ண்மைக் காலமாகத் தமிழர் நாகரிகங்கள் தொடர்பாகப் பல்வேறு தொல்லியல் முடிவுகள் வெளிவந்து இன்ப அதிர்வுகளை ஏற்படுத்திய வண்ணமுள்ளன. அந்த வகையில் மிக அண்மையில் `பொருநை` அகழ்வாய்வு பற்றிய முடிவுகளும் வந்துள்ளன. இன்னமும் சொல்லப்போனால் தமிழ்நாட்டிலுள்ள ஆற்றங்கரைகள் எதனை அகழ்ந்தாலும் அங்கு நாகரிக எச்சங்கள் காணப்படும் என்றளவான ஒரு நிலை காணப்படுகின்றது. இந்த வகையில் முதலில் தமிழர் நிலத்திலுள்ள ஆறுகளைப் பார்ப்போம்.
பாரதியார் பாடிய பாடலொன்று தமிழர் ஆறுகளை எமக்குப் படம் பிடித்துக் காட்டும். இப்போது அப் பாடலினைப் பார்ப்போம்.
‘காவிரி, தென்பெண்ணை, பாலாறு தமிழ்
கண்டதோர் வையை, பொருநை நதி – என
மேவிய ஆறுகள் பலவோட – திரு
மேனி செழித்த தமிழ்நாடு’
என்று பாரதியார் பாடியுள்ளார்.

படிக்க :

