கமர் அலி தர்வேஷ்-க்கு வெற்றி !!
பாகம் 1 : நரேந்திர தபோல்கரும் – மூட நம்பிக்கை ஒழிப்பு இயக்கமும்
புனே-சதாரா சாலையில், புனேயிலிருந்து சுமார் முப்பது மைல் தொலைவில், கெத் சிவபூர் கிராமத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும் சாலையின் திருப்பத்திற்கு அருகில், கமர் அலி பாபாவின் ஆலயம் அமைந்துள்ளது. அனைத்து மதத்தைச் சேர்ந்த மக்களும் கமர் அலி தர்வேஷ் தர்காவிற்கு வருகை தருகிறார்கள்.
அரசாங்கத்தின் பிலிம்ஸ் டிவிஷன் அல்லது ஒரு தொலைக்காட்சி சேனலில் இது பற்றிய ஒரு சிறப்புப் படம் ஒலி – ஒளி பரப்பப் படுவதால் இந்த அம்சம் அடிக்கடி வெளிச்சத்திற்கு வருகிறது. சைஇ
இந்த தர்க்காவின் முன்புறம் 90 கிலோ எடையில் ஒரு பெரிய கல்லும் 60 கிலோ எடையில் மற்றொரு சிறிய கல்லும் என இரண்டு பெரிய கற்கள் உள்ளன. பதினோரு ஆண்கள் தலா ஒரு விரல் என 11 விரல்களைச் சேர்த்து பெரிய கல்லையும், ஒன்பது ஆண்கள் தலா ஒரு விரல் என 9 விரல்களைச் சேர்த்து சிறிய கல்லையும் தூக்க வேண்டும். பெண்களுக்கு அனுமதி கிடையாது.
படிக்க :
போலி அறிவியல் – மாற்று மருத்துவம் – மூட நம்பிக்கை : ஒரு விஞ்ஞான உரையாடல்
மந்திரமா? தந்திரமா? மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி
கல்லின் மீது விரல்களை வைத்து, ’கமர் அலி தர்வேஷ்-க்கு வெற்றி’ என ஒரே நேரத்தில் சப்தமாக முழக்கமிட்டால் கற்கள் இறகு போல எடையற்றதாகி எளிதாக தூக்கப்படும். 90 கிலோ எடை கல் மற்றும் 60 கிலோ எடை கல்லைத் தூக்க முறையே 11 மற்றும் 9 விரல்களால் மட்டுமே தொட வேண்டும். இதற்குக் கூடவோ குறையவோ இருக்கக் கூடாது. அதே போல, ’கமர் அலி தர்வேஷ்-க்கு வெற்றி’ என்ற முழக்கம் தவிர வேறு முழக்கம் போடக் கூடாது என்பது நீண்ட காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஐதீகம் !
இதன் பின்னால் ஒரு பழைய கட்டுக்கதை உள்ளது. கமர் அலி தர்வேஷ் கடவுளின் வெளிப்பாட்டைக் கண்ட ஒரு முசுலீம் பக்கிரி.  அவர் இந்த இடத்தை எப்படி, எப்போது அடைந்தார் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், அவ்வாறு செய்த பிறகு, அவர் கிராமத்திலிருந்து துர்தேவதைகள், ஆவிகள், பிசாசுகள் அனைத்தையும் வெளியேற்றினார். எழுபது வயதில் தன்னை உயிருடன் புதைத்து சமாதி அடைந்தார். இந்த இடத்தில் வாழ்ந்த இரண்டு பேய்களை பக்கிர் சபித்து, அவற்றை கற்களாக மாற்றினார். இந்த கற்களைத் தான் மக்கள் தூக்கி தரையில் வீசுகின்றனர்.
