22, ஏப்ரல் 2022
பாட்டாளி வர்க்க ஆசான் லெனின் 152-வது பிறந்த நாள்:
இரண்டாம் ஆண்டில் “புதிய தொழிலாளி”!
பாட்டாளி வர்க்க ஆசான் லெனின் அவர்களது 152-வது பிறந்த நாளை உலகெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களும், தொழிலாளர்களும் நினைவுகூர்ந்து வருகின்றனர். இந்திய தொழிலாளி வர்க்கமும் ஆசானை நினைவுகூர்கிறது.
ஆசான் லெனினது பாதையில் இந்திய தொழிலாளி வர்க்கத்தை அணிதிரட்டி வழிநடத்தும் நோக்கத்தில் 1998-ல் உருவாக்கப்பட்ட அமைப்பு “புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி’’ பு.ஜ.தொ.மு தனது துவக்கத்தில் சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை தொழிலாளர்களை அமைப்பாக்கும் நோக்கத்தில் தொழிற்சங்க சட்டப்படி பதிவு செய்யப்பட்டு (பதிவு எண் 43/TVR) அம்பத்தூரை ஓட்டிய பாடி பகுதியில் அலுவலகம் அமைத்து இயங்கியது.
அடுத்தடுத்த ஆண்டுகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல்வேறு ஆலைகளில் சங்கங்களைக் கட்டியது. தொடர்ச்சியாக, தமிழகத்தின் கோவை, ஓசூர், திருச்சி பகுதிகளுக்கு விரிவடைந்த நிலையில் 2014-ல் புதிய மாநில நிர்வாகக்குழு மற்றும் மாநில செயற்குழுவை கட்டியது. கொள்கை அறிக்கை மற்றும் அமைப்பு விதிகளை உருவாக்கி மா-லெ அரசியலை முன்னெடுத்தது. இதன் போக்கில் புதுச்சேரி மாநிலத்துக்கும் விரிவடைந்தது.

படிக்க :

♦ ஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் || NDLF

♦ பு.ஜ.தொ.மு-வின் மாநில ஒருங்கிணைப்புக் குழு உருவானது || பத்திரிகைச் செய்தி

20 ஆண்டுகளை கடந்த நிலையிலும் மாநில மாநாட்டை நடத்தி தலைமைக் குழுவை ஜனநாயக முறைப்படி தேர்வு செய்வதை இரண்டாம் பட்சமாகவே கருதிய நிலையில் புதிய ஜனநாயக அமைப்புகளில் சீர்குலைவுவாதமும், கலைப்புவாதமும் ஒரு பிளவுக்கு இட்டுச் சென்றது.
பு.ஜ.தொ.மு–வின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்த திரு.சுப.தங்கராசு பாட்டாளி வர்க்க விரோத நடவடிக்கைகளுக்காக பு.ஜ.தொ.மு–வின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தும் 20.12.2020 அன்று நடந்த மாநில செயற்குழுவால் நீக்கப்பட்டார். அவரை கண்காணிக்கத் தவறியதற்காக ஒட்டுமொத்த நிர்வாகக்குழுவும் பதவி நீக்கம் செய்யப்பட்டது. 31,ஜனவரி 2022-க்குள் மாநில மாநாட்டை நடத்தி புதிய தலைமையை தேர்வு செய்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
மேற்படி முடிவின் அடிப்படையில் மாநில மாநாட்டை நடத்துவது என்கிற பெயரில் கலைப்புவாதிகள் பல மாவட்டப் பகுதிகளை தேர்தல் நடவடிக்கைகளிலிருந்து ஒதுக்கி வைப்பதில் தீவிரமாக செயல்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் சில பகுதிகள் மற்றும் கோவையில் மட்டுமே இயங்கி வந்த சிறுபான்மை, புதுச்சேரி பகுதியுடன் இணைந்து ஏனைய மாவட்டப் பகுதிகளை ஒதுக்கி வைத்து தலைமையைக் கைப்பற்றும் திட்டத்தில் செயல்பட்டதால், பு.ஜ.தொ.மு-வுடன் துவக்க காலம் முதல் பொறுப்பேற்று இயங்கி வந்த முன்னணி தோழர்களும், மாவட்டக் குழுக்களும் இணைந்து, சீர்குலைவுவாதிகளிடமிருந்து பு.ஜ.தொ.மு–வை மீட்டெடுக்கும் நோக்கத்தில் 7 பேரைக் கொண்ட மாநில ஒருங்கிணைப்புக்குழு ஒன்றினை 16.4.2021 அன்று அறிவித்தது. மாநில ஒருங்கிணைப்புக்குழுவின் இணையக் குரலாக “புதிய தொழிலாளி” என்கிற இந்த முகநூல் 22.4.2021 களமிறங்கியது.

கடந்த ஓராண்டில் உழைக்கும் மக்களது துயரங்கள், கார்ப்பரேட்டுகளது நவீன சுரண்டல் முறைகள், அதிகார வர்க்கத்தின் அடக்குமுறை, காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்தும் நோக்கில் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியைக் கட்டுவதன் அவசியம், பாட்டாளி வர்க்க இயக்கத்தின் கடமைகள் ஆகியவற்றை முன்னிறுத்தி தனது பயணத்தை துவங்கியது. தினசரி 2 அல்லது 3 ஈ-சுவரொட்டிகள், அவ்வப்போது காணொளிகள், சிறு கட்டுரைகள் ஆகியவற்றின் மூலம் புதிய தொழிலாளி முகநூல் தனது வர்க்கக் கடமையை நிறைவேற்றி வருகிறது. ஆயிரக்கணக்கான வாசகர்களை வென்றெடுத்துள்ளது.

காவி – கார்ப்பரேட் பாசிசம் முன்னேறி வருகின்ற சூழலில் உலக மேலாதிக்கத்துக்கான போட்டியில் ஏகாதிபத்திய நாடுகள் (குறிப்பாக, அமெரிக்கா) போர்முனைகளை உருவாக்கி வருவதும் பிரதான போக்காக மாறி வருகின்ற கட்டத்தை புதிய தொழிலாளி முன்னுணர்ந்து அம்பலப்படுத்துகிறது.
கடந்த ஓராண்டில் எமது அனைத்து நடவடிக்கைகளையும் ஊக்குவித்த தோழர்கள், நண்பர்கள் புதிய தொழிலாளி முகநூலை தங்களது நட்பு வட்டத்தில் அறிமுகம் செய்வது, பகிர்வது, விமர்சனங்கள், விவாதங்களை முன்வைப்பது, ஆலோசனைகள் தெரிவிப்பது, படைப்புகள் அனுப்புவது என தங்களால் இயன்ற அளவில் புதிய தொழிலாளி மேற்கொண்டு வரும் புரட்சிகர பணிக்கு உதவுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

புரட்சிகர வாழ்த்துக்களுடன்,
மாநில ஒருங்கிணைப்புக்குழு,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தொடர்புக்கு : 8056386294.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க