கிறங்கடிக்கும் கீழடி : வி.இ.குகநாதன்

தமிழர் திருநாள் : விழுங்கக் காத்திருக்கும் காவிகள் ! | வி.இ.குகநாதன்

இங்குள்ள ஆறுகளின் தமிழ்ப் பெயர்களே ஒரு அறிவுசார்ந்த பெயரிடல் மரபாகவே காணப்படுகின்றது. `காவிரி` (காவேரி அல்ல) என்ற சொல்லில், `கா` என்றால் சோலை, இந்த ஆறு செல்லுமிடங்களிலெல்லாம் (மரச்)சோலையினை விரித்துச் செல்வதால், அப் பெயர் பெறும். இந்தக் காவிரி ஆறு நொய்யல் ஆற்றுடன் கலக்கும் இடத்தில்தான் கொடுமணல் உள்ளது. இந்தக் கொடுமணலே சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் `கொடுமணம்` எனும் ஊராகும்.
இத்தகைய கொடுமணல் அகழ்வாய்வு பல நாகரிக எச்சங்களை ஏற்கனவே வெளிக்கொண்டு வந்திருந்தன. `தென்பெண்ணை` , `பாலாறு` ஆகிய ஆறுகள் இன்றும் அதே பெயரிலேயேயுள்ளன. `வையை` எனப்படுவதே இன்றைய வைகை ஆறாகும். `வையை` என்பது மனதிலிடுதல் என்ற பொருளில் வரும் {வை=இடு, வைய்+அ=வைய =மனிதிலிடு (வைதல்)} . இந்த `வையை ` எனும் சொல்லும் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது.
“வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பின்
பொய்யா யாணர் மையற் கோமான்”   – புறநானாறு 71: 10-11.
மேற்குறித்த வையை ஆறு இன்று வைகை என அழைக்கப்படுகின்றது. இந்த வைகைக்கரையிலேயே கீழடி, அகரம், கொந்தகை ஆகிய இடங்கள் அமைந்துள்ளன. இந்தக் கீழடி 4-ம் கட்ட அகழ்வாய்வு முடிவுகள் பற்றி ஏற்கெனவே `கிறங்கடிக்கும் கீழடி` என்ற தலைப்பில் வினவில் ஒரு கட்டுரையாகப் பார்த்துள்ளோம்.
இப்போது ஏழாம் கட்ட ஆய்வும் முடிவுறும் நிலையிலுள்ளது. மேலுள்ள பாரதியார் பாடலில் `பொருநை` எனக் குறிப்பிடப்படுவது இன்று தாமிரபரணி என அழைக்கப்படும் ஆறாகும். பொருநை என்பதே இதன் தமிழ்ப் பெயராகும். `பொருநை` என்பது ஒப்பில்லாப் பெருமை என்ற பொருள் பெறும் என முனைவர் இரவி சங்கர் விளக்குகின்றார் {பொரு= பொருந்துதல்/ ஒப்புமை . பொருநை = ஒப்பில்லாப் பெருமை}. இன்னமும் சொன்னால், தண்பொருநை என்பதே இன்றைய தாமிரபரணியாகும் (தண்மை = குளிர்மை) .
அதே போன்று `ஆன்பொருநை` என்ற பெயரில் மற்றொரு ஆறுமுண்டு, அதுவே இன்று அமராவதி எனப்படுகின்றது. இந்த `ஆன்பொருநை` ஆற்றின் கரையிலேயே `பொருந்தல்` என்ற சங்ககால ஊரின் எச்சங்கள் அகழ்வாய்வில் வெளிவந்திருந்தன. இந்தப் பொருந்தல் அகழ்வாய்வில் கிடைத்த நெல்மணிகளையுடைய கலன் ஒன்றில் `வய்ர` என்ற தமிழி எழுத்துகள் பொறித்த சான்று கிடைத்தமையும்; அந்த நெல்மணிகள் கதிரலை கரிமக் காலக் கணிப்பில் பொ.ஆ.மு 490 எனத் தெரிய வந்தது (BCE490, AMS dating by Beta analytic, USA); கீழடி ஆய்வுகள் வெளிவருவதற்கு முன்னரே தமிழி எழுத்தானது அசோகர் பிராமியினை விடப் பழமையானது என்பதற்கான சான்றாக அமைந்தது. இப்போது பொருநை எனப் பொதுவாக அழைக்கப்படும் தண்பொருநை ஆற்றங்கரை நாகரிகத்தினை விரிவாகப் பார்ப்போம்.
பொருநை நாகரிகம்
சிவகளை, கொற்கை, ஆதிச்சநல்லூர் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வு முடிவுகளை, தமிழ்நாடு அரசானது `பொருநை` நாகரிகம் என்ற பெயரில் வெளியிட்டிருந்தது. அதில் பொருநை ஆற்றங்கரையோர ஆதிச்சநல்லூருக்கருகில் சிவகளை பறம்புப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி ஒன்றிலிருந்து நெல்மணிகள் கண்டெடுக்கப்பட்டன.
இந்த முதுமக்கள் தாழியிலிருந்த `உமி நீக்கப்பட்ட நெல்லினை` கரிமம் நீக்கிப் பார்த்த போது, அதன் வயது ஏறக்குறைய 3176 ஆண்டுகள் (2021+1155=3176) , அதாவது பொருநை ஆற்றங்கரை நாகரிகம் ஆகக் குறைந்தது பொ.ஆ.மு 1155 (BCE 1155 ) இனைச் சேர்ந்தது எனத் தெரிய வந்துள்ளது. இந்தக் காலக்கணிப்பு அனைத்துலக நடைமுறைகளுக்கேற்ப கரிமச் சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது (AMS dating by Beta analytic, USA). இதனையடுத்தே தொல்லியல் அறிஞர் கா.ராஜனும், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினும் `இந்திய வரலாறு இனித் தமிழ்நாட்டிலிருந்தே எழுதப்பட வேண்டும்` எனக் கூறியிருந்தார்கள்.
இத்தகைய தண்பொருநை ஆற்றினை புறநானூறு 11-வது பாடல் குறிப்பிடுகின்றது.
