சீக்கியர்களின் குருவான குருநானக்கின் பிறந்தநாளான இன்று (19.11.2021), காலை 9 மணிக்கு தொலைக்காட்சித் திரையில் தோன்றி மூன்று விவசாயச் சட்டங்களையும் ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறார், பிரதமர் மோடி.  இது விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் மோடியின் அடிமைகள், மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

உண்மையில் மோடியின் இந்த நகர்வின் பின்னணியில் இருப்பது  எதிர்வரும் 2022-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல்தான் என்பது அரசியல் பார்வையாளர்கள் அனைவருக்கும் தெரியும்.

தனது உரையைத் துவங்குகையிலேயே, குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த தமது அரசு முயற்சித்ததாகவும், விவசாயத்துக்கான நிதிஒதுக்கீட்டை 5 மடங்கு அதிகரித்திருப்பதாகவும் கதையளந்துதான் தொடங்கினார். ஆனால் கடந்த பட்ஜெட் எந்த அளவிற்கு விவசாயிகளுக்கான நிதியை வெட்டிச் சுருக்கியது என்பதையும், தொடர்ச்சியான உர விலையேற்றம் எப்படி விவசாயிகளை விவசாயத்திலிருந்து வெளியேற நிர்பந்தித்தது என்பதையும் நாம் பலமுறை பேசியிருக்கிறோம்.

மேலும் வேளாண் சட்டங்கள் மூலம் கார்ப்பரேட்டுகளுக்கு விவசாயத்தைத் தாரைவார்க்க வசதியாக வேளாண் வர்த்தகக் உட்கட்டமைப்புக்கு நிதி ஒதுக்குவது என்ற வகையிலும், உர நிறுவனங்களுக்கு மானியம் என்ற வகையிலும் தான் அந்த நிதி ஒதுக்கப்பட்டது என்பதையும் நாடறியும். ஆனாலும் கூச்சமின்றி விவசாயத்திற்கு அதிக நிதி ஒதுக்கியதாக கட்டுக்கதை விடுகிறார் மோடி.

மூன்று வேளாண் சட்டங்களையும் ஒரு பகுதியளவு விவசாயிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், அதனை அவர்கள் ஏற்றுக் கொள்ளச் செய்வதற்காக தாங்கள் எடுத்த சிறந்த முயற்சிகள் பயனளிக்கவில்லை என்று கூறியிருக்கிறார் மோடி.

ஓராண்டு காலம் மழையிலும் வெயிலிலும் விவசாயிகளை வதைத்து 600-க்கும் மேற்பட்ட விவசாயிகளைக் கொன்றதையும், டெல்லியில் விவசாயிகள் மீது தடியடி, துப்பாக்கிச் சூடு நடத்தியதையும், லக்கிம்பூர் கேரியில் காரேற்றிக் கொன்றதையும், அரியானா முதல்வர், போராடும் விவசாயிகளை தாக்க பாஜக குண்டர்படையை அமைக்கச் சொன்னதையும்தான் தாங்கள் எடுத்த சிறந்த முயற்சிகளாக மோடி குறிப்பிடுகிறார் போலும் !

படிக்க :

உ.பி. லக்கிம்பூர் கேரி படுகொலை : காவி பாசிஸ்டுகளின் சதி !

நீடாமங்கலம் தோழர் தமிழார்வன் படுகொலை : முற்போக்கு சக்திகளுக்கான ஒரு எச்சரிக்கை !

நாங்கள் விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய முடிவு செய்திருப்பதாகவும், 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான சட்டரீதியான நடைமுறை விரைவில் துவங்கும் எனவும் விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு தங்களது இல்லம் திரும்ப வேண்டும் என்றும் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள விவசாயிகள் சங்கம், நாடாளுமன்றத்தில் சட்டங்களை வாபஸ் பெற்ற பின்னர் தான் வீடு திரும்புவோம் என்று தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சிகள் அனைவரும் இது விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று கூறியுள்ளனர். “விவசாயிகளின் ஜனநாயகரீதியான போராட்டங்களுக்கு அஞ்சாத மோடி, எதிர்வரும் தேர்தலைக் கண்டு அஞ்சுகிறார்” என்று ப.சிதம்பரம் மோடியின் இந்த அறிவிப்பு குறித்துக் கூறியுள்ளார்.

