ந்தியாவின் தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (NCRB) 2020-ம் ஆண்டிற்கான தற்கொலை விகிதங்களை கடந்த அக்டோபர் 28-ம் தேதியன்று வெளியிட்டது.  இதில் கடந்த 2020-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கை, அதற்கு முந்தைய ஆண்டுகளை விட இருமடங்கு அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கிறது. கொரோனா ஊரடங்கு ஏற்படுத்திய வேலையின்மையும் அரசின் பாராமுகமும் இந்த எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்குக் காரணமாகும்.
இந்தியாவில் 2019-ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 2020-ஆம் ஆண்டில் நடந்த தற்கொலைகளின் எண்ணிக்கை 10 சதவிதம் அதிகரித்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தற்கொலைகளின் மொத்த எண்ணிக்கை 1,53,052 என ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
தற்கொலை மரணங்களின் மொத்த எண்ணிக்கையை மொத்த மக்கள் தொகையின் அடிப்படையில் ஒப்பிடுகையில் 2019-ஆம் ஆண்டில் 1 இலட்சம் பேருக்கு 10.4 பேர் என்ற விகிதத்தில் தற்கொலை மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதுவே 2020-ம் ஆண்டில் 1 இலட்சம் மக்கள் தொகைக்கு 11.3  பேராக அதிகரித்துள்ளது. கடந்த 2010-ம் ஆண்டில், உச்சபட்சமாக 1 லட்சம் பேருக்கு 11.4 பேராக இருந்த உச்ச அளவை தற்போது பத்தாண்டுகளுக்குப் பிறகு 2020-ம் ஆண்டு மீண்டும் நெருங்கியிருக்கிறது.
திடீர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தினக்கூலித் தொழிலாளர்கள்தான். இவர்களில் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்தவர்கள் என்பதால் வீடு திரும்புவதற்கும், வருமானம் ஈடுவதற்கும் சாதாரணமாக காலங்களிலேயே கடுமையாகப் போராடக் கூடியவர்கள்.
படிக்க :
அதிகரிக்கும் பெண் தொழிலாளர்கள் வேலையிழப்பு விகிதம் !
தொழிலாளர்களை சுரண்டும் சொமாடோ – ஸ்விகி !
என்.சி.ஆர்.பி. அறிக்கையின்படி, 2020-ம் ஆண்டில் கொரோனா ஊரடங்கு காலத்தில் நாட்டில் தற்கொலை செய்து கொண்டவர்களில் தினக்கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கை 24.6 சதவிதமாக உள்ளது. குறிப்பாக கூறுவதானால் 37,666 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2014-ம் ஆண்டில் மொத்த தற்கொலைகளில் 12 சதவிகிமாக இருந்த தினக்கூலித் தொழிலாளர்களின் விகிதம் 2020-ம் ஆண்டில் இரட்டிப்பாகி 24.6 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
அதே போல, 2019-ம் ஆண்டு 7.4 சதவிகிதமாக இருந்த மாணவர்கள் தற்கொலை விகிதம், 2020-ம் ஆண்டில் 8.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்கிறது அறிக்கை. கடந்த 2019-ம் ஆண்டில் 10,335 -ஆக இருந்த தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 2020-ம் ஆண்டில் 14,825-ஆக உயர்ந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டை விட 21.2% அதிகம். இது 1995-ம் ஆண்டிலிருந்து நிகழ்ந்த மாணவர்கள் தற்கொலை விகிதத்தில் உச்சபட்ச எண்ணிக்கை ஆகும். மாணவர்களின் சமூகப் பொருளாதார மற்றும் உளவியல் பிரச்சினைகளை இந்த அரசும் சமூகமும் முக்கியத்துவம் கொடுக்காததையே இது நமக்கு உணர்த்துகிறது.
மேலும், 2019-ம் ஆண்டை விட 2020-ம் ஆண்டில் சுயத்தொழில் செய்வோர் தற்கொலைகள் 7.67% அதிகரித்துள்ளது. விற்பனையாளர்கள் தற்கொலை 26.1% அதிகரித்துள்ளது. வர்த்தகர்களின் தற்கொலை 49.9% அதிகரித்துள்ளது.
