அடித்து நொறுக்கப்பட்டாலும் உடைந்துவிடவில்லை: பகத் சிங்கால் ஈர்க்கப்பட்ட இளம் தொழிலாளர் நலச் செயல்பாட்டாளர்களான சிவ குமார், நோதீப் கவுரை சந்தியுங்கள்!

டந்த 2016-ம் ஆண்டில், அரியானாவில் நுண்ணிய உபகரணங்கள் உருவாக்குதல் மற்றும் பயன்படுத்துதல் குறித்துத் தான் கற்றுக் கொண்ட தொழில் பயிற்சி நிறுவனத்தில் (ஐ.டி.ஐ) நடத்தப்பட்ட பணிக்கான கலந்தாய்வில் பங்கேற்றபோது, சிவகுமாரிடம், “நீங்கள் என்னவாகப் போகிறீர்கள்?” எனக் கேட்கப்பட்டது.

“நான் அவர்களிடம் ஒரு புரட்சியாளனாக மாற விரும்புவதாகக் கூறினேன்” என்கிறார் சிவகுமார் என்ற கலகக்காரர்.

இப்படி அவர் சொன்ன பதிலைக் கேட்டு நேர்காணலுக்காக சூழ்ந்திருந்த பல்கலைக்கழக மாணவர்களிடையே நகைப்பை உண்டாக்கியது. ஆனால், குமார் உறுதியாக இருந்தார்.

படிக்க :
♦ டெல்லி விவசாயிகள் போராட்டம் : ஷாகின் பாக் – மூதாட்டி பில்கிஸ் தடுத்து நிறுத்தம் !
♦ இந்திய உழவர் போராட்டம் குறித்து ஒரு டச்சு ஊடகம் || கலையரசன்

“தொடக்கம் முதலே என்னுடைய வாழ்வு போராட்டமாகவே இருந்தது” என்கிறார் இந்த 25 வயதான தொழிலாளர் செயல்பாட்டாளர்.

“நாங்கள் தலித் என்பதால் அனைத்துத் துறைகளிலும் நிறுவனங்களிலும் கிராமங்களிலும் சுரண்டப்படுகிறோம்.  அனைத்து இடங்களிலும் சுரண்டல் உள்ளது. எனவே போராட வேண்டிய எதிர்பார்ப்பு உள்ளது”

சோனிபட்டின் தொழிற்பயிற்சி நிலையத்திலிருந்து கந்திலியின் தொழில் நகரத்தில் உள்ள ஒரு தொழிற்சாலைக்கு பணியாற்றச் சென்றார் குமார். அங்குதான் மஸ்தூர் அதிகார் சங்கதன் அல்லது தொழிலாளர் உரிமைகள் சங்கத்தை 2018-ல் தொடங்கினார்.

இந்த சங்கம் இப்பகுதியைச் சேர்ந்த தொழிற்சாலைப் பணியாளர்களை  நியாயமான ஊதியத்தையும், முறையான வேலை நேரத்தையும், நல்லதொரு பணியாற்றும் சூழ்நிலையையும் உத்தரவாதப் படித்தும்படி கோரி திரட்டினார்.  இந்தியாவில் மூன்று பத்தாண்டுகளுக்கு இல்லாத மிகப்பெரிய அளவிலான விவசாயிகளின் போராட்டம் குறுக்கிடும்வரை குமாரின் செயல்பாடுகள் கவனிக்கப்படாமல்தான் இருந்தன.

கடந்த ஆண்டு செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் நரேந்திர மோடியின் அரசு மூன்று சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டத்தை எதிர்த்து, கடந்த நவம்பர் முதல் பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் நாட்டின் தலைநகரின் எல்லையில் திரண்டார்கள்.  இந்த மூன்று வேளாண் சட்டங்களும் தங்களை தனியார் நிறுவனங்களிடம் கையேந்த வைக்கும் எனவும், தங்களுடைய வாழ்வாதாரத்தை மேலும் கீழ்நிலைக்கு இட்டுச் செல்லும் எனவும் விவசாயிகள் பயம் கொள்கின்றனர்.

