ஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ நிறுவனத்தின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் யாரெல்லாம் கண்காணிக்கப்பட்டார்கள் என்கிற விவரத்தை த வயர் இணையதளம் 16 ஊடகங்களுடன் சேர்ந்து வெளியிட்டுள்ளது.

பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி, இந்தியாவில் அரசு துறை சார்ந்தவர்கள், அரசியல்வாதிகள், மாணவர் அமைப்பினர், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், குறிப்பாக செயல்பாட்டாளர்கள் கண்காணிக்கப்பட்டுள்ளனர்.

பத்திரிகையாளர்கள் :

குறைந்தது 40 பத்திரிகையாளர்கள் உளவு மென்பொருளுக்கு இலக்காகியுள்ளனர் என்கிறது த வயர் இணையதளம். 7 பத்திரிகையாளர்களின் செல்பேசிகளில் நடத்தப்பட்ட தடயவியல் பகுப்பாய்வில், ஐந்து பேரின் செல்பேசிகளில் உளவு மென்பொருள் ஊடுருவியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

படிக்க :
♦ பெகாசஸ் ஸ்பைவேர் : உளவு மென்பொருள்களின் அரசன் !!
♦ பெகாசஸ் : ‘ஜனநாயகக்’ கட்டமைப்பை உளவு பார்க்கும் இந்து ராஷ்டிரம் !!

