டமாநிலங்களில் கொண்டாடப்படும் இந்துப் புத்தாண்டு (நவ் சம்வத்ஸர்), இராம நவமி, அனுமன் ஜெயந்தி என வரிசையாக அடுத்தடுத்து வந்த இந்துப் பண்டிகைகளைப் பயன்படுத்தி, இசுலாமியர் மக்களுக்கு எதிராக, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தமது பாசிச வெறியாட்டங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளது ஆர்.எஸ்.எஸ் காவி கும்பல்.
கடந்த ஏப்ரல் 2-ம் தேதி இராஜஸ்தானின் கரோலி நகரில் இந்துப் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நிகழ்த்தப்பட்ட கலவரமானது, வரிசையாக நடைபெற்ற வெறியாட்டங்களின் தொடக்கமாக அமைந்தது. அன்றைய நாள் இசுலாமியர்கள் வசிக்கக்கூடிய பகுதியைக் குறிவைத்து காவி குண்டர்கள் மோட்டார் சைக்கிள் பேரணியொன்றை நடத்தினர். அப்போது கற்களை வீசியதாகக் கூறி இசுலாமிய மக்கள் மீது தாக்குதல் தொடுத்துள்ள காவி கும்பல், அப்பகுதியிலிருந்த இசுலாமிய மக்களின் கடைகள் மற்றும் வாகனங்களைக் தீயிட்டு கொளுத்தியது.
இதே பாணியில், ஏப்ரல் 10-ம் தேதி இராம நவமி நாளையொட்டி உத்தரகாண்ட், டெல்லி, மேற்கு வங்கம், குஜராத், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், பீகார், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா எனக் குறுக்கும் நெடுக்குமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இசுலாமியர்கள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. ஏப்ரல் 16-ம் தேதி அனுமன் ஜெயந்தி அன்றும் டெல்லி ஜஹாங்கீர் புரியில் இசுலாமியர்களுக்கு எதிரான கலவரம் அரங்கேற்றப்பட்டது.
மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் பகுதியில் நடந்த கலவரத்தில் 20 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. 30 வயது மதிக்கத்தக்க இப்ரிஸ் கான் என்ற இளைஞரை அடித்தே கொன்றுள்ளது காவி கும்பல். மேலும் 24-க்கும் மேற்பட்ட இசுலாமிய மக்கள் கலவரத்தில் காயமடைந்துள்ளனர்.
குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தின் கம்பத் நகரத்திலும், சபர்கந்தா மாவட்டத்தின் ஹிம்மத் நகரத்திலும் இசுலாமியர்கள் மீது தாக்குதல்கள் நடத்தியதோடு, அங்குள்ள கடைகளுக்கும் தீவைத்துள்ளார்கள். இக்கலவரத்தில் 65 வயதான முதியவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தின் ஹவுரா நகரில் நடந்த கலவரத்தில், 10 இசுலாமியர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் ஜார்கண்ட் மாநிலத்தின் லோஹர்டகா மாவட்டத்தில் நடந்த கலவரத்தில், ஒரு இசுலாமியர் கொல்லப்பட்டுள்ளார். 12 இசுலாமியர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
படிக்க :
அரியானா : பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் முஸ்லீம் இளைஞர்களை தாக்கும் காவி குண்டர்கள் !
’இந்தியாவை இந்து ராஷ்டிரா ஆக்க வேண்டும்’ : அதிகரித்து வரும் வெறுப்பு பேச்சுக்கள் !
சங்கப் பரிவாரக் கும்பல், இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த பெரும்பாலும் ஒரே மாதிரியான வழிமுறைகளையே கையாண்டுள்ளது. “ஜெய் ஸ்ரீராம்” என சத்தமிட்டபடியே கத்தி, வாள், துப்பாக்கி போன்ற கொலைகார ஆயுதங்களை ஏந்திக் கொண்டு ஊர்வலமாகப் புறப்படுகின்றனர். அந்த ஊர்வலங்கள் அனைத்தும் திட்டமிட்டே இசுலாமியர்கள் திரட்சியாக வசிக்கக் கூடிய பகுதிகளுக்குள் செல்கிறது. அங்குள்ள மசூதிகளுக்கு முன்பாக ஒன்றுகூடி நின்றுகொண்டு, ஒலிபெருக்கியில் இசுலாமிய மக்களை வசைபாடுகிறார்கள், வன்முறையைத் தூண்டும் முழக்கங்களை எழுப்புகிறார்கள். இதன் உச்சத்தில், அவர்களே ஏற்பாடு செய்த ‘இந்துவிரோதிகள்’ ஆர்ப்பாட்டங்களின் மீது கற்களை வீசினார்கள். அதன்பின் இசுலாமியர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் தொடங்கப்பட்டது.
