லவ் ஜிகாத், கொரோனா ஜிகாத்துக்கு அடுத்து
முசுலீம் தெரு வியாபாரிகளை குறிவைக்கும் இந்துத்துவ குண்டர் படை !
நிலத்துக்கான ஜிகாத், லவ் ஜிகாத், கொரோனா ஜிகாத், சிவில் சர்வீஸ் ஜிகாத் வரிசையில், இந்துத்துவ குண்டர் படை தலைநகர் உள்ளிட்டு நாடு முழுவதும் முசுலீம் தெரு வியாபாரிகளை குறிவைத்து ’ரெடி ஜிகாத்’ (Redi Jihad) என்ற புதிய சதித்திட்டத்தை உருவாக்கியுள்ளது.
இந்த வகுப்புவாத பிரச்சாரத்தில் பல்வேறு தீவிர இந்துத்துவ அமைப்புகளின் குண்டர்களும் இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் உள்ளூர் தலைவர்களும் ஈடுபட்டுள்ளனர். மேலும், நொய்டாவை தளமாகக் கொண்ட சுதர்சன் டி.வி. என்ற செய்தி தொலைக்காட்சியும் இந்த பிரச்சாரத்தில் இணைந்துள்ளது. தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சமீபத்தில் ஒளிபரப்பு ஊடகங்களுக்கான நெறிமுறைகளை மீறியதற்காக அதன் மேற்பார்வை முறையை கடுமையாக்கிய போதிலும் சுதர்சன் டி.வி. இந்தப் ’பணி’யில் ஈடுபட்டுள்ளது.
படிக்க :
♦ உ.பி : பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் பா.ஜ.க வென்றது எப்படி? || முரளிதரன் காசி விஸ்வநாதன்
♦ அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட ஸ்டான் சுவாமி
ஜூன் 18, 2021 அன்று, புது டெல்லியின் உத்தம் நகரில் ஒரு முசுலீம் பழ விற்பனையாளர், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ எனக் கூச்சலிட்ட அடையாளம் தெரியாத மனிதர்களால் கொடூரமாக தாக்கப்பட்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஜூன் 20 அன்று, ‘ஜிகாதி’ பழ விற்பனையாளர்களால் வன்முறை மற்றும் ஆக்கிரமிப்பு எனக் கூறிய இந்துத்துவ குண்டர்கள் அதே பகுதியில் பரபரப்பான சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இந்த குண்டர்கள் முசுலீம்-விரோத முழக்கங்களை எழுப்பினர். கைகளில் லத்திகளை வைத்துக் கொண்டு, பெரும்பான்மையாக உள்ள முசுலீம் விற்பனையாளர்கள் வரக் கூடாது என்ற எச்சரிக்கையை அனுப்பினர். பின்னர் மாலையில், இந்த குண்டர்களும் உள்ளூர் கடைக்காரர்களும் ‘இந்து ஒற்றுமை’யை வெளிப்படுத்தும் வகையில் சாலையின் நடுவே அனுமன் சாலிசாவை ஓதினர்.
உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, தற்போதைய பதற்றத்திற்கு காரணம் ஒரு வாரத்திற்கு முன்னர் நடந்த ஒரு சண்டையாகும். இதில் ஒரு உள்ளூர் கடைக்காரர் பழ விற்பனையாளர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஜூன் 20 அன்று உத்தம் நகரில் இருந்து ஒளிபரப்பப்பட்ட ஒரு நேரலை வீடியோவில், அடையாளம் தெரியாத ஆண்கள், முசுலீம் விற்பனையாளர்களை அப்பகுதியிலிருந்து விரட்டியடித்ததாகக் கூறினர். தெரு விற்பனையாளர்கள் அனைவரும் முசுலீம்கள் என இந்துத்துவ குண்டர் படையைச் சேர்ந்த ஒருவர் கூறினார். முஸ்லீம் கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்றுகிறார்கள் எனவும் ‘அவர்கள் நடமாடும் புற்றுநோய்’ எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
தெரு விற்பனையாளர்களுக்கும் கடைக்காரர்களுக்கும் இடையிலான சண்டைகள் நகர்ப்புற இந்தியாவின் பிரதானமானவை, குடிமைத் திட்டமிடல் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகள் இல்லாமையும் பதற்றத்தை ஏற்படுத்துகின்றன. எவ்வாறாயினும், உத்தம் நகர் நிகழ்வுக்குப் பின், ஏப்ரல் 2021 முதல் சமூக ஊடக இடுகைகள் மற்றும் ஆன்லைன் கருத்துரைகளை படித்தபோது, வலதுசாரிகள் திட்டமிட்டு, இந்தப் பகுதியில் மத ரீதியிலான கோணத்தை முன்னெடுப்பது தெரிகிறது.
