பெட்ரோல் விலையைக் காட்டிலும் கடந்த ஓராண்டில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது சமையல்  எண்ணெய் விலை. பெட்ரோல் இல்லாமல் கூட வாழ்ந்துவிடலாம்; ஆனால், சமையல் எண்ணெய் பயன்படுத்தாத சாமானியர் இருந்துவிட முடியாது. கடந்த 2020-ம் ஆண்டு, தொடக்கத்தில் ரூ.100 விற்ற ஒரு லிட்டர் ரீ பைண்ட் சமையல் எண்ணெய், ஜூன் 2021-ல் ரூ.180-க்கு விற்கப்படுகிறது.

இந்தியாவில் எண்ணெய் விலை கடந்த ஆண்டு அதிகரித்துள்ளது. உதாரணமாக, டெல்லி நகரத்தில் கடுகு, வனஸ்பதி, சோயா மற்றும் பாமாயில் சில்லறை விற்பனை விலை சுமார் 30% அதிகரித்துள்ளது. சூரியகாந்தி எண்ணெய் 40% அதிகரித்துள்ளது.

படிக்க :
♦ ஈரான் கச்சா எண்ணெய் : அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிந்த மோடி அரசு !
♦ வெண்ணெய்த் திருடன் கண்ணன் – எண்ணெய்த் திருடன் மோடி

விலை உயர்வுக்கு என்ன காரணம்?

இந்தியா தனது சமையல் எண்ணெயில் பெரும் பகுதியை இறக்குமதி செய்கிறது. தனது உள்நாட்டு தேவையில் சுமார் 70% அளவிற்கு இறக்குமதி செய்கிறது. இந்த நிலை எப்போதுமே அப்படி இருந்ததில்லை.

1990-களின் முற்பகுதி வரை, கடுகு எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற வழக்கமான சமையல் எண்ணெய்களால் இந்தியா தன்னிறைவு பெற்றது. அந்த நேரத்தில் அமல்படுத்தப்பட்ட தாராளமயமாக்கலுக்குப் பிறகு, சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களுக்குச் சாதகமான கொள்கை முடிவுகளை ஆட்சியாளர்கள் எடுத்ததன் தொடர்ச்சியாகவும்,  தனிநபர் நுகர்வு கணிசமாக அதிகரித்ததன் காரணமாகவும் பற்றாக்குறை அதிகரித்தது.

இந்தியா கச்சா எண்ணெய் (பெட்ரோலியம்), தங்கத்துக்கு அடுத்த படியாக இறக்குமதிக்கு அதிகம் செலவிடும் பொருளாக சமையல் எண்ணெய் மாறியது.

இந்தியாவின் சமையல் எண்ணெய் தேவைக்கு இறக்குமதியை நம்பியிருக்கும் சூழலானது, சர்வதேச நிலைமைகளுக்கு ஏற்றவாறு எண்ணெய்களின் சில்லறை விற்பனை விலையை இந்தியாவில் மாறச் செய்தது.

கடந்த ஆண்டில், உலகம் முழுவதும் பல பயிர்களின் உற்பத்தி பெரும் சவால்களை எதிர்கொண்டன. மலேசியாவில் கோவிட் -19 பொதுமுடக்கத்தால் பனை பயிர் கொள்முதல் மோசமானது. 2020-ம் ஆண்டில் உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் எஎற்பட்ட வறண்ட சூழல் உலக அளவிலான சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியை 9% குறைத்தது. பயோடீசலுக்கான தேவை அதிகரித்ததன் காரணமாக சோயா பீன் எண்ணெய் விலை உச்ச அளவை எட்டியது.

தொடர் பொதுமுடக்கம் காரணமாக வீட்டில் சமைக்கும் உணவுகளின் நுகர்வு அதிகரித்ததால், வடமாநிலங்களில் கடுகு எண்ணெய்க்கான தேவை மேலும் அதிகரித்தது. இந்த காரணங்களால் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கடுகு எண்ணெய் போன்ற எண்ணெய்களின் விலையும் உயர்ந்தது.

உள்நாட்டு உற்பத்தி கைக்கொடுக்குமா?

இந்தியாவின் மொத்த எண்ணெய் வித்து உற்பத்தி கடந்த சில ஆண்டுகளில் ஓரளவு உயர்ந்துள்ளது. கொள்கை அளவில், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதாக அரசாங்கம் கூறிக் கொள்கிறது (இந்த நோக்கங்கள் பெரும்பாலும் பின்பற்றப்படாவிட்டாலும் கூட). அதிகரித்த உள்ளூர் உற்பத்தி, உணவுப் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது. மேலும், விவசாய வருமானத்தை அதிகரிக்க உதவுகிறது. இருப்பினும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது விலையில் ஒரு குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாரத் மேத்தா, இந்தியாவில் நடைமுறையில் உள்ள திறனற்ற விவசாய முறைகளால் உற்பத்தி தன்னிறைவற்ற நிலை ஏற்படுகிறது என விளக்குகிறார். “இந்தியாவில் உற்பத்தித்திறன் மிகக் குறைவு. எனவே இந்த குறைந்த உற்பத்தித்திறனில் விவசாயம் செய்தால், விலைகள் அதிகமாகவே இருக்கும்” என்கிறார்.