“அரி மயிர்த் திரள் முன்கை
வால் இழை, மட மங்கையர்
வரி மணற் புனை பாவைக்குக்
குலவுச் சினைப் பூக் கொய்து
தண் பொருநைப் புனல் பாயும்
விண் பொருபுகழ், விறல்வஞ்சிப்
பாடல் சான்ற விறல்வேந் தனும்மே
வெப் புடைய அரண் கடந்து,
துப்புறுவர் புறம்பெற் றிசினே:
புறம் பொற்ற வய வேந்தன்
மறம் பாடிய பாடினி யும்மே,
ஏர் உடைய விழுக் கழஞ்சின்,
சீர் உடைய இழை பெற்றிசினே!
இழை பெற்ற பாடி னிக்குக்
குரல் புணர்சீர்க் கொளைவல்பாண் மகனும்மே.
என ஆங்கு,
ஒள்அழல் புரிந்த தாமரை
வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே.”
– புறநானூறு
பொருள் : தண்பொருநை ஆறு பாயும் வஞ்சி எனும் நகரானது வானளாவிய புகழும் வெற்றியுமுடைய நகராகும். பொருநை ஆற்று மணலில் பெண்கள் பாவை (பொம்மை) செய்தும், பூப்பந்து எறிந்தும் விளையாடுவர். பாலை பாடிய பெருங்கோ பெரும் வீரன். இவன் புறங்கண்ட வீரச் செருக்கினைப் பாடினாள் ஒரு பாடினி. இதற்காகப் பாடினிக்கு அவன் அணிகலன்களைப் பரிசளித்தான்.
இப் பாடலில் கூறப்பட்டது போன்ற பெண் உருவப் பொம்மைகளும், தங்கத்திலான பொருட்களும் அகழ்வாய்வில் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
கம்பரும் தண்பொருநை பற்றிப் பின்னரான காலப்பகுதியில் பாடுகின்றார்.
“பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும்
திரு நதி பின்பு ஒழிய, நாகக்
கன்று வளர் தடஞ் சாரல் மயேந்திர மா
நெடு வரையும், கடலும், காண்டிர்”.
பொருள் : பொருநை என்னும் அழகிய ஆறும் பிற்பட்டுப் போக, யானைக் கன்றுகள் வாழ்ந்து நிற்கும், பெரிய தாழ்வரைகளையுடைய மகேந்திரம் என்னும் பெரிய மலையையும் தென் கடலையும் காண்பீர்கள்.
அசோகரின் கல்வெட்டுகளில் ஒன்றான `கிர்நார் கல்வெட்டு`(Girnar or Revatak Pravata ) என்ற பிராகிரத மொழிக் கல்வெட்டில் இதே `பொருநை` எனும் தூய தமிழ்ப் பெயரானது ` தாம்பபண்ணி` எனக் குறிபிடப்பட்டுள்ளது (கல்வெட்டுக் காலம் BCE 273-BCE 232 ). இந்தத் தாம்பபண்ணி இலங்கையினைக் குறிப்பதாகத் தவறாக முன்னர் கருதியமையுமுண்டு. தாமிரபரணி என்ற பெயர் எவ்வாறு ஏற்பட்டது என வேறுபட்ட கருத்துகளுண்டு (தாமிரம்- செப்பு கலந்த தண்ணீர், இலங்கையிலிருந்து வந்த தம்பபண்ணி -Thambapanni என்பதன் திரிபு, தண்பொருநை என்பதன் பிராகிரத மொழிப் பலுக்கல்). எது எவ்வாறாயினும் `தாமிரபரணி` என்ற சொல்லினை விடத் `தண்பொருநை` / `பொருநை` என்ற பழந் தமிழ்ப் பெயரினையே நாம் பயன்படுத்துவோம்; அதுவே எமக்கு ஒப்பில்லாப் பெருமையாக அமையும்.
இந்த ஆற்றங்கரையிலுள்ள ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் மூடியுடன் கூடிய முதுமக்கள் தாழியும் கிடைத்திருந்தது. அதே போன்று எலும்புகளுடனான முதுமக்கள் தாழிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை பற்றிய குறிப்புகள் பல பழந் தமிழ் இலக்கியங்களில் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் முதுமக்கள் தாழியில் நெல்லையும் வைத்துப் புதைக்கும் பழக்கத்தினையும் அகழ்வாய்வுகள் வெளிக் கொண்டு வந்திருந்தன.
வாய்க்கு அரிசி போடுதல் / அரிசியிடுதல் என இன்றும் சா வீடுகளில் கடைப்பிடிக்கப்படும் சடங்கு இந்த மரபின் தொடர்ச்சியாகவிருக்கலாம். நகரத்தார் நடுவே இன்றும் காணப்படும் `பச்சை குத்திப் பாய் சுருட்டல்` எனும் சடங்கும் இதன் எச்சமேயாகும். இதன்போது குத்தாணியில் பச்சை நெல்லினைப் போட்டுக் குத்தி, உமி நீக்கி அதனை வெள்ளைத் துணியில் உடலத்துடன் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்வர் (இங்கு முதுமக்கள் தாழியில் கிடைத்ததும் இத்தகைய உமி நீக்கிய நெல்லே). இதே போன்று இன்று மங்கல விழாக்களில் மட்டும் பயன்படுத்தப்படும் `நிறைநாழி` (நெல் நிரம்பிய கலன்) என்ற சடங்கு இறப்பு வீடுகளிலும் சில இடங்களில் பயன்படுத்தப்படுவதாக உரையொன்றில் பேரா.க.நெடுஞ்செழியன் குறிப்பிட்டிருந்தார் {`தமிழ் அருங்காட்சியகம் இலண்டன் ` ஏற்பாடு செய்திருந்த `தமிழர்களிடையே ஆசீவகம்` என்ற தலைப்பிலான உரையில் குறிப்பிடப்பட்ட செய்தி, சரி பார்க்கப்பட வேண்டியது}.