  1. எம்.கே. வேணு : த வயர் இணையதளத்தின் நிறுவன ஆசிரியர். இவருடைய செல்பேசியை தடயவியல் பகுப்பாய்வு செய்ததில் பெகாசஸ் தடங்கள் இருப்பது உறுதியாகியுள்ளது.
  2. சுஷாந்த் சிங் : பாதுகாப்புத் துறை சார்ந்து எழுதும் முன்னாள் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையாளர். தடயவியல் பகுப்பாய்வில் இவருடைய செல்பேசியில் உளவு மென்பொருள் தடயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
  3. சித்தார்த் வரதராஜன் : த வயர் இணையதளத்தின் நிறுவன ஆசிரியர். இவருடைய செல்பேசியிலும் உளவு மென்பொருள் நிறுவப்பட்டது உறுதியானது.
  4. பரஞ்சோய் குஹா தாகுர்தா : எகானமிக்கல் பொலிட்டிக்கல் வீக்லியின் முன்னாள் ஆசிரியர், தற்போது நியூஸ்க்ளிக் இணையதளத்தில் எழுதுகிறார். இவருடைய செல்பேசியிலும் உளவு மென்பொருள் வெற்றிகரமாக நிறுவப்பட்டது உறுதியாகியுள்ளது.
  5. எஸ்.என்.எம். அப்தி : முன்னாள் அவுட்லுக் பத்திரிகையாளர். இவருடைய செல்பேசியும் உளவு மென்பொருளால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
  6. விஜய்தா சிங் : உள்துறை அமைச்சகம் குறித்து செய்தி சேகரிக்கும் த ஹிந்து பத்திரிகையாளர். தடயவியல் பகுப்பாய்வில், இவருடைய செல்பேசியில் உளவு மென்பொருளை நிறுவுவதற்கான முயற்சி நடைபெற்றது உறுதியானது. ஆனால், மென்பொருள் வெற்றிகரமாக நிறுவப்படவில்லை.
  1. சுமிதா ஷர்மா : முன்னாள் டி.வி18 தொகுப்பாளர். பகுப்பாய்வில் இவருடைய செல்பேசியிலும் முயற்சிகள் நடைபெற்று, அது தோல்வியில் முடிவடைந்துள்ளது.
  2. ஷிசிர் குப்தா : ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் நிர்வாக ஆசிரியர்.
  3. ரோஹிணி சிங் : சுயாதீன பத்திரிகையாளராக த வயரில், அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தாரின் சர்ச்சைக்குரிய வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து எழுதியவர்.
  4. தேவிரூபா மித்ரா : த வயரில் பணியாற்றும் வெளியுறவு கொள்கை தொடர்பான பிரிவின் ஆசிரியர்.
  5. பிரசாந்த் ஜா : ஹிந்துஸ்தான் டைம்ஸின் கருத்துகள் பிரிவின் ஆசிரியர், முன்பு அரசியல் பிரிவின் தலைமை பொறுப்பில் இருந்தவர்.
  6. பிரேம் சங்கர் ஜா : டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட பல நாளிதழ்களில் ஆசிரியர் குழு பொறுப்பில் இருந்தவர். த வயரில் தொடர்ச்சியாக எழுதி வருபவர்.
  7. ஸ்வாதி சதுர்வேதி : த வயரில் எழுதும் சுயாதீன பத்திரிகையாளர். பா.ஜ.க ஐடி பிரிவின் இழிபுகழ் குறித்து நூல் ஒன்றையும் எழுதியவர்.
  8. ராகுல் சிங் : ஹிந்துஸ்தான் டைம்ஸின் பாதுகாப்புத் துறை தொடர்பான செய்தியாளர்.
  9. அவுரங்கசீப் நபாஸ்க்பந்தி : ஹிந்துஸ்தான் டைம்ஸில் பணியாற்றிய அரசியல் பிரிவின் செய்தியாளர், காங்கிரஸ் கட்சி தொடர்பான செய்தி சேகரிப்பு பணியிலும் இருந்தவர்.
  10. ரிதிகா சோப்ரா : இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் கல்வி மற்றும் தேர்தல் ஆணையம் தொடர்பான பிரிவில் பணியாற்றியவர்.
  11. முசாமில் ஜலீல் : காஷ்மீர் குறித்த செய்தி சேகரிப்பில் பணியாற்றிய இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையாளர்.
  12. சந்தீப் உன்னிதான் : இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறை குறித்த செய்தியாளராக இந்தியா டுடே இதழில் பணிபுரிபவர்.
  13. மனோஜ் குப்தா : டி.வி18 தொலைக்காட்சியின் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் பிரிவின் ஆசிரியர்.
  14. ஜெ.கோபிகிருஷ்ணன் : த பயனீர் பணியாற்றும் புலனாய்வு செய்தியாளர். 2 ஜி டெலிகாம் ஊழல் குறித்து வெளிக் கொண்டு வந்தவர்.
  15. சைகத் தத்தா: தேசியப் பாதுகாப்பு பிரிவில் செய்தியாளராக பணியாற்றியவர்.
  1. இஃப்திகர் கிலானி: டி.என்.ஏ பத்திரிகையில் காஷ்மீர் தொடர்பான செய்தியாளராக இருந்தவர்.
  2. மனோரஞ்சன் குப்தா : வடகிழக்கு பகுதியில் இயங்கும் ஃப்ராண்டியர் தொலைக்காட்சியின் ஆசிரியர்.
  3. சஞ்சாய் ஷ்யாம் : பிகாரைச் சேர்ந்த பத்திரிகையாளர்.
  4. ஜஸ்பால் சிங் ஹெரான் : லூதியானாவில் இயங்கும் பாஞ்சாபி நாளிதழான ரோசானா பெஹ்ரிதார் நாளிதழின் ஆசிரியர்.
  5. ரூபேஸ் குமார் சிங் : ஜார்கண்ட் மாநிலம் ராம்கர்-ஐச் சேர்ந்த சுயாதீன பத்திரிகையாளர்.
  6. தீபக் கித்வானி : லக்னௌ-ஐச் சேர்ந்த டி.என்.ஏ இதழின் முன்னாள் செய்தியாளர்.
  7. சுமிர் கவுல் : பி.டி.ஐ செய்தி முகமையின் பத்திரிகையாளர்.
  8. ஷபிர் ஹுசைன் : காஷ்மீர் குறித்து எழுதி வரும் டெல்லியைச் சேர்ந்த அரசியல் கருத்தாளர்.

அரசியல்வாதிகள் – அவர்கள் தொடர்புடைய தனிநபர்கள் :

