த்தியில் ஆளும் சனாதன பாஜக அரசு, “பள்ளர் பண்ணாடி குடும்பர் கல்லாடி கடையர் தேவேந்திர குலத்தார்-வதிரியார் ” உள்ளிட்ட 7 சாதிகளை இனி தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் அழைக்கப்படுவதற்கான திருத்தத்தை பாராளுமன்றத்தில் சட்டம் ஆக்கியுள்ளனர் (constitution (SC) order (amendment) bill 2021). இனி இந்த சாதி பிரிவைச் சேர்ந்தவர்கள் அனைவரின் சாதிச் சான்றிதழ்களிலும் தேவேந்திரகுல வேளாளர் என்று குறிப்பிடப்பட்டு அடைப்புக் குறியில் அவர்களது பழைய ஜாதிப் பெயரும் இடம்பெறும்.

மேற்குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தமிழகத்தின் மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் அடர்த்தியாக உள்ளனர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில், நாடாளுமன்றத்தில் எவ்வித விவாதமும் இல்லாமல் இந்த சட்டத்தை மோடி அரசு நிறைவேற்றியுள்ளது.

தேவேந்திரகுல வேளாளர் சமூகமாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட 7 சாதிகளைச் சேர்த்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தின் ஒட்டுமொத்த பட்டியலினத்தவர்களின் மக்கள் தொகையில் 17.07 விழுக்காடு உள்ளதாக 2011-ல் எடுத்த மக்கள் தொகை கணக்கீடு கூறுகிறது. புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட இச்சமூகத்தின் சில தலைவர்கள் வெறும் பெயர்மாற்றத்தை மட்டும் கோரிக்கையாக முன் வைக்கவில்லை. பட்டியலினத்தில் இருந்து வெளியேற்றி மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகமாக தங்கள் சமூகத்தை அறிவிக்க வேண்டும் என்பதும் அவர்களது கோரிக்கையாகும். பெயர் மாற்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்ட வர்ணாசிரம கும்பல் பட்டியலின வெளியேற்றத்தைப் பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை.

படிக்க :
♦ தாழ்த்தப்பட்ட மக்கள் வேண்டுவது சீர்த்திருத்தமா? புரட்சியா?
♦ குஜராத் : தலித் திருமணங்களை எதிர்க்கும் ஆதிக்க சாதி வெறி !

பாசிச மோடி கும்பல் கொண்டு வந்துள்ள நீட் தேர்வால் மருத்துவப் படிப்பிற்கு தனிப் பயிற்சி எடுக்க வாய்ப்பற்ற ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவு கானல்நீராகிப் போயிருக்கிறது. தற்போது அட்டவணைப் பட்டியலில் இருக்கும்போதே தேவேந்திர குல வேளாள சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை, நீட் வந்த பின்னர் மிகவும் பின்னடைந்து உள்ள நிலையில், மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டால், தேவேந்திரகுல வேளாள சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவ கனவு வெறும் கனவாகவே முடிந்துவிடும் அபாயம் இருக்கிறது என ஆங்கில் இந்து நாளேடு (20-03-2021) குறிப்பிட்டு சுட்டிக் காட்டுகிறது.

புதிய தமிழகம் கிருஷ்ணசாமி போன்றவர்கள், இந்த கோரிக்கையையே தேவேந்திர குல வேளாளர் மக்களின் துயரத்தைப் போக்கும் கோரிக்கையாக முன் வைப்பதோடு, இதனை சங்க பரிவாரக் கும்பல் நிறைவேற்றும் என்று கூறி அச்சமூக மக்களை சங்க பரிவாரத்தின் கீழ் அணி சேர்க்கின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்னர், தமிழகம் வந்த அமித்ஷாவும் தேவேந்திர குல வேளாள சமூகத்தினரை பட்டியலினத்தில் இருந்து வெளியேற்றுவதாக உறுதியளித்துவிட்டுச் சென்றது நினைவிருக்கலாம். காலங்காலமாக பள்ளன் என்றும் பறையன் என்றும் தலித் மக்களை இழிவாக நடத்தி சாதிய ஒடுக்குமுறையைச் செய்து வந்த சங்க பரிவார சனாதன கும்பலுக்கு திடீரென தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் மீது ஏன் இவ்வளவு கரிசனம் ?