படிக்க :

சிந்துச் சமவெளி நாகரிகம் வேத நாகரிகம் அல்ல – மரபணு ஆய்வு முடிவுகள் !

சிந்து சமவெளி மக்களின் பிரதான உணவு மாட்டுக் கறியாம் || ஆய்வில் உறுதி

இச் செய்தி உண்மையாயின் அதுவும் ஒரு மரபுத் தொடர்ச்சியாகவே கருதப்படும்.
இந்தப் பொருநை நாகரிகம் வெளிக்கொண்டு வந்த கண்டுபிடிப்புகளையும், அதன் விளக்கங்களையும் விரிவாகத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள `பொருநை ஆற்றங்கரை நாகரிகம்` என்ற கையேட்டில் காணலாம். (இக் கட்டுரையின் இறுதிப் பகுதியில் இணைப்புள்ளது).
இப்போது வைகைக்கரை நாகரிகத்துடன் (கீழடி…) பொருநை ஆற்றங்கரை நாகரிகமும் தமிழர் கண்ட இரு பெரு நாகரிகங்களாகவுள்ளன. மீண்டும் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாரதியாரின் பாடல் வரிகளைப் பார்ப்போம். இங்கு பாரதியார் தமிழ் ஆறுகளைச் சொல்லி வருகின்றார். அப்போது காவிரி, தென்பெண்ணை, பாலாறு என வரிசையாகச் சொல்லி வந்தவர் அவ்விடத்தில் நிறுத்தி, ” தமிழ் கண்டதோர் வையை, பொருநை” என்பார். ஆம் தமிழர் கண்ட நாகரிகங்கள் அவைதான் (வைகை, பொருநை). என்ன பொருத்தமான வரிகள் !
குறிப்பு : ’பொருநை ஆற்றங்கரை நாகரிகம்’ தமிழ்நாடு அரசின் கையேட்டினைக் காணக் கீழுள்ள இணைப்பினைச் சொடுக்குக.

வி. இ. குகநாதன்

disclaimer