மன்னார் பெண்களால் இதுவரை சொல்லப்படாத கதைகள் !

லங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள மன்னார் நகரமானது, மன்னார் மாவட்டத்தின் பிரதான நகரமாகும். பிரபலமான மடு ஆலயம் இங்குதான் அமைந்துள்ளது. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ராமேஷ்வரம் பகுதிக்கு மிகவும் அண்மையில் அமைந்துள்ள இந்தத் தீவுத் தொகுதியில் பெரும்பான்மையாக வசிப்பவர்கள் கத்தோலிக்கர்கள் என்ற போதிலும், இன, மத ரீதியாக பல்வேறு கலாசாரங்களைப் பின்பற்றும் பல்வேறு தரப்பட்ட மக்களும் இங்கு வாழ்ந்து வருகிறார்கள். வெவ்வேறு அடையாளங்களோடு பல சமூகங்கள் இங்கு வாழ்ந்து வரும் போதிலும், செய்யும் தொழில், மொழி போன்றவற்றால் அவர்களது சமூக வாழ்வியல் ஒன்றாகப் பிணைக்கப்பட்டே காணப்படுகிறது.

நீண்ட நெடுங்காலமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இலங்கையின் தனித்த மூலையொன்றில் அமைந்திருக்கும் இந்தத் தீவின் மக்களுக்கு, இன்றும் கூட அமைதியான, இயல்பான வாழ்க்கை மறுக்கப்பட்டிருக்கிறது. இவற்றிடையே இங்குள்ள பெண்களும் பல்வேறு மட்டங்களில் பல்வேறு விதமான துன்புறுத்தல்களுக்கு தினந்தோறும் ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். கீழே தரப்பட்டுள்ள அனைத்தும், அவ்வாறான ஒடுக்குமுறைகளுக்கு ஆட்பட்டுள்ள பெண்கள் இதுவரை வெளியே சொல்லாத வாக்குமூலங்களாகும்.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : கச்சத்தீவும் இந்திய மீனவரும் ..
♦ மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் எண்ணூர் ஆலைகள் ! | படக்கட்டுரை

சஞ்சுலா பீற்றர்ஸ்.

தற்கால நவீன உலகில் பெண்கள் எதிர்கொள்ள நேரும் பிரச்சனைகள் மிகவும் குறைந்துள்ளதாக மார் தட்டிக் கொண்ட போதிலும், இன்றும் புராதன காலத்தைப் போலவே பெண்கள் தமது சமூகத்துக்குள்ளேயே நிறைய பிரச்சனைகளை தினந்தோறும் சந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பதற்கு மன்னாரில் வசிக்கும் இந்தப் பெண்களின் கதைகள் ஒரு உதாரணம் மாத்திரமே.

இவ்வாறு உலகறிய வேண்டியதும், உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதும், விரைவில் தீர்க்கப்பட வேண்டியதுமான பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை, சம்பந்தப்பட்ட பெண்களுடன் கலந்துரையாடி சமூகத்திற்கு வெளிக்கொண்டு வந்திருக்கிறார் சமூக சேவகியும், பெண் சட்டத்தரணியுமான சஞ்சுலா பீற்றர்ஸ்.

இதை வாசிக்கும் தமிழ் சமூகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஆதங்கத்தோடு அந்த உரையாடல்களை தமிழில் தந்திருக்கிறேன்.