  1. ராகுல் காந்தி : கடந்த இரண்டு பொது தேர்தல்களிலும் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னிறுத்தப்பட்டவர்.
  2. அலங்கார் சவாய் : ராகுல் காந்தியின் நெருங்கிய உதவியாளர்.
  3. சச்சின் ராவ் : ராகுல் காந்தியின் மற்றொரு உதவியாளர். காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினர்.
  4. பிரசாந்த் கிஷோர் : தேர்தல் வியூக வகுப்பாளராக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு பணியாற்றியவர். இவருடைய செல்பேசியை பகுப்பாய்வு செய்ததில், செல்பேசி ஹேக் செய்யப்பட்டது உறுதியானது.
  5. அபிஷேக் பானர்ஜி : திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜியின் நெருங்கிய உறவினர்.
  6. அஸ்வினி வைஷ்ணவ் : முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி. தற்போது மத்திய அமைச்சராக பதவி ஏற்றிருக்கிறார்.
  7. பிரகலாத் சிங் பட்டேல் : மத்திய அமைச்சராக உள்ளவர். அவருடைய மனைவி, செயலாளர்கள், உதவியாளர்கள், சமையலர், தோட்டக்காரர் உள்ளிட்டோரும் கண்காணிக்கப்பட்டுள்ளனர்.
  8. பிரவீன் தொகாடியா : விஸ்வ ஹிந்து பரிசத்தின் முன்னாள் தலைவர்.
  9. பிரதீப் அஸ்வதி : இராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜெ சிந்தியாவின் தனிச் செயலர்.
  10. சஞ்சய் கச்ரோ : மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக ஸ்மிருதி இராணி இருந்தபோது, 2014-ஆம் ஆண்டு கார்ப்பரேட் நிர்வாகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆனால், அவருக்கு பணிநியமனம் வழங்கப்படவில்லை. அவருடைய தந்தையும், பருவ வயதை எட்டாத மகனும் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
  11. ஜி.பரமேஸ்வர் : மதசார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கர்நாடகத்தில் நடந்தபோது துணை முதலமைச்சராக இருந்தவர். பல எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்குச் சென்றதால் அந்த ஆட்சி கவிழ்ந்தது.
  12. சதீஸ் : கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஹெ.டி.குமாரசாமியின் தனி செயலர்.
  13. வெங்கடேஷ் : குமாரசாமிக்கு முன்பு கர்நாடக முதலமைச்சராக இருந்த சித்தராமையாவின் தனி செயலர்.
  14. மஞ்சுநாத் முத்தேகவுடா : முன்னாள் பிரதமரும் மஜத-வின் தலைவருமான ஹெ.டி. தேவே கவுடாவின் தனி செயலர்.

அரசியலமைப்பு அதிகாரிகள்

  1. அசோக் லவாசா : தேர்தல் ஆணையராக இருந்தபோது, கண்காணிப்புக்கு சாத்தியமான இலக்காக இருந்தார்.