கலவரங்களை அரங்கேற்றுவதற்காக காவி கும்பல் மேற்கொள்ளும் வழமையான வழிமுறையே இது. இவை நமக்கு இரத யாத்திரைகளையும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களையும் நினைவுபடுத்தலாம். ஆனால், இதுவரை எந்த இராம நவமியிலும் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் கலவரங்கள் வெடித்ததாக வரலாறு இல்லை. இது புதிய போக்கு.
000
கலவரங்களை அரங்கேற்றும் முறையில் புதிய வேறுபாடுகள் இல்லையென்றாலும் இந்துப் புத்தாண்டு, இராம நவமி, அனுமன் ஜெயந்தி ஆகிய நாட்களில் தொடர்ச்சியாக நடைபெற்ற காவி வெறியாட்டங்கள் ஆர்.எஸ்.எஸ்-இன் பாசிச பயங்கரவாத நடவடிக்கைகளில் இதுவரை காணாத பண்புநிலை மாற்றமாக உள்ளது.
காவி பாசிஸ்டுகள் காலூன்றியுள்ள மாநிலங்களில் அடிக்கடி சிறுபான்மை மக்களுக்கு எதிராக, பல சிறிய அளவிலான கலவரங்கள் நடத்தப்படுகின்றன. இதைத்தவிர, விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள், இரதயாத்திரைகள் போன்றவற்றின் மூலம் நாடெங்கும் பரவலாக கலவரங்களை – பாசிசப் படுகொலைகளை அரங்கேற்றுவது அவ்வப்போது அரிதாகவே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
ஆனால் இனி சிறுபான்மை இசுலாமியர்களுக்கு எதிரான பாசிச வெறியாட்டங்களும் படுகொலைகளும் தொடர் நிகழ்வுகளாகும் போக்கு தொடங்கிவைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு இந்துப் பண்டிகைகளையும் அதற்கான முகாந்திரங்களாகப் பயன்படுத்தப் போகின்றது காவி கும்பல்.
காவி பயங்கரவாதிகளின் பண்பாட்டுத் திணிப்பு
இராம நவமி அன்று டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருக்கும் காவேரி விடுதியில், “இறைச்சி சமைக்கக் கூடாது” எனக் கூறி ஏ.பி.வி.பி. குண்டர்கள் தகராறு செய்துள்ளனர். இறைச்சி எடுத்து வந்த கடைக்காரரை அடித்து உதைத்தது மட்டுமின்றி, விடுதிச் செயலாளரையும் அசைவ உணவு சமைக்கக் கூடாது என மிரட்டியுள்ளது ஏ.பி.வி.பி. கும்பல்.
இரவு 7:30 மணியளவில், அசைவ உணவு சாப்பிட்டதாகக் கூறி விடுதி மாணவர்களைச் சூழ்ந்துகொண்டு தாக்கியுள்ளது. இத்தாக்குதலில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர்.
ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில், சில கற்களை அடுக்கி இராமர் கோயிலை உருவாக்கியுள்ளது ஏ.பி.வி.பி. அதன் மேல் காவிக் கொடியை ஏற்றி, இராமன் மற்றும் ஹனுமன் படங்களை வைத்து பூஜை நடத்தியுள்ளார்கள். பல்கலைக்கழக வளாகத்தின் குருபக்ஷ் சிங் மைதானத்தில் ஏ.பி.வி.பி. ஏற்பாடு செய்த இராம நவமி பூஜையில் அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் கலந்து கொண்டுள்ளார்.
ஏ.பி.வி.பி. குண்டர்களால் தாக்கப்பட ஜே.என்.யூ. பல்கலைக்கழக மாணவர்கள்.
இவ்விரண்டு நிகழ்ச்சிகளிலிருந்து கல்வி நிலையங்கள் காவி பயங்கரவாதிகளின் கூடாரமாகிவரும் அபாயத்தை புரிந்துகொள்ள முடிகிறது. மேலும் இராம நவமியன்று இறைச்சி சாப்பிடக்கூடாது என்று காவிகள் தாக்குதல் நடத்தியது பெரும்பான்மை மக்களின் உணவு உரிமை மீதான தாக்குதலாகவே அமைந்துள்ளது. இந்துக்கள் அல்லாதவர்களை விட்டுவிடலாம், இந்துக்களில் பெரும்பான்மையினரே இராம நவமியில் இறைச்சியைத் தவிர்க்கிறார்களா என்றால் இல்லை.
அவ்வாறிருக்க, டெல்லியின் கிழக்கு மற்றும் தெற்கு மாவட்டங்கள், உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத், கர்நாடகாவில் பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் இராம நவமிக்கு இறைச்சி விற்கத் தடை விதித்துள்ளார்கள் காவி பாசிஸ்டுகள்.
நாம் எதை உண்ண வேண்டும், உடுக்க வேண்டும், பேச வேண்டும், விரும்ப வேண்டும் என்பதை ஒரு கும்பல் தீர்மானிப்பது தனியுரிமை மீதான கொடூரத் தாக்குதல். பார்ப்பனப் பண்பாட்டை ‘இந்துப் பண்பாடு’ என்ற பெயரில், பெரும்பான்மை மக்களின் மீது திணிப்பதைக் காலங்காலமாகவே காவிகள் திட்டமிட்டுச் செய்துவருகிறார்கள். தாக்கப்பட்ட ஜே.என்.யு. மாணவர்கள் இந்துக்களே; இந்துராஷ்டிரம் ஆகப் பெரும்பான்மை இந்துக்களுக்கே எதிரானது என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
ஜனநாயக மாயைகளை தரைமட்டமாக்கிய புல்டோசர்
பண்டிகைகளையொட்டி நடைபெற்ற தொடர் கலவரங்களில் காவி குண்டர்கள் மட்டும் இசுலாமிய மக்கள் மீது வெறியாட்டங்களை நிகழ்த்தவில்லை. அரசு நிர்வாகமும் தன் பங்கிற்கு ‘கரசேவை’ செய்துள்ளது.
இராம நவமி கலவரம் நடைபெற்ற மறுநாளே (ஏப்ரல் 11) அதிகாலை 3 மணி அளவில், கார்கோன் பகுதியைச் சேர்ந்த இசுலாமியர்களின் வீடுகள் மற்றும் கடைகளை இடிக்க ‘ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை’ என்று கூறி, புல்டோசர் உடன் வந்திறங்கியது உள்ளூர் நிர்வாகம். 50-க்கும் மேற்பட்ட இசுலாமியர்களின் வீடுகள், கடைகள் இடித்துத் தள்ளப்பட்டன.
முதலாவதாக, அங்கிருந்த பிலால் மசூதியின் வாயிலை அவர்கள் உடைக்க ஆரம்பித்தனர். அப்போது அந்த மசூதிக்கு அருகில் வசித்து வந்த மூதாட்டி அவர்களைத் தடுக்க முற்பட்டபோது, வயதானவர் என்றும் பாராமல் கடுமையாக தாக்கினார்கள் காக்கி குண்டர்கள் (போலீசு).
“எங்களது பொருட்களையாவது எடுத்துக் கொள்கிறோம், குறைந்தபட்சம் குரானையாவது வீட்டில் இருந்து எடுக்க விடுங்கள்” என கெஞ்சிய இசுலாமியர்களுக்கு சிறிதும் செவிமடுக்கவில்லை.
உள்துறை அமைச்சர் நரோத் மிஸ்ரா “எங்கிருந்து கற்கள் வீசப்பட்டதோ, அந்த வீடுகள் கற்குவியலாக மாற்றப்படும்” என்று வெளிப்படையாக வெறுப்பு நஞ்சைக் கக்கினார். ஆனால், கார்கோன் மாவட்ட நிர்வாகமோ இது சட்டப்படி நடக்கிற ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைதான்; கலவரத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை என்று கூறியது. இடிக்கப்பட்ட சில வீடுகள் மோடி அரசின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டவை. இதிலிருந்தே ‘ஆக்கிரமிப்பு’ என்பது வெறும் சாக்கு – பொய் என்பதைத் தெளிவாகப் புரிந்துக் கொள்ள முடியும்.
ம.பி.யைத் தொடர்ந்து குஜராத்தின் ஆனந்த் மாவட்டம் கம்பாத் நகரிலும் இசுலாமியர்களின் கடைகள், வீடுகள் இடிக்கப்பட்டன. ம.பி. ஆட்சியர் சொன்னதைப் போலவே ஆனந்த் மாவட்ட ஆட்சியரும் இது ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைதான் என்று சாதித்தார்.
டெல்லி பா.ஜ.க. தலைவர் ஆதேஷ் குப்தா, ஜகாங்கீர்புரியில் உள்ள ‘கலவரக்காரர்களின்’ கட்டுமானங்களைக் கண்டறிந்து அவற்றை இடித்துத் தள்ளுமாறு வடக்கு டெல்லி முனிசிபலுக்கு கடிதம் எழுதினார். அதைத்தொடர்ந்து ஏப்ரல் 20-ஆம் தேதி அன்று காலை எந்தவித முன்னறிவிப்புமின்றி, அப்பகுதி இசுலாமியர்களின் வீடுகள் மற்றும் கடைகள் புல்டோசர்களால் இடிக்கப்பட்டன.
வீடுகளை இடித்துக் கொண்டிருக்கும்போதே வழக்கறிஞர் துஷ்யந்த் தவே உச்சநீதிமன்றத்தில் அவசரமாக இப்பிரச்சினைகளை முன்வைத்து தடை ஆணை வாங்கினார். அதைச் சுட்டிக்காட்டி, இடிப்பதை நிறுத்தச்சொன்னபோது ‘எங்களுக்கு அறிவிப்பு வரவில்லை’ எனக் கூறி இரண்டு மணி நேரத்திற்கு மேலாக 20-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகளை இடித்துத் தரைமட்டமாக்கியது முனிசிபல். காவி குண்டர்களின் தாக்குதல் ஒருபுறம் பாசிசமயமாகும் அரசு நிர்வாகத்தின் தாக்குதல் மறுபுறம். சிறுபான்மை மக்கள் இரட்டைத் தாக்குதலை எதிர்கொள்கிறார்கள்.
ஆக்கிரமிப்பு அகற்றம் என்பது கடைந்தெடுத்த பொய். இசுலாமியர்களின் வீடுகளைக் குறிவைத்து இடிக்க வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர்கள் பேசியது மட்டுமில்லை, சமூக வலைதளங்கள் முழுக்கவும் “கல்லெறிந்தால், வீடுகளுக்கு புல்டோசர் வரும்” என்ற வாசகத்தை சங்கிகளும் பகிர்ந்துகொண்டிருந்தார்கள்.
பா.ஜ.க. சொல்வதுபடி கலவரக்காரர்களாகவே இருந்தாலும் அவர்களின் வீடுகளையே தரைமட்டாக்கி, அகதிகளாகத் துரத்திவிடுங்கள் என்றா சட்டம் சொல்கிறது. இவை செரித்துக் கொள்ளவே முடியாத ஜனநாயக விரோத செயல், மனித உரிமை மீறலாகும். சொல்லிக்கொள்ளப்படும் ‘ஜனநாயக நாட்டின்’ உண்மை முகம் இது.
உத்தரப் பிரதேசத்தில் குடியுரிமைச் சட்டத்திற்கெதிராக போராடியவர்களின் வீடுகளை இடித்து இப்பயங்கரவாத நடவடிக்கையைத் தொடங்கிவைத்தது யோகி ஆதித்யநாத். அந்த மாடலை தற்போது ம.பி. பா.ஜ.க. முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும் கையிலெடுத்துள்ளார். அதனால் சங்கப் பரவாரத்தினர் யோகியை ‘புல்டோசர் பாபா’ எனவும் சிவராஜ் சிங் சவுகானை ‘புல்டோசர் மாமா’ என்றும் அழைக்கிறார்கள்.
புல்டோசர் என்பதே சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் பாசிச பயங்கரவாதிகளின் சின்னமாகிவிட்டது. புல்டோசர்கள் இடித்துத் தள்ளியது கட்டிடங்களை மட்டுமில்லை, ஜனநாயக மாயையினையும்தான்.
கட்சிகளின் இரட்டைநிலை பாசிஸ்டுகளுக்கு வழங்கும் ஒத்துழைப்பே
நாடெங்கும் பாசிசப் போக்கு மேலெழும்பிவரும் நிலையில், பா.ஜ.க.வை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் கட்சிகளும் அதன் இந்துத்துவா கொள்கையை மென்மையாகக் கடைப்பிடிக்கும் போக்கை நாம் தொடர்ச்சியாக விமர்சித்துவருகிறோம். இராமநவமி கொண்டாட்டங்களிலும் பல கட்சிகளிடம் அது தீவிரமாக வெளிப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் கார்கோன் நகரில், இசுலாமிய மக்களின் வீடுகளை புல்டோசரால் இடித்துத் த்ரைமட்டமாக்கும் காட்சி.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசும் பா.ஜ.க.வும் போட்டிப் போட்டுக்கொண்டு இராமநவமி கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வழமையானதாகும். இந்த ஆண்டும் அது தொடர்ந்துள்ளது. மே.வங்கம் முழுவதும் விசுவ இந்து பரிஷத், பஜ்ரங் தள், துர்கா வாஹினி ஆகிய அமைப்பு ஏற்பாடு செய்து நடத்திய பேரணிகளில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்ட கூத்தும் நடந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் அரசின் சார்பில் இராம நவமி விழா ‘மிகச் சிறப்பாக’ கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. ‘இராமர் வனவாச பாதை சுற்றுலாத் திட்டம்’ என்ற பெயரில் அரசு சார்பில் சிறப்புத் திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இராமன் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றபோது வசித்ததாகச் சொல்லப்படும் சதீஷ்கர் மாநிலத்திலுள்ள ஒன்பது இடங்களைப் புதுப்பித்து, அப்‘புனித’ யாத்திரைத் தளங்களை இணைப்பதே இராமர் வனவாச பாதை சுற்றுலாத் திட்டத்தின் நோக்கமாம்.
இத்திட்டத்தில் ஒரு அங்கமாக உள்ள ஷிவ்ரி நாராயணன் கோயிலை இராம நவமியன்று திறந்துவைத்துப் பேசிய பூபேஷ் பாகல், ஷிவ்ரி நாராயணன் கோயிலை அயோத்தியைப் போலவே மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் ஆர்.எஸ்.எஸ்.ஐ விமர்சித்துப் பேசுவது வரவேற்கத்தக்க விசயம் என நம்மில் சிலர் சிலாகித்துவருகின்றனர். ஆனால் அவர் ஏன் சதீஷ்கர் முதல்வரைக் கண்டிக்கவில்லை என்பது நாம் எழுப்பும் கேள்வி.
இக்கலவரங்களுக்குப் பிறகு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., சி.பி.ஐ., சி.பி.எம் உட்பட 13 எதிர்க்கட்சித் தலைவர்கள், மத வன்முறைகளை மோடி அமைதியாக வேடிக்கைப் பார்ப்பது குறித்துக் கண்டித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அறிக்கை வெளியிட்டார்களே தவிர இசுலாமிய மக்கள் மீது கலவரங்கள் அரங்கேற்றப்படும்போதும் வீடுகள் இடிக்கும்போதும் எந்தத் தலைவரையும் களத்தில் பார்க்க முடியவில்லை.
சி.பி.எம். கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரான தோழர் பிருந்தா காரத், அனைத்திந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளரான ஹன்னன் மொல்லா ஆகியோரே ஜஹாங்கீர் புரி வீடு இடிப்பின்போது களத்திற்கு வந்து எதிர்த்து நின்றனர். அதுதான் உண்மையான எதிர்ப்பு. மற்ற கட்சிகளின் மென்மையான இந்துத்துவமும் கலவரத்திற்குப் பின்பு பேச்சளவிலான எதிர்ப்பும் பாசிஸ்டுகளுக்கு வழங்கும் மறைமுக ஒத்துழைப்பே.
இசுலாமிய இனப்படுகொலைகளை நோக்கி
இந்துப் பண்டிகைகளை ஒட்டி நடைபெற்ற கலவரங்களை, பா.ஜ.க. வரவிருக்கும் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காகவே நடத்திவருகிறது என்று எதிர்க்கட்சிகளும் ஜனநாயக சக்திகளில் பெரும்பான்மையினரும் கூறிவருகின்றனர். ஒவ்வொரு முறை மதவெறிக் கலவரங்கள் நடைபெறும்போதும் இதையே மீண்டும் மீண்டும் கூறிவருகின்றனர்.
நாட்டு மக்களின் பழக்க வழக்கங்கள், பண்பாடு, சிந்தனைப் போக்கு முதலியவற்றை எல்லாம் இந்துராஷ்டிரத்திற்கு ஏற்றவாறு ஒவ்வொரு கலவரங்களின் போது உருக்கி வார்த்துக் கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சமூகத்தைச் சிதைத்து உருமாற்றம் செய்துகொண்டிருக்கும் நிகழ்வுப்போக்கை தேர்தல் வரம்போடு சுருக்கிப் பார்ப்பது மிக மோசமானதாகும். மற்ற ஓட்டுக் கட்சிகளுக்கு வேண்டுமானால் தேர்தல் வெற்றிகளே அனைத்துமாக இருக்கலாம். ஆனால், இந்துராஷ்டிரக் கனவுடைய ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வுக்கு தேர்தல் மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்ததும் மூலமுதலானதும் அல்ல.
யூதர்களை இனப்படுகொலை செய்வதற்கு முதல்படிநிலையில் ஹிட்லர் ‘கெட்டோமயமாக்கல்’ (ghettoisation) என்ற முறையைக் கையாண்டான். யூதர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்து, அவர்களின் குடியிருப்புகளை அழித்து, பொருளாதார ரீதியில் ஒடுக்கி ‘கெட்டோ’களில் (குறிப்பிட்ட இன/சமய மக்கள் நெருக்கமாக தனித்து வாழும் சேரிப்பகுதி) வாழும்படி தள்ளினான். இதன்மூலம் அவர்களை பொது சமூகத்திலிருந்துப் பிரித்து தனிமைப்படுத்தினான்.
படிக்க :
ராம நவமி வன்முறை : பாசிசம் தனது நடவடிக்கைகளை துரிதப்படுத்துகிறது !
ராம நவமி பேரணி : காவிக் கும்பலுடன் கைகோர்த்த திரிணாமுல் காங்கிரஸ் !
இங்கு வாழ்ந்த யூதர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டனர். உணவு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எவையும் இல்லாத கெட்டோக்களில் வயதானவர்களும் குழந்தைகளும் நோய் வாய்ப்பட்டு மடிந்தார்கள்.
கெட்டோமயமாக்கலுக்கு ஒத்த போக்கையே காவி பாசிஸ்டுகள் நமது நாட்டில் உருவாக்கிவருகிறார்கள். ஹிஜாப் தடை, ஹலால் ஜிகாத், திருவிழாக்களில் முசுலீம்கள் வியாபாரம் செய்யத்தடை, மசூதிகளில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்த தடை என அண்மைக்காலமாக காவிகள் முன்தள்ளிவரும் நிகழ்ச்சிநிரல்கள் அதை நோக்கியே செல்கின்றன. ம.பி.யில் புல்டோசர்களைக் கொண்டு வீடுகளைத் தரைமட்டமாக்கிய பிறகு, நான்கு இசுலாமியக் குடும்பங்கள் தங்குவதற்கு இடமில்லாமல் மாட்டுக்கொட்டையில் குடியேறினார்கள் என்பதை இதனோடு இணைத்துப் பார்க்க வேண்டும். சில இசுலாமியக் குடும்பங்களுக்கு நடந்தவை நாளை பெரும்பகுதி இசுலாமியர்களுக்கு நடத்தப்படலாம்.
இவையெல்லாம் பெரும்பான்மை இந்துக்களின் மத நம்பிக்கையின் பெயரால் நடத்தப்படுகிறது. சகோதரர்களைப் போல ஒன்றாக வாழ்ந்த இசுலாமியர்களைக் காவிக் கும்பல் இதுபோன்ற கொடூர நிலைக்கு ஆளாக்குவதை அமைதியாக சகித்துக் கொண்டிருத்தல் தகாது. இசுலாமிய மக்களின் இரத்தவாடைக்கு மத்தியில், இந்துக்கள் தங்கள் மதப் பண்டிகைகளை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவது மனிதத்தன்மையும் அல்ல.
மத நம்பிக்கைக் கொண்ட பெரும்பான்மை இந்துக்களின் மௌனமே மதவெறி கும்பலுக்கு ஊக்கமருந்தாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, இசுலாமிய மக்களுக்கு ஆதரவாகவும் காவி வெறியர்களுக்கு எதிராகவும் களத்தில் இறங்க வேண்டிய தருணம் இது. அந்நோக்கத்தில், மக்களை அணிதிரட்டுவதும் போராட்டங்களைக் கட்டியமைப்பதும் புரட்சிகர – ஜனநாயக சக்திகளின் பொறுப்பு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க