ந்து மதத்தின் சட்டவிதிகளை உருவாக்கியவராக சொல்லப்படும் மனுவின் சர்ச்சைக்குரிய சிலையை இராஜஸ்தான் உயர்நீதிமன்ற வளாகத்திலிருந்து அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சுதந்திர தினத்தன்று நடந்த சமூக செயற்பாட்டாளர்களின் போராட்டத்தை தொடர்ந்து அச்சிலையை அகற்றும் போராட்டம் மீண்டும் முன்னிலைக்கு வந்துள்ளது.
ராஜஸ்தான் உயர்நீதிமன்ற வளாகத்தில் மனுஸ்மிருதியை தனது கையில் வைத்திருக்கும் மனுவின் சிலை, 1989-ம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து இன்றுவரை அதை அகற்ற வேண்டும் என்ற பல்வேறு போராட்டங்களைச் சந்தித்து வருகிறது.
நீதிமன்றத்தில் கடந்த ஞாயிறு (ஆகஸ்ட்-15) அன்று அந்த சிலை அகற்றப்பட வேண்டும் என்று ஜனநாயக சக்திகள் கோரிக்கை வைத்து அமைதிவழி போராட்டத்தை நடத்தினர்.
படிக்க :
CJI பாப்டே : இந்திய மனுநீதி ஆணாதிக்கச் சமூகத்தின் பிரதிநிதி !
“ரேப்பிஸ்டு”களுக்காக போராடும் மனுவின் வாரிசுகள் || ஹத்ராஸ் பாலியல் வன்கொலை அவலம் !
‘’இந்த விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும் வரை நாங்கள் இந்த சிலை மூடப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறோம். அதனால் அதிகாரிகளுக்கு அதை மூடுவதற்கு ஒரு மூடு-உரை கொடுத்தோம். அவர்கள் அதை செய்யவில்லை என்றால் நாங்களே மூடுவோம்” என்றார் கவிதா ஸ்ரிவஸ்தவா. இவர் குடிமைச் சுதந்திரத்திற்கான மக்கள் ஒன்றியம் அமைப்பைச் சேர்ந்தவர்.
நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் இந்த போராட்டமானது இராஜஸ்தான் முழுவதும் ஒரே மாதிரியாக 110 கிராமங்களில் ஒரே நேரத்தில் நடைபெறும் போராட்டங்கள் மற்றும் பிற 18 மாநிலங்களில் நடைபெறும் போராட்டங்களின் ஒரு பகுதி.
“இந்த சிலை அகற்றப்பட வேண்டும் என்ற இந்த பிரச்சாரப் போராட்டம் ஒரு நாடு தழுவிய போராட்டம் ஆகும். அடுத்த வாரம், உயர்நீதி மன்றத்தில் இது சம்மந்தமாக ஒரு வழக்கு தொடுக்கவுள்ளோம்” என்கிறார், கோவர்தன் ஜெய்பால். இவர் அந்த பிரச்சாரத்தை முன்னெடுக்கும் மையக் கமிட்டியின் உறுப்பினர்.
கிட்டத்தட்ட அந்த சிலை நிறுவப்பட்ட உடனேயே அது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜூலை 1989-ல் இராஜஸ்தான் உயர்நீதிமன்றம் இந்த சிலை அகற்றப்பட வேண்டும் என்ற ஒரு நிர்வாக ஆணையை  வழங்கியது. இருப்பினும், விஷ்வ இந்து பரிஷத் தலைவர் ஆச்சார்யா தர்மேந்திரா மற்றும் சிலர், இந்த உத்தரவிற்கு எதிராக ஒரு பொதுநல வழக்கு தொடுத்ததும், அந்த உத்தரவை நிறுத்தி வைத்து தடையாணை பிறப்பித்தது, இராஜஸ்தான் உயர்நீதிமன்றம்.
தடையாணையை பிறப்பிக்கையிலேயே, வருங்காலத்தில் அந்த வழக்கு,  தலைமை நீதிபதி தலைமையிலான மற்றொரு அமர்வுக்கு மாற்றப்படும் என்றும் கூறியது.
இராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் நீண்ட காலமாக இந்த வழக்கு நிலுவையில் இருக்க, இந்த வழக்கில் தற்போது தலித் செயல்பாட்டாளர்கள் தலையீடு செய்து கடந்த 2015-ல் கடைசியாக விசாரிக்கப்பட்டது.அந்த சமயத்தில் பிராமண வழக்கறிஞர்கள் இந்த வழக்குக் கேட்பில் குழப்பம் விளைவித்து பிரச்சினை செய்தனர்.
