ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கண்னையா லால் என்பவர் இரு முஸ்லீம் இளைஞர்களால் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு இருப்பது, பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் இச்சம்பவத்தை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு, நாடு முழுவதும் முஸ்லீம் மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வை தூண்ட உதவியாகியுள்ளது.
கண்னையா லால் உதய்பூர் நகரில் உள்ள மால்தாஸ் பகுதியில் தையல் கடை நடத்தி வந்துள்ளார். சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக முஸ்லீம் மக்களின் இறைதூதரான நபிகள் நாயகத்தை இழிவாக நுபூர் சர்மாவின் கருத்துக்கு ஆதரவாக தனது கருத்துகளை பதிவிட்டு வந்துள்ளார்.
இதனால் அவர்மீது கோபமடைந்த கௌஸ் முகமது மற்றும் ரியாஸ் அக்தாரி ஆகிய இருவரும் கண்னையா லாலை தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர். அதனை வீடியோவாக பதிவுசெய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அவ்வீடியோவில் பிரதமர் மோடிக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான செய்தி பரவியவுடன் அப்பகுதி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. 24 மணி நேரம் இண்டர்நெட் தடை செய்யப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களுக்கு மேற்பட்ட பகுதிகளில் ஒரு மாதத்திற்கு 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
படிக்க :
♦ ராம நவமி வன்முறை : பாசிசம் தனது நடவடிக்கைகளை துரிதப்படுத்துகிறது !
♦ உ.பி : முஸ்லீம் மக்களை சித்திரவதை செய்யும் காவி போலீசு !
குற்றவாளிகளான இருவரும் சில மணி நேரங்களிலேயே போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள்மீது ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உடனே இவ்வழக்கானது தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது.
***
இக்கொலைச் சம்பவத்தை தொடர்ந்து முஸ்லீம் மக்களுக்கு எதிரான அவதூறு பிரச்சாரங்கள் தொடர்ச்சியாக ஆளும் வர்க்க ஊடகங்களாலும், பா.ஜ.க-வின் சமூக வலைத்தள குழுக்களாலும் பரப்பப்பட்டு, முஸ்லீம் மக்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற வெறுப்புணர்வு மக்களின் மனதில் ஆழ பதியவைக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களில் ஒருவர் கடந்த 2014-ம் ஆண்டு பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு சென்று வந்ததாகவும், அவருக்கு பாகிஸ்தானை சேர்ந்த “தாவட் இ இஸ்லாம்” என்ற அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும் ராஜஸ்தான் மாநில போலீசுத்துறை தலைவர் தெரிவத்துள்ளார்.
கௌஸ் முகமதுவை பொறுத்தவரை, நேபாளத்திற்கு இருமுறை சென்று வந்ததாகவும் சில பயங்கரவாத இயக்கங்களுடன், குறிப்பாக துபாயில் சிலருடன் தொடர்பில் இருந்ததாக செய்திகள் ஆளும் வர்க்க ஊடகங்களால் வெளியிடப்படுகின்றன.
ரியாஸ் அக்தாரியை பொறுத்தவரை, அவருடைய போனில் பாகிஸ்தானை சேர்ந்த 10 பேரின் தொலைபேசி எண்கள் இருந்ததாகவும், இவர்கள் இருவரும் அடிக்கடி ஐ.எஸ்.ஐ.எஸ் வீடியோக்களை பார்த்ததாகவும், அந்த உணர்வினால்தான் இப்படுகொலையை நிகழ்த்தியதாகவும் செய்திகள் வெளியிடப்படுகின்றன.
பாகிஸ்தான் என்றாலே தீவிரவாத நாடா? அல்லது பாகிஸ்தான் மக்கள் என்றாலே தீவிரவாதிகளா? யாரோ ஒருவர் நேபாளம் மற்றும் பாகிஸ்தானுக்கு சுற்றுலாவுக்கோ அல்லது வேற சில வேலைகளுக்கோ சென்று வந்தால்; அல்லது பாகிஸ்தானில் உள்ள உறவினர்கள் – இணையதள நண்பர்களுடன் தொலைபேசி மூலம் பேசிக்கொண்டு இருந்தால் இந்த அரசானது அவர்களை தீவிரவாதியாக தான் கருதுமா?
சான்றாக, சென்னையில் ஒருவர் ஒரு படுகொலையை செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் அடிக்கடி அமெரிக்காவுக்கு சென்று வந்துள்ளார் மற்றும் அங்குள்ள நண்பர்களுடன் தொலைபேசியில் அடிக்கடி உரையாடி உள்ளார் என்றால், இந்த அரசானது கொலையாளியை அமெரிக்க தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார் என்று கூறுமா? கண்டிப்பாக கூறாது. அதில் மோடி அரசுக்கு எந்த ஆதாயமும் கிடையாது.
மேலும், இங்கே ஒரு கேள்வி எழுகிறது. கொலை செய்த அடுத்த நாளே, கொலையாளிகளுக்கு உள்ள வெளிநாட்டு தொடர்பை எல்லாம் கண்டுபிடித்து விட்டார்களா? அவ்வளவு திறமை வாய்ந்ததா நம்முடைய அரசு. இந்த திறமை ஊழல் செய்த கார்ப்பரேட் முதலாளிகளை பிடிப்பதில் வெளிப்பட மாட்டிகிறதே? வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்பதிலும் வெளிப்பட மாட்டிக்கிறதே?