000

ரோஸ்மேரி : எனது கணவன், நான்கு பிள்ளைகளோடு என்னைக் கைவிட்டுச் சென்ற போது மூத்த பிள்ளைக்கு 13 வயது. ஆரம்பத்தில் பிள்ளைகளோடு தெருவோரம் வசித்து வந்தேன். பிறகு, பாடுபட்டு ஒரு குடிசையை அமைத்துக் கொண்டேன். கடலில் இறால்களையும், கடலட்டைகளையும் பிடித்துத்தான் வாழ்ந்து வருகிறேன். இந்தப் பிரதேசத்திலுள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட குடும்பத் தலைவிகள் பெரும்பாலானோரின் ஜீவனோபாயத் தொழில் அதுதான். இருந்தாலும் தொழிலுக்குத் தேவையான எவ்விதமான உபகரணங்களும் இல்லாமல்தான் அவர்கள் அனைவருமே தமது தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமது கைகளைக் கொண்டே அவர்கள் இவற்றைப் பிடிக்கிறார்கள். ஆகவே, அடிக்கடி பல விபத்துக்களைச் சந்திக்கிறார்கள். குடும்பத் தலைவி, மீனவத் தொழிலில் ஈடுபடும் பெண்ணொருத்தி ஆகிய பொறுப்புகளைக் கொண்டுள்ள பெண் என்ற காரணத்தால் பலவிதமான ஒடுக்குமுறைகளுக்கு நான் அடிக்கடி ஆளாகிக் கொண்டிருக்கிறேன். எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எடுத்துக் கூற நான் முன்வரும் போது, ‘அதைப் பற்றிப் பேச ஒரு பொம்பளையான நீ ஏன் முன்வருகிறாய்?’ என என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். பெண்ணாக இருப்பதாலேயே பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது நான் அவமானப்படுத்தப்படுகிறேன்.

ரோஸ்மேரி

ஆண்களை மாத்திரம் உறுப்பினர்களாகக் கொண்டுள்ள இப் பிரதேசத்தின் மீனவர் சங்கம் ஆனது, மீனவத் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு உதவி செய்ய முன்வராத காரணத்தால் பெண்களால் மகளிர் மீனவர் சங்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. எமது மகளிர் மீனவ சங்கத்தால் வீடற்ற ஒரு குடும்பத்துக்கு வீடு கட்ட உதவி செய்தோம். பிரதேசத்தின் ஆடவர் மீனவர் சங்கமானது, நாம் அவர்களை மீறிச் செயல்படுகிறோம் என்று எம்மை அவமதித்து இடையூறு விளைவித்தது.

எமது ஊரில் அமைந்துள்ள கடற்படைத் தளத்தின் அனுமதி இல்லாவிட்டால், எமக்கு கடலில் இறங்க அனுமதி கிடைப்பதில்லை. இரவில்தான் கடல் அட்டைகளைப் பிடிக்க முடியும். அந்த நேரத்தில் கடற்படை இராணுவம் எமக்கு கடலுக்குப் போக அனுமதி தருவதில்லை. கடற்படை முகாமைச் சுற்றியுள்ள பகுதியை துப்புரவாக்கிக் கொடுத்தாலே கடலுக்குப் போக அனுமதியளிக்கும். இந்தக் கடற்தொழிலால்தான் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். ஆகவே அவர்களுக்குத் தெரிவிக்காமல் கடலுக்குச் சென்று வந்ததை அவர்கள் அறிந்து கொண்டால் எம்மிடம் ஐந்து கொப்பிகள், பத்துக் கத்திகள், கண்ணாடிக் குவளையொன்று, மின்சூள் விளக்கொன்றை வாங்கித் தருமாறு விதவைப் பெண்களான எங்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள். இவ்வாறான இடையூறுகளால் எம்மால் எமது வாழ்க்கையைக் கொண்டு செல்ல முடிவதில்லை.

இந்தக் காலத்தில்தான் கடலட்டைகள் அதிகளவில் அகப்படும் என்ற போதிலும் இதுவரை எமக்கு கடலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்படாததால், ஏனைய மீனவர்கள் நாங்கள் தொழிலில் ஈடுபடும் எமது எல்லைக்குள்ளிருக்கும் கடலட்டைகளைப் பிடித்துச் செல்கிறார்கள். தலைமன்னாரிலிருந்து வரும் ட்ரோலர் கப்பல்களும் எல்லாவற்றையும் பிடித்துக் கொண்டு போவதோடு, அவற்றுடனே எமது வலைகளையும் அறுத்துக் கொண்டு போய் விடுகின்றன. அவ்வாறான நாட்களில் எமக்கு எதுவுமே கிடைப்பதில்லை. நாங்கள் வெறுங்கையுடன் வீட்டுக்குப் போக நேரும். அதனால், வலை வாங்கவென எடுத்த வங்கிக் கடனைச் செலுத்த வழியற்று சிலர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் பெண்கள் என்பதால் இவ்வாறான தொந்தரவுகளும், இடையூறுகளும் தொடர்ந்தும் நடந்து கொண்டேயிருக்கின்றன. ஆதரவற்று தனித்துப் போன பெண்களான நாங்கள் எமது சுய முயற்சியில் வாழ்க்கையைக் கொண்டு செல்ல மீனவத் தொழிலில் ஈடுபட்டுள்ள போதிலும் எமக்கு அதை ஒழுங்காகச் செய்வதற்கான வாய்ப்பேயில்லை.