காவிக் கும்பலின் சமூக பொருளாதார அடித்தளமே, பார்ப்பன பனியா மார்வாரி சமூகத்தை மையப்படுத்தி தான் இருக்கிறது. தங்களது சனாதன இந்துமதவெறி அரசியல் அடித்தளத்தை தமிழகத்தில் உருவாக்கவேண்டிய தொலைநோக்குத் திட்டத்தை அரங்கேற்றுவதில் தீவிரமாக ஆர் எஸ் எஸ் முனைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாகத் தான் இட ஒதுக்கீடுகளை படிப்படியாக ஒழிப்பது என்பது. அதற்கு இந்த வகையான சாதியரீதியான முன்னெடுப்புகளும், அணிதிரட்டல்களும் ஆர்.எஸ்.எஸ்.-க்கு அவசியம்.

Dr Krishnasamy
சனாதனத்தின் மகா சன்னிதானத்திடம் ஆசிபெறும் ’சின்ன சன்னிதானம்’ கிருஷ்ணசாமி

குறிப்பாக, இந்தியாவில் இருப்பது போன்ற சாதிய படிநிலைதான் இந்த சனாதனக் கும்பல் இன்றுவரையில் ஆதிக்கம் செலுத்துவதற்கு முக்கியக் காரணம். மேலே இருப்பவன் கீழே இருப்பவனை மிதிப்பான் எனில், கீழே இருப்பவன் மேலே இருப்பவனை எதிர்க்கக் கூடாது என்பதற்காகவே, அவனுக்குக் கீழாக ஒரு சாதியப் படிநிலையை உருவாக்கி, சாதியரீதியிலான தனது மேலாதிக்கத்தைப் பாதுகாத்து வந்திருக்கிறது பார்ப்பனக் கும்பல்.

எங்களை தலித்துகளாக குறிப்பிடாதே, நாங்கள் ஆண்ட பரம்பரை” என்பதுதான்   தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களில் ஓரளவு வசதி வாய்ப்போடு வாழும் நடுத்தர, உயர் நடுத்தர மக்கட் பிரிவினர் மற்றும் கிருஷ்ணசாமி போன்ற காரியவாத தலைவர்களின் முழக்கம். இது ஓரளவு வர்க்கரீதியாக முன்னேறிய பிரிவினரை ஈர்க்கிறது. ஆனால் இன்னும் வர்க்கரீதியில் ஏழ்மையில் உழலும் இலட்சக் கணக்கான மக்களுக்குக் கிடைக்கவிருக்கும் அரைகுறையான இட ஒதுக்கீட்டு நலனைப் பற்றி எதுவும் பேசாமல் கடந்து செல்கிறது இந்த முழக்கம். ஒருவேளை பட்டியலின வெளியேற்றக் கோரிக்கையும் பெயர் மாற்றக் கோரிக்கையும் இச்சமூகத்தைச் சேர்ந்த அனைத்து வர்க்கப் பிரிவு மக்களின் கோரிக்கையாக இருக்கும்பட்சத்தில் அதில் பிரச்சினை ஏதுமில்லை. பிரச்சினையே இங்கு சனாதனத்தை தனது கொள்கையாக வைத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ்.-வுடனான இச்சமூகத் தலைவர்கள் சிலரின் கூட்டுதான்.

அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டு, 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்திய துணைக் கண்டத்தின் பல்வேறு பாகங்களில் மனுநீதி வர்ணாசிரம கொடுங்கோன்மை இன்றளவும் ஆட்சி செய்கிறது. தமிழகத்தில் நீண்ட நெடிய வர்ணாசிரம எதிர்ப்புப் போராட்ட மரபின் காரணமாகவும், கம்யூனிஸ்ட்டுகளின் நீண்ட நெடிய சாதிய, வர்க்கச் சுரண்டல்களுக்கு எதிரான போராட்டங்கள், தந்தை பெரியார் அவர்களின் மகத்தான கருத்தியல் மற்றும் நடைமுறைப் போராட்டங்களின் விளைவாகவும் சனாதன கும்பல் அவ்வளவு எளிதாக தமிழகத்தில் கால் ஊன்ற முடியவில்லை. தற்போது கிருஷ்ணசாமி போன்றவர்களின் மூலம் தமிழகத்தில் சனாதன தர்மத்தை நிலைநாட்ட களமிறங்கியிருக்கிறது ஆர்.எஸ்.எஸ் !!