குற்றவாளிகள் கொலை செய்தது உண்மை. அதை யாரும் மறுக்கவில்லை. ஆனால், அவர்கள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்தார்கள் மற்றும் பாகிஸ்தான், நேபாளம் சென்று வந்தார்கள் என்பது எல்லாம், இந்த அரசுக் கட்டமைப்பு மற்றும் ஆளும் வர்க்க ஊடகங்கள் அனைத்தும் ஒன்றுசேர்ந்துக் கொண்டு முஸ்லீம் மக்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற பிம்பத்தை கட்டியமைக்கும் முயற்சியே.
#justiceforkannaiyalal, #hindusunderattackinindia, #hindulivesmatter மற்றும் #islamicterrorismindia என்ற பெயரில் டிவிட்டரில் பா.ஜ.க-வின் சமூக வலைத்தள குழுக்கள், முஸ்லீம் திவிரவாதிகள், ஜிகாதிகள், முஸ்லீம் பொருட்களை புறக்கணிக்க வேண்டும், மகாபாரத மேற்கோள்களைகாட்டி முஸ்லீம்களுக்கு எதிரான போருக்கு நாம் தயாராக வேண்டும் என்பது போன்று முஸ்லீம் மக்களுக்கு எதிரான பிரச்சாரங்கள் மற்றும் இந்து மதவெறியை தூண்டும் பிரச்சாரங்களை செய்து இச்சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
கொலை செய்ததோ இருவர், ஆனால் குற்றவாளியாக காட்டப்படுவதோ ஒட்டுமொத்த முஸ்லீம் மக்களும். இதுதான் தற்போது நம் முன்னால் உள்ள பேரபாயம்.
***
முஸ்லீம் மக்களை தனிமைப்படுத்தி ஒடுக்க வேண்டுமென்றால் நாட்டு மக்கள் அனைவருக்கும் முஸ்லீம் மக்களுக்கு எதிரான மனநிலையை உருவாக்க வேண்டும். அதற்கு சங்கிகள் மட்டும் முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரம் செய்தால் போதாது. மேற்கண்ட கொலை சம்பவங்கள் முஸ்லீம் சிலரால் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் சங்கிகளால் அதைக்காட்டி ஒட்டுமொத்த இந்து மக்களையும் முஸ்லீம்களுக்கு எதிராக திருப்ப முடியும்.
ஆக, முஸ்லீம் மக்களின் வீடுகளை புல்டோசரை கொண்டு இடிப்பது, சொத்துகளை பறிமுதல் செய்வது, தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி கைது செய்வது மற்றும் அவர்கள் புனிதமாக கருதும் விசயங்களைப் பற்றி இழிவாக பேசுவது, மத நம்பிக்கைகளில் தலையிடுவது எல்லாம் திட்டமிட்டு சங்கிகளால் மேற்கொள்ளப்படுவதுதான். இவையெல்லாம் முஸ்லீம் மக்கள் கோவப்பட்டு தனிநபர் செயலில் இறங்க வேண்டும் என்பதற்காகவே.
படிக்க :
♦ மதமாற்றம் – கலவரம் – ஆர்.எஸ்.எஸ் : ஒரு இழி வரலாறு || சிந்தன் இ.பா
♦ தமிழ்நாட்டில் மதக் கலவரம் செய்ய முயலும் அண்ணாமலையை கைது செய்!
நாம் எதைப்பற்றி சிந்திக்க வேண்டும், எதைப்பற்றி பேச வேண்டும் என்பதை எல்லாம் சங்கிகள் தீர்மானித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நிகழ்ச்சிநிரலுக்கு பலியாகப் போகிறோமா? என்பதே நம் முன்னால் உள்ள கேள்வி.
சங்கிகளின் வெறுப்பு பிரச்சாரம் மற்றும் செயல்களுக்கு பலியாகி தனிநபர் செயலில் இறங்கப் போகிறோமா அல்லது பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் கும்பல்களை வீழ்த்த வேண்டுமென்றால் தனிநபர் சாகச செயல்பாடுகளால் முடியாது, பொருளாதார ரீதியாக சுரண்டலுக்கு உள்ளாகும் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களும் சாதி, இனம், மதம் கடந்து வர்க்க அடிப்படையில் ஒன்றுபட்டால்தான் சாத்தியம் என்பதை உணர்ந்து அதை நோக்கி நம்முடைய செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள போகிறோமா என்பது நம் கையில்தான் உள்ளது.
இலங்கையில் ராஜபக்சே கும்பலை, உழைக்கும் மக்கள் இனம் கடந்து வர்க்க அடிப்படையில் ஒன்றுதிரண்டு வீழ்த்தியதே அதற்கு சான்று.
இலங்கையைப் போன்று உழைக்கும் மக்கள் பேரெழுச்சியை இந்தியாவில் உருவாக்குவதே, பாசிச கும்பலை வீழ்த்துவதற்கான தொடக்கமாக அமையும். அதை நோக்கி நம் செயல்பாடுகளை அமைத்துக் கொள்வோமாக.
பிரவீன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க