செயல்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் கல்வியாளர்கள்

  1. ஹனி பாபு : டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர், எல்கர் பரிசத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்.
  2. ரோனா வில்சம் : சிறைக் கைதிகளின் உரிமைக்கான செயல்பாட்டாளர், இவரும் எல்கர் பரிசத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்.
  3. வெர்னோம் கோன்சால்ஸ் : உரிமைகள் செயல்பாட்டாளர், எல்கர் பரிசத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்.
  4. ஆனந்த் தெல்தும்ப்டே : கல்வியாளர் மற்றும் செயல்பாட்டாளர், எல்கர் பரிசத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்.
  5. சோமா சென் : ஓய்வுபெற்ற பேராசிரியர், எல்கர் பரிசத் வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்.
  6. கௌதம் நவ்லாகா : பத்திரிகையாளர் மற்றும் உரிமைகள் செயல்பாட்டாளர், எல்கர் பரிசத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்.
  7. அருண் பெரைரா : எல்கர் பரிசத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர், வழக்கறிஞர்.
  8. சுதா பரத்வாஜ் : செயல்பாட்டாளர் மற்றும் வழக்கறிஞர், எல்கர் பரிசத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்.
  9. பாவனா : எல்கர் பரிசத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தெலுங்கு கவிஞர் வரவர ராவ் மகள்.
  10. மினாள் காட்லிங் : எல்கர் பரிசத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங்கின் மனைவி.
  11. நிஹால்சிங் ரத்தோட் : வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங்கின் உதவியாளர், வழக்கறிஞர்.
  12. ஜகதீஷ் மெஷ்ராம் : சுரேந்திர கட்லிங்கின் மற்றுமொரு உதவியாளர், வழக்கறிஞர்.
  13. மாருதி குர்வாட்கர் : ஊபா பிரிவின் கீழ் பல வழக்குகளுக்கு ஆளானவர். சுரேந்திர காட்லிங் இவருக்கு வழக்கறிஞராக இருந்தார்.
  14. ஷாலினி கேரா : சுதா பரத்வாஜின் வழக்கறிஞர்.
  15. அங்கிட் க்ரிவால் : சுதா பரத்வாஜின் நெருங்கிய சட்ட உதவியாளர்.
  16. ஜெய்சன் கூப்பர் : கேரளத்தைச் சேர்ந்த உரிமைகள் செயல்பாட்டாளர், ஆனந்த் தெல்தும்டேவின் நண்பர்.
  17. ருபாலி ஜாதவ் : கலாச்சார அமைப்பான கபிர் கலா மஞ்ச்-இன் உறுப்பினர்.
  18. லால்சு நகோடி : எல்கர் பரிசத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மகேஷ் ராவுத்தின் நெருங்கிய உதவியாளர்.
  19. சோனி சூரி : பாஸ்தரைச் சேர்ந்த பழங்குடி உரிமைகள் செயல்பாட்டாளர்.
  20. லிங்காராம் கொடோபி : சோனி சூரியின் உறவினர், பத்திரிகையாளர்.
  1. டிகிரி பிரசாத் சவுகான் : சாதி எதிர்ப்பு செயல்பாட்டாளர், பியூசிஎல்-இன் சத்தீஸ்கர் மாநில தலைவர்.
  2. ராஜேஷ் ரஞ்சன் : ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியின் உதவி பேராசிரியர்.
  3. அசோக் பாரதி : தலி உரிமைகள் குழுக்களின் ஒருங்கிணைந்த அமைப்பான அனைத்திந்திய அம்பேத்கர் மகாசபையின் தலைவர்.
  4. உமர் காலித் : ஜே.என்.யூ பல்கலைக்கழக முன்னாள் மாணவர். ஜே.என்.யூ வளாகத்தில் முழக்கம் எழுப்பியதாக தொடரப்பட்ட தேசத் துரோக வழக்கில் முதலில் கைதானவர். டெல்லி கலவர சதி வழக்கில் விசாரணையை எதிர்நோக்கி சிறையில் இருக்கிறார்.
  5. அனிர்பன் பட்டாச்சார்யா : மற்றொரு ஜே.என்.யூ முன்னாள் மாணவர். தேச துரோக வழக்கில் உமர் காலித்துடன் கைதானவர்.
  6. பஞ்ஜோத்ஸ்னா லஹரி : ஜே.என்.யூ மாணவர்.
  7. பெலா பாட்டியா : சத்தீஸ்கரைச் சேர்ந்த வழக்கறிஞர் மற்றும் உரிமைகள் செயல்பாட்டாளர்.
  8. ஷிவ் கோபால் மிஸ்ரா : ரயில்வே யூனியன் தலைவர்.
  9. அஞ்சானி குமார் : டெல்லியைச் சேர்ந்த தொழிலாளர் உரிமைகள் செயல்பாட்டாளர்.
  10. அலோக் சுக்லா : நிலக்கரி சுரங்க எதிர்ப்பு செயல்பாட்டாளர், சத்தீஸ்கர் பச்சாவ் அந்தோலன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்.
  11. சரோஜ் கிரி : டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர்.
  12. சுர்பாரான்சு சௌத்ரி : பாஸ்தரைச் சேர்ந்த அமைதிக்கான செயல்பாட்டாளர்.
  13. சந்தீப் குமார் ராய் : முன்னாள் பிபிசி செய்தியாளர், தொழிற்சங்க செயல்பாட்டாளர்.
  14. காலித் கான் : சந்தீப் குமார் ராயுடன் பணியாற்றியவர்.
  15. இப்சா சத்தாக்‌ஷி : ஜார்க்கண்டைச் சேர்ந்த செயல்பாட்டாளர்.
  16. எஸ்.ஏ.ஆர். கிலானி : நாடாளுமன்ற குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர். இவருடைய செல்பேசியை பகுப்பாய்வு செய்ததில் பெகாசஸ் உளவு மென்பொருளால் பாதிக்கப்பட்டதன் அறிகுறிகள் தென்பட்டன.
  17. ஜி.ஹரகோபால் : ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் சாய்பாபா ஆதரவு குழுவின் தலைவராக இருந்தவர். இவருடைய மூன்று செல்பேசிகளையும் பகுப்பாய்வு செய்ததில் உளவு மென்பொருளால் பாதிக்கப்பட்டதா என்பது குறித்து உறுதி செய்யமுடியவில்லை.
  18. வசந்தா குமாரி : தடை செய்யப்பட்ட மவோயிஸ்டு இயக்கங்களுடன் தொடர்பு என்ற குற்றச்சாட்டின் கீழ் சிறை தண்டனை விதிக்கப்பட்ட, டெல்லி பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர் ஜி.என். சாய்பாபாவின் மனைவி.
  19. ராகேஷ் ரஞ்சன் : டெல்லி பல்கலைக் கழக துணை பேராசிரியர். சாய்பாபா ஆதரவு குழுவின் ஆதரவாளர்.
  20. ஜக்தீப் சொக்கார் : ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கண்காணிப்பு சங்கத்தின் இணை நிறுவனர்.