000

அப்துல் கஃபூர் நஜீபா : நான் 2001-ஆம் ஆண்டிலிருந்து காதி நீதிமன்றத்துக்கு போய் வருகிறேன். பெண்ணின் வாக்குமூலத்தைக் கேட்க அங்கே பெண்ணொருவர் நியமிக்கப்பட்டிருப்பதில்லை. ஆகவே, எமது பிரச்சனைகளை அங்கு எம்மால் வெளிப்படையாகக் கதைக்க(பேச) முடிவதில்லை. ஆண்களிடம் கூற முடியாதவற்றை வெளிப்படையாக முறையிட்டுக் கூற அங்கு எவரும் இருப்பதில்லை. பெண்களின் கண்ணீர்க் கதைகளை காதி நீதிமன்றத்தில் கூறப் போய் பெண்கள் மிகவும் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறு கூறப் போய் காதி நீதிமன்றத்தில் வைத்து காதி நீதவானே(நீதிபதியே) என்னை தூஷண(தகாத) வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தியிருக்கிறார். குறைந்தபட்சம் நாங்கள் யாரென்று கூட அவர் விசாரிப்பதில்லை. நாங்கள் அனைவரும் சுய மரியாதையோடு வாழ வேண்டும். காதி நீதிமன்றத்தால் எனக்கு எந்த வித நீதியும் வழங்கப்படாத காரணத்தால் இப்போதெல்லாம் நான் காதி நீதிமன்றம் செல்வதில்லை.

அப்துல் கஃபூர் நஜீபா

போலீஸும் ஆண்களின் பக்கமே சார்ந்திருக்கிறது. போலீஸுக்குப் போனாலும் எம்மிடம் பணம் இருந்தால் மாத்திரமே உரிய நடவடிக்கை எடுப்பார்கள். அங்கும் பெண்ணென்ற காரணத்தால் கீழ்த்தரமாகத்தான் நடத்துவார்கள். ஐந்து வருடங்களுக்கு முன்பு நான் ஒரு முறைப்பாடு கொடுக்கப் போயிருந்த வேளையில் அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் மிகவும் மோசமான விதத்தில் என்னிடம் கதைத்தார்கள்(பேசுவார்கள்). ‘நீங்கள் போலீஸ் என்பதால்தானே இப்படியெல்லாம் பேசுகிறீர்கள். பெண்கள் விளையாட்டுப் பொருட்களில்லை. எங்களுக்கும் சுய கௌரவம் இருக்கிறது. அதனால் என்னிடம் இவ்வாறெல்லாம் பேச வேண்டாம்.’ என்று கூறி விட்டு வந்தவள்தான். அதற்குப் பிறகு ஒருபோதும் நான் எந்தப் பிரச்சனைக்கும் போலீஸுக்கே போகவில்லை.

நான் வாழும் சமூகத்திடமிருந்து எவ்விதமான உதவி உபகாரங்களும் கிடைக்கப் பெறாததால் நான் இப் பிரதேசத்திலுள்ள மகளிர் சங்கமொன்றில் இணைந்திருக்கிறேன். இணைந்ததன் பிறகு, எனக்கு உதவி கிடைத்தது. நான் பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். பிள்ளைகளை வாழ வைப்பதற்காகவே பாடுபடுகிறேன். நாங்கள் ஆணின் துணையற்று தனித்து வாழும் பெண்கள் என்பதால் அனுபவிக்க வேண்டிய அனைத்து அநீதங்களுக்கும்(அநீதிகளுக்கும்) முகம்கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