பஞ்சாப் முன்னாள் முதல்வரும் பாஜக-வின் அடிமையுமான அம்ரிந்தர் சிங் வெட்கம் சிறிதுமின்றி, இச்சட்டங்களை திரும்பப் பெற்றதற்காக மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மோடியின் இந்த நகர்வு எவ்வித சந்தேகமும் இல்லாமல், 2022-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மாநில தேர்தல்களைக் கணக்கில் கொண்டு எடுக்கப்ட்டவையே என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

தேர்தலுக்கு இன்னும் 3 – 4 மாதங்களே இருக்கும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் ஏற்கெனவே எதிர்க்கட்சிகளைப் பிரித்து ஓவைசி, மாயாவதி உள்ளிட்ட பி டீம்களை வைத்து தனது தேர்தல் வெற்றியை சாதகமாக்கிக் கொண்டுள்ளது. அனைத்து தேர்தல் முன்கணிப்புகளும், ஸ்வாதி சதுர்வேதி உள்ளிட்ட பத்திரிகையாளர்களுமே, உ.பி கள நிலவரத்தின் படி அங்கு பாஜக வெற்றுபெறும் என்று அடித்துக் கூறுகின்றனர். உ.பி-யில் பாஜக வெற்றி பெறுவது என்பது ஆர்.எஸ்.எஸ்.-இன் இந்துராஷ்டிர இலக்கிற்கு மிகவும் அவசியமானது.

தற்போது யோகி ஆதித்யநாத் அரசு பெரும் வெற்றியை ஈட்டி ஆட்சியில் இருப்பது போன்ற ஒரு பெரும் வெற்றியை எதிர்வரும் தேர்தலிலும் ஈட்டுவதற்கு, பாஜகவின் சாதிய அரசியல் சுழலில் இருந்து வர்க்கமாகத் திரண்டு பாஜக-வை எதிர்த்த விவசாயிகளை மீண்டும் தனது சாதிய வட்டத்திற்குள் கொண்டு வருவது அவசியம். அதற்காகவும் பஞ்சாப் தேர்தலில் தாம் வெற்றிபெற முடியாது எனினும் அங்கு தேர்தலுக்குப் பிறகு குதிரை பேரம் நடத்துவதற்கான சூழலை ஏற்படுத்துவதற்காகவும் தான் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார், மோடி.

பாசிச ஆர்.எஸ்.எஸ். – மோடி கும்பலின் நகர்வை இந்த இரண்டு தேர்தலோடு சுருக்கிப் பார்க்க முடியுமா ? 

கண்டிப்பாக முடியாது. விவசாயிகளை போராட்டங்களில் இருந்து ஒடுக்க அனைத்துவிதமான முயற்சிகளையும் கையில் எடுத்த மோடி அரசு, அவ்வளவு சீக்கிரமாக தனது கார்ப்பரேட் எஜமானர்களின் விவசாயத்துறை முதலீட்டுக் கனவுகளில் மண்ணள்ளிப் போட்டுவிடாது.

ஆர்.எஸ்.எஸ். – பாஜக பாசிசக் கும்பலின் அடிப்படைத் திட்டமே இந்து ராஷ்டிரத்தை இந்தியாவில் அமல்படுத்துவதுதான். அதாவது சனாதனக் கும்பலின் சர்வாதிகார ஆட்சியை இந்தியாவில் ஏற்படுத்துவதுதான். அதற்கான நகர்வில் மிகக் கவனமாக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது இந்தக் கும்பல்.