பொதுமக்கள் :

  1. உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் மீது பாலியல் வன்கொடுமை புகார் கூறிய பெண். அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த பலர் கண்காணிப்புக்கான இலக்குகளாக இருந்தனர்.

வடகிழக்கு பகுதியைச் சேர்ந்த பிரமுகர்கள் :

  1. சமுஜ்ஜால் பட்டாச்சார்ஜி : அனைந்திய அசாம் மாணவர்கள் சங்கத்தின் ஆலோசகர், அஸ்ஸாம் ஒப்பந்தத்தின் பிரிவு 6-ஐ அமல்படுத்துவது குறித்து ஆராய அமைக்கப்பட்ட உயர் மட்டக் குழு உறுப்பினர்.
  2. அனூப் சேட்டியா : அசாமின் ஐக்கிய விடுதலை முன்னணியின் ஒரு தலைவர்.
  3. மலேம் நிஞ்தோஜா : மணிப்பூரை பூர்வீகமாகக் கொண்ட, டெல்லியில் வசிக்கும் எழுத்தாளர்.

நாகா தலைவர்கள் :

  1. அடேம் வசூம் : நாகலிமின் தேசிய சோசலிஸ்ட் கவுன்சிலின் ஒரு தலைவர் (NSCN-Isak Muivah) டிஎச். முய்வா-க்கு பிறகு குழுவின் தலைவராக பொறுப்பேற்க வாய்ப்புள்ளவராக கருதப்படுபவர்.
  2. அபாம் முய்வா : டி.எச் முய்வா-வின் உறவினர். NSCN (I-M)ன் மற்றுமொரு தலைவர்.
  3. அந்தணி சிம்ரே : NSCN (I-M)ன் நாகா இராணுவத்தைச் சேர்ந்த கமாண்டர்.
  4. புந்திங் சிம்ராங் : NSCN (I-M)ன் நாகா இராணவத்தின் முன்னாள் கமாண்டர்.
  5. கிட்டோவி ஜிமோமி : நாகா தேசிய அரசியல் குழுக்களின் ஒருங்கிணைப்பாளர். நரேந்திர மோடி அரசு நாகா பிரச்சனைக்கு ‘ஒற்றை தீர்வை’ கண்டுபிடிக்க இந்த குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

அறிவியலாளர்கள் அல்லது மருத்துவ துறை சார்ந்தவர்

  1. ககந்தீப் கங் : நிபா வைரஸ் ஒழிப்பில் ஈடுபட்ட இந்தியாவின் முன்னணி வைராலஜிஸ்டுகளில் ஒருவர்.
  2. ஹரி மேனன் : பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இந்திய தலைவர்.

சி.பி.ஐ. அதிகாரிகள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்

  1. அலோக் வர்மா : மத்திய புலனாய்வு முகமையின் முன்னாள் தலைவர். மோடி தலைமையிலான அரசு பதவியேற்றபின், வெளியேற்றப்பட்டவர். இவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களின் தொலைபேசி எண்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
  2. ராகேஷ் அஸ்தானா : சி.பி.ஐ-யில் பணியாற்றிய மூத்த அதிகாரி. அலோக் வர்மாவின் பெயர் பட்டியலில் இடம்பெற்ற அதே காலக்கட்டத்தில் இவருடைய பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. மோடியுடன் நெருக்கமாக இருந்தவர். தற்போது டெல்லியின் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  3. ஏ.கே.சர்மா : மற்றுமொரு மூத்த சி.பி.ஐ அதிகாரி, அஸ்தானா, வர்மா ஆகியோர் பட்டியலில் சேர்க்கப்பட்ட அதே காலக்கட்டத்தில் இவரும் சேர்க்கப்பட்டார்.

