பெகாசஸ் உளவுச் செயலி குறித்து ஒன்றிய அரசு பதில் தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டிருந்த வேளையில், நாடாளுமன்ற விவாதமே இல்லாமல் பல்வேறு சட்டங்களை சத்தமின்றி நிறைவேற்றியது மோடி அரசு. அப்படி சத்தமின்றி நிறைவேற்றப்பட்ட சட்டங்களில் ஒன்றுதான், முன்தேதியிட்ட வருமான வரிச் சட்டத்தை ரத்து செய்யும் சட்டத் திருத்த மசோதா.

ஒரு நிறுவனம் தன் சொத்து மற்றும் பங்குகளை விற்கும்போது, அதன் மூலம் ஈட்டப்படும் இலாபம் வருமானமாகக் கருதப்படும். அந்த வகையில் இலாப விகிதத்தைப் பொறுத்து இந்திய அரசிற்கு அந்நிறுவனம் வரி செலுத்த வேண்டும். இப்படி வரிகட்டுவதை தவிர்க்கும்விதமாக, வரியில்லா சொர்க்கங்களில் பினாமி நிறுவனங்கள் மூலம், சொத்து மற்றும் பங்கு விற்பனையை நடத்தி நிறுவனங்கள் வரி மோசடியில் ஈடுபடுகின்றன. இதனைத் தடுக்கும்விதமாக வருமானவரிச் சட்டம் (1961)−ல் ஒரு திருத்தத்தை 2012−ம் ஆண்டு மேற்கொண்டது மன்மோகன் சிங் அரசு.

அந்தச் சட்டத் திருத்தத்தை முன் தேதியிட்ட வரிச் சட்டமாகக் (Retrospective Tax) கொண்டுவந்தது. அதாவது 2012−க்கு முன்னர் 1961−க்குப் பிறகு நடந்த அனைத்து பரிவர்த்தனைக்கும் இந்தச் சட்டம் செல்லுபடியாகும்.

படிக்க :

ரிலையன்ஸ் ஜியோ : அம்பானி – மோடியின் கொடுங்கனவு ! சிறப்புக் கட்டுரை

சேலம் சிவராஜ் வைத்தியரின் எழுச்சி – மோடியின் வளர்ச்சி !

முன் தேதியிட்ட வருமானவரிச் சட்டம் கொண்டுவரப்பட்டது ஏன்?

கடந்த 2007−ம் ஆண்டு பிரிட்டனின் வோடோஃபோன் நிறுவனம் ஹாங்காங்கின் ஹட்ச் நிறுவனத்தின் 67% பங்குகளை 11.1 பில்லியன் டாலருக்கு (1110 கோடி டாலர்) வாங்கியது. இதன் மூலம் ஹட்ச் நிறுவனத்தின் இந்திய உரிமைகளையும் வோடோஃபோன் கைப்பற்றியது. இந்தப் பங்குகளை வாங்கியதன் மூலம் வோடோஃபோன் பெற்ற மறைமுக இலாபத்திற்கு வருமான வரியாக ரூ 7,990 கோடி விதிக்கப்பட்டது. இந்தப் பங்குகள் விற்பனையானது இந்தியாவிற்கு வெளியே நடந்ததால், இந்திய அரசிற்கு மூலதன ஆதாய வரி கட்டத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தை அணுகியதோடு, வழக்கில் வெற்றியும் பெற்றது வோடோஃபோன்.

இந்தப் பின்னணியில்தான், கார்ப்பரேட் நிறுவனங்களின் வரிஏய்ப்பைத் தடுப்பதற்காக கடந்த 2012−ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்திய வருமான வரிச்சட்டம் (1961)−இல் திருத்தம் செய்து உரிய விதிமுறைகளின்படி ‘‘முன்தேதியிட்ட வருமான வரிச் சட்டம் (2012)’’−ஐ சட்டமாக்கியது. இந்தியாவில் உள்ள சொத்துக்களின் பங்கு விற்பனையை இந்தியாவிற்கு வெளியே செய்தாலும், இந்திய அரசிற்கு வரி கட்டவேண்டும் என்று இச்சட்டம் கூறியது. மேலும் 2012−ஆம் ஆண்டிலிருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பங்கு விற்பனையின் மீதும் வரிவிதிக்கும் விதமாக இச்சட்டம் வடிவமைக்கப்பட்டது.

