முகமது நபியை இழிவுப்படுத்தி பேசிய பா.ஜ.க நூபுர் ஷர்மாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மக்கள் நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களை மையமாக வைத்து இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலை மூர்க்கமாக கட்டவிழ்த்துவிட்டுள்ளது இந்துத்துவ கும்பலும், காவி போலிசும்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக உ.பி சஹாரன்பூர் மற்றும் கான்பூரில் தொழுகை முடித்து இஸ்லாமிய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் பல இடங்களில் நடைபெற்ற போராட்டத்தை வன்முறைகளமாக மாற்றியதாக 64 அப்பாவி முஸ்லீம் மக்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது காவி போலீசு. மேலும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மீது பல வழக்குகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. ‘வன்முறை கட்டுக்குள் கொண்டுவர’ போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
இப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்களின் புகைப்படங்களை ‘கலவரக்காரர்கள்’ என பேனர் அடித்து மாநிலத்தின் பல இடங்களில் ஒட்டியுள்ளதோடு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரித்திருந்தது உ.பி அரசு. இதனை தற்போது அமல்படுத்த தொடங்கிவிட்டது.
படிக்க :
♦ ராம நவமி வன்முறை : பாசிசம் தனது நடவடிக்கைகளை துரிதப்படுத்துகிறது !
♦ டெல்லி ஜஹாங்கீர்புரி முஸ்லிம் மக்களின் வீடுகள் இடிப்பு : இந்துராஷ்டிரத்திற்கான பாதை செப்பனிடப்படுகிறது !
‘போராட்டக் கலவரத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள்’ என காவி போலீசால் அடையாளம் காட்டப்படும் நபர்கள் மட்டுமல்லாது போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் வீடுகளையும் குறிவைத்து இடித்து வருகிறது யோகி அரசு. முஸ்லீம்களின் வீடுகளை புல்டோசரைக் கொண்டு இடித்து தள்ளும் வீடியோ காட்சியினை உ.பி போலீசு வக்கீரமாக வெளியிட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு, வழக்கு, சிறை, சொத்து பறிமுதல் என போராடும் இஸ்லாமியர்களை காவி போலீசு ஒடுக்குவது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் இந்துத்துவ காவி குண்டர்படை முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டத்தை மூர்க்கமாக கட்டவீழ்த்துவிட்டுள்ளது.
போராட்டம் நடந்த அன்றிரவு, கடைக்கு சென்று திரும்பிய வழியில், ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட்டவாறு வந்த 30-க்கும் மேற்பட்ட காவி குண்டர் படையினரால், “போராட்டத்தில் ஏன் கலந்துகொண்டீர்கள்” என கேட்டு இரண்டு முஸ்லீம் இளைஞர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர்.
‘அன்று நடைபெற்ற போராட்டத்தில் தாங்கள் கலந்து கொள்ளவில்லை’ என்று அந்த முஸ்லீம் இளைஞர்கள் பலமுறை கூறியும் கேட்காமல் சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்துமதவெறி ஏற்றப்பட்ட அக்குண்டர்களுக்கு, ‘போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள்’ ‘கலந்துகொள்ளாதவர்கள்’ என்பது தேவையே இல்லையே! முஸ்லீம் என்ற ஒன்றே போதுமே!
காவிகளின் தாக்குதலுக்குள்ளான ஜீஷான் (24), “நாங்கள் கடைக்கு சென்று திரும்பிய வழியில் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷத்தை எழுப்பி வந்த கும்பல், எங்களை பார்த்ததும் ‘அவர்களை பிடியுங்கள்.. விரட்டி பிடியுங்கள்’ என கூச்சலிட்டு கொண்டு துரத்த ஆரம்பித்தார்கள்” என்கிறார் பயம் நீங்கா குரலில்.
“அவர்கள் 30-க்கும் அதிகமாக இருந்தனர். ஒவ்வொருவரின் கையிலும் கூர்மையான ஆயுதங்களை வைத்திருந்தனர். எங்களை பார்த்ததும் சூழ்ந்துக் கொண்ட அவர்கள், எங்கள் பெயர்களை கேட்டு அடிக்க ஆரம்பித்தார்கள். நாங்கள் வலி தாங்காமல் சுருண்டு விழும் வரை சரமாரியாக தாக்கினார்கள்” என்கிறார்.
காவி குண்டர்களால் தாக்கப்பட்டபோது தனது இருசக்கர வாகனம் போலீசு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கும் ஜீஷான், “எங்களை தாக்கிய கும்பல் மீது புகார் அளிக்க சென்றபோது போலீசார் புகாரை எடுத்துக் கொள்ளவில்லை. மீண்டும் போலீசு நிலையத்திற்கு சென்று புகார் அளித்து எங்களது இருசக்கர வாகனத்தை பெற்று வரலாம் என்று சென்றபோது, நாங்கள் செல்லும் வழியில் பஞ்ரங் தள் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தது. அதனால் புகார் அளிக்கவோ எங்களது வாகனத்தை மீட்கவோ செல்லவில்லை” என்கிறார்.
படிக்க :
♦ டெல்லி ஜஹாங்கீர்புரி : முஸ்லீம் மக்களின் வீடுகள் காவி அரசால் இடிப்பு | கேலிச்சித்திரங்கள்
♦ ம.பி : முஸ்லீம் என்று சந்தேகித்து மாற்றுத்திறனாளி முதியவரை அடித்தே கொன்ற பாஜக குண்டர்!
எதிர்ப்பாராத நேரத்தில் கும்பல் தாக்குதலுக்கு உள்ளான இந்த முஸ்லீம் இளைஞர்களை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தாக்கி, தனது சொந்த நாட்டிலேயே இனி சுதந்திரமாக நடமாட முடியாது என்ற அச்சத்திலேயே வைத்திருப்பதுதான் காவி கும்பலின் எதிர்ப்பார்ப்பு.
இவர்கள் இருவர் மட்டுமல்ல இந்துத்துவ அமைப்புகளால் நடத்தப்பட்ட பல வன்முறைகளாலும் இந்து பண்டிகை என்ற பெயரில் நடத்தப்பட்ட கலவரங்களாலும் பாதிப்புக்குள்ளான இஸ்லாமியர்கள் நிலையும் இதுவே.
தற்போது அடுத்தக்கட்டமாக, இஸ்லாமியர்களின் இறைத்தூதராக கருதும் முகமது நபி குறித்து திட்டமிட்டு இழிவுப்படுத்தி, முஸ்லீம்களை ‘அவர்களுக்காக போராடுபவர்களாக’ தனிமைப்படுத்தி, போலீசை கொண்டும் காவி குண்டர்களைக் கொண்டும் ஒடுக்கி அச்சுறுத்தி வருவதென்பது இந்துத்துவத்தின் அஜெண்டா. அதுதான் தற்போது அமலாகிக் கொண்டிருக்கிறது.

வேம்பு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க