ஜனவரி மாதம், டெல்லியின் சிங்கூ எல்லையில் விவசாயிகள் போராட்ட முகாம் அமைத்துள்ள இடத்திலிருந்து சில நூறு மீட்டர்கள் தொலைவில், குமாரும் அவருடைய சக பணியாளருமான நோதீப் கவுர் ஊதியம் வழங்காத தொழிற்சாலைக்கு வெளியே போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தனர்.  மிரட்டி பணம் பறித்தல், திருட்டு, கொலை முயற்சி ஆகிய மூன்று வழக்குகளில் போலீசார் அவர்கள் மீது வழக்கு தொடுத்தது.

போலீசின் கொட்டடியில் கடுமையாக உடல்ரீதியான தாக்குதலுக்கு உள்ளானதாகவும் சாதி ரீதியானத் தூற்றுதலுக்கு உள்ளானதாகவும் இளம் செயல்பாட்டாளர்களின் குடும்பங்கள் குற்றம்சாட்டின. வலது கண் பார்வை குறைபாடு உள்ளவரான குமார், பிப்ரவரி 23-ம் தேதி அன்று பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனை அறிக்கைகளில், (போலீசாரின் கொட்டடியில் தாக்கப்பட்டதில்) பல எலும்பு முறிவுகள், கால் நகங்கள் உடைந்தது, அவரது கைகளிலும் தலையிலும் காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

பிப்ரவரி 26-ம் தேதி நோதீப் கவுருக்கு பிணை வழங்கப்பட்டது. அன்று இரவு சிறையிலிருந்து வெளியான நோதீப், அடுத்த நாள் சிங்கூ எல்லையில் பத்திரிகையாளர் சந்திப்பின் போது, குமாரை விடுவிக்கும்படிக் கேட்டார்.

சிவ குமார், நோதீப் கவுர்

மார்ச் 4-ம் தேதி நீதிபதி குமாருக்கு பிணை வழங்கினார். சோனிபட் மாவட்ட சிறையிலிருந்து விடுதலையாகக் காத்திருந்த அவருடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர், அவருடைய காயங்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை அழைத்துச் செல்ல நினைத்தனர். ஆனால், தாக்குதலுக்கு உள்ளான கால்களுடன் நொண்டியபடி வெளியே வந்த குமார், ‘இன்குலாப் ஜிந்தாபாத்’, கிசான் மஸ்தூர் ஏக்தா ஜிந்தாபாத்’ என முழக்கமிட்டபடி வெளியே வந்தார் என நினைவு கூர்கிறார் சத்ரா ஏக்தா மஞ்ச்-அமைப்பின் அங்கித் குமார்.

“அவருக்கு எங்கிருந்து இவ்வளவு தைரியம் கிடைக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை” என வியக்கிறார் அங்கித் குமார்.

வதையிலிருந்து உயிர்த்திருத்தல்

25 வயதான சிவகுமாரும் நோதீப் கவுரும், நிலமில்லா தலித் விவசாய தொழிலாளர்களின் வீட்டுப் பிள்ளைகள். தொழிற்சாலை தொழிலாளர்களாக வளர்ந்தவர்கள்.  தற்போது இயக்கத்தில் உள்ள விவசாயிகள் – தொழிலாளர் ஒற்றுமையின் அடையாளங்களாக இந்த இளம் செயல்பாட்டாளர்கள் கொண்டாடப்படுகிறார்கள். குறிப்பாக, பெரு விவசாயிகள் மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களைக் கொண்ட பஞ்சாப், எதிர்ப்பு வரலாற்றைக் கொண்டிருந்தாலும் மூன்று கருப்பு சட்டங்களை அரசாங்கம் நீக்க வேண்டும் என ஒன்றிணைந்துக் கேட்கின்றனர்.

தாங்கள் எதிர்கொண்ட உடல் மற்றும் மன அளவிலான இன்னல்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் புன்னகையோடு சிங்கூ எல்லையில் டெண்டில் அமர்ந்திருந்தனர். போலீசு கொட்டடியில் உடைக்கப்பட்ட தனது வலது காலை, அவ்வப்போது சரிபடுத்திக்கொண்டு அமர்கிறார் குமார்.

