சோனி ’’இன் சர்ச் ஆப் தி தேர்ட் ஸ்பேஸ்’’ (மூன்றாம் இடத்தை தேடி) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில், குஜராத் கலவரத்தை இந்துத்துவ கும்பல்களுக்கு ஏற்றவாறு திரித்தும் புரட்டியும் எழுதியுள்ளார்.
இந்தியாவில் உள்ள முக்கிய பதவிகளில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் ஆதரவாளர்கள் மற்றும் மோடியின் தீவிர பற்றாளர்கள் நியமிக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது மனோஜ் சோனி என்பவர் யு.பி.எஸ்.சி.யின் (Union Public Service Commission) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சோனி ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் தீவிர ஆதரவாளர் என்பதால் கடந்த 2005-ம் ஆண்டு வயது தகுதி இல்லாத போதும் வதோதராவில் உள்ள மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். அவர் பதவி வகித்த காலக்கட்டத்தில் பல்கலைக்கழக முக்கிய பொறுப்புகளில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வை சேர்ந்தவர்களை நியமித்துள்ளார். இவருடைய காலத்தில்தான் பல்கலைக்கழகம் தரத்தில் கடுமையான சரிவைக் கண்டுள்ளது.
இந்துத்துவத்தை தூக்கி பிடிக்கும் மோடியின் செயலால் ஈர்க்கப்பட்ட சோனி, தனது பெயரை ”சோட் மோடி’’ என்று மாற்றிக்கொண்டார். கடந்த 2002-ம் ஆண்டு மோடி ஆட்சியின்போது குஜராத்தில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக காவி குண்டர்கள் நடத்திய கொடூர தாக்குதல் குறித்து ’’இன் சர்ச் ஆப் தி தேர்ட் ஸ்பேஸ்’’ (மூன்றாம் இடத்தை தேடி) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில், குஜராத் கலவரத்தை இந்துத்துவ கும்பல்களுக்கு ஏற்றவாறு திரித்தும் புரட்டியும் எழுதியுள்ளார். சோனி, மோடியின் மிக நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்துள்ளார்.
கடந்த காலத்தில் சிறந்த கல்வியாளர்களும் ஐஏஎஸ் அதிகாரிகளும் தான் UPSC-யின் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால், தற்போது சோனியின் நியமனம் என்பது அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் அமைந்துள்ளது. இந்துத்துவ சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டவர்களுக்கும் ஆளுங்கட்சிக்கு அடிமை சேவகம் செய்பவர்களுக்கும் தான் இனி பதவி என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
சோனியின் நியமனம் பற்றி டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் அபூர்வானந்த் கூறும்போது, இந்துத்துவ சித்தாந்தத்தை அடைப்படையாக கொண்ட ஒருவரை யு.பி.எஸ்.சி.யின் தலைவராக நியமிப்பது என்பது அந்த நிறுவனத்தை செல்வாக்கு இழக்க செய்யும் நடைமுறையாகும். உயர் பதவிகளுக்கான நியமனங்களில் அரசியல் தலையீடுகள் இல்லாமல் இருக்க வேண்டும். தற்போது நடைபெறும் நிகழ்வுகளை பார்க்கும்போது முக்கிய பதவிகளுக்கான அனைத்து நியமனங்களும் சித்தாந்த ரீதியாகதான் இருக்கும் என்பது தெளிவாகிறது என்றார்.
கடந்த காலங்களில் சிறுபான்மையினர் சிலர் முக்கியமான பதவிகளில் நியமிக்கப்பட்டபோது அது “யு.பி.எஸ்.சி ஜிகாத்” என்று காவிக் கும்பல்கள் பிரச்சாரம் செய்தனர். மேலும், முற்போக்காளர்கள், ஜனநாயகவாதிகள், பா.ஜ.க.வின் செயல்பாடுகளுக்கு எதிரானவர்கள் போன்றோர் ஊடகங்களில் பணியாற்றியபோது “ஊடக ஜிகாத்” என்று கூறி அவர்களுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டனர்.
தற்போது இந்தியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் இருந்து தன்னாட்சி அதிகாரம் கொண்ட அனைத்து நிறுவனங்களின் பதவிகளுக்கு ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க போன்ற காவி சிந்தனை கொண்ட தீவிர இந்துவெறியர்கள் தான் நியமிக்கப்படுகின்றனர். யு.பி.எஸ்.சி.யின் தலைவராக சோனி நியமிக்கப்பட்டதால் பாடத்திட்டத்தில் மகாபாரதம், ராமாயணம் முதல் மாட்டு கோமியம் வரை அனைத்தும் பாடத்திட்டமாக மாற்றப்படும். தற்போது ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடைபெறுகிறது. இனிமேல் யு.பி.எஸ்.சி தேர்வுகள் இந்தியில் மட்டும்தான் எழுத வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படும். இதற்கடுத்து செத்துபோன மொழியான சமஸ்கிருதம் கட்டாயப்படுத்தபடும்.
தற்போது, இந்துத்துவாதிகள் அனைத்து துறைகளிலும் ஓரளவுக்கு இருக்கிறார்கள். இனிமேல் அதன் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். பத்துகால் பாய்ச்சலில் பாரத தேசத்தை காக்க இந்த பாசிஸ்டுகள் அரசு அதிகாரிகளாக உள்நுழைவார்கள்.
ஆட்சியிலும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள், அதிகாரத்திலும் அவர்களின் அடிமைகள் என மின்னல் வேகத்தில் காவி பாசிஸ்டுகள் முன்னேறி வருகின்றனர். அனைத்து துறைகளிலும் பற்றி படர்ந்து வரும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்துவதை தவிர வேறு என்ன இருக்கிறது நமக்கு.