ஒரு குடிமை பிரச்சனையை வகுப்புவாதமாக்குதல்
கிழக்கில் ஜனக்புரி, மேற்கில் நஜாப்கர் ஆகியவற்றின் எல்லையில் அமைந்துள்ள உத்தம் நகர் பகுதி டெல்லியின் மேற்கு விளிம்பில் அடர்த்தியான குடியிருப்பு காலனியாகும். இங்கு தினக் கூலி பெறுபவர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கிறார்கள்.
உத்தம் நகரில் உள்ள மிலாப் நகர் டைல் சந்தை மற்றும் துவாரகா பாஸ் இடையேயான சாலை கடந்த இரண்டு தசாப்தங்களாக கடுமையான போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் பழ விற்பனையாளர்கள் மற்றும் இ-ரிக்ஷாக்களின் அக்கிரமிப்பு. இந்தப் பகுதியில் அதிகரிக்கும் பயிற்சி மையங்களுக்கு வரும் மாணவர்கள் தங்கள் வாகனங்களை சாலைகளில் நிறுத்துவதால், பிரச்சனை மேலும் அதிகரித்துள்ளது. அத்துமீறல்களை அகற்றுவதில் நிர்வாகம் மற்றும் போலீசுத்துறையினரின் குறைபாடான அணுகுமுறை குறித்து அப்பகுதியின் குடியிருப்பாளர்கள் மற்றும் கடைக்காரர்கள் பலமுறை புகார் அளித்துள்ளது நாளிதழ்களில் பதிவாகியுள்ளது.
அதிகாரிகளை நடவடிக்கை எடுக்கக் கோருவதற்குப் பதிலாக அல்லது நகராட்சியையும் போலீசுத்துறையையும் செயல்பட கட்டாயப்படுத்த நீதிமன்றத்திற்குச் செல்வதற்குப் பதிலாக, உள்ளூர் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களும் பல்வேறு இந்துத்துவ அமைப்புகளும் ’கண்காணிக்கும்’ பாதையை தேர்ந்தெடுத்துள்ளனர். (அதாவது, தாமே சட்டமும் நீதிமன்றமும்தான் என்பதை சொல்கின்றனர்). முசுலீம் பழ விற்பனையாளர்களை அப்பகுதியிலிருந்து பலவந்தமாக வெளியேற்றுவதாக அச்சுறுத்தியதைத் தவிர, ஜூன் 20-ஆம் தேதியன்று களத்தில் இறங்கிய குண்டர் படை முசுலீம்களுடன் வியாபாரம் செய்வதை நிறுத்துமாறு இந்துக்களுக்கு அழைப்பு விடுத்தனர்.
முசுலீம்களுக்கு எதிராக வெறுப்பை பரப்புவதாக அடிக்கடி குற்றம்சாட்டப்படும் தீவிர வலதுசாரி தொலைக்காட்சி சேனலான சுதர்சன் நியூஸ், உத்தம் நகரில் நடைபெற்ற நிகழ்வுகளை வன்முறையைத் தூண்டும் வகையில் தெரிவித்துள்ளது. நிகழ்ச்சி முழுவதும், சுதர்சன் நிருபர் சாகர் குமார் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் சுபம் திரிபாதி ஆகியோர் முசுலீம்களை ‘ஜிகாதிகள்’ எனக் குறிப்பிட்டு பிற கேவலமான சொற்களைப் பயன்படுத்தினர்.
