குஜராத் மாநில சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இஷ்ரத் ஜஹான் போலி மோதல் கொலை வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட போலீசு அதிகாரிகள் அனைவரையும் இந்த வழக்கில் இருந்து விடுவிப்பதாக நீதிபதி வி.ஆர். ராவல் உத்தரவிட்டிருக்கிறார்.

மோடியை கொல்ல சதி செய்தவர் எனக் குற்றம் சாட்டி, 19 வயதான இஷ்ரத் ஜகான் எனும் இளம்பெண்ணை போலி மோதல் கொலையில் கடந்த 2004-ம் ஆண்டு சுட்டுக் கொன்றது குஜராத் போலீசு.

இவ்வழக்கு குறித்து துவக்கத்தில் அமைக்கப்பட்ட மாஜிஸ்ட்ரேட் விசாரணை, சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை மற்றும் சி.பி.ஐ விசாரணை ஆகிய அனைத்து விசாரணைகளின் அறிக்கைகளும் இஸ்ரத் ஜஹான் மோதல் கொலை, போலியாக நடத்தப்பட்டது என்றும் அது ஒரு பச்சைப் படுகொலை என்றே தெரிவித்தன.

படிக்க :
♦ இஷ்ரத் ஜஹான்: நீதிபதி ஜெயந்த் படேல் – வழக்கறிஞர் துஷ்யந்த் தவே-வைப் பழி வாங்கும் மோடி அரசு !
♦ இஷ்ரத் ஜஹான் போலி மோதல் கொலை : மோடியின் கூட்டாளி முர்முவுக்கு கவர்னர் பதவி !

கடந்த 2013-ம் ஆண்டு தனது முதல் குற்றப் பத்திரிகையை சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.. தாக்கல் செய்தது. இதில் 7 போலீசு அதிகாரிகள் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர். பி.பி. பாண்டே, டி.ஜி. வன்சாரா, என்.கே. அமின், சிங்கால், பரோட், பார்மர் மற்றும் சௌத்ரி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

கடந்த 2017-ம் ஆண்டு உச்சநீதிமன்றம், அமின் மற்றும் பரோட் ஆகிய இருவரையும் தங்களது பதவியை ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தியது.

2018-ம் ஆண்டில், குஜராத்தின் முன்னாள் பொறுப்பு டி.ஜி.பி பாண்டேவை இந்த வழக்கில் இருந்து விடுவித்தது. சிறைக்குச் சென்று வந்த பாண்டேவை பெயிலில் வந்ததும் மீண்டும் பணியில் அமர்த்தி அழகு பார்த்தது அன்றைய குஜராத் மாநில அரசு. குற்றம்சாட்டப்பட்டிருந்த மற்றொரு போலீசு அதிகாரியான ஜே.ஜி. பார்மர் வழக்கு விசாரணை நடந்த காலகட்டத்திலேயே மரணமடைந்தார்.

போலி மோதல் கொலையில் கொல்லப்பட்ட இளம் பெண் இஷ்ரத் ஜஹான்

கடந்த 2019-ம் ஆண்டில், வன்சாரா மற்றும் அமினை விசாரிக்க மாநில அரசு அனுமதி தர மறுத்த பின்னர், சி.பி.ஐ நீதிமன்றம் அவர்கள் இருவரையும் வழக்கு விசாரணையில் இருந்து விடுவித்தது.

மீதமிருந்த மூவரையும் விசாரிக்க மாநில அரசிடம் அனுமதி கோரியதற்கு, குஜராத் பாஜக அரசு அந்தக் கோரிக்கையை நிராகரித்தது. இந்தத் தகவலை கட்ந்த மார்ச் 20 அன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ தெரிவித்தது.

கடந்த புதன்கிழமை (31-03-2021) அன்று இந்த மூவரையும் விடுவித்த சி.பி.. சிறப்பு நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்கள் (போலி மோதல் கொலையில் கொல்லப்பட்டவர்கள்) பயங்கரவாதி இல்லை என்பதற்கோ, நுண்புலனாய்வுத் துறையின் அறிக்கை போலியானது என்பதற்கோ எவ்வித சான்றும் இல்லை என்று கூறி மாநில அரசு இம்மூவரையும் விசாரிப்பதற்கு அனுமதி மறுத்திருப்பதையும் சுட்டிக் காட்டி இம்மூவரையும் வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளது.

