கோவிட்-19 பெருந்தொற்று இந்த பொருளாதார அமைப்பின் ஒவ்வொரு துறையையும், இந்தியா மற்றும் உலக அளவில், மிகமோசமாக பாதித்துள்ளது. ஆனால், கல்வி துறையானது ஒப்பீட்டளவில் தன் வருமானத்தை தக்கவைத்துக் கொண்டது.

பள்ளிகளும் கல்லூரிகளும் இணையவழி கல்விமுறைக்கு தங்களை மாற்றிக் கொண்டனர். இணைய வழியில் கற்பிப்பதை காரணமாக வைத்து, பெரும்பாலான தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் இருந்து முழு கல்வி கட்டணத்தை வசூலித்துவிட்டனர்.

கணக்கெடுப்பும் அதன் முடிவுகளும்

தனியார் கல்வி நிறுவனங்களின் வருமானம் பெருமளவு பாதிப்படையவில்லை. அதுபோலவே அக்கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களின் வாழ்நிலையும் பாதிப்படையவில்லை எனக்கூற முடியாது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆசிரியர்கள் பணி நீக்கமும் சம்பள குறைப்பும் குடும்பத்தை காப்பதற்காக கிடைக்கின்ற வேலைகளை செய்ய இவர்களை நிர்பந்தித்தன.

படிக்க :
♦ UGC-ன் புதிய வகை கற்றல் – கற்பித்தலுக்கான வழிகாட்டுதலைப் புறக்கணிக்கப்போம் || CCCE
♦ தமிழகப் பல்கலைக் கழகங்களில் பறிபோகும் 69 சதவிகித இடஒதுக்கீடு || CCCE

எடுத்துக்காட்டாக, ஒரு தனியார் கல்லூரியில் பணிபுரியும் உதவி பேராசிரியர் கொரோனா கால சம்பள குறைப்பினால் பாதிக்கப்பட்டு, பனை ஓலை வெட்டும் வேலைக்காக பனைமரம் ஏறும்போது தவறி விழுந்து இறந்துவிட்டார். இந்நிகழ்வானது கொரோனா பெருந்தொற்று அரசு உதவிபெறாத தனியார் கல்லூரிகளில் வேலை செய்யும் பேராசிரியர்களின் பணியிலும் வாழ்வாதாரத்திலும் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளை ஆராய வேண்டும் என எங்களை உந்தியது.

சென்னை பல்கலை கழகத்தின் கீழ் இயங்கும் அரசு உதவிபெறாத தனியார் கல்லூரிகளில் பணி புரியும் 194 பேராசிரியர்களை தொடர்பு கொண்டு தகவல்களை சேகரித்தோம். இந்த தகவல் சேகரிப்பு ஜூன் 13 முதல் ஜூன் 26, 2021-வரை நடத்தப்பட்டது.

எங்களுடைய ஆய்வு முடிவுகளின் படி, கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பே அரசு உதவிபெறாத தனியார் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு UGC நிர்ணயித்த அளவை விட குறைந்த சம்பளமுமே பெரும்பாலானோருக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானேருக்கு பணி பாதுகாப்பு சலுகைகள் எதுவும் இல்லை.

கோப்புப்படம்

கணக்கெடுப்பில் கலந்து கொண்ட 194 பேரில், 137 நபர்கள் உதவி பேராசிரியர் பணிக்கு தேவையான, யுஜிசி (UGC) வழிக்காட்டியுள்ள, (PhD or NET or SET) தகுதிகளைப் பெற்றிருக்கிறார்கள்.  இதில் 72% பேராசிரியர்கள் ரூ.25,000-கும் குறைவாகவும் 5.1% பேர் ரூ.10,000-க்கும் குறைவாகவும் சம்பளம் வாங்குகின்றனர்.

ஆனால், மத்திய அரசின் 7-வது சம்பள மறுசீராய்வு குழுவின் பரிந்துரைப்படி, உதவி பேராசிரியர்களுக்கான ஆரம்பநிலை மாத சம்பளம், ரூ.76,809-ஆக நிர்ணயித்துள்ளது. மேலும், ஆய்வு முடிவுகளின் படி, 38% பேராசிரியர்கள் மட்டுமே அரசு காப்பீடும்; 42% பேராசிரியர்கள் மட்டுமே சம்பளத்துடன் கூடிய விடுமுறை சலுகையும் பெற்றுள்ளனர்.

தனியார் கல்லூரி பேராசிரியர்களின் இந்த மோசமான நிலைக்கு காரணம், எந்தவொரு ஒழுங்குமுறை சட்டத்தின் மூலம் அக்கல்வி நிறுவனங்கள் கண்காணிக்கப்படாமல் இருப்பதுதான்.