000

அந்தோனி அம்மா : போலீஸுக்குப் போனாலும் நேரடியாக எமது முறைப்பாடுகளை முன்வைக்க முடியாது. அதிகாரிகள் அனைவரும் சிங்கள மொழி பேசுபவர்கள் என்பதனால் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் ஊடாகத்தான் எமது பிரச்சனைகளை எடுத்துக் கூற வேண்டியிருக்கிறது. மொழிபெயர்ப்பாளர் அவர்களிடம் என்ன சொல்கிறார், அதைக் கேட்டு சிங்களத்தில் என்ன எழுதிக் கொள்ளப்படுகிறது என எதுவும் எமக்குத் தெரியாது. மொழிபெயர்ப்பாளர் ஒரு சொல்லையெனும் தவறாகச் சொல்லி விட்டால் நாம் கூறியதற்கு முற்றிலும் மாறுபட்ட விடயங்கள் குறித்துக் கொள்ளப்படலாம், இல்லையா? ஆகவே விசாரணை நடக்கும்போது உரிய மொழி அல்லாத காரணத்தால் நாங்கள் பலவிதமான சங்கடங்களை எதிர்கொள்ள நேர்கிறது.

அந்தோனி அம்மா

மன்னாரின் பிரதான தொழில் மீனவத் தொழில் ஆகும். பொதுவாக ஆண்கள் மீனவத் தொழிலில் ஈடுபடுவதோடு பெண்கள் இல்லத்தரசிகளாக இருப்பார்கள். பெண்கள் சொந்த வீடு கட்ட போன்ற பல்வேறு அத்தியாவசியத் தேவைகளுக்காக ஓரோர் நிறுவனங்களிடமிருந்தும் கடன் வாங்க முன்வருகிறார்கள். அந்த நிறுவனங்களும் பெண்களை இலக்காகக் கொண்டே கடன்களை வழங்குகின்றன. இன்னும் அதிக வட்டிக்கு பிற ஆட்களிடமும் பெண்கள் கடன் வாங்குகிறார்கள். தங்க நகையை அடகு வைத்து பணம் பெறுகிறார்கள். இவ்வாறாக, கடன் பிரச்சனை மன்னார் பெண்கள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

இந்தப் பிரச்சனையைத் தீர்த்துத் தருமாறு கோரி நாங்கள் பிரதேச சபை அலுவலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் கூட நடத்தியிருக்கிறோம். எனினும், நாங்கள் பெண்கள் என்ற காரணத்தால் எமது பிரச்சனைகள் அவர்களால் பொருட்படுத்தப்படவேயில்லை. மன்னார் பிரதேச பெண்கள் ஈடுபட விவசாயம், கைத்தொழில்கள் அல்லது வேறு தொழில் வாய்ப்புகள் எதுவுமேயில்லை. குடும்பங்களில் ஆண்கள்தான் சம்பாதிக்கிறார்கள். பெண்களிடம் பொருளாதார பலம் இல்லாத காரணத்தால் கணவனிடம் ஒரு அடிமையைப் போல இருக்க நேர்ந்திருக்கிறது. இல்லாவிட்டாலும், பெண் என்ற காரணத்தால் எதிர்கொள்ள நேரும் ஒடுக்குதல்கள், அநீதங்களுக்கு முடிவேயில்லாமல் இருக்கிறது.

000

டிலானி குரூஸ் : நான் நகர சபை உறுப்பினர். எமது நகர சபையிலிருக்கும் 16 உறுப்பினர்களில் பெண்கள் மூவர் இருக்கிறார்கள். நான் தமிழ் பேசும் பெண்ணாக, அரசியலில் ஈடுபட்டுள்ளதால் சமூகத்தில் வேறுபாடுகள் காண்பிக்கப்படுகிறது. அரசியல் கட்சி மீதுள்ள வெறுப்பால் அவ்வாறு செய்யப்படுவதில்லை. பெண்ணாக இருப்பதாலேயே அவ்வாறு செய்யப்படுகிறது. பெண்களான நாங்கள் நகரசபை உறுப்பினர்களாக ஆகியுள்ளதால் எம்மை மனரீதியாகத் துன்புறுத்த, அவதூறு கூறுகிறார்கள். ‘பொம்பளைதானே நீ, உன்னால் என்ன செய்ய முடியும்?’ என்று கேட்டிருக்கிறார்கள்.

