ஐ.நா. மன்றத்தின் மனித உரிமை கவுன்சிலுக்கு இந்தியா 6−வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 193 ஓட்டுகளில் 87 ஓட்டு வாங்கினாலே வெற்றி என்றிருந்த நிலையில் இந்தியா 184 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றுள்ளது. ஒன்பது நாடுகள் மட்டுமே இந்தியாவுக்கு ஓட்டு போடவில்லை
‘‘ஜனநாயகத்தை காப்பதற்கும், மக்களின் அடிப்படை உரிமைகளை காப்பதற்கும் இந்தியா உறுதி பூண்டுள்ளது” என இந்தியாவுக்கான ஐ.நா. தூதர் திருமூர்த்தி உறுதியளித்துள்ளார். கடந்த 74 ஆண்டுகால ‘சுதந்திர’ இந்தியாவில் – குறிப்பாக 7 ஆண்டு கால மோடி ஆட்சியில் − இந்திய மக்கள் அனுபவித்து வருகின்ற ‘ஜனநாயக உரிமைகளை’ நாம் நன்கறிவோம்.
அறிவுஜீவிகள், கல்வியாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக பிணை மறுக்கப்பட்டிருப்பது, மாட்டுக்கறியை வைத்திருந்ததாகவும், சாப்பிட்டதற்காகவும் தலித்துகளும், இசுலாமியர்களும் கொல்லப்பட்டது, வேலைநிறுத்தம் அறிவித்த இராணுவ தளவாட உற்பத்தி நிறுவனத் தொழிலாளர்கள் மீது வேலைநிறுத்த உரிமைப் பறிப்பு மற்றும் கடும் தண்டனை வழங்கும் கருப்புச்சட்டம் என எண்ணற்ற ஜனநாயக ‘உரிமைகளை’ நாம் அனுபவித்து வருகிறோம்.
படிக்க :
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் !
மனித உரிமைகள் : இஸ்ரேலின் பாதம் தாங்கும் மோடி அரசு !
இந்த அவலத்தில்தான் இந்தியாவுக்கு ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இடம்பெற 184 நாடுகள் ஓட்டளித்துள்ளன. இந்த செய்தி வெளிவந்த நேரத்தில் Scroll.in ஆங்கில இணைய இதழ் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது.
கடந்த 12.10.2021 அன்று நடந்த தேசிய மனித உரிமை ஆணையத்தின் 28−வது நிறுவன தினத்தில் பிரதமர் மோடி பேசிய செய்தி அதில் வெளியாகியுள்ளது. உலகெங்கும் மனித உரிமைகளை பேசிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் இந்தியர்களாகிய நாம் நமது பாரம்பரியத்தை கருத்தில் கொண்டு (உரிமைகளைவிட) கடமையை மையப்படுத்த வேண்டும் என்று திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார், மோடி.
பாரம்பரியம் சொல்லிக் கொடுத்திருக்கும் கடமை என்பதென்ன? “கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே..” என்பதுதான். அதாவது, உனக்கு வேலை கொடுத்த முதலாளிக்கு நன்றி விசுவாசத்துடன் இரு. உன் உழைப்புக்குரிய ஊதியத்தைக் கேட்காதே..   இலாபத்துக்கும், வளர்ச்சிக்கும் ஏற்ற ஊதிய உயர்வு கேட்காதே; வேலை நிரந்தரம் கேட்காதே! இதுதான் மோடிஜி நம்மிடம் பலனை எதிர்பார்க்காமல் செய்யச் சொல்கிற கடமை. இந்திய அரசியல் சட்டம் அடிப்படை உரிமைகளை பட்டியல் போடுகிறது என்றால், இந்தியப் பிரதமரோ, உரிமைகளைவிட கடமையே முக்கியம் என்கிறார்.
மோடி சொல்கிற “பாரம்பரியத்தைக் கருத்தில் கொண்டுள்ள கடமை” குறித்து இன்னும் விரித்து பார்க்க வேண்டியுள்ளது. ‘பாரம்பரிய’ மனு தர்மத்தின்படி நால் வருணங்கள் மற்றும் அவர்ணத்தார் தத்தமது பிறப்பின் அடிப்படையில் தொழில் செய்ய வேண்டும். குலத்தொழிலை செய்யாமல் நீட் எழுதமாட்டேன்; மருத்துவம், பொறியியல் படிப்பேன்; ஐ.ஐ.டி−க்கு போவேன் என்றெல்லாம் சொல்லக்கூடாது என்பதும் மோடியின் அந்த வாசகத்துக்குள் அடங்கும். “இங்கெல்லாம் வந்து மனித உரிமை என்று பேசாதே” என்பதுதான் நமக்கு மோடி சொல்லவரும் கருத்து.
இப்படிப்பட்ட “பாரம்பரியத்தைக் கருத்தில் கொண்டுள்ள கடமை”யை பின்பற்றச் செய்வது தான் காவி−கார்ப்பரேட் பாசிசத்துக்கு முக்கிய தேவையாக இருக்கிறது. உலகம் முழுவதும் மனித உரிமைகள் குறித்த பல்வேறு வரையறைகளை எந்த நாடும் மதிப்பதில்லை. மனித உரிமைகள் என பட்டியலிடப்பட்டிருப்பனவற்றில் பெரும்பாலானவை, உழைக்கும் மக்களது போராட்டத்தால் தான் குறைந்தபட்சம் காகிதத்திலாவது இருக்கின்றன.
இந்தியாவை பீடித்திருக்கும் பாசிச ஆட்சியில் காகிதத்திலிருந்தும் அவை கிழித்தெறியப்பட்டு வருகின்றன. பாசிசம் படிப்படியாக அமலாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தியா மனித உரிமைக் கவுன்சிலில் உறுப்பினர் என்பது ஒரு நகைமுரண்.

வளவன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க