சிறிய அளவிலான பண்ணைகள் மற்றும் காலாவதியான விவசாய முறைகளால் இந்தியா வேளாண்மை உலக அளவில் திறமையற்ற ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது.  உதாரணமாக, இந்தியாவைப் போலவே வளரும் நாடாக இருக்கும் பிரேசிலில், சோயாபீன்ஸின் மகசூல் இந்தியாவில் இருப்பதைவிட மூன்று மடங்கு அதிகம்.

எனவே விவசாயத்தை மிகவும் திறன்மிக்கதாக்குவதும், சமையல் எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதும், விலையைக் குறைப்பதற்கான வழிமுறைகளாக இருக்க முடியும்.

எண்ணெய் விலை உயர்வு கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ள நிலையில், ஒன்றிய பாஜக அரசைப் பொருத்தவரையில் அது தேர்தலில் மிகப்பெரும் பாதகத்தை அக்கட்சிக்கு ஏற்படுத்தும் என்றாலும், நிலவும் நிச்சயமற்ற பொருளாதார நிலைமைகள் இப்பிரச்சினையை தீர்க்கும் சூழ்நிலையை ஏற்படுத்த வில்லை.

இறக்குமதி வரிகள் தாக்கத்தை ஏற்படுத்துமா?

பாமாயில் இறக்குமதிக்கு இந்தியா 32.5% வரி விதிக்கிறது, அதே நேரத்தில் கச்சா சோயா பீன் மற்றும் சோயா எண்ணெய்களுக்கு 35% வரி விதிக்கப்படுகிறது. சில்லறை விலைகளை குறைக்க முடியும் என்பதற்காக இந்த வரிகளை குறைப்பதை மோடி அரசு தீவிரமாக பரிசீலித்து வந்தது.

கடந்த ஜூன் 16-ம் தேதி சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை 20% வரை குறைந்துள்ளதாக அரசு செய்திக்குறிப்பு தெரிவித்தது. சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறைந்ததும், வரியைக் குறைப்பதற்கான தனது திட்டங்களை மோடி அரசு நிறுத்தி வைத்திருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

5 விழுக்காடாக இருந்த கச்சா எண்ணெய் (சுத்திகரிக்கப்படாத பாமாயில், சூரியகாந்தி எண்ணெய்) இறக்குமதி வரி, இந்த ஆண்டு 17.5 விழுக்காடாக உயர்த்தியது மோடி அரசு. இதுதான் சமையல் எண்ணெயின் விலையேற்றம் உச்சத்தைத் தொடக் காரணமானது.

பெரும் கார்ப்பரேட்டுகளுக்குச் சாதகமான நடவடிக்கைகள் :

கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து  கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான சிறு இறக்குமதியாளர்களின் உரிமத்தை ஒன்றிய அரசு புதுப்பிக்கவில்லை. சிறு இறக்குமதியாளர்கள் உரிமம் இல்லாததால், பெருநிறுவனங்கள் ஏக போக உரிமையுடன் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து அதிக விலைக்கு இங்கு விற்பதாக சென்னையைச் சேர்ந்த எண்ணெய் இறக்குமதியாளர்கள் மற்றும் வணிகர் சங்கத்தைச் சேர்ந்த சுந்தர் கூறுகிறார்.

படிக்க :
♦ கேஸ் சிலிண்டர் – பெட்ரோல் – டீசல் விலை உயர்வும் – அம்பானிகளின் சொத்து மதிப்பு உயர்வும் !!
♦ பெட்ரோல் விலை உயர்வை ரத்து செய் : பிரான்சில் தீவிரமடையும் போராட்டம் – படக் கட்டுரை

மோடியின் கார்ப்பரேட் நண்பரான அதானி, சிங்கப்பூரின் வில்மர் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் அதிகளவு விற்பனையாகும் ஃபார்ச்சூன் எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடுகிறார். இதைப் போலவே சமையல் எண்ணெயை இறக்குமதி செய்வதில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களை மட்டுமே அனுமதித்திருப்பதால், சமையல் எண்ணெயின் விலை மீதான கட்டுப்பாட்டை பேணுவதில்லை, மோடி அரசு.

90-களுக்குப் பிறகு, வேளாண்மையை இந்திய அரசு கைவிட்டதும், திறந்து விடப்பட்ட சர்வதேச சந்தையும், தொலைநோக்கு திட்டங்கள் எதுவும் இல்லாமல் விட்டதும் தான் சமையல் எண்ணெய் விலை உயர்வுக் காரணமாகியுள்ளது. மோடி தனது நண்பர்களுக்காக  செய்துகொடுத்திருக்கும் கொள்கை மாற்றங்களின் காரணமாக சமையல் எண்ணெயின் விலை உயர்ந்து, பெரும்பான்மையினரது வயிற்றில் அடித்துள்ளது.


கலைமதி
நன்றி : ஸ்க்ரால், தினமணி

1 மறுமொழி

Leave a Reply to சொகுசா பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க