காற்று மாசுப்பாடு சுமார் 40 சதவீதம் இந்தியர்களின் ஆயுட்காலத்தை 9 ஆண்டுகளுக்கும் மேலாக குறைக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சி குழு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
மேலும், உலக அளவில் மாசுபாடு அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று காற்று மாசுபாடு குறித்த இவ்வறிக்கை கூறுகிறது
.கடந்த செப்டம்பர் 1-ம் தேதி வெளியான சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஆற்றல் கொள்கை நிறுவனம் (EPIC) காற்று மாசுபாடு பற்றி ஓர் உலகளாவிய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், தலைநகர் டெல்லி உட்பட மத்திய, கிழக்கு மற்றும் வட இந்தியாவின் பரந்த பகுதிகளில் வாழும் 480 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அதிக மாசு நிறைந்த காற்றை சுவாசிக்கும்  சூழ்நிலையில் வாழ்வதாகவும், ஆபத்தான வகையில், இந்தியாவில் அதிக அளவு காற்று மாசுபாடு காலப்போக்கில் புவியியல் ரீதியாக விரிவடைந்துள்ளதாகவும் EPIC அறிக்கை கூறுகிறது.
படிக்க :
சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு
காற்று மாசுபாடு : தில்லியில் வாழ்வது தினசரி 20 சிகரெட் புகைப்பதற்கு சமம் !
அதற்கு உதாரணமாக, இந்தியாவின் மேற்கு மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் மத்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் காற்றின் துய்மை அளவு கணிசமாக மோசமடைந்து வருவதை சுட்டிக் காட்டுகிறது இந்த அறிக்கை.
கடந்த மார்ச் மாதம் வெளியான, காற்றின் தர அளவுகளை அளவிடும் சுவிஸ் குழுமமான IQAir-ன் அறிக்கையின் படி, 2020-ம் ஆண்டில் உலகின் மிகவும் மாசுபாடு கொண்ட தலைநகரங்களில் மூன்றாவது நகரமாக புதுடெல்லி உள்ளது.
காற்றில் கலந்துள்ள PM 2.5 எனப்படும் நுரையீரலை சேதப்படுத்தும் நுண்துகள்களின் செறிவின் அடிப்படையில், 106 நாடுகளுக்கான தரவுகளைச் சேகரித்து ஆய்வு செய்து IQAir அமைப்பு, உலகக் காற்று தர அறிக்கை – 2020 – ஐ வெளியிட்டுள்ளது. இதன்படி, உலகின் 50 மாசுபட்ட நகரங்களில் 35 நகரங்கள் இந்தியாவில் தான் உள்ளன. இந்தியாவில் அதிக மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் டெல்லி முதல் இடத்திலும் சென்னை எட்டாம் இடத்திலும் உள்ளது.
இந்த ஆய்வின் வருடாந்திர சராசரி அளவு PM 2.5 எனும் மைக்ரானுக்கும் குறைவான விட்டம் கொண்ட நுண்துகள்களை அடிப்படையாகக் கொண்டவை. PM 2.5 அளவு அதிகமாக இருக்கும் இடங்களில் புற்றுநோய் மற்றும் இருதய பிரச்சனைகள் உள்ளிட்ட கொடிய நோய்களை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
2020-ம் ஆண்டு ஒரு கன மீட்டர் காற்றில் புதுடெல்லியின் சராசரி அளவு PM 2.5 செறிவை காட்டிலும் 84.1 என்ற அளவு உயர்ந்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இது சீனாவின் பெய்ஜிங் நகரின் அளவை விட இருமடங்கு அதிகமானதாகும்.
கடந்த 2020-ம் ஆண்டு காற்று மாசுபாடு புதுடெல்லியில் 54,000 அகால மரணத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கிரீன் பீஸ் அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பகுப்பாய்வும் IQAir அமைப்பின் மற்றொரு ஆய்வு அறிக்கையும் கூறுகிறது.
“இந்தியாவில் காற்று மாசுபாடு இன்னும் அபாயகரமான நிலையை எட்டும்” என்றும் இந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
2020-ம் ஆண்டு கொரோனா பெரும்தொற்றின் காரணமாக நாடு தழுவிய பொது முடக்கம் அமலில் இருந்த சூழ்நிலையில், சராசரி அளவான PM 2.5 அளவு, 11% குறைந்த போதிலும் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானுக்கு அடுத்து இந்தியா உலகின் மூன்றாவது மாசுபட்ட நாடாக உருவெடுத்துள்ளது.
காற்றில் பரவும் நுண் துகள்களால் ஏற்படும் மூச்சுத்திணறல் இருதய நோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் காரணமாக 2015-ம் ஆண்டில் 11 இலட்சம் இந்தியர்கள் மாரணமடைந்ததாக ஹெல்த் எஃபெக்ட்ஸ் இன்ஸ்டிட்யூட் (Health Effects Institute) என்ற தனியார் தொண்டு நிறுவனம் 2018-ஆம் ஆண்டில் கூறியது.
புதுடெல்லியில், 2017-ம் ஆண்டிலேயே, மிகவும் அபாயகரமான நுண் துகளான PM 2.5-ன் அளவு, 200-ஐத் தாண்டிவிட்டது என்று செய்தி வெளியானது. இந்தியாவின் காற்றின் தரம் மோசமான பகுதிகளில் 94 சதவீதம் பேர் வாழ்கின்றன. துகள்கள் மாசுபாடு காலப்போக்கில் இன்னும் கடுமையாக அதிகரித்துள்ளது.
இந்தியா கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுட்காலத்தை இழக்கும் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக, புதுடெல்லியில் மாசு அளவு WHO கூறும் சராசரி அளவை விட 14 மடங்கு அதிகமாக உள்ளது. இதனால், டெல்லியில் வசிப்பவர்கள் தங்களது ஆயுட் காலத்தில் 13 ஆண்டுகளை இழக்கக் கூடும்.
எனவே, தொழிற்சாலைகளின் காற்று மாசுபாட்டுக் கட்டுப்பாடு, வாகன போக்குவரத்துக் கட்டுப்பாடு போன்றவற்றை கடுமையாகக் கண்காணித்து அதனை கட்டுக்குள் வைத்தால் மட்டுமே இந்த நிலைமை மாறும். ஆனால் தனியார்களின் கட்டுப்பாட்டில் தொழிற்சாலைகள் சுற்றுச் சூழல் மாசுபாட்டை இலாபவெறி காரணமாக கண்டுகொள்வதில்லை. ஒன்றிய மோடி அரசும் இதனை அங்கீகரித்து கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளை தளர்வடையச் செய்து வருகிறது !
சுருக்கமாகச் சொன்னால் நமது ஆயுளைக் குறைத்து கார்ப்பரேட்டுகளின் இலாபத்தைக் கூட்டுகிறது மோடி அரசு !

சந்துரு
செய்தி ஆதாரம் : Reuters

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க