விவசாயிகளின் போராட்டத்திற்கு அவர்கள் தன்னிச்சையாக ஈர்க்கப்பட்டதாக அவர்கள் கூறினர். ஏனென்றால் வேளாண் சட்டங்கள் முழுத் தொழிலாளர் வர்க்கத்தையும் பாதிக்கும் என்பதை அவர்கள் புரிந்து கொண்டதாகக் கூறுகின்றனர்.

ஜனவரி 12-ம் தேதி, மஸ்தூர் அதிகார் சங்கதன் தனது தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காத ஒரு தொழிற்சாலைக்கு வெளியே ஒரு போராட்டத்தை நடத்தியது. போராட்டத்தில் ஒரு சச்சரவு ஏற்பட்டது. அதன் பின்னர் அதே நாளில் நோதீப் கைது செய்யப்பட்டு கர்னல் காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறுகிறார். கைது செய்யப்பட்ட பின்னர், போலீசார் அவரை சித்திரவதை செய்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டுகிறார்.

“யாரோ ஒருவர் என்னை உதைத்தார், இன்னொருவர் என் முடியை பிடித்து இழுத்தார்” என்கிறார். “யாரும் இல்லாத இடத்தில் வைத்து என்னை அடித்தார்கள். அதன்பின் சோனிபட் சிறையில் என்னை தூக்கிப் போட்டனர். என்னால் நடக்க முடியவில்லை, குளிர்காலத்தில் மெல்லிய போர்வையை தந்தார்கள்”.

அரியானா போலீசு இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எந்த பதிலும் கூறவில்லை. நோதீப் கைது செய்யப்பட்ட நான்கு நாட்களுக்குப் பிறகு தன்னை போலீசு அதிகாரிகள் அழைத்துச் சென்றதாக குமார் கூறினார். ஆனால் ஜனவரி 23-ம் தேதி அன்றுதான் அவரை கைது செய்ததாக போலீசார் கூறுகின்றனர்.

ஜனவரி 16-ஆம் தேதி சிங்கூ எல்லைப் போராட்டக் களத்தில் கழிப்பறையில் இருந்தபோது, சிலர் தன் முகத்தில் துணியை மூடியதாகக் கூறுகிறார். அவர் கூச்சலிட முயன்றபோது, ஒரு நபர் அவரது இடுப்பில் துப்பாக்கியை வைத்து, அமைதியாக இருக்கும்படி மிரட்டியுள்ளார். அதன்பின், போராட்டக் களத்திலிருந்து 600 மீட்டர் தொலைவில் தொழிற்சாலைப் பகுதிக்கு அவரை நடந்தே அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கே அவரை ஒரு காரில் அமரச் சொல்லியுள்ளனர். சோனிபட் போலீசு நிலையம் அழைத்துச் செல்லும் வரை அவர்கள் யார் என தனக்குத் தெரியவில்லை என்கிறார் குமார். போலீசு நிலையத்தில் வைத்து அவரை நிர்வாணமாக்கி அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்.

“என்னை ஒரு விலங்கு என நினைத்து அடித்தார்கள்” என்கிற குமார், அரியானா போலீசு ஒரு நாளைக்குக் குறைந்தது மூன்று முறையாவது மிகக் கொடூரமான சித்திரவதை செய்ததாகக் கூறுகிறார்.

“என்னுடைய கால்களை விரித்து வைத்துவிட்டு, நடுப்பகுதியில் உதைத்துக் கொண்டே இருப்பார்கள். தொடை எலும்புப் பகுதியில் தங்களுடைய எடை முழுவதையும் செலுத்துவதைப் பார்த்து ஏன் இப்படிச் செய்கிறார்கள் என சிரித்தேன். ஆனால், ஒரு பெரிய உலோக உருளையை எடுத்து என்னை அழுத்திய போது எனக்கு கோபம் வந்தது. அது சுமார் 10 கிலோ எடை இருக்கும். அதைக் கொண்டு 100 கிலோ எடை கொண்ட இரு நபர்கள் என்னை அழுத்தினார்கள்.