வர்த்தகத் துறை தொடர்புடையவர்கள் :

  1. அனில் அம்பானி : ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் தலைவர். ரஃபேல் ஊழல் விவகாரம் கிளம்பிய 2018-ஆம் ஆண்டு அனில் அம்பானி பயன்படுத்திய செல்பேசி எண்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
  2. டோனி ஜேசுதாசன் : ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைமை தகவல் தொடர்பு அதிகாரி. அனில் அம்பானியின் எண் சேர்க்கப்பட்ட அதே காலத்தில் ஜேசுதாசன் எண்ணும் அவருடைய மனைவி எண்ணும் சேர்க்கப்பட்டுள்ளன.
  3. வெங்கட ராவ் போசினா : ஃபிரான்சின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்தின் இந்திய பிரதிநிதி.
  4. இந்திரஜித் சியால் : சாப் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் தலைவர்.
  1. பிரத்யூஷ் குமார் : போயிங் இந்தியா நிறுவனத்தின் தலைவர்.
  2. ஹர்மஞ்சித் நாகி : ஃபிரெஞ்ச் நிறுவனமான EDF-இன் தலைவர்.

இந்தியாவில் உள்ள திபெத்திய அதிகாரிகள், செயல்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள் :

  1. டெம்பா சிரிங் : தலாய் லாமாவின் நீண்ட நாள் தூதராக டெல்லியில் இருந்தவர்.
  2. டென்சின் தக்ல்ஹா : தலாய் லாமாவின் மூத்த உதவியாளர்.
  3. சிம்மே ரிக்சின் : தலாய் லாமாவின் மூத்த உதவியாளர்.
  4. லாப்சங் சங்கே : நாடு கடத்தப்பட்ட திபெத்திய அரசாங்கத்தின் முன்னாள் தலைவர்.

காஷ்மீர் பிரமுகர்கள் :

  1. பிலால் லோன் : பிரிவினைவாத தலைவர், மக்கள் மாநாட்டு கட்சியின் தலைவர் சஜ்ஜத் லோனின் சகோதரர். இவருடைய செல்பேசியை பகுப்பாய்வு செய்ததில் பெகாசஸ் உளவு மென்பொருள் தடயம் இருப்பது கண்டறியப்பட்டது.
  2. தாரிக் புகாரி : அப்னி கட்சி தலைவர் அல்டாஃப் புகாரியின் சகோதரர். பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்த வழக்கில் ஏப்ரல் 2019-ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமையால் விசாரிக்கப்பட்டவர். அரசியல்வாதி மற்றும் தொழிலதிபர்.
  3. சையத் நசீம் கிலானி : அறிவியலாளர், முக்கிய பிரிவினைவாத தலைவர் சையது அலி ஷா கிலானியின் மகன்.
  4. மிர்வைஸ் உமர் ஃபரூக் : ஹுரியத் மாநாட்டு கட்சியின் தலைவர், ஜாமா மசூதியின் மூத்த மதத் தலைவர்.
  5. வாகுவார் பாத்தி : மனித உரிமை செயல்பாட்டாளர்.
  6. ஜஃபார் அக்மர் பட் : ஹுரியத்துடன் தொடர்புடைய ஷியா பிரிவின் செல்வாக்குமிக்க மதத்தலைவர். பிரிவினைவாத தலைவர்.

தேசிய பாதுகாப்புத் துறை தொடர்புடையவர்கள் :

  1. கே.கே.சர்மா : கண்காணிப்புக்கான இலக்காக தேர்வு செய்யப்பட்டபோது, எல்லை பாதுகாப்பு படையின் தலைவராக இருந்தார்.
  2. ஜெகதீஷ் மைதானி : எல்லைப் பாதுகாப்பு படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல், மத்திய உள்துறை அமைச்சகத்தின் விரிவான ஒருங்கிணைந்த எல்லை மேலாண்மை அமைப்பு (CIBMS) அல்லது ஸ்மார்ட் ஃபென்சிங் திட்டத்தில் முக்கியமானவராக இருந்தவர்.
  3. ஜிதேந்திர குமார் ஓஜா : ரா’ அமைப்பின் மூத்த அதிகாரி. ஜனவரி 2018-இல் அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், இந்த முடிவுக்கு எதிராக மத்திய நிர்வாக தீர்ப்பாயத்திடம் முறையிட்டார். அதன்பின், அவர் கண்காணிப்பின் சாத்தியமான இலக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  4. கர்னல் முகுல் தேவ் : அமைதி பகுதிகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு இலவச ரேசன் வழங்குவதை நிறுத்தும் ஆணையை அரசு வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்.
  5. கர்னல் அமித் குமார் : வரவிருக்கும் ஆயுதப்படை (சிறப்புப் படை) சட்டம் நீர்த்துப்போகும் எனக் கூறி 356 இராணுவ வீரர்கள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த மற்றொரு இராணுவ அதிகாரி.