டிலானி குரூஸ்

அரசியலில் ஈடுபட்டுள்ள சில ஆண்கள் எமது நடத்தை குறித்து பலவிதமான அவதூறான கதைகளை சோடித்து சமூகத்தில் பரப்பி விடுகிறார்கள். அவற்றுக்கு அன்றாடம் முகம்கொடுத்தவாறே பணி புரிவதென்பது மிகுந்த மன அழுத்தத்தைத் தருகிறது. ஒரு பெண்ணைப் பற்றி அவ்வாறு மோசமான கதைகளைப் பரப்பி விட்டால் பெண்கள் பயந்து போய் அடங்கி விடுவார்கள் என்று அவர்கள் கருதிக் கொண்டிருக்கக் கூடும். பெண்களை அரசியல் ரீதியாக முன்னேற விடாமல் வீட்டுக்குள்ளேயே முடக்கி வைப்பதுதான் அவர்களது விருப்பம். நாங்கள் நான்கு வருடங்களுக்கே பதவி வகிக்கப் போகிறோம். பதவி வகிக்கும் எமக்கே இந்த நிலைமை என்றால், இந்தப் பதவிக் காலம் முடிந்த பிறகு சமூகப் பிரச்சனைகளில் தலையிட முடியாமலே போய் விடும்.

எமது நாட்டில் பெண்கள்தான் அதிகம் பேர் இருக்கிறார்கள். நாங்கள் அவர்களுக்காக சேவை செய்யவே பாடுபடுகிறோம். நாங்கள் குரல் எழுப்புவது சிறுவர்களினதும், பெண்களினதும் பிரச்சனைகளுக்காக என்பதை அறிந்திருந்தும் சில பெண்கள் எமக்கெதிராகப் பேசுகிறார்கள். பெண்களே பெண்களுக்கு எதிராக, ஆணாதிக்கத்துக்கு ஆதரவாக வேலை செய்கிறார்கள். பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பெண்கள்தான் வெளிக் கொண்டு வர வேண்டும். பெண்களால் சாதிக்க முடியும் என்று தைரியமூட்ட வேண்டும். பெண்களுக்கு அரசியல் உரிமையை வழங்கவே வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு சமூகத்தைக் கொண்டு வர வேண்டும். நாங்கள் இன்று செய்யும் இந்தப் போராட்டம் எப்போதாவது ஒரு நாளில் மற்றுமொரு பெண்ணுக்கு பலமாக அமையும் என்று நம்புகிறேன்.

000

என்டன் ஜோய் செல்வநாயகி : என்னுடைய கணவர் ஒரு மாற்றுத் திறனாளி. அவரால் நடக்க முடியாது. சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பார். அவரை அங்கே, இங்கே அழைத்துப் போய் வர ஒவ்வொரு நாளும், ஆட்டோ வைத்திருப்பவர்களிடம் உதவி கேட்க நேர்ந்தது. அவ்வாறு உதவி செய்ய முன் வரும் ஆண்கள் என்னிடம் வேறு விடயங்களை எதிர்பார்த்துத்தான் அவ்வாறு எமக்கு உதவி செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டதன் பிறகு, ‘எனக்கு ஆட்டோவை ஓட்டத் தெரிந்திருந்தால் எவரது உதவியும் தேவைப்படாது அல்லவா?’ என்று தோன்றியது. நான் ஆட்டோ ஓட்டக் கற்றுக் கொண்டேன். ஆட்டோவுக்கு கணவரை ஏற்றவும் நான் எவரதும் உதவியை எதிர்பார்ப்பதில்லை. நான் பெண் என்பதால் என்னால் அவரைத் தூக்கிச் சுமக்க முடியாது என்றே எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் நான் தனியாகத்தான் அவரைத் தூக்கிச் சுமந்து ஆட்டோவில் ஏற்றிக் கொள்கிறேன். திடீரென்று ஆட்டோ செயலிழந்து போனால் எவ்வாறு பழுதுபார்ப்பது என்றும் நான் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொண்டேன்.