புதிய தாராளவாதக கொள்கையை இந்திய அரசு பின்பற்றுகின்ற காரணத்தினால், அது உயர்கல்வி வழங்குகின்ற பொறுப்பிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டு வருகிறது. இதன் விளைவாக, பல தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் தோன்றியுள்ளன. அகில இந்திய உயர் கல்வி கணக்கெடுப்பு (All-India Survey on Higher Education) 2020 அறிக்கையின் படி, இந்தியாவிலுள்ள மொத்த கல்லூரிகளில் 65% கல்லூரிகள் அரசு உதவிபெறாத தனியார் கல்லூரிகளாகும்.

1980-களின் தொடக்கத்திலேயே உயர்கல்வியை தனியார்மயப்படுத்திய ஒரு சில மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டிலோ 77% தனியார் கல்லூரிகள் இருக்கின்றன. மேற்கண்ட இவ்விரங்கள் லாபமீட்டுவதையே அடிப்படையாகக் கொண்ட தனியார் கல்லூரிகளே உயர்கல்வித் துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றனர் எனக் காட்டுகிறது.

இணையவழி கல்வி என்ற சுமை

இந்த பின்னணியில் இருந்துதான், கொரோனா பெருந்தொற்று காலத்தில், அரசு உதவிபெறாத தனியார் கல்லூரி பேராசிரியர்களின் வாழ்வாதார பாதிப்பை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அரசு உதவிபெறாத தனியார் கல்லூரி பேராசிரியர்கள் இணைய வழியில் மாணவர்கள் பயில்வதற்கு தங்களால் முடிந்த அனைத்து வகையான முயற்சிகளையும் செய்து வருகின்றனர்.

இருப்பினும், இணைய வசதியின்மை, இடப்பற்றாக்குறை தரமான தொழில்நுட்ப கருவிகள் இல்லாமை போன்ற காரணங்களில் ஒன்றோ அல்லது அனைத்து காரணங்களினாலோ இணையவழி கற்பித்தல்முறை கடினமாக உள்ளதாக கணக்கெடுப்பில் பங்கேற்ற பேராசிரியர்களில் 88% பேர்கள்  தெரிவித்துள்ளனர். இணைய வசதிகளை பேராசிரியர்கள் தங்களின் சொந்த செலவிலேயே ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.

கணக்கெடுக்கப்பட்ட 194 பேராசிரியர்களில் 132 பேர், தொலைப்பேசி, கணினி, மற்றும் தலையணி கேட்பொறி (headphone) போன்ற கருவிகளில் ஒன்றையோ அல்லது அனைத்தையுமோ தங்களது சொந்த செலவிலேயே வாங்கியுள்ளனர். 107 பேராசிரியர்கள் இணையவழி கற்பித்தலின் விளைவாக மனஅழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இவையனைத்தும் தெரிவிப்பது என்னவென்றால் இப்பேராசிரியர்கள் உடலளவிலும், உணர்வு ரீதியாகவும் பொருளாதார ரீதியிலும் பல்வேறு நெருக்கடிகளை இப்பெருந்தொற்று காலத்தில் சகித்துக் கொண்டு இணையவழி கற்பித்தல் சேவையை வழங்கியுள்ளனர்.

இணையவழி கற்பித்தலுக்கான தனியார் கல்லூரி பேராசிரியர்களின் இப்பெரும் முயற்சிகளை இவர்கள் பணிபுரியும் கல்லூரி நிர்வாகத்தினால் அங்கிகரிக்கப்படவில்லை. மாறாக, தனியார் கல்லூரிகளின் சம்பள குறைப்பு நடவடிக்கையின் மூலம் இப்பேராசிரியர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

மொத்த பேராசிரியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே 2020-21-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் தாங்கள் பெற வேண்டிய முழு சம்பளத்தையும் பெற்றதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. மேலும் 10% பேராசிரியர்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் 2020 வரை எந்த சம்பளமும் தரப்படவில்லை.

கோப்புப்படம்

கல்லூரிகள் இணையவழி கற்பித்தல் முறைக்கு மாறிவிட்டதால், கல்வி நிறுவனங்களுக்கான நிர்வாகச் செலவுகள் வெகுவாகக் குறைந்திருக்கும். கூடவே, தனியார் கல்லூரிகள் மாணவர்களிடம் கல்வி கட்டணங்களையும் வசூலித்துவிட்டனர். இந்நிலையில், கொரோனா காலத்தில் பேராசிரியர்களின் சம்பளத்தை குறைத்தது எந்த வகையிலும் நியாயமில்லை.