போலீசு அதிகாரிகள் தங்களுடைய ஷூக்களைக் கொண்டு தலையில் தாக்கியதாகவும், அவருடைய நகங்களை தடிகளால் தாக்கியதாகவும் கால்களில் வெந்நீர் ஊற்றியதாகவும் கூறுகிறார் குமார்.

(போலீசு கொட்டடியில் சித்திரவதைக்குள்ளான சிவகுமாரின் ரத்தம் உறைந்த மற்றும் உடைந்த கால் நகங்களைப் படத்தில் காணலாம்)

சோனிபட் மாவட்ட சிறையில் எடுக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனை குமாரின் காயங்களை உறுதிப்படுத்தியுள்ளது. போலீசின் சித்திரவதைகளால் குமாரிடம் மன உளைச்சல் கோளாறு அறிகுறிகளை காண முடிந்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

“அவர்கள் என்னை மூன்று நாட்களாகத் தூங்க விடவில்லை; மனதளவில் சித்திரவதை செய்தார்கள்”. பல வாரங்களுக்கு குமாரின் வழக்கறிஞரையோ அல்லது அவரது குடும்பத்தினரையோ சந்திக்க விடவில்லை போலீசு.

போலீசார் முன்பின் தெரியாத மூன்று பேரின் படங்களைக் காட்டி, அவர்களை அடையாளம் காணும்படி சொன்னதாக கூறுகிறார். ஆனால் அவர்களை தனக்குத் தெரியாது என்கிறார் குமார். அவருடைய அமைப்புக்கு யார் பணம் தருகிறார்கள் எனவும் போலீசு கேட்டுள்ளது. “துண்டுப் பிரசுரங்களை அச்சிடத் தொழிலாளர்களிடம் ரூ.10 வாங்குவோம். எங்களுக்கு இரண்டு அறைகள் உள்ளன. அங்குதான் தொழிலாளர்களை சந்திப்போம். அதன் வாடகை ரூ.5,500” என்கிறார் குமார்.

விவசாயிகளிடமும் தொழிலாளர்களிடமும் ஒற்றுமை உணர்வு ஏற்படுவதை போலீசுக்கு அச்சுறுத்தலாகத் தெரிந்துள்ளது என்கிறார் குமார். தனக்கு எதிரான வன்முறைகளில் சாதிய தொனி அதிகமாக இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

“நீ ஒரு சாமர் தானே. நீ தலைவனாக நினைக்காதே. நீ எதற்காக இருக்கிறாயோ அதைச் செய்” என ஒரு போலீசு அதிகாரிக் கூறியதை நினைவு கூர்ந்தார்.

“அவர்கள் என் முகத்தில் துப்புவார்கள்”. “அனைவரும் ஜனநாயகத்தைப் பற்றி பேசுகிறார்கள், ஆனால் சிறையில் அது இல்லவே இல்லை”.

தனக்கும் நோதீப்புக்கும் நிகழ்த்தப்பட்டவை குறித்து குமார் சினம் கொள்கிறார். ஆனால், அவருடைய சினம் போலீசு மீது அல்ல. “என்னுடைய சினம் இந்த சீரழிந்த அமைப்பின் மீதும் ஏழைக்கும் பணக்காரனுக்குமான இடைவெளியின் மீதும். போலீசு என்பது இந்த அமைப்பின் ஓர் அங்கம்தான்” என்கிறார் குமார்.

நோதீப், குமார் ஆகிய இருவரும் போராட்டம் மிக்க குழந்தைப் பருவத்தைக் கடந்து வந்திருக்கின்றனர். நோதீப், பஞ்சாபின் முக்த்சர் சாஹிப் எனும் மாவட்டத்தில் வளர்ந்தவர். அவருடைய பெற்றோர் “பஞ்சாப் கேத் மஸ்தூர் யூனியன்” என்ற விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கான அமைப்பில் இப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாவட்டத்தில் தலித் பெண்களுக்கு எதிராக நடைபெறும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தில் தன் தாயுடன் இவரும் பங்கேற்பார்.