நிலைமை இப்படி இருக்கையில், “வேளாளர் பெயரை எங்களைத் தவிர யாரும் பயன்படுத்தக்கூடாதுஎன்று பல்வேறு சூத்திர ‘ஆண்ட பரம்பரைகள்’ போர்க்கொடி தூக்கி விட்டன. கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சாதிக் கட்சி /அமைப்புத் தலைவர்களும், பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த சாதிக் கட்சி /அமைப்புத் தலைவர்களும் தாங்கள் தான் வேளாளப் பட்டத்திற்கு முற்று முழுதான ஜவாப்தாரி என்று களத்தில் இறங்கியிருக்கின்றன.

படிக்க :
♦ இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் உண்மையான நோக்கமும் மோடியின் வஞ்சகமும் !
♦ தமிழகப் பல்கலைக் கழகங்களில் பறிபோகும் 69 சதவிகித இடஒதுக்கீடு || CCCE

ஏன் எங்கள் சாதியின் பெயரை அவர்களுக்கு வைக்க வேண்டும் பிராமணர்என்று வைத்துக் கொள்ள வேண்டியதுதானே என்று கேட்கிறார் வெள்ளாளர் சங்க தலைவர். ஆர்.எஸ்.எஸ்.-ன் அடிமடியிலேயே கைவைத்துக் கேட்டிருக்கிறார்தான். ஆனால், சாதிய வன்மத்தில் இருந்துதான் அந்த கேள்வி அவர் மூளையிலிருந்து வருகிறது.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டின் பலனை கமுக்கமாக ‘சூத்திர’ பட்டத்தில் அனுபவித்துக் கொண்டே, மறுபக்கத்தில் சத்திரிய வம்சம் என்ற ஆண்டபரம்பரை பெருமையைப் பேசுவது என இரட்டை வேடம் போட்டுக் கொண்டு திரிகின்றனர் இத்தகைய ‘ஆண்ட சாதி’ சங்கத் தலைவர்கள்.

இந்துத்துவ சனாதன கோட்பாட்டின்படி பிறப்பால் தீர்மானிக்கப்பட்ட சாதி படிநிலையை எவராலும் மாற்ற இயலாது. சனாதனத்தையே தனது கொள்கையாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்., தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் தங்களை இவ்வளவு ஆண்டுகாலமாக பீடித்திருந்த தீண்டாமைக் கொடுமையை விட்டு சமூக ரீதியாக வெளியேறுவதை ஏற்றுக் கொள்ளுமா என்ன ? அப்படி தங்களுக்காகவே பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்.-உம் செயல்படும் என நினைப்பது அச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நினைப்பார்களெனில் அது கசாப்புக்கடை ஆடு கசாப்புக்கடைக்காரனை நம்புவதற்குச் சமம்.

தமிழகத்தில் தங்களது சமூக அடித்தளத்தை உருவாக்க ஆர்.எஸ்.எஸ். கும்பல், தேவேந்திர குல உழைக்கும் மக்களை பகடைக்காயாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. தேவேந்திரகுல உழைக்கும் மக்களின் உரிமை வாழ்வுக்கான போராட்டங்களை ஏறெடுத்தும் பார்க்காதவர்கள் தான் இந்த ஆர்.எஸ்.எஸ். கும்பல். மாறாக தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களை ஒடுக்கிய ஆதிக்க சாதியினருக்கு வெண்சாமரம் வீசியவர்களே இந்த சங்பரிவார் கும்பல்.

1957-முதுகுளத்தூர் பயங்கரம், 1979-ஊஞ்சனை படுகொலை, 1981-மீனாட்சிபுரம் கலவரம், 1982-புளியங்குடி வன்முறை, 1995-கொடியன்குளம் வன்கொடுமை, 1997-மாஞ்சோலை தாமிரபரணி படுகொலைகள், பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு என தேவேந்திர குல வேளாள சமூகத்தினர் மீது ஆதிக்க சாதியினர் மற்றும் போலீசின் திட்டமிட்ட வன்முறைகள் நடத்தப்பட்ட போது, எங்கே போனது இந்த சங்பரிவார் கும்பல்? இந்தத் தாக்குதல்களை எல்லாம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரித்து நின்றன இந்த சனாதனக் கும்பல்.