‘முதல் முறையாக இந்துக்கள் ஜிகாதிகளுக்கு எதிராக உத்தம் நகரில் லத்திகளுடன் மிகவும் ஆக்ரோஷமாக வெளியே வந்துள்ளனர்’ என சுபம் கூறினார்.
“இன்று, உத்தம் நகரில் அனுமன் சாலிசா பாராயணம் செய்யப்படும், ஜிகாதிகளை புறக்கணிக்க அழைப்பு விடுக்கப்படும். சுதர்ஷன் நியூஸ் நீண்ட காலமாக ஜிகாதிகளை பொருளாதார ரீதியில் புறக்கணிப்பதை ஆதரிக்கிறது” என சாகர் குமார் கூறினார்.
‘இந்த முசுலீம் விற்பனையாளர்களில் பெரும்பாலானோர், கடந்த காலங்களில் வன்முறையைச் செய்த ரோஹிங்கியாக்கள் என்ற தகவல்கூட எங்களுக்கு கிடைத்துள்ளது’ இப்படி எழுதினார் சுதர்சன் நியூஸின் கட்டுரையாளர் அபய் பிரதாப்.
“மோசடி செய்யும் பழக்கம் குறித்து புகார் அளிக்கும் வாடிக்கையாளர்கள் கத்தியால் அச்சுறுத்தப் படுகிறார்கள். நாங்கள் சிறிது நேரம் காத்திருப்போம், ஆனால் எங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கவில்லை என்றால் நாங்கள் இங்கே ஒரு சாலை மறியலை தொடங்குவோம்” என்று பா.ஜ.க-வின் நஜாப்கர் மாவட்ட துணைத் தலைவர் புல்கித் சர்மா உத்தம் நகர் ‘போராட்ட’த்தின் போது கூறினார்.
“அன்று தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றிய வீடியோவில், போராட்டத்தில் மதவாதம் எதுவுமில்லை என சர்மா கூறினார். ஆனால், அவர் தனது வாக்கு பொய் என்பதை நிரூபிக்க ஆத்திரமூட்டும் மற்றும் வகுப்புவாத முழக்கங்களுடன் கூடிய வீடியோக்களைப் பகிர்ந்து கொண்டார்.
மிருகத்தனமாக அடிப்பது
இந்த வலிமையைக் காண்பிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ரிஸ்வான் என்ற முசுலீம் விற்பனையாளர் அடையாளம் தெரியாத இந்துத்துவ குண்டர்களால் தாக்கப்பட்டார்.
“இது ஒரு பழ விற்பனையாளருக்கும் கடைக்காரருக்கும் இடையே ஒரு சிறிய சண்டை காரணமாக தொடங்கியது. இருப்பினும், பல சமூக விரோத சக்திகள் இந்த விஷயத்தில் உள்ளே புகுந்து வகுப்புவாதமாக்கிவிட்டன. பின்னர், எங்கள் விற்பனையாளர்களில் ஒருவரான ரிஸ்வானை கம்புகள் மற்றும் இரும்பு கம்பிகளால் ஒரு கும்பல் தாக்கியது. பலத்த காயமடைந்து தீனதயால் உபாத்யாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குற்றவாளிகளைக் கைது செய்வதற்குப் பதிலாக, போலீசுத்துறையினர் இப்போது தெரு விற்பனையாளர்களைத் துன்புறுத்துகிறார்கள்” என மேற்கு டெல்லியில் உள்ள பழ விற்பனையாளர்களின் தலைவர் அஜய் சிங் கூறுகிறார்.