2019-ம் ஆண்டு, வடக்கு டெல்லியில் உள்ள அசாத்பூரில் கால் சென்டர் பணியை விட்டுவிட்டு டெல்லிக்கு வந்து, கடந்த அக்டோபரில் குமாரை தொடர்பு கொண்டார் நோதிப்.

அதன்பின் மஸ்தூர் அதிகார் சங்கதனில் இணைந்து ஒரு கண்ணாடி தொழிற்சாலையில் பணிக்குச் சேர்ந்தார். அதன்பின் விவசாயிகள் போராட்டத்துக்காக சிங்கூ எல்லைக்கு வரும் தொழிலாளர்களை திரட்டுவதற்காக அந்த பணியை விட்டுவிட்டார் நோதிப்.

“தொழிலாளர் உரிமைக்காகப் பணிபுரிவது கத்தியின் மீது நடப்பது போல என நாங்கள் எச்சரிக்கப் பட்டோம்” என்கிறார் நோதீப். “நாங்கள் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம். எங்களுடைய வாழ்க்கை மிக நீண்டது அல்ல” என்கிறார்.

இந்த அமைப்பு, விவசாயிகள் போராட்டத்தில், மோடி அரசாங்கம் குறித்து (தொழிலாளர் சட்டம் 2020-ல் கொண்டுவந்த மாற்றங்கள் குறித்து) விழிப்புணர்வை ஏற்படுத்த நல்வாய்ப்பாகவும் பயன்படுத்திக் கொண்டது. மத்திய அரசு 44 தொழிலாளர் சட்டங்களுக்குப் பதிலாக வெறும் நான்கு சட்டங்களைக் கொண்டு வந்தது. இது தொழிலாளர்களின் உரிமைகள், சமூகப் பாதுகாப்பு மற்றும் துறைசாராத் துறையினரின் பிறப் பாதுகாப்புகளுக்கு அச்சுறுத்தல் தரக்கூடியது.

ஜனவரியில் கர்னால் மாவட்ட சிறையில் இருந்தபோது, சிறைக் கைதிகளை அவர்களுடைய குடும்பத்தினர் தொலைபேசியில் தொடர்புக் கொள்வதைச் சிறை அதிகாரிகள் நிறுத்தியதால், உண்ணாநிலைப் போராட்டத்தை ஒருங்கிணைத்திருக்கிறார் நோதீப்.

“நாம் போராடவில்லை என்றால் மரணித்து விடுவோம்” என்கிறார் நோதீப். “நாங்கள் குழந்தை பருவத்திலிருந்தே போராடினால்தான் எதுவும் கிடைக்கும் என்பதைப் பார்த்தவர்கள். நான் இதை என்னுடைய தாயிடமிருந்தும் எனது சகோதரி ராஜ்வீர் கவுரிடமிருந்தும் கற்றுக் கொண்டேன்”

சிவகுமார், அரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் தேவ்ரூ கிராமத்தில் வளர்ந்தவர். அவருடைய தந்தை விவசாயத் தொழிலாளராகப் பணியாற்றியவர். அவருடைய அம்மாவிற்கு 23 ஆண்டுகளுக்கு முன்பு மனநலக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. குமாருக்கு இரண்டு மூத்த சகோதரிகளும் இரண்டு இளையவர்களும் உள்ளனர். நடுவில் பிறந்தவராக, பள்ளி காலத்திலேயே குடும்பத்துக்கு உதவ பணிபுரியத் தொடங்கினார்.

2014-ம் ஆண்டு, இளம் புரட்சியாளரான பகத்சிங் 1931-ம் ஆண்டு எழுதிய ‘நான் ஏன் நாத்திகன்’ என சிறு பிரசுரத்தைப் படித்தார். அது குமாரிடம் எதிரொலித்தது.

