ரு அரசாங்கம் தன் சொந்த மக்களிடம் எவ்வளவு வெளிப்படைத் தன்மையுடன் நடந்துகொள்கிறதோ, அந்த அளவிற்கு, அந்த நாட்டின் ஜனநாயகம் பாதிப்பிற்கு உள்ளாகாமல் இருக்கும்.

வெளிப்படைத்தன்மை, அதிகமான ஆளுமை போன்ற வாயில் வடைசுடும் சமாச்சாரங்களை தேர்தல் முழக்கங்களாகக் கொண்டு ஆட்சியை அமைத்த மோடி அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையின் யோக்கியதை என்ன என்பதை சமீபத்தில் வெளியான பல்வேறு தகவல்கள் அம்பலப்படுத்துகின்றன.

பொதுவாக, நீதிமன்றத்தில் ஒரு குற்றவாளி தான் செய்த குற்றத்திலிருந்து தப்பிக்க, நடந்த குற்றத்தில் தனக்கு எந்தவிதத்திலும் பங்குமில்லை என்று பொய் சாட்சிகள் மூலம் நிரூபித்து வழக்கில் இருந்து தப்பிக்க முயற்சிப்பான். ஆனால் இங்கு மோடியரசோ ஒரு படி மேலேபோய், குற்றமே நடக்கவில்லை என்று நிறுவ முயல்கிறது.

குற்றமே நடக்கவில்லை என்று கூறுவது, எதிர்க்கட்சிகள் கேள்விகேட்டால் தகவல் இல்லை என்று கூறுவது என்பதையே தனது நடைமுறையாகக் கொண்டிருக்கிறது மோடி அரசு.

படிக்க :
♦ வெளிப்படைத் தன்மையாக இருங்கள் மோடி || முன்னாள் அரசுச் செயலர் கடிதம்
♦ உலக அளவில் கொரோனாவை மோசமாகக் கையாண்ட தலைவர்களில் மோடி முதலிடம் !

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மோடியரசு முற்று முழுதும் தோல்வியடைந்தது ஊர் அறிந்ததே. கொரோனா முதல் அலையின்போது, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகையையொட்டி குஜராத்தில் கூட்டம் நடத்தியது, மத்தியபிரதேசத்தில் குதிரை பேரம் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு நடத்துவதற்காக கொரோனாவுக்கான பொது முடக்கத்தை தள்ளி வைத்தது என கொரோனா பரவலுக்கு முக்கிய காரணமாகவும் இருந்தது மோடி அரசுதான்.

கொரோனா முதல் அலையில் புலம்பெயர் தொழிலாளர்களின் அவலத்தையும், மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் மருத்துவமனை வாசலிலும், வீதியிலும் காத்துக்கிடந்த நோயாளிகளையும் நாம் பார்த்தோம். நாடு முழுவத்கும் கொரோனா மரணங்கள் கோரத் தாண்டவம் ஆடின.

கொரோனா இரண்டாம் அலை துவங்கி விட்டது என வல்லுனர்கள் எச்சரித்த சமயத்திலும், தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களையும், உத்தரப் பிரதேசத்தில் கும்பமேளா கூட்டத்தையும் அனுமதித்து இரண்டாம் அலை பெரும் அபாயகரமானதாக உருவெடுக்க மோடி அரசு துணை நின்றது.

முதல் அலையை விட அபாயகரமானதாக, இரண்டாம் அலையின் கோரத்தாண்டவம் இருந்தது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் நாடே திண்டாடியதையும், சுடுகாடுகளில் விடிய விடிய பிணங்கள் எரிந்ததையும், கங்கையில் கொரோனா பிணங்கள் மிதந்ததையும் உலகமே காறி உமிழ்ந்தது. “தி ஆஸ்த்திரேலியன்தொடங்கி வாஷிங்டன் போஸ்ட்வரை அனைத்து ஊடகங்களும் மோடியை கொரோனா ஒழிப்பில் தோல்வியைத் தழுவியவர் என அம்பலப்படுத்தியது. உலக அரங்கில் இந்தியாவை தலைகுனியச் செய்திருக்கிறார் மோடி.

ஆனாலும், ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட இந்தியாவில் இறக்கவில்லை என நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறது இந்த மானங்கெட்ட மோடி அரசு. ஒன்றிய அரசின், குடும்ப மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் பாரதி பிரவின் பவார் ராஜ்யசாபாவில் இதனை தெரிவித்தார்.

உலகமே காறி உமிழ்ந்த ஒரு நிகழ்வை ஒரு முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றிருக்கிறார் மோடி. இதை விட கல்லூளிமங்கனாக ஒரு பிரதமர் இருக்க முடியுமா ?

விவசாயிகள் இறப்பா? அப்படி ஒன்று நடக்கவேயில்லை.