“ஜூன் 18, 2021 அன்று இரவு 9 மணியளவில், நான் எனது பழ வண்டியை சந்தையிலிருந்து இழுத்துக் கொண்டிருந்தேன். அப்போது 10 முதல் 15 பேர் கொண்ட கும்பல் என்னைத் தாக்கியது. அடி விழுந்தது மட்டும்தான் எனக்குத் தெரியும். வேறு எதையும் அவர்கள் சொல்லவில்லை. அவர்கள் யார் என்று எனக்குத் தெரியாது” என்கிறார் ரிஸ்வான். ரிஸ்வான் இந்த விஷயத்தைப் பற்றி பேசத் தயங்குகிறார். இதைக் கடந்து செல்ல விரும்பினாலும், டெல்லி துவாரகாவில் உள்ள பூண்டா புர் போலீசு நிலையத்தில் ஜூன் 19-ஆம் தேதியன்று பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூச்சலிட்ட ஒரு குழுவினர் தாக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது பெயரை கேட்டதாகவும், ‘ரிஸ்வான்’ எனக் கூறியபோது கொடூரமாக தாக்கப்பட்டதாகவும், அவர் இனி தனது வண்டியை அப்பகுதிக்கு கொண்டு வரக் கூடாது என அவர்கள் சொன்னதாகவும் குறிப்பிடுகிறார்.
ரிஸ்வானுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டு, திட்டமிட்ட மதரீதியிலான தாக்குதல் என முதல் தகவல் அறிக்கை விவரிக்கிறது. ஆனால் டெல்லி போலீசுத்துறை தொடர்புடைய மற்றும் மிகவும் தீவிரமான – இந்திய தண்டனை சட்ட பிரிவுகளின் (153, 295 அல்லது 505) கீழ் வழக்கைப் பதியவில்லை. அதற்கு பதிலாக வழக்கை சாதாரண தாக்குதலாக பதிவு செய்துள்ளது.
பழ விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் அஜய் சிங், உள்ளூர் அரசியல்வாதிகளின் ஆதரவோடு சமூக விரோத சக்திகளால் இந்த தாக்குதல் நடந்துள்ளது என கூறுகிறார். விற்பனையாளர்கள் சட்டவிரோத ‘வசூல்’ மற்றும் அதிகாரிகளின் துன்புறுத்தல் குறித்து தன்னிடம் புகார் அளித்ததாக அவர் குற்றம் சாட்டினார். “நீண்ட காலமாக, இந்த இனவாத திட்டம் வெளிப்புற நோக்கங்களுக்காக அனுமதிக்கப்பட்டது. இது அமைதியை சீர்குலைக்கும் மற்றும் அப்பகுதியில் கலவரத்தைத் தூண்டக்கூடும் என நான் போலீசில் புகார் செய்தேன்” என்கிறார் சிங்.
ஒரு வருடத்திற்கும் மேலாக முசுலீம் விற்பனையாளர்களை குறிவைத்து இந்துத்துவா குண்டர்கள் பல வெறுப்புணர்வை தூண்டும் வீடியோக்கள் மற்றும் சமூக ஊடக பதிவுகளை எழுதி வருகின்றனர் என்பது சிங்கின் கருத்துக்கு வலுசேர்க்கிறது.
இந்துத்துவா சமூக ஊடக வலைப்பின்னல்களில் முசுலீம்-விரோத வன்முறையை ஊக்குவிக்கும் வீடியோக்களையும் பரப்பி வருகின்றனர். பல வீடியோக்களில் இடம்பெற்ற பா.ஜ.க உள்ளூர் தலைவரான ஹிமாஷு யாதவ், “இவர்களில் 90% பேர் ரோஹிங்கியாக்கள் என்று சிலர் கூறுவார்கள். அவர்கள் அனைவரும் ரோஹிங்கியாக்கள் என்று நான் நம்புகிறேன். மக்களை தாக்கவும் கொலை செய்யவும் அவர்கள் சிறுவர்களையும் பெண்களையும் அனுப்புகிறார்கள்” என்கிறார். யாதவ் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பா.ஜ.க எம்.பி. பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா ஆகியோருடன் உள்ள படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேற்கு டெல்லியில் நடந்த வன்முறை ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு, சுரேஷ் சாவன்கே சுதர்ஷன் டி.வி-யில் ஒரு வீடியோவை ஒளிபரப்பினர். யமுனா நகரில் ஒரு முசுலீம் தெரு விற்பனையாளரின் வண்டியில் ‘குப்தா’ என்ற வார்த்தையை வண்ணம் பூசி அழிக்கும் இந்துத்துவ குண்டர்களின் வீடியோ அது. வெறுப்புணர்வை தூண்டும் அந்த வீடியோவை சாவன்கேவும் ட்வீட் செய்து, “மியான் 18 ஆண்டுகளாக குப்தா என்ற பெயரைப் பயன்படுத்தி பர்கர்களை விற்றுக் கொண்டிருந்தார்” என முசுலீம்களை மோசமாக அழைக்கும் சொல் ஒன்றையும் பயன்படுத்தியுள்ளார். “மக்கள் அதை அகற்றினர். விழித்திருங்கள் விழித்திருங்கள்.” எனவும் அறைகூவல் விடுத்துள்ளார்.