“அந்த நேரத்தில் கடவுள் மீது பெரிய நம்பிக்கை இல்லை. அங்கே நம்பிக்கை கொள்ளப் பெரிதாக ஒன்றும் இல்லை” என்கிறார் குமார். “என்னுடைய அம்மா 23 ஆண்டுகளாக உடல் நலம் குன்றியுள்ளார். கடவுள் என்பவர் இருந்தால், அவரை ஏன் குணமாக்கவில்லை? கடவுள் என்பவர் இருந்தால் இங்கே ஏன் இவ்வளவு பாகுபாடு உள்ளது? ஏன் இங்கே ஒருவர் பணக்காரராகவும் மற்றொருவர் ஏழையாகவும் உள்ளனர்? ஏன் சிலர் வயிறு முட்ட உண்கின்றனர், சிலர் பட்டினியில் வாடுக்கின்றனர்?”

கல்வி கற்கும் உரிமையின் அடிப்படையில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த குழந்தையை சேர்க்க மறுத்த தனியார் பள்ளிக்கு எதிராக 2015-ம் ஆண்டு போராடிய போது சோனிபட் போலீசு, குமாரை மற்றவர்களுடன் சேர்த்து கைது செய்தது. இதுவே oரு செயல்பாட்டாளராக குமாரின் முதல் போராட்டக் களம். அப்போது குமார் பள்ளிப் படிப்பின் இறுதி ஆண்டில் இருந்தார். அவருடைய குடும்பம் அவருடைய சமூக செயல்பாட்டை விரும்பவில்லை.

“என்னுடைய குடும்பம் என்னைப் படிக்கச் சொல்லி, நான் ஒரு நல்ல பணிக்குச் செல்ல வேண்டும் என நினைத்தது. ஆனால், அவர்களுடைய நினைப்புக்கு மாறாக நான் நடந்து கொண்டேன்”. இப்போது தன்னுடைய குடும்பம் தனக்கு முழு ஆதரவாக உள்ளதாகவும் கூறுகிறார்.

2016-2017-ம் ஆண்டுகளில் தொழிற் பயிற்சி நிலையத்தில் சாயம் ஏற்றுதல் மற்றும் அச்சுகளின் பயன்பாடு குறித்துப் படித்த பின், குந்திலிக்கு பணி தேடி வந்ததாகக் கூறுகிறார். அவருடைய முதல் பணியில் மாதம் ரூ.8000 ஊதியம் பெற்றார். பிற தொழிற்சாலை பணிகளுக்குத் தொடர்ச்சியாக மாறிக் கொண்டிருந்த போது, ஒரு தொழிலாளராக தான் சுரண்டப்பட்டதாகக் கூறுகிறார்.

தன்னைப் போன்ற பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தைவிடக் குறைவாக தரப்பட்டது. பணியிடத்தில் நிகழும் விபத்துகளுக்குத் தொழிற்சாலை உரிமையாளர்கள் நியாயமான இழப்பீட்டை தரவில்லை. பணிக்கு தாமதமாக வந்தால் அரை ஊதியம் மட்டுமே கிடைக்கும். “நான் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன். இதற்கு ஒரு சங்கம் தேவை என்பதை உணர்ந்தேன்” என்கிறார். மூன்று ஆண்டுகளில் மஸ்தூர் அதிகார் சங்கதன் 300 தொழிலாளர்களைக் கொண்ட பலமான அமைப்பாக மாறியது.

எதிர்ப்புணர்வின் வாழ்க்கை

இளம் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் தீஷா ரவி

விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததற்காக மற்றொரு 22 வயதான, பெங்களூருவைச் சேர்ந்த தீஷா ரவி என்ற இளம் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் கைது செய்யப்பட்டார். செயல்பாட்டாளர் கிரேட்டா தென்பர்க் ட்விட்டரில் வெளியிட்ட போராட்டம் குறித்த ஆவணம் ஒன்றை திருத்தியதற்காக டெல்லி போலீசு, தீஷாவின் பெங்களூரு இல்லத்தில் அவரைக் கைது செய்தது. இந்த டூல் கிட், சீக்கியப் பிரிவினைவாதக் குழுக்களுடன் சேர்ந்து தயாரிக்கப்பட்டதாக போலீசு குற்றம் சாட்டியது.

தீஷா ரவி-யின் வழக்கு பரவலான கவனம் பெற்றது. அவருடைய கைது தலைப்பு செய்தியானது. பிப்ரவரி 23-ம் தேதி பிணையில் வந்தவர். ஒரு அறிக்கை வெளியிடும்வரை வெளிச்சத்தில் இருந்தார்.