2020-ம் ஆண்டு நிகழ்ந்த மொத்த தற்கொலைகளில், இல்லத்தரசிகலின் பங்கு 14.6%, சுயத் தொழில் முனைவோரின் பங்கு 11.3%, தொழில்முறை / ஊதியம் பெறுவோரின் பங்கு 9.7%, விவசாயிகள் பங்கு 7%, ஓய்வு பெற்றவர்களின் பங்கு 1%, மற்ற பிரிவினரின் பங்கு 13.4% என்ற வகையில் இருந்துள்ளது.
தற்கொலை செய்து கொண்ட காரணங்களின் அடிப்படையில் வகைபிரிக்கையில், கடந்த 2019-ம் ஆண்டை விட 2020-ம் ஆண்டில் வறுமையின் காரணமாக தற்கொலை செய்துகொண்டோரின் எண்ணிக்கை 69%-மும்,  வேலையின்மை காரணமாக தற்கொலை செய்துகொண்டோரின் எண்ணிக்கை  24%-மும், போதைப்பொருள் & மதுப்பழக்கம் காரணமாக தற்கொலை செய்துகொண்டோரின் எண்ணிக்கை 17%-மும், நோய்நொடிகள் காரணமாக தற்கொலை செய்துகொண்டோரின் எண்ணிக்கை 16%-மும் குடும்பப் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்துகொண்டோரின் எண்ணிக்கை 14%-மும் அதிகரித்துள்ளது.
கார்ப்பரேட் நலத் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் திணிப்பதன் மூலம், வாழ்வாதரம் இழப்பவர்கள், படிக்க முடியாத மாணவர்கள், வேலையின்மையால் வாடும் இளைஞர்கள், இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதால் விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள், கார்ப்பரேட் நிறுவனங்களால் தொழில் நடந்த முடியாமலும் வியாபாரம் செய்ய முடியாமலும் தவிக்கும் சிறு வணிகர்கள், வியாபாரிகள் போன்ற எண்ணற்ற பிரிவினர் தற்கொலை செய்து கொண்டு மரணிக்கிறார்கள்.
இந்த உழைக்கும் மக்களின் வாழ்க்கை அவலங்களை கொரோனா ஊரடங்கு இன்னும் தீவிரப்படுத்தியிருக்கிறது என்பதே இந்த தற்கொலைகள் குறித்த அறிக்கை நமக்கு சொல்லும் செய்தி. இந்த மரணங்கள் ஒருபக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கும் போதே மறுபக்கத்தில் கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்து மதிப்பு வரலாறு காணாத வகையில் வளர்ச்சியடைந்தததையும் கடந்த 2020-ம் ஆண்டு நாம் பார்த்தோம். முதலாளிகளின் வளர்ச்சியும், மக்களின் வீழ்ச்சியும் முதலாளித்துவ சமூகம் எனும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
இந்த தற்கொலை மரணங்களின் அதிகரிப்பு என்பது, வெறும் கொரோனா ஊரடங்கினால் ஏற்பட்டது மட்டுமல்ல. பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி தொடங்கி ஆத்மநிர்பார் வரையில் மோடி அரசு மேற்கொண்ட கார்ப்பரேட் சேவக நடவடிக்கைகளால் ஏற்கெனவே பெருவாரியான மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டதும் இதற்கு முக்கியப் பங்கு வகிக்கிறது.
உழைக்கும் மக்களை சுரண்டிக்கொழுக்கும், அவர்களை வறுமையில் தள்ளி தற்கொலைக்குத் தள்ளும் முதலாளித்துவ சுரண்டலையும் அதை தீவிரமாக அமல்படுத்தும் காவி – கார்ப்பரேட் பாசிச கும்பலையும், அனைத்து உழைக்கும் மக்களும் ஓரணியில் திரண்டு வீழ்த்துவதுதான் தற்கொலைகளில் இருந்து நமக்குக் கிடைக்கும் தீர்வு.

சந்துரு
செய்தி ஆதாரம் : த வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க