ந்தியாவில் பணத்தை வைத்து விளையாடும் எண்ணற்ற ஆன்லைன் சூதாட்ட செயலிகள் பெருகிவிட்டன. இந்த செயலிகளால் கடனில் சிக்கி தற்கொலை முயற்சிகளை மேற்கொள்பவரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

“நான் மோசமான தவறு செய்துவிட்டேன், என் பணம் அனைத்தையும் இழந்துவிட்டேன்,” என ஆன்லைன் சூதாட்டத்தில் தனது பணத்தை இழந்த மகேஷ் என்பவரின் வார்த்தைகள் இவை.

இதை கூறும்போது அவரது முகபாவனை கவலையளிப்பதாக இருந்தது. மகேஷ் தோட்ட வேலை செய்து தான் சேமித்து வைