சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயிலும் 2, 3 மற்றும் 4-ம் ஆண்டுகளை சேர்ந்த மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் தனியார் மருத்துவக் கல்லூரியின் கட்டணத்தை கட்டச் சொல்வதை கண்டித்து கடந்த மார்ச் 31 அன்றிலிருந்து தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
2020 – 2021-ம் ஆண்டுக்கு முன்பு சேர்ந்த மாணவர்கள், தனியார் மருத்துவக் கல்லூரிக்கான பழைய கட்டணத்தை மார்ச் 30-க்குள் செலுத்த வேண்டும் என்று மருத்துவக் கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது. கட்டணத்தை செலுத்தாவிட்டால் வகுப்புகளுக்கு அனுமதிக்க மாட்டோம் என்று மாணவர்களை மிரட்டியுள்ளது.
இதைக் கண்டித்து மார்ச் 31, 2022 அன்று அனைத்து நிலை மருத்துவ மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவாயிலில், நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு வாரம் அவகாசம் வழங்குவதாகவும், அரசுடன் கலந்து பேசி நல்ல முடிவு தெரிவிப்பதாகவும் நிர்வாகம் கூறியதால் மாணவர்கள் கலைந்து சென்றனர். ஆனால் கல்லூரி நிர்வாகம் கட்டணத்தை குறைக்காததால் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தனர்.
ஏப்ரல் 10-ந்தேதி மாணவர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து கடந்த 11-ந்தேதி முதல் 20-ம் தேதி வரை அண்ணாமலை நகரில் உள்ள மருத்துவ கல்லூரி வளாகம், மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலக வளாகம் ஆகிய இடங்களில் தொடர் போராட்டம் நடத்தினர்.
படிக்க :
♦ சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம் !
♦ ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, சென்னை பல்கலை மாணவர்களின் போராட்டம் வெற்றி உணர்த்துவது என்ன ?
ஏப்ரல் 21 முதல் இன்று வரை மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரி மாணவ மாணவியர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்லூரி நிர்வாகமானது மாணவர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் 2,3,4-ம் ஆண்டு மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை விட்டுள்ளது. ஆனாலும் மாணவர்கள் கலைந்து செல்லாமல் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தை தொடர்கின்றனர்.
***
2013-ம் ஆண்டு தமிழக அரசானது அண்ணாமலை பல்கலைக் கழகத்தை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தது. அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி தமிழக அரசின் கட்டுப்பாட்டின்கீழ் வந்த பிறகும், தனியார் மருத்துவக் கல்லூரியின் கட்டணமே வசூலிக்கப்பட்டு வந்தது. அதை எதிர்த்து அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டணம் வசூலிக்க சொல்லி மாணவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தினர்.
2016-ம் ஆண்டு ஆகஸ்டு 29-ந்தேதி முதல் கல்விக் கட்டணத்தை குறைக்க சொல்லி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலும் கல்விக் கட்டணத்தை குறைக்க சொல்லி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு 2020 டிசம்பர் 9 முதல் 57 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவ மாணவர்களின் விடாப்பிடியான போராட்டத்தால் தமிழக அரசானது ஜனவரி 28, 2021 அன்று ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை, சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவதாக அரசாணை வெளியிட்டது.
அந்த அரசாணையில் இக்கல்லூரியானது இனிமேல் கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி என்று அழைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. கல்விக் கட்டணம் சம்மந்தமாக அரசாணையில் எதுவும் தெரிவிக்கவில்லை என்று மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். பிப்ரவரி 4, 2021 அன்று தமிழக அரசானது கட்டணக் குறைப்பு சம்மந்தமாக அரசாணையை வெளியிட்டது.
பிப்ரவரி 4 அன்று தமிழக அரசானது வெளியிட்ட அரசாணையை அப்படியே நடைமுறைப்படுத்தி இருந்தால், தற்போது மாணவர்கள் போராட்டம் நடத்த வேண்டிய தேவை இருக்காது.
ஆனால் பிப்ரவரி 26 அன்று அரசாணை 122-யை தமிழக அரசானது வெளியிட்டது. அதில் 2020 – 21-ம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும்தான் அரசுக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், அதற்கு முன்பாக சேர்ந்தவர்களுக்கு ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட கட்டணமே வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.