தமிழகத்தில், குறிப்பாக தஞ்சை மண்ணில் சாதிய, நிலவுடைமை கொடுங்கோன்மைக்கு இலக்காகி அடிமை வாழ்வு வாழ்ந்து வந்த உழைக்கும் மக்களை அணிதிரட்டி போராட்டக் களம் அமைத்தது பொதுவுடமை இயக்கம்தானே ஒழிய சங்க பரிவாரக் கும்பல் அல்ல.

உழைப்புச் சுரண்டல், சாணிப்பால் சவுக்கடி, சுரண்டல் அடக்குமுறை கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் ஆதிக்கசாதி பண்ணையாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்களான சீனிவாசராவ், ஜாம்பவான் ஓடை சிவராமன், வாட்டாக்குடி இரணியன், களப்பால் குப்பு உள்ளிட்ட எண்ணற்ற மாவீரர்கள் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களே. இந்தக் காலங்களில் ஒடுக்கும் மிட்டா மிராசுகளுக்கு ஆதரவாக இருந்ததுதான் சங்க பரிவாரக் கும்பல்.

பசுந்தோல் போர்த்திய புலியாக இன்று தேவேந்திர குல மக்களின் நண்பனாக நாடகமாடும் சனாதன சக்திகளை அந்த மக்கள் புறந்தள்ளி ஒதுக்க வேண்டும்.

மாஞ்சோலை போலீசு வன்முறை வெறியாட்டம்

மோடி அமித்ஷாகுரு மூர்த்தி உள்ளிட்ட கார்ப்பரேட் காவி பாசிச கும்பலின் அரசியல் முகவர்களுக்கு தொண்டூழியம் புரிவதால் கிருஷ்ணசாமி போன்ற ஒரு சிலருக்கு ஆதாயங்கள் கிடைக்கலாம். ஆனால் ஒரு சமூகம் என்ற வகையில் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களுடைய வாழ்க்கையில் மிகப் பெரும் பின்னடைவையே சங்க பரிவாரத்தின் சகவாசம் ஏற்படுத்தும்.

மராட்டிய மன்னன் சிவாஜி சூத்திரன் என்பதால் மன்னனாக மகுடம் சூட்டுவதை தடுத்ததுதான் பார்ப்பன கும்பல். சூத்திரன் நாடாள தகுதியற்றவன் என்பதுதான் பார்ப்பன கோட்பாடு. காமராஜரைக் கொல்ல ஆர்.எஸ்.எஸ். முயற்சித்தது என்பது ஊரறிந்த வரலாறு.

தற்போது பெயர் மாற்றத்தை அங்கீகரித்திருப்பது என்பது தூண்டிலில் மாட்டப்பட்ட புழு. அதை தனக்கான உணவு என மீன் எண்ணினால், அது சங்க பரிவாரத்தின் சதிக்கு பலியாகும் செயலே ஆகும். யாரை அருகில் வைத்திருக்க வேண்டும், யாரை பலியாடாக பயன்படுத்த வேண்டும் என்பதில் சனாதனக் கும்பல் மிகத் தெளிவாக இருக்கிறது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டு உரிமை என்பது யாரும் போட்ட பிச்சை அல்ல; அது சாதி ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தின் விளைவாகக் கிடைத்த உரிமையே. தனியார்மயம் தாராளமயம் உலகமயம் போன்ற மக்கள் விரோத கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்தி அதன் விளைவாக அரசு வேலை வாய்ப்பு, சமூகப் பாதுகாப்பு, சமூக முன்னேற்றம் ஆகியவற்றை கானல் நீராக்கி வருகிறது மத்திய அரசு. இக்கொள்கைகளின் விளைவாக பணியிலும் கல்வியிலும் இட ஒதுக்கீடு என்பது கானல் நீராக்கப்பட்டுவிட்டது.

வெறுமனே தேவேந்திர குல வேளாளர் எனும் பெயர் மாற்றமோ, பட்டியலின வெளியேற்றமோ இச்சமூகத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்களின் சமூக பொருளியல் வாழ்வில் பெரும் மாற்றம் எதையும் ஏற்படுத்தப் போவதில்லை. இன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மறுகாலனியாக்கக் கொள்கைகள் மற்றும் காவிப் பாசிச சட்டங்களை எதிர்த்துப் போராடினால் மட்டுமே சமூக இழிவுகளில் இருந்து வெளியேற முடியுமே அன்றி, வெறுமனே பட்டியலின வெளியேற்றத்தால் அல்ல என்பதை உணர்ந்து போராட வேண்டிய தருணம் இது !!


இரணியன்