அன்றைய எதிர்க்கட்சியான பா.ஜ.க. இச்சட்டத்தை ‘‘வரி பயங்கரவாதம்’’ என்றது. இப்படியொரு சட்டத்தைக் கொண்டுவந்ததாலேயே, காங்கிரஸ் கட்சி கார்ப்பரேட்டுகளிடம் கறாராக நடந்துகொண்டது என்று பொருளல்ல. அப்போதைய நிலைமை என்னவென்றால், வோடோஃபோன், நோக்கியா போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் வரி ஏய்ப்பு மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் நாடெங்கும் மிகப்பெரிய அளவில் விவாதங்களையும் ஏற்படுத்தியது. இவ்வாறான சூழலில்தான் காங்கிரஸ் இச்சட்டத்தைக் கொண்டுவந்தது.

இந்திய அரசின் இறையாண்மையைக் கேலிக்கூத்தாக்கிய கெய்ர்ன்

இச்சட்டம் குறிப்பாக வோடபோனுக்கு எதிராக கொண்டுவரப்பட்டாலும், 2012−க்கு முன்பு மூலதன ஆதாய வரியிலிருந்து தப்பித்துக்கொண்ட பல பன்னாட்டு நிறுவனங்களும் இதில் சிக்கின. அதில் ஒன்றுதான் பிரிட்டிஷ் எண்ணெய் மற்றும் எரிவாயு மேம்பாட்டு நிறுவனமான கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம். 1996−இல் தனது துணை நிறுவனமான கெய்ர்ன் யு.கே ஹோல்டிங்ஸ் லிமிடெட் (CUHL−சி.யு.எச்.எல்) மூலம் இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள கிருஷ்ணா − கோதாவரி படுகையில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்காக இந்நிறுவனம் முதலீடு செய்தது.

2006−ல் கெய்ர்ன் யு.கே ஹோல்டிங்ஸ் நிறுவனம், ‘வரியில்லாச் சொர்க்கமான’ ஜெர்சி தீவிலுள்ள தனது நிறுவனத்தின் பங்குகளை இந்தியாவிலுள்ள தனது துணை நிறுவனமான கெய்ர்ன் இந்தியா ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு (தற்போது இந்நிறுவனத்தினை வேதாந்தா வாங்கிவிட்டது) மாற்றியதன் மூலம் அந்நிறுவனம் சுமார் 360 கோடி டாலர் மூலதன ஆதாயம் ஈட்டியது.

2012−இல் முன்தேதியிட்ட வருமான வரிச் சட்டம் கொண்டுவரப்பட்ட பிறகு, 2006−இல் கெய்ர்ன் நிறுவனம் பெற்ற இலாபத்திற்கு மூலதன ஆதாய வரியாக ரூ.10,247 கோடியை விதித்தது இந்திய வருமான வரித்துறை. இவ்வரிவிதிப்பை ரத்து செய்யக்கோரி கெய்ர்ன் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை அணுகியது. அங்கு அரசிற்குச் சாதகமாக தீர்ப்பு வரவே 2015−இல் கெய்ர்ன் நிறுவனமானது, இந்தியா − இங்கிலாந்து இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ் நெதர்லாந்தில் உள்ள ஹேக் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

2020 டிசம்பரில் கெய்ர்ன் நிறுவனத்தின் வாதத்தை ஏற்றுக்கொண்ட ஹேக் சர்வதேச நீதிமன்றம், இந்த பரிவர்த்தனையில் வரி தவிர்ப்பு நோக்கமில்லை என்றும் இது முதலீடு சம்பந்தப்பட்ட பிரச்சினைதான் என்றும் இந்திய அரசு, இருதரப்பு ஒப்பந்தத்தின்படி கெய்ர்ன் நிறுவனத்தை நியாயமாகவும் சமமாகவும் நடத்தவில்லை என்றும் கூறி கெய்ர்ன் நிறுவனத்திடமிருந்து இந்திய அரசு வரியாக வசூலித்த 120 கோடி டாலரை வட்டி மற்றும் இழப்பீடு ஆகியவற்றோடு சேர்த்து 170 கோடி டாலராக திருப்பி வழங்க உத்தரவிட்டது.