புலனாய்வு முகமையை சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் :

  1. ராஜேஷ்வர் சிங் : மூத்த அமலாக்க இயக்குநரக அதிகாரி, தனது நிறுவனத்தால் நடத்தப்பட்ட பல உயர்மட்ட விசாரணைகளுக்கு தலைமை தாங்கினார். அவரது மனைவி மற்றும் அவரது இரண்டு சகோதரிகளும் கண்காணிப்புக்கான இலக்காக இருந்தனர்.
  2. அபா சிங் : ராஜேஸ்வர் சிங்கின் சகோதரி, அவர் மும்பையில் வழக்கறிஞராக உள்ளார். அவரது செல்பேசி தடயவியல் பகுப்பாய்வு செய்யப்பட்டது, ஆனால் முடிவுகள் உறுதியாகவில்லை.
  3. வி.கே.ஜெயின் : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளராக பணியாற்றிய முன்னாள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி.

பிகார் கிரிக்கெட் அலுவலர்கள்

  1. ராகேஷ் திவாரி : பீகார் கிரிக்கெட் சங்கத்தின் தற்போதைய தலைவர்.

படிக்க :
♦ பெகாசஸ் : இந்து ராஷ்டிரத்தின் எதிரிகளே அதன் இலக்குகள் !
♦ பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஊடகவியலாளர்களை குறி வைக்கும் மக்கள் விரோத அரசுகள் !

வர்த்தக துறையினர், பொதுத்துறை அதிகாரிகள், இடைத்தரகர்கள்

  1. நரேஷ் கோயல் : ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர், சட்ட பிரச்சனைகள் எதிர் கொண்டிருப்பவர்.
  2. அஜய் சிங் : ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தலைவர், நிர்வாக தலைவர்.
  3. பிரசாந்த் ருயா : எஸ்ஸார் குழுமத்தின் தலைவர்.
  4. விக்ரம் கோத்தாரி : கடன் மோசடி தொடர்பான விசாரணையில் தொடர்புடைய ரோடமேக் பென்ஸ் குழுமத்துடன் தொடர்புடையவர்.
  5. ராகுல் கோத்தாரி : விக்ரம் கோத்தாரியின் மகன்.
  6. சி.சிவசங்கரன் : ஏர்செல் நிறுவனர், தொழிலதிபர். இவர் மீதான விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
  7. பி.சி.திரிபாதி : அரசு நிறுவனமான கெயில் இந்தியாவின் முன்னாள் தலைவர். ஜனவரி 2020-ஆம் ஆண்டு எஸ்ஸார் குழுமத்தில் நிர்வாக அதிகாரமற்ற தலைவராக இணைந்தார்.
  8. வி.பாலசுப்ரமணியன் : ரிலையன்ஸ் நிறுவனத்துக்காக அதிகார மட்டுத்துடன் நீண்ட காலம் இடைத்தரகராக செயல்படுபவர்.
  9. ஏ.என்.சேதுராமன் : ரிலையன்ஸ் அனில் அம்பானி குழுமத்துடன் தொடர்புடைய இடைத்தரகர்.

தமிழக அரசியல்வாதிகள் மற்றும் செயல்பாட்டாளர்கள்

  1. சீமான் : நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்.
  2. திருமுருகன் காந்தி : மே 17 இயக்கத்தின் நிறுவனர்.
  3. கு.ராமகிருஷ்ணன் : தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் நிறுவனர்.
  4. குமரேசன் : திராவிடர் கழகத்தின் பொருளாளர்.


தமிழாக்கம் : அனிதா
செய்தி ஆதாரம் : The Wire