இந்தக் கதை நீண்ட காலமாக மக்களின் பெரும் விருப்பத்தையும் ஆர்வத்தையும் தூண்டியது. மும்பை தூர்தர்ஷன் இந்த ‘அதிசயம்’ பற்றிய ஒரு நிகழ்ச்சியை ஜூன் 1987-ல் எந்த அறிவியல் விளக்கமும் தராமல் ஒளிபரப்பியது. பின்னர் அனிஸ் தலையிட்டு அம்பலப்படுத்தும் செயலைச் செய்ய முயற்சிக்க வேண்டியிருந்தது. அனிஸ் அமைப்புக்கு ஏராளமான கடிதங்கள் வந்தன. சில கடிதங்கள் ஏளனம் செய்து, “இங்கே ஒரு உண்மையான அதிசயம் நடக்கிறது; நீங்கள் இதை எப்படி விளக்க முடியும்?” என்றன. மற்றவர்கள் உண்மையாக இது போன்ற ஒரு அதிசயம் சாத்தியமா என்று தெரிந்து கொள்ள விரும்பினார்கள்.
தபோல்கர் தலைமையில் 7 பேர் குழு இந்த அதிசயத்தை அம்பலப்படுத்த செல்கிறது. இவர்கள் 7 பேர் என்பதால் உள்ளூர் ஆட்கள் 4 பேரை இணைத்துக் கொண்டு தர்காவின் வழிகாட்டுதல்படி 11 விரல்களை 90 கிலோ கல்லின் மீது வைத்து ’கமர் அலி தர்வேஷ்-க்கு வெற்றி’ என்று ஒரே நேரத்தில் முழக்கமிட்டனர். அரை அடி உயர்ந்த கல் பிறகு கவிழ்ந்து விட்டது. சுற்றி நின்ற மக்களோ நீங்கள் காலணிகளை அணிந்து கொண்டுள்ளதால் தான் அதிசயம் நடக்கவில்லை என்று கூறியதால் காலணிகளைக் கழற்றி வைத்து விட்டு முயற்சி செய்கின்றனர். அப்போதும் கல் அரை அடிக்கு மேல் உயரவில்லை. இவர்களுடன் இணைந்த உள்ளூர் மக்கள் சற்று பயந்து போய் இவர்களை விட்டு விலகி விட்டனர்.
கோப்புப் படம்
பிறகு சுற்றுலாவாக வந்த 4 பேரிடம் பேசி அவர்களை இணைத்துக் கொண்டு முழக்கமிட்ட போது கல் படிப்படியாக ஒரு மீட்டர் அளவிற்கு உயர்ந்தது. இதனால் உற்சாகமடைந்த அனிஸ் அமைப்பினர் அடுத்த முயற்சியில் தோளுக்கு மேலாகத் தூக்கி கீழே வீசினர்.
பிறகு உற்சாகமடைந்து வழக்கமான முழக்கத்தைக் கைவிட்டு, ’மகாத்மா பூலேக்கு வெற்றி’ என ஒரே நேரத்தில் கூட்டாக முழக்கமிட்ட போதும் கல்லை எளிதாக தூக்கி வீச முடிந்தது. இது நடந்ததும் மக்கள் இவர்களைச் சுற்றி குழுமினர்.
உற்சாகமடைந்த அனிஸ் அமைப்பினரும் சுற்றுலா வந்தவர்களும் ஏன் 11 விரல்கள்? அதுவே 10 ஆகவும் அல்லது 12 ஆகவும் இருந்தால் என்ன என்று கூட்டியும் குறைத்தும் முயற்சித்த போதும் எளிதாக கல்லைத் தூக்கி வீச முடிந்தது.
பின்னர் 60 கிலோ கல்லிலும் இதே போல முயற்சித்து, அந்தக் கல்லையும் எளிதாக தூக்கி வீசினார்கள். அதன் பின் பெண்களையும் இணைத்துக் கொண்டு இதே போல முயற்சிக்க அப்போதும் கல்லை எளிதாக தூக்கி வீச முடிந்துள்ளது. பெண்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி! புறப்படும் போது காலணிகளை அணிந்தனர். அப்போது பளிச்சென ஓர் எண்ணம் தோன்றி, காலணிகளை அணிந்தபடி கல்லைத் தூக்கி வீசியுள்ளனர்.