இதை எதிர்த்து 2021−ல் இந்திய அரசு ஹேக் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கும்போது, கடந்த மே மாதத்தில், தனக்கு உடனடியாக இழப்பீடு வழங்காததால், வெளிநாடுகளில் உள்ள இந்தியாவின் சொத்துகளை (வங்கிக் கணக்கு, இந்திய கப்பல் கழகம், பொதுத்துறை நிறுவனங்களின் சரக்குப் பெட்டக வாகனங்கள் மற்றும் ஏர் இந்தியா நிறுவனம்) கைப்பற்ற அமெரிக்கா, பிரான்ஸ், சிங்கப்பூர், மொரீஷியஸ் மற்றும் கனடா என பல்வேறு நாட்டு நீதிமன்றங்களில் கெய்ர்ன் நிறுவனம் வழக்கு தொடுத்தது.

ஜூலை 8, 2021−ல் 10 இலட்சம் பிரிட்டன் பவுண்டு மதிப்புள்ள இந்திய அரசின் சொத்துக்களை கையகப்படுத்த பிரான்ஸ் நீதிமன்றத்திடம் அனுமதியும் வாங்கியது. ‘‘சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பின்படி வரித் தொகையை இழப்பீட்டோடு திரும்ப வழங்கினால், நாங்கள் தொடுத்துள்ள வழக்குகளைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறோம்’’ என்று இந்திய அரசையே மிரட்டினார், கெய்ர்ன் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான சைமன் தாம்சன்.

கார்ப்பரேட்டுக்கு சேவகம் புரியும் மோடி அரசோ, கெய்ர்ன் நிறுவனத்திற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, முன்தேதியிட்ட வருமான வரிச் சட்டத்தை நீக்குவதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இதற்காக இந்திய வருமானவரி விதிப்புச் சட்டம் (1961) மற்றும் இந்திய நிதிச் சட்டம் (2012) ஆகியவற்றில் திருத்தம் செய்து, வருமான வரிச் சட்டங்கள் திருத்த மசோதா 2021−ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார், நிர்மலா சீதாராமன்.

இந்த புதிய மசோதாவால் கெய்ர்ன் உள்ளிட்ட 17 நிறுவனங்களிடம் வசூலித்த வரித் தொகையை, இந்திய அரசு திருப்பி செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

படிக்க :

வெண்ணெய்த் திருடன் கண்ணன் – எண்ணெய்த் திருடன் மோடி

வேதாந்தாவுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தின் சந்தர்ப்பவாதம் !

விசுவாசமிக்க அடிமை மோடி அரசு

தான் செலுத்த வேண்டிய வரியை கட்ட மறுக்கிறது என்பதோடு மட்டுமல்லாமல், சர்வதேச நீதிமன்றம் வரை சென்று இந்திய அரசின் சட்டத்திலிருந்து விலக்கு பெறுகிறது, அரசின் சொத்துக்களையே முடக்கி வைக்கிறது என்று சொன்னால் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் முன்னால், அரசுகளின் இறையாண்மை என்று சொல்லிக் கொள்வதற்கெல்லாம் ஒன்றுமே இல்லை என்பதைத்தான் இச்சம்பவம் காட்டுகிறது.

கெய்ர்ன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது ஒருபுறமிருக்க ‘‘தேசத்தின் கௌரவம்’’ குறித்து எப்போதும் வாய்கிழியப் பேசும் பா.ஜ.க. அரசு, தானே முன்வந்து கார்ப்பரேட்டுகளின் பாதங்களில் இந்தியாவின் இறையாண்மையை சமர்ப்பித்திருப்பதுதான் மோடி அரசின் வருமான வரிச்சட்டத் திருத்த நடவடிக்கை.

தனியார்மயம் − தாராளமயம் − உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படத் தொடங்கிய 1990−களிலிருந்தே பன்னாட்டு நிறுவனங்களின் சூறையாடலுக்கு ஏற்ப இந்தியச் சட்டங்களை மாற்றியமைக்க வேண்டும், மறுவார்ப்பு செய்ய வேண்டும் என்ற உலக வர்த்தகக் கழகத்தின் கட்டளையைத்தான் எல்லா அரசுகளும் அமல்படுத்தி வந்தன – அமல்படுத்த வேண்டும். என்றாலும், அதை ஒரு விசுவாசமிக்க அடிமையைப் போல மிகத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது மோடி அரசு. ‘‘தேசபக்தி’’ வேடம் போடும் இந்த தேசவிரோத அடிமைக் கும்பலை விரட்டியடிப்பதுதான் உண்மையான தேசப் பற்றாளர்கள் நாம் செய்ய வேண்டிய பணி.

வாகைசூடி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க