மோடியரசு கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக கொண்டுவந்த மூன்று வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை எதிர்த்து, தலைநகர் டெல்லியில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் விவசாயிகள் போராடி வருகின்றனர். தொடர்ந்து பத்து மாதங்களுக்கும் மேலாக இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையடுத்து விவசாய சங்களின் கூட்டமைப்பான சம்யுக்த் கிசான் கடந்த மார்ச் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், இந்த போராட்டத்தில் இதுவரை 537 விவசாயிகள் உயிர் நீத்துள்ளனர், என்று கூறியதோடு, உயிர் நீத்த விவசாயிகளின் பெயர்ப் பட்டியலையும், அதே செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்கள்.

ஆனால், போராட்டத்தில் உயிர்துறந்த விவசாயிசள் பற்றிய எந்தத் தகவலும் எங்களிடம் இல்லை என்று வேளாண்மை மற்றும் விவசாய நல்வாழ்வுத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தாமோர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதெல்லாம் பச்சைப் பொய் அல்லவா ?

மோடி கருப்பு பணத்தை ஒழிக்க வந்தவரா ?  ஒளிக்க வந்தவரா ?

8 நவம்பர், 2016 ஆம் ஆண்டு பிரதமர் மோடி, இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றி 500, 1000 தாள்கள் இனி செல்லாது என அறிவித்தார். அத்தோடு வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப் பட்டிருக்கும் கருப்பு பணத்தை ஒழிக்க கருப்பு பண ஒழிப்புச் சட்டம் 2015′ என்ற சட்டத்தையும் முன் தேதியிட்டு அமலுக்கு கொண்டுவந்தார். இதன்படி வங்கித் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்காக அமெரிக்கா உட்பட பல நாடுகளுடன் ஒப்பந்தமும் போடப்பட்டது.

ஆனால் தற்போது (2021), கடந்த பத்து வருடங்களில், சுவிஸ் வங்கி உட்பட வெளிநாட்டு வங்கிகளில், பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணம் பற்றிய எந்தத்தகவலும் தங்கள் அரசிடம் இல்லை என்கிறார், மத்திய நிதித்துறை அமைச்சர் இணை பங்கஜ் சவுத்ரி.

இந்திய அரசாங்கம், சுவிட்சர்லாந்து நாட்டுடன் போடப்பட்ட தகவல் பகிர்வு ஒப்பந்தம் இன்றும் நடைமுறையில் இருப்பதாக 2019-ல் கூறியது. போக சுவிட்சர்லாந்தின் மத்திய வங்கி, இந்தியாவை சேர்ந்த தனிநபர் மற்றும் குழுமங்கள் தங்கள் வங்கியில் 20,700₹ கோடி ரூபாய் வைப்பு வைத்துள்ளதாக 2020-ஆம் தெரிவித்தது. இத்தனை தகவல்கள் இருந்தும், வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்பு பணம் பற்றிய தகவல் மட்டும் நம் அரசாங்கத்திடம் இல்லை.

இப்போது சொல்லுங்கள் கருப்புப் பண பாதுகாவலன் யார் ?

மலக்குழியில் மரணமடைந்த 340 பேர் 4 மாதத்தில் உயிர்பெற்று விட்டார்களா..?

கடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு மலக்குழி மரணம் கூட நிகழவில்லை என்று ஒன்றிய அரசு அளித்துள்ள பதில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சாக்கடைகள், கழிவுநீர்த் தொட்டிகள், மனிதக்கழிவுகளை சுத்தம் செய்யும் போது உயிரிழந்த வர்களின் விவரங்கள் குறித்து, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எல். ஹனுமந்தய்யா ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ராமதாஸ் அத்வாலே பதில் ஒன்றை அளித்துள்ளார். அதில், “கடந்த 5 ஆண்டுகளில் இது போன்ற இறப்புகள் ஒன்றுகூட பதிவாகவில்லை” என்று கூறி  சர்ச்சையை ஏற்படுத்தினார்.

கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போதும், இதே கேள்வி நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டு இருந்தது. அப்போது, “கடந்த ஐந்து ஆண்டுகளில், சாக்கடைகள், கழிவுநீர்த் தொட்டிகள், மனிதக் கழிவுகளை சுத்தம் செய்யும் பணிகளின்போது 19 மாநிலங்களில் மட்டும் 340 பேர் உயிரிழந்துள்ளனர்” என்று ஒன்றிய அரசு புள்ளிவிவரம் அளித்திருந்தது. ஆனால், மழைக்காலக் கூட்டத்தொடரில் எழுப்பப்பட்ட அதே கேள்விக்கு, ஒரு மரணம் கூட நிகழவில்லை என மோடி அரசு பதிலளித்துள்ளது. நான்கு மாதத்திற்கு உள்ளாகவேஅதுவும் நாடாளுமன்றத்திலேயே புள்ளிவிவர மோசடியை மோடி அரசு அரங்கேற்றியது.

மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள படுக்கை வசதி எத்தனை?

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி ப்ரவின் பவார், “மருத்துவமனைகளில் எத்தனை படுக்கை வசதி உள்ளது என்பது பற்றிய தகவல் எங்கள் அரசிடம் இல்லை. ஏனென்றால், சுகாதாரத்துறையானது மாநில அதிகாரங்களின் கீழ் வருவதால், எங்களிடம் இது பற்றிய தகவல் இல்லை, என்றார். இதன் பொருள் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அந்தந்த மாநில அரசாங்களுக்கே அதிக அளவு பொருப்பு உள்ளது, என்பதன்றி வேறில்லை.

