடுத்துச் சொல்ல முடியாது என்பதால்தான் “டூல் கிட்” என்ற சொல்லாடலை வைத்துக் கொண்டு அந்நிய சதிப் பூச்சாண்டி காட்டி, திஷா ரவியைக் கைது செய்திருக்கிறது மோடி அரசு. அதன் மூலம் மோடி அரசுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் மட்டுமல்லாமல், அரசுக்கு ஒவ்வாத போராட்டங்களுக்கு அமைதியான முறையில் ஆதரவு தெரிவிப்பவர்களையும் மிரட்டியிருக்கிறது பாசிச மோடி அரசு.

சில ஆண்டுகளுக்கு முன்னர், ஜே.என்.யூ. மாணவர்கள் போராட்டங்களில் பாகிஸ்தான் ஆதரவு முழக்கம் இருந்ததாகவும், காஷ்மீர் பிரிவினைவாதத்திற்கு ஆதரவாக முழக்கம் இருந்ததாகவும் போல காட்டப்பட்ட ஒரு போலியான வீடியோவை பாஜக ட்ரோல்கள் பரப்பி கன்னையா குமாரை தேசவிரோதியாக சித்தரித்தன. வெறும் பாஜக ட்ரோல்கள் மட்டும் இந்தப் பணியைச் செய்யவில்லை. மோடி ஆதரவு ஊடகங்களும் அதனைச் செய்தன. அதன் விளைவு, கன்னையாகுமார் வழக்கறிஞர்களால் தாக்கப்படுகிறார். உமர் காலித்-ஐ துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இப்படி போலியான வீடியோக்களை “டூல் கிட்”டில் வைத்துப் பரப்பியவர்கள் தான் இன்று “டூல் கிட்” அந்நிய சதி பற்றி பேசுகின்றனர்.

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவான கருத்துக்களை முடக்கி தனது கார்ப்பரேட் ஆதரவு செயல்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றத் துவங்கியிருக்கிறது மோடி அரசு. அதன் ஒரு பகுதிதான் தற்போதைய “அந்நிய சதி” குறித்த ஓலங்களும் கைதுகளும்.

மக்கள் நலன் தவிர்த்த “தேசபக்தி”யைத் தான் பாஜக கும்பல் நம்மிடம் கோருகிறது. அப்படிப்பட்ட தேசபக்தி முகமூடிக்குப் பின்னால்தான் அதானிகளும் அம்பானிகளும் தடையின்றி கொள்ளையடித்து வருகின்றனர். பாஜக விரும்பும் இந்த போலி தேச பக்தியை தூக்கியெறிந்து உழைக்கும் மக்களின் மீதான நேசத்தை மக்கள் மனதில் விதைப்பதற்கான “டூல் கிட்”டை தயாரிப்பது நம்முன் உள்ள முக்கியமான கடமைகளுல் ஒன்று !


சரண்
செய்தி ஆதாரம் :
தி வயர்

 

2 மறுமொழிகள்

  1. //மக்கள் நலன் தவிர்த்த “தேசபக்தி”யைத் தான் பாஜக கும்பல் நம்மிடம் கோருகிறது. அப்படிப்பட்ட தேசபக்தி முகமூடிக்குப் பின்னால்தான் அதானிகளும் அம்பானிகளும் தடையின்றி கொள்ளையடித்து வருகின்றனர். பாஜக விரும்பும் இந்த போலி தேச பக்தியை தூக்கியெறிந்து உழைக்கும் மக்களின் மீதான நேசத்தை மக்கள் மனதில் விதைப்பதற்கான “டூல் கிட்”டை தயாரிப்பது நம்முன் உள்ள முக்கியமான கடமைகளுல் ஒன்று !//

    மிகச் சரியாக சொன்னீர்கள் !

  2. கட்டுரையாளர் மொழிநடை சிறப்பாக உள்ளது ! வாழ்த்துக்கள் தோழர்களே ! 💞

Leave a Reply to சேகரன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க