கடந்த வார இறுதியில் பஜ்ரங் தளத்தின் பெயரைக் கொண்ட சுவரொட்டிகள் மற்றும் முசுலீம்களை பொருளாதார ரீதியில் புறக்கணியுங்கள் என அழைப்பு விடுத்தது சமூக ஊடகங்களில் வைரலாகி வந்ததை அடுத்து, போலீசுத்துறை இதுகுறித்து விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.
ஒரு திட்டமிட்ட வெறுப்பு பிரச்சாரம்
உத்தம் நகரில் உள்ளூர் கடைக்காரர்களின் போராட்டத்தை வகுப்புவாதமாக்கியது, நீண்டகால இந்துத்துவ பிரச்சாரத்தின் விளைவு. இது 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சில முக்கியத்துவங்களைப் பெற்றுள்ளது. 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வடகிழக்கு டெல்லியில் நடந்த முசுலீம் எதிர்ப்பு வன்முறைக்குப் பின்னர், 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4-ஆம் தேதியன்று இந்தியா கேட்டில் ஒரு ஆர்ப்பாட்டம் என சுதர்சன் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் சுரேஷ் சவாங்க்கே அழைப்பு விடுத்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக ஒரு வாரம் இந்தத் தொலைக்காட்சி விவாதங்கள் “கலகக்காரர்களை” பொருளாதார ரீதியாக புறக்கணிக்கும்படி அழைப்பு விடுத்தன. இந்த “கலகக்காரர்கள்” யார் என்று சவாங்கே குறிப்பிடவில்லை. ஆனால் அவர் முசுலீம்களைக் குறிப்பிடுவதாக கிராபிக்ஸ் மற்றும் விவரிப்பு மூலம் வலுவான குறிப்புகளைக் கொடுத்தார்.
“உங்கள் தொண்டையை அறுப்பதை தடுக்க நீங்கள் விரும்பினால், உங்கள் பணத்தை இப்போது அவர்களின் ‘பச்சை அங்கிக்கு’ நன்கொடையாக தருவதை நிறுத்த வேண்டும்,” என சாவாங்கே தனது சேனலில் மார்ச் முதல் வாரத்தில் போராட்டங்களை ஏற்பாடு செய்தபோது கூறினார். அவர் “கலகக்காரர்களை” இவ்வாறு விவரித்தார்: “அவர்கள் எங்கள் இராணுவத்தை விட அதிக பணம் பெறுகிறார்கள். இந்த கலவரக்காரர்களுக்கு இராணுவத்தை விட அதிக பணம் கிடைத்தால், அவர்கள் என்ன செய்வார்கள்? முடி திருத்துபவர்களிடம் கூட ரூ.11,000 கோடி பொருளாதாரம் உள்ளது! … நீங்கள் கலகக்காரர்களின் தொழில்களின் பட்டியலை உருவாக்கினால், முடிதிருத்தும் தொழிலாளர்கள், தச்சர்கள், பஞ்சர் ஒட்டுபவர்கள், பழ விற்பனையாளர்கள் மற்றும் மிக முக்கியமாக இறைச்சி வணிகங்களில் அவர்கள் வல்லுநர்களாக உள்ளது தெரியும்”
முசுலீம் சமையல்காரர்கள் மற்றும் வியாபாரிகள் தாங்கள் தயாரிக்கும் உணவில், நோய்களை பரப்பும்பொருட்டு ‘துப்பி’ தருவதாகவும் ஒரு பொய்யான கோட்பாட்டை இந்துத்துவ கும்பல் பரப்பி வருகிறது.