மொத்த அரசுக் கட்டமைப்பையும் ஒன்றிய அரசின் கீழ் கொண்டுவந்து, மாநில அரசுகளின் பொருளாதார அடித்தளங்களை அழித்து, மாநில அரசுகளின் அதிகாரத்தை மத்திய அரசுக்கும் அதன் கீழ் உள்ள அரசு நிர்வாக இயந்திரத்துக்கும் கீழ் கொண்டுவருவதற்கான வேலைகளை அனைத்து மாநிலங்களிலும் செய்து வருகிறது பாஜக.  பாசிச இந்துராஷ்டிர அரசை அறிவிப்பதற்கான அடிப்படை முன் தேவைகளில் இது முக்கியமானது.

அதற்கு மாநில அரசுகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது அவசியம். தாம் செல்வாக்குள்ள மாநிலங்களில் வாய்ச்சவடால் அறிவிப்புகள் மூலமாகவும், தாம் செல்வாக்குப் பெற இயலாத மாநிலங்களில் குதிரை பேரம் ஆட்சிக் கவிழ்ப்பு, மிரட்டிப் பணிய வைப்பது ஆகிய நடவடிக்கைகளின் மூலமாகவும் அதனைச் செய்து வருகிறது ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல்.

அதன் ஒரு பகுதியாகத்தான் பஞ்சாப் தேர்தலையும், உத்தரப் பிரதேச தேர்தலையும் பார்க்கிறது பாஜக. தூண்டிலில் சிறு இரையைப் போட்டு பெரு மீனைப் பிடிப்பது போல, இந்து ராஷ்டிரத்தை அடைவதற்கான சிறிய தியாகமாக இந்தச் சட்டமசோதாவை திரும்பப் பெற்றுள்ளது மோடி அரசு.

தேர்தல் வெற்றிக்குப் பின் சிறிது காலம் கழித்து மீண்டும் வேறு வடிவில் இந்த மசோதாவைக் கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் மிகப் பிரகாசமாகவே இருகின்றன. குறிப்பாக பஞ்சாபில் குதிரை பேரம் மூலம் ஆட்சியில் அமர்ந்தால், அங்கு அரசுக் கொள்முதல் கட்டமைப்பை படிப்படியாக சீரழித்து ஒட்டுமொத்தமாக பஞ்சாப் விவசாயத்தையே ஒழித்துக் கட்டவும் செய்யலாம்.

விவசாயிகள், டெல்லி போராட்டத்தில் எப்படி மாநிலம், மொழி ஆகியவை தாண்டி, சாதி, மத வேறுபாடுகள் தாண்டி வர்க்கமாக ஒன்றிணைந்தார்களோ, அப்படி ஒரு ஒற்றுமைக்குத் தொடர்ச்சி கொடுத்து, பாசிசக் கும்பலையும் அதன் நேரடி, மறைமுகக் கூட்டாளிகளை இனங்கண்டு அவர்களைப் புறக்கணிப்பதும்; அவர்கள் முன்னெடுக்கும் உழைக்கும் வர்க்க விரோத சட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை எதிர்ப்பதும் அவசியம்.

பாசிசத்திற்கு எதிரான விவசாயிகள், தொழிலாளர்களின் வர்க்கரீதியான ஒற்றுமை தான் இத்தகைய உழைக்கும் வர்க்க விரோத சட்டங்கள் மீண்டும் இயற்றப்படாமல் தடுக்க முடியும்.

சரண்

3 மறுமொழிகள்

    • கட்டுரையாளர், எழுதிய சமயத்தில் அவர்களது அறிக்கையை கவனிக்கப்படவில்லை. தமிழக அதிமுக அடிமைகள் நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது

  1. ஆளும்வர்க்க கட்சிகள் RSS-BJP + மத்திய அரசின் கார்ப்பரேட் கொள்கையை மறைத்து அறிக்கைகள் விடுவித்து வருகின்றன.

Leave a Reply to பகத்சிங் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க