அதன் பின் இதற்கு என்ன விளக்கம் என பரிசீலித்து அந்த அறிவியல் உண்மையையும் கண்டறிந்து கூறினார்கள். உண்மை இதுதான். முதலில் விரலை மட்டும் கல்லின் மீது வைத்தவர்கள் அதை அழுத்தவில்லை. எனவே கல்லைத் தூக்க முடியாமல் போயுள்ளது. கமர் அலியும் உதவவில்லை. அதன் பின் முழக்கமிடும் போது விரலில் அழுத்தம் கொடுத்துள்ளனர்.
படிக்க :
அதானி நிறுவனத்தை இழுத்து மூடிய பஞ்சாப் விவசாயிகள் !!
கேஸ் சிலிண்டர் விலை உயர்வும் மானியக் குறைப்பும் !
ஒரே நேரத்தில் அனைவரும் அழுத்திய போது, எல்லா பக்கமும் அழுத்தம் அதிகரித்து கல் மேலே எழும்பத் தொடங்கியுள்ளது. கவிழவும் இல்லை. துவக்கத்தில் விரல் அழுத்துகிறது. பிறகு மணிக்கட்டும் முழங்கையும் அழுத்தத்தை கல்லின் மீது செலுத்தத் தொடங்குகின்றன. படகு வலிக்கும் மீனவர்கள் ஐலேசா என சேர்ந்து பாடி துடுப்பு வலித்து படகை ஓட்டுவது போல, கனமான பெரிய பாரத்தை வண்டி மீது தூக்கும் போது, அந்த உழைப்பாளிகள் தூக்கு தூக்கு என ஒரே நேரத்தில் ஓசை எழுப்பி பாரத்தை தூக்குவது போன்றதுதான் இந்தச் செயலும் என்பதுதான் இதன் பின் உள்ள அறிவியல் உண்மை என விளக்கி இந்த மூட நம்பிக்கையைத் தகர்த்துள்ளனர்.
“கற்களில் இருந்த ’பேய்கள்’ என்னவாயின எனத் தெரியவில்லை. ஆனால் பிசாசுகள் போல மூட நம்பிக்கைகள் மக்களின் கழுத்தில் அமர்ந்து அழுத்திக் கொண்டுள்ளன. அவற்றைத் தூக்கி வீசாமல் மக்களின் சிந்தனைக்கு விடுதலை இல்லை” என தபோல்கர் கூறுகிறார்.
மக்களின் விடுதலைக்காக, அவர்களை அறியாமையிலிருந்து விடுவிக்க தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் தபோல்கர். மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி தமது பார்ப்பனிய பார்ப்பன சித்தாந்தத்தை நிலைநாட்டிக் கொண்டிருந்த பாசிசக் கும்பலோ தபோல்கரின் பணியைக் கண்டு அஞ்சியது.
கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வக்கற்ற சங்க பரிவாரக் கும்பல், தபோல்கரை சுட்டுப் படுகொலை செய்து விட்டது. தபோல்கர் படுகொலையிலும், முற்போக்கு எழுத்தாளர் கவுரி லங்கேஷ் படுகொலையிலும் ஈடுபட்டது, சனாதன் சன்ஸ்தா எனும் சங்கபரிவாரத்தின் கொலைகாரக் கும்பல்தான். காவிக் கிரிமினல்களின் பாசிச ஆட்சியில், இந்த அமைப்பு இன்னும் தடை செய்யப்படாமல் பகிரங்கமாக செயல்பட்டு வருகிறது என்பது முற்போக்காளர்களுக்கு பாசிச கும்பலால் விடப்பட்டிருக்கும்  சவால்தான்.
(முற்றும்)


நாகராசு
செய்தி ஆதாரம் : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க