இவர்கள், இந்த சிலை எந்த சாதிய கண்ணோட்டத்தையும் கொண்டிருக்கவில்லை. இது முதன்முதலில் சட்டத்தை உருவாக்கியதாக நாங்கள் நம்புகிற ஒருவருக்கு செலுத்தும் புகழஞ்சலி; அவ்வளவுதான், என்கின்றனர்.
கடந்த 32 ஆண்டுகளாக கன்ஷிராம் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே உள்ளிட்ட தலித் தலைவர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள அரசியல்வாதிகள் இந்த சிலைக்கு எதிராகப் போராடியிருக்கிறார்கள்.
2018-ல், இந்த சிலையின் மீது மை அடித்து எதிர்ப்பு தெரிவித்ததற்காக இருபெண் செயற்பாட்டாளர்களுடன் ஒரு ஆண் செயற்பாட்டாளரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) யிலிருந்து பிளவுண்ட காரத் தலைமையிலான இந்திய குடியரசு கட்சியை சேர்ந்த ஷீலா பாய் பவார், கந்தா ரமேஷ் அகிரே மற்றும் தாவுட் ஷகில் ஷேக் ஆகியோர் ஆவர்.
இராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதால், கடந்த ஆண்டு 600 தலித் செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு இதில் தலையிடுமாறு கேட்டு கடிதம் எழுதினர்.
“அந்த சிலையும் மனுவின் சித்தாந்தமும் பெண்களைகளையும், தலித் மக்களையும் இழிவுபடுத்துகின்றன. அது இயற்கை நீதியுடனும், இந்திய அரசியலமைப்பு சட்டத்துடனும் ஒத்துபோக முடியாது. விரைவில் இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தால் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றால், அந்த சிலை அகற்ற நாங்கள் உச்சநீதிமன்றத்திற்கு செல்வோம்’’ என்றார் ஸ்ரீவஸ்த்தவா.
வர்ணாஸ்ரமத்தில் நான்காவது வர்ணமாக சூத்திரனின் கடமைகள் உரிமைகள் தொடர்பாக மனுவின் சட்ட புத்தகமான மனுஸ்மிருதியின் கொள்கைகளில் சில கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது.
ஒரு சூத்திரனின் பிறப்பின் நோக்கம் அவன் மற்ற மூன்று வர்ணத்தாருக்கு சேவை செய்வதே ஆகும். (வசனம் 1.91);
ஒரு பிராமணனின் பெயர் மங்களகரமான சிலவற்றை குறிக்க வேண்டிய நிலையில் இருக்க, ஒரு சத்திரியனின் பெயர் வலிமையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு வைஷ்யனின் பெயர் செல்வத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒரு சூத்திரனின் பெயர் இழிவானதுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் (வசனம் 2.31);
ஒரு சூத்திர பெண்ணை திருமணம் செய்யும் ஒரு பிராமனன் தனது இறப்பில் நரகத்திற்குச் செல்வான் (வசனம் 3.17);
சூத்திரன் பிராமணனுக்கு அடிமை வேலை செய்யப் படைக்கப்பட்டவன் (வசனம் 8.413);
சூத்திரன் சொத்து வைத்துக் கொள்ள கூடாது என்பதால், பிராமனன் சூத்திரன் வைத்திருக்கும் சொத்தை பறித்துக் கொள்ளலாம் (வசனம் 8.417);
மனுஸ்மிருதி பெண்களைப் பற்றி மேலும் பல விசயங்களையும் உள்ளடக்கி கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது :
ஆண்களை கவர்ந்திழுப்பதுதான் பெண்களின் இயல்பு (வாசகம் 2.213);
காம உணர்ச்சிகள் சக்தி வாயந்ததாலும் அது படித்தவர்களைக் கூட மதி மயங்கச் செய்யும் என்பதாலும் ஒரு ஆண்மகன் தன் தாயுடனோ, தங்கையுடனோ, அல்லது மகளுடனோ தனிமையில் உட்கார்ந்திருக்கக் கூடாது. (வாசகம் 2.215)
பல ஆண்களுடன் உறவு வைத்து கொள்ளும் பெண்களுக்கோ அல்லது மது அருந்தும் பெண்களுக்கோ தீர்த்த நீர் வழங்கக் கூடாது (வாசகம் 5.90)
மது அருந்துதல், ஒழுக்கக் கேடான நபர்களுக்கு துணை நிற்றல், கணவனிடமிருந்து தனித்து வாழ்தல், வெளிநாடு சுற்றி வருதல், நேரம்கெட்ட நேரத்தில் தூங்குதல், மற்ற ஆண்களின் வீடுகளில் வசித்தல் ஆகியவை பெண்களின் அழிவிற்கான ஆறு காரணங்கள் ஆகும் (வாசகம் 9.13)

தமிழாக்கம் : முத்துகுமார்
செய்தி ஆதாரம் : The Wire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க