எத்தனை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் இதுவரை இழுத்து மூடப்பட்டுள்ள?

பொதுமுடக்கம் காரணமாக இதுவரை எத்தனை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன? என்ற எதிர்கட்சி உறுப்பினர்களின் கேள்விக்கு, இந்த அரசு நேரடியாக இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

மாறாக சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்களை ஊக்கவிக்க ரிசர்வ் வங்கி மூலம் தாங்கள் அளித்த வங்கிகடனையும், கடன் தொகைக்கான கால நீட்டிப்பையுமே பெருமிதத்தோடு கூறினார்கள்.

காற்று மாசுபாட்டினால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை எத்தனை?

சுற்றுச்சூழல் பாதிப்பு பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள இந்த நேரத்தில், காற்று மாசுபாடு காரணமாக உயிர் இழந்தவர்கள் பற்றிய கேள்வியை, பாராளுமன்றத்தில் எழுப்பிய போது,  “காற்று மாசுபாட்டிற்கும், மனிதர்களின் இறப்பிற்கும் அல்லது நோய்க்குமான நேரடி தொடர்பை நிறுவுவதற்கான உறுதியான தரவுகள் எதுவும் எங்களிடம் இல்லைஎன்று சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, பதிலளித்தார்.

ஆனால், 2019-ல் மட்டும் இந்தியாவில் 17-லட்சம் மக்கள் காற்று மாசுபாட்டினால் உயிரிழந்துள்ளனர் என்றும் இது ஒட்டு மொத்த மனித இறப்பில் 18% என்றும், ‘இந்திய அரசின்: உலகளாவிய நோய் தொற்றுக்கான ஆய்வறிக்கை 2019′, (‘States of India: The Global Burden of Disease Study 2019’) தெரிவித்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக ஏற்பட்ட வேலையிழப்புக்கள் எத்தனை?

கோவிட் -19 கொரோனா இரண்டாவது அலையின் போது வேலை இழந்த சாதாரண அமைப்பு சாரா அல்லது ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை ஒரு சில எம்.பி.க்கள் அரசிடம் கேட்டனர், எனினும், இது சார்ந்த எந்த விவரங்களையும் அரசு இதுவரை வழங்கவில்லை. அதற்கு பதிலாக, வேலைவாய்ப்பை அதிகரிக்க அரசாங்கம் மேற்கொண்ட பல முயற்சிகளை அது பட்டியலிட்டு தப்பித்தது.

படிக்க :
♦ ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம் இல்லை : மக்களை இழிவுபடுத்தும் மோடி அரசு !
♦ ஒரே நாளில் அதிகளவு தடுப்பூசி : ‘உலக சாதனை’ படைத்ததா மோடி அரசு?

இவை மட்டுமல்லாமல், கொரோனா முதல் அலையின்போது அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக பல புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தும் கிடைக்கும் வாகனங்களில் ஏறியும் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல முயன்றனர். வெயிலின் தாக்கத்தால் சாலையில் மயங்கி விழுந்தும், ரயில் தண்டவாளத்தில் படுத்துறங்கும் போதும், அரசு ஏற்பாடு செய்த ரயிலில் பயணம் செய்யும் போது உணவு, தண்ணீர் என ஏதும் இல்லாததாலும் பலர் இறந்தனர். ஆனால் அப்படி இறந்தவர்கள் பற்றிய எந்த தகவலும் தங்களிடம் இல்லை என்கிறது அரசு.

அதேபோல் கொரோனாவால் உயிரிழந்த சுகாதார ஊழியர்கள்(மருத்துவர்கள், செவிலியர்கள், உதவிப்பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் முதலியோர்) பற்றிய தகவலும் இந்த அரசிடம் இல்லையாம்.

கொரோனா பேரிடரின் போது தங்களின் உயிரைப்பயணம் வைத்து பணியாற்றியவர்கள் இவர்கள். இத்தகையவர்கள் பற்றிய தகவல் இல்லாததால், இவர்களுக்கு எந்த நிவாரணமும் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் இந்திய மருத்துவ கழகத்தின்(IMA) கண்டனங்களுக்கு உள்ளானது மோடி அரசு !

நடைபெறும் மதவாத பாசிச ஆட்சியில், ஆர்.எஸ்.எஸ்இன் கார்ப்பரேட் சேவையும், மதவாத அரசியலுமே மைய இலக்கு. அதனை நிறைவேற்றும் போக்கில் புள்ளிவிவரங்களை வெளியிடுவது தம்மை முழுமையாக அம்பலப்படுத்திவிடும் என்பதை உணர்ந்துள்ள மோடி அரசிடம் வெளிப்படைத் தன்மையை எதிர்பார்ப்பது ’நியாயமா’ ?

மூர்த்தி
செய்தி ஆதாரம் : பிசினஸ் இன்சைடர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க