சத்ய சனாதன் சேனலுக்கு அளித்த பேட்டியில், இந்து இளைஞர்கள் சில வேலைகளில் இருந்து முறையாக நீக்கப்பட்டுள்ளதாக மிஸ்ரா கூறுகிறார். “இந்துக்களின் பொருளாதார வாய்ப்புகளை திட்டமிட்டு கொள்ளையடிக்கிறார்கள். இந்த நாட்களில் முடியை வெட்ட இந்து முடிதிருத்துநர் ஒருவரைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். புதிய வேலைகளில், அவர்கள் [முசுலீம்கள்]வீடுகளுக்கு விநியோகிக்கும் பணிகளில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அதை நாம் மாற்ற வேண்டும். இந்த சிக்கலை தீர்க்க, இந்து சுற்றுச்சூழல் அமைப்பு, அமைப்பின் உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கும். ”
சில முறைசாரா வேலை பிரிவுகளில் முசுலீம் ஆதிக்கம் என்ற பொருளில் மிஸ்ரா மற்றும் சாவாங்கே ஆகியோரின் எண்ணங்கள் மற்றொரு வலதுசாரி இந்து அமைப்பான சுதர்சன் வாகினியின் வினோத் சர்மா எதிரொலிக்கிறார். ஜூன் 20-ஆம் தேதியன்று உத்தம் நகரில் நடந்த போராட்டத்தில் ஷர்மா ஒரு முக்கிய பங்கேற்பாளராக இருந்தார். மேலும் அவர் முசுலீம் வணிகங்களின் பொருளாதார புறக்கணிப்பின் தீவிர ஆதரவாளர் ஆவார். கடந்த ஆண்டு, அவர் தனது குடியுரிமை (திருத்த) சட்ட ஆதரவு போராட்டங்களில் மிஸ்ராவுடன் இணைந்து செயல்பாட்டார்.
இந்துத்துவா கும்பலின் ‘ரெடி ஜிஹாத்’ பிரச்சாரத்தின் குறிக்கோள், முசுலீம்களை பொருளாதார ரீதியாக முடக்கி, அவர்களை இந்தியாவில் முறைசாரா வர்த்தகம் மற்றும் சமூக வாழ்க்கையிலிருந்து வெளியேற்றுவதாகும். இந்த இலக்கை அடைய, வலதுசாரி ஆர்வலர்கள் இந்தியாவின் முசுலீம்கள் இந்து வாழ்வாதாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை கையகப்படுத்த சதி செய்கிறார்கள் என்ற அச்சத்தை பரப்பினர். இது இந்துத்துவ குறுங்குழு பிரச்சாரமாக மட்டும் நின்றுவிடவில்லை. 2020-ம் ஆண்டில் தப்லிகி ஜமாஅத் மீதான ஊடக குற்றச்சாட்டுகளுக்குப் பின்னர் அது அதிக மதிப்பைப் பெற்றது. பா.ஜ.க எம்.எல்.ஏக்களும் வலதுசாரித் தலைவர்களும் தங்கள் சுற்றுப்புறங்களில் முசுலீம் வணிகர்கள் நுழைவதைத் தடுத்தனர். கிராமங்களுக்கு வெளியே பலகைகளை ஒட்டினர். முசுலீம்கள் ஊருக்குள் நுழைவைத் தடை செய்தனர். இந்து விற்பனையாளர்களின் வண்டிகளுக்கு காவிக் கொடி கட்டி அனுமதித்தனர்.
2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், இந்திய தள்ளுவண்டி வியாபாரி கூட்டமைப்பு, பொது முடக்கத்தின் முசுலீம் விற்பனையாளர்களுக்கு எதிரான பாகுபாடு குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. “அவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள், தடுத்து நிறுத்தப்படுகிறார்கள், துன்புறுத்தப்படுகிறார்கள், மேலும் முழுமையான தண்டனையின்றி செயல்படும் கண்காணிப்பு குழுக்களால் அடித்து நொறுக்கப்படுகிறார்கள். இந்த சம்பவங்கள் சிலரால் ஊக்கமளிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படுகின்றன” என அந்த அறிக்கை கூறியது.