உலகில் எங்கேனும் இப்படி ஒரு கேவலமான உத்தரவை ஒரு நீதிமன்றம் வழங்க முடியும் என்றால், அது இந்தியாவில் மட்டுமே சாத்தியமானது.

சுட்டுக் கொல்லப்பட்டவர் பயங்கரவாதி இல்லை என்று மறுப்பதற்கு ஆதாரம் இல்லை என்று கூறியிருக்கிறது நீதிமன்றம். சுட்டுக் கொல்லப்பட்டவர் தீவிரவாதிதான் என நிரூபிப்பதற்கு ஐ.பி அறிக்கையை தவிர வேறு எதுவும் இல்லை. அந்த ஐ.பி அறிக்கை நம்பகத்தன்மை அற்றது என ஏற்கெனவே விசாரித்த மூன்று அமைப்புகளும் தங்களது அறிக்கையை அளித்துவிட்டன. அப்படி இருந்தாலும் அவர் பயங்கரவாதி இல்லை என மறுக்க ஆதாரம் இல்லையாம்.

அதே நேரத்தில் மற்றொரு முக்கியக் கேள்வியும் கேட்க வேண்டியது இருக்கிறது. போலி மோதல் கொலை குறித்த வழக்கில் கொல்லப்பட்டவர் பயங்கரவாதியா இல்லையா என்ற ஆராய்ச்சி இந்த நீதிபதிக்கு ஏன் தேவை ? பயங்கரவாதி என்றால் போலி மோதலில் கொலை செய்யலாம் என இந்திய அரசியல் சாசனம் அனுமதி அளித்துள்ளதா என்ன ?

படிக்க :
♦ சொராபுதீன் என்கவுண்டர் : 22 பேரும் விடுதலை ! நீதி தேவதைக்கு தூக்கு !
♦ சொராபுதீன் போலி மோதல் கொலை: விடையளிக்கப்படாத கேள்விகள் !

மொத்தத்தில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 போலீசு அதிகாரிகளும் விடுவிக்கப்பட்டுவிட்டனர். இவர்களைத் தவிர வேறு எந்த போலீஸ் அதிகாரியும் இந்த போலி மோதல் கொலையில் குற்றம் சாட்டப்படவில்லை. ஆகவே, இஸ்ரத் ஜஹான் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு செத்துவிட்டாரென்று முடிவுக்கு நம்மை வரச் சொல்கிறது இந்த நீதிமன்றம்.

நிதிமன்றத்தின் இந்த உத்தரவைப் படிக்கையில் மற்றொரு தீர்ப்பு நினைவுக்கு வரலாம். காஞ்சிபுரத்தில் வரதராஜர் கோவில் நிர்வாகி சங்கர் ராமன் கொல்லப்பட்ட வழக்கிலும், காஞ்சி சங்கராச்சாரியான ஜெயேந்திரனையும் குற்றம் சாட்டப்பட்ட பிற கிரிமினல்களையும் விடுவித்து தீர்ப்பளித்தது நீதிமன்றம். அப்போதும் சங்கர்ராமன் தன்னைத் தானே வெட்டிக் கொண்டு செத்துவிட்டார் என்ற முடிவுக்கு நம்மை வரச் சொல்லியது நீதிமன்றம்.

பாசிசக் கும்பல் அமைக்கவிருக்கும் இந்து ராஷ்டிரத்தினில், இப்படி கொலையுண்டவனே தன்னைத் தானே கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் பல தீர்ப்புகளை நாம் அடிக்கடி காணவிருக்கிறோம் என்பதற்குக் கட்டியம் கூறியிருக்கிறது நீதிமன்றத்தின் இந்த உத்தரவு.

கர்ணன்

நன்றி : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க