தங்கள் வேலையை தக்க வைத்துகொள்ள சொந்த சேமிப்புகளை கணினி மற்றும் இணைய தொழில் நுட்பத்திற்கு செலவு செய்தும் இணையவழி கற்பித்தலினால் மனஅழுத்ததிற்கும் உள்ளாகியும் மோசமான சூழ்நிலையில் கடினமாக உழைத்த இப்பேராசிரியர்களின் சம்பளத்தை தனியார் கல்லூரி நிர்வாகங்கள் கொரோனா பெருந்தொற்றை சாக்காக வைத்து கொள்ளையடித்துள்ளனர்.

நியாயமற்ற சம்பள குறைப்புகள் தங்களை வேறு வேலைகளுக்கு செல்லவும் வட்டிக்கு பணம் வாங்கி வாழ்க்கை நடத்தும் நிலைக்கும் தள்ளியுள்ளதாக இப்பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். கட்டிட வேலை, விவசாய வேலை, வாகன பழுது பார்க்கும் வேலை, உணவு மற்றும் பல்பொருள்கள் வினியோகிக்கும் வேலை ஆகியவற்றைச் செய்துள்ளனர்.

கொரோனா பெருந்தொற்று அரசு உதவிபெறாத தனியார் கல்லூரி பேராசிரியர்களின் வாழ்வாதாரத்தை பெருமளவு பாதித்திருந்தாலும், சரியான சட்டப்பாதுகாப்பு இல்லாததினால் இப்பெருந்தொற்றுக்கு முன்பே தனியார் கல்லூரி பேராசிரியர்களின் பணிச்சூழல் மிகவும் மோசமாய்தான் இருந்துள்ளது.

இதில் தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் கல்லூரி பேராசிரியர்களின் சம்பளப் பிடித்தம் முழுவதையும் கல்லூரி நிருவாகம் திருப்பியளிக்க வேண்டும்; எந்த காரணமும் இல்லாமல் பணி நீக்கம் செய்யப்பட்ட பேராசிரியர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும்; கொரோனா பெருந்தொற்று காலத்தில் இணையவழி கற்பித்தலுக்காக ஆசிரியர்கள் செய்த செலவை திருப்பித்தர வேண்டும்.

படிக்க :
♦ பள்ளி மாணவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு கல்வியை கடைச் சரக்காக்கும் மோடி அரசு || CCCE
♦ இணையவழிக் கல்வி : கல்விக் கொள்ளைக்கான நவீனத் திட்டம் || CCCE

2018-ல் கேரளா அரசங்கம் யுஜிசி தகுதியுடைய கவுரவ விரிவுரையாளர்களுக்கு நாளுன்றுக்கு ரூ.1750 விதம் மாதத்திற்கு ரூ.43,750 என்றும் யுஜிசி-ன் தகுதி இல்லாத விரிவுரையாளர்களுக்கு நாளென்றுக்கு ரூ.1600 வீதம் மாதத்திற்க்கு ரூ.40,000-ஐ அடிப்படை சம்பளமாக தனியார் கல்லூரிகள் வழங்க வேண்டுமென்று அரசாணை வெளியிட்டது. இதுமாதிரியான சட்டத்தினை தமிழக அரசும் இயற்ற வேண்டும்.

தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (ஒழுங்குமுறை) சட்டம் 1976-யை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதில், தனியார் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் நலனை பாதுகாக்க, உயர்கல்வி கண்காணிப்பு அமைப்புகளான கல்லூரி கல்வி இயக்குநரகம் மற்றும் பிராந்திய கல்லூரி கல்வி இணை இயக்குநரகம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான சட்டத்திருத்தத்தைக் கொண்டுவர வேண்டும்.

(குறிப்பு : கொரோனா பெருந்தொற்றினால் தனியார் கல்லூரி பேராசிரியர்களின் வாழ்நிலை மிகவும் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. ஆனால், கொரோனாவை காரணம்காட்டி பேராசிரியர்களின் சம்பளத்தைக் குறைத்ததின்மூலம் தனியார் கல்லூரி முதலாளிகள் பெருத்த லாபம் அடைந்துள்ளனர். இதுபற்றி தரவுகளோடு லயோயா கல்லூரி லைவ் நிறுவனத்தின் இயக்குனர் A.P.அருண்கண்ணன் மற்றும் மசசுசெட்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர் கிசோர்குமார், சூர்யபிரகாஷ் இருவரும் எழுதிய கட்டுரை தி இந்து பத்திரிக்கையில் வெளிவந்தது. அதன் தமிழாக்கமே இந்தக் கட்டுரை)

தமிழாக்கம் : பாரதி
CCCE-TN

செய்தி ஆதாரம் : The Hindu