முறைசாரா பொருளாதாரத்தை சுருக்கியதன் விளைவு
டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் சட்டம் மற்றும் ஆளுமை ஆய்வு மையத்தின் உதவி பேராசிரியர் கசலா ஜமீல், முசுலீம்களின் வாழ்வாதாரத்தை இலக்காகக் கொண்ட இந்துத்துவ பிரச்சாரத்தின் பின்னணியில் உள்ள அரசியல் மற்றும் பொருளாதாரத்தை விளக்கினார்.
“இந்தியாவில் முறைசாரா துறையில் தொழிலாளர் சந்தை பிரிவுகள் பெரும்பாலும் சாதி மற்றும் உறவு வலைப்பின்னல்களைச் சுற்றி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. இதனால்தான் சில சாதிகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்தவர்கள் சில தொழில்களில் வேலை செய்வதை நீங்கள் காண்பீர்கள். முசுலீம்கள் சில துறைகளாக பிரிக்கப்படுகிறார்கள். எடுத்துக்காட்டாக, ‘பஞ்சர் வாலா’ என்ற சொல் முசுலீம்களை சிறுமைப்படுத்தும் சொல்லாக பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் நிறைய ஆட்டோமொபைல் மெக்கானிக்குகள் முசுலீம்கள்” என்கிறார் அவர்.
“நுட்பமான பாகுபாடு, வெளிப்படையான விரோதப் போக்கு, இலக்கு வைக்கப்பட்ட வன்முறை மற்றும் மாசு மற்றும் தூய்மை பற்றிய சாதி அடிப்படையிலான கருத்துக்களை உள்ளடக்கிய சிக்கலான செயல்முறைகள் மூலம், முசுலீம்கள் மிக மோசமான பணியினைக் கொண்ட பிரிவினராக பிரிக்கப்படுகிறார்கள். குறைந்த ஊதியம், குறைவான இலாப விகிதங்கள், கண்ணிய குறைவு, ஆனால் துன்பங்கள் அதிகம். ஏனெனில் இந்த வேலைகள் மற்றவர்களால் விரும்பப்படாதவை அல்லது மற்றவர்களுக்கு எல்லைக்கு அப்பாற்பட்டவை என்பதால் இந்த பிரிவுகளில் அவர்கள் இடத்தை எடுக்க முடிகிறது. இந்த பிரிவுகளில் தெரு விற்பனையும் ஒன்றாகும்” என்கிறார் கசாலா ஜமீல்.
கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த 2020-ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட நீண்டகால பொதுமுடக்கத்தின் காரணமாக முறைசாரா பொருளாதாரத்தில் பெரிய அளவிலான சுருக்கம் இந்த பிரச்சாரங்களை வினையூக்குகிறது என அவர் நம்புகிறார். எப்போதும் இருக்கும் முசுலீம்-விரோத தப்பெண்ணங்கள் கோவிட்-19 நோய்த்தொற்றுகள் அல்லது இந்து வாழ்வாதாரத்தின் மீதான பொருளாதார தாக்குதல்கள் தொடர்பான அச்சத்தைத் தூண்டும் வகையில் மறுவடிவமைக்கப் படுகின்றன எனவும் அவர் கூறுகிறார்.
“அவர்கள் முசுலீம்களை அதிக தொழிலாளர் பிரிவுகளிலிருந்து வெளியேற்ற விரும்புகிறார்கள். பல முசுலீம்களை தெருக்களில் பழம் மற்றும் காய்கறி விற்கும் வியாபாரத்திலிருந்து வெளியேற்றுவது வெற்றிகரமாக இருக்கலாம், ஆனால் இதுவரை, பல இந்து தொழிலாளர்கள் இந்த பிரிவில் பணியாற்ற தயாராக இல்லை” என கசாலா ஜமீல் விளக்கினார்.
‘இனப் படுகொலைக்கான பாதை’
சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனமான ஜெனோசைட் வாட்சின் நிறுவனத் தலைவரும், தலைவருமான கிரிகோரி ஸ்டாண்டன் இனப்படுகொலையின் பத்து நிலைகளில் புறக்கணிப்புகள் மூலம் பாகுபாடு மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது என விவரித்தார்.