என்டன் ஜோய் செல்வநாயகி

நான் தண்ணீர் மோட்டார்களை பழுது பார்க்கிறேன். மின்சார வேலைகளையும், கட்டுமான வேலைகளையும் செய்கிறேன். ஆட்டோ ஓட்டாத நேரங்களில் விற்பதற்காக ஆடைகளைத் தைத்து வருகிறேன். சில நிறுவனங்களிலிருந்து தாமாகவே, உதவி செய்யவென வந்தார்கள். அவர்களிடம் ‘எம்மால் ஏதாவது உழைத்துக் கொள்ள முடியும். எம்மை விடவும் நிர்க்கதி நிலையில் இருக்கும் எதுவுமே செய்ய வழியில்லாதவர்களுக்கு அந்த உதவிகளைச் செய்யுங்கள்’ என்று நாங்கள் கூறினோம்.

மன்னார் பிரதேசத்திலேயே ஆட்டோ ஓடும் ஒரே பெண் நான்தான். நான் ஆட்டோ ஓட்டுவதற்கு, ஆட்டோ ஓட்டும் ஆண்கள் கேலி, கிண்டல் செய்கிறார்கள். நான் பெண் என்பதால் எவரேனும் அவ்வாறு என்னைக் கேலி செய்யும்போது நான் அவரிடம் ‘எனக்கு ஆட்டோ ஓட்டத் தெரியும். உங்கள் மனைவிக்கும் வாகனம் ஓட்ட கற்றுக் கொடுங்கள்’ என்று உபதேசிப்பேன்.

எனது கணவர் எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார். நான் உறுதியான பெண் என்று அவர் அடிக்கடி கூறுகிறார். சமூகத்தில் என்னைப் பற்றி பேசப்படும் அவதூறுகளை அவர் பொருட்படுத்துவதில்லை. நாங்கள் இருவரும் திருமணம் முடித்து இப்போது 20 வருடங்கள் ஆகின்றன. நான் பணம் சேர்த்து ‘ஆண்கள் மாத்திரம் ஓடக் கூடியது’ என எல்லோரும் எண்ணியிருக்கும் பெரிய மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கியிருக்கிறேன். நான் பெரிய மோட்டார் சைக்கிள் ஓட்டுகிறேன் என்று எனது கணவரின் சகோதரர்கள் அவருடன் கதைப்பதில்லை.

படிக்க :
♦ பெண்கள் மீது தொடரும் சாதிய மற்றும் மூலதனத்தின் சுரண்டல் !
♦ பெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் !

ஒரு நாள் போக்குவரத்து போலீஸார் எனது மோட்டார் சைக்கிளைத் துரத்தி வந்து ‘நீ ஒரு பெண் என்பதால் இவ்வாறான பெரிய மோட்டார் சைக்கிள்களை ஓட்டக் கூடாது. பெண்களுக்கு அது பொருந்தாது. வேண்டுமென்றால் ஸ்கூட்டர் சைக்கிளொன்றை ஓட்டு’ என்றார்கள். ‘உங்களுக்கு வேண்டும் என்றால் உங்கள் மனைவிக்கு ஸ்கூட்டி ஒன்று வாங்கிக் கொடுங்கள். இது நான் பாடுபட்டு உழைத்து சம்பாதித்த பணத்தில் வாங்கிய சைக்கிள். இதை ஓட்ட எனக்கு உரிமை இருக்கிறது. அதைத் தடுக்க நீங்கள் யார்?’ என்று அவர்களிடம் கேட்டேன். பிறகு போலீஸுக்குப் போய் அவர்களுக்கு எதிராக முறைப்பாடு கொடுத்தேன். இங்குள்ள அநேகமான பெண்கள் என்னைப் பாராட்டுகிறார்கள். ‘அக்கா, உங்களைப் போல நாங்களும் ஆக வேண்டும்’ என்கிறார்கள். சில ஆண்களும் கூட என்னைத் தாண்டிப் போகும்போது பாராட்டி விட்டுப் போயிருக்கிறார்கள்.

எம். ரிஷான் ஷெரீப்

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க