“வர்க்கத்தில் வேறுபாடு உள்ளது” என்கிறார் நோதீப். “மேல்தட்டு வர்க்கம் மீண்டும் பேசினால் தங்களைக் குறிவைப்பார்கள் என நினைக்கிறது. ஆனால், அமைதியாக இருந்தாலும் நாம் தாக்கப்படுவோம்”

நோதீப்பும் குமாரும் பிப்ரவரியில் தங்களுடைய பிறந்தநாளை சிறையில் கொண்டாடினார்கள். அவர்கள் விடுதலையான பிறகு, நேர்காணலுக்காக அணுகப்பட்டுக் கொண்டே இருந்தார்கள்.

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசின் உறவினர் மீனா ஹாரீஸ் தன்னைப் பற்றிய ட்விட் செய்தவுடன் ஊடக வெளிச்சம் கிடைத்ததை நோதீப் அறிவார். விவசாயிகளின் போராட்டத்துடன் தொடர்புடையதாலேயே தங்களுடைய கைதுகள் செய்தியாயின என்கிறார் குமார்.

“ஊரடங்கின் போது, தொழிலாளர்கள் தங்களுக்காக உணவைப் பெறவில்லை; அவர்கள் பட்டினியாக இருந்தார்கள். ஊடகம் அதைக் கூறவில்லை” என்கிறார் குமார். இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கக் கோரி சாலை மறியல் செய்ததாகக் கூறுகிறார். “அவர்கள் தங்கள் அறையிலிருந்து தூக்கியெறியப்பட்டபோதோ, ஒருவரின் விரல் அல்லது கை துண்டிக்கப்பட்டபோதோ இந்த ஊடகம் செய்தி வெளியிடுவதில்லை”

“போலீசின் வதைக்கு ஆளான பின், சரியாக உறங்க முடியவில்லை” என்கிறார் குமார். நோதீப் தனக்கு சிறிதளவு ஓய்வு தேவை என்கிறார். ஆனால், அவர்களால் அது முடியாது. தற்போது அவர்கள் பணி இல்லாமல் இருக்கிறார்கள். தங்களுடைய செயல்பாடுகளுக்காகவும் தினசரி தேவைகளுக்காகவும் அவர்கள் பணம் ஈட்ட வேண்டும். “ஒரு விழுக்காடு பணி கூட முடிக்கப்படவில்லை” என்கிறார் நோதீப்

எதிர்காலத்தில் எந்தெந்தப் பிரச்சினைகளையெல்லாம் எடுத்துக் கொள்ளப் போகிறார் எனக் கூறும் அவர், “குழந்தைகள் பணிபுரிய தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் ஆண்களைப் போல பெண்களுக்கு சமமான ஊதியம் வழங்கப்படுவதில்லை என்பதையும் பார்க்கிறேன்”

படிக்க :
♦ மாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்
பகத்சிங் – சோசலிசப் புரட்சியாளனா தீவிர தேசியவாதியா ?

நோதீப் மற்றும் குமார் இருவரும் தங்களுடைய செயல்பாடுகளால் தங்கள் வாழ்க்கையில் ஏற்படக் கூடிய பின்விளைவுகளுக்கு தயாராகவே உள்ளனர். விவசாயிகளின் போராட்டத்துக்கு தங்களுடைய ஆதரவை, புதிய வேளாண் விரோத சட்டங்கள் நீக்கப்படும் வரைத் தொடருவோம் எனவும் தெரிவிக்கின்றனர்.

“இந்தப் போராட்டத்தில் நான் போராடியே ஆக வேண்டும். என்னுடைய வாழ்க்கையில் சமரசத்துக்கு இடமில்லை. நான் பின்வாங்கமாட்டேன். நான் முன்னோக்கிச் செல்ல வேண்டும்” என்கிறார் குமார்.


கட்டுரையாளர் : விஜய்தா லால்வானி
தமிழாக்கம் : அனிதா
நன்றி : ஸ்க்ரால்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க