கடந்த காலத்தில், சிறுபான்மையினருக்கு எதிரான பெரும்பான்மை பொருளாதார புறக்கணிப்பு பிரச்சாரங்கள் இறுதியில் வெகுஜன வன்முறைக்கு வழிவகுத்தன. இன்று சாவன்கே மற்றும் அவரது கூட்டாளிகளைப் போலவே, நாஜிகளும் யூதர்கள் பொருளாதாரத்தில் அதிக செல்வாக்கு செலுத்துவதாகக் கூறும் சதி கோட்பாடுகளை தயாரித்து பிரச்சாரம் செய்தனர். பின்னர், இந்த ‘தீவிர யூத செல்வாக்கை’ பொருளாதாரத்திலிருந்து அகற்றுவது அவர்களின் பணியாக மாற்றியது. 1933-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த “ஜூடன்பாய்காட்” (யூத புறக்கணிப்பு), சாதாரண ஜெர்மானியர்கள் நாஜி அழைப்பை புறக்கணித்ததால் குறிப்பாக வெற்றிபெறவில்லை. ஆனால், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 1938-ஆம் ஆண்டில், நாஜிக்கள் கிறிஸ்டல்நாட்ச் படுகொலையில் நேரடியாக விஷயங்களை எடுத்துக் கொண்டனர்.
படிக்க :
♦ தண்ணீர் குடித்தது குற்றம் : உ. பி.யில் தொடரும் முசுலீம்கள் மீதான தாக்குதல்கள் !
♦ யோகி ஆட்சியில் உ.பி : பாலியல் வன்முறையின் தலைநகரம் !
இந்தியாவில், விஸ்வ இந்து பரிஷத் தலைமையிலான வலதுசாரி குழுக்களால் விநியோகிக்கப்பட்ட வெறுப்புணர்வை தூண்டும் துண்டுப்பிரசுரங்கள் மூலம் புறக்கணிப்பு பிரச்சாரங்கள் குஜராத்தில் 2002-ஆம் ஆண்டில் முசுலீம்-விரோத படுகொலையின் போது பயன்படுத்தப்பட்டன. மிக சமீபத்தில் ஆசியாவில், மியான்மரின் தீவிர பழமைவாத தேசியவாதி அஷின் விராத்தின் 969 இயக்கம் முசுலீம் வணிகங்களை புறக்கணித்தது. இது ரோஹிங்கியாக்களின் இனப்படுகொலையின் ஒரு பகுதியாக இருந்தன.
‘அடிப்படை மனித உரிமைகளை மீறுதல்’
தன்வீர் கூறினார், “லத்திகள் அல்லது வேறு எந்த ஆயுதத்தையும் வைத்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வது, ஒரு சமூகத்தை புறக்கணிப்பதை வெளிப்படையாக ஆதரிப்பது ஒரு கிரிமினல் குற்றமாகும். இது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல பிரிவுகளை மீறுகிறது. மேலும் இது இந்துக்கள் மற்றும் முசுலீம்களிடையே பகைமையை ஊக்குவிக்கிறது. அதிர்ச்சியூட்டும் வகையில், போலீசுத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.” என்கிறார் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அனஸ் தன்வீர்.
கடந்த 2020-ஆம் ஆண்டு தப்லிகி ஜமாஅத் ஊடக பொய் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னர் முசுலீம்களை புறக்கணிக்குமாறு தொடர்ச்சியான அழைப்புகளை விடுத்தபோது, வழக்கறிஞர் முகமது அஃபீப், அரசியலமைப்புக்கு விரோதமானது, குற்றவியல் தன்மை கொண்டது என எழுதினார். இதுபோன்ற புறக்கணிப்பு அழைப்புகள், அடிப்படை சர்வதேச மனித உரிமை சட்டத்தை மீறுகின்றன என்கிறார்.
கட்டுரையாளர் : அலிசன் ஜாஃப்ரி
சுருக்கப்பட்ட தமிழாக்கம் : கலைமதி
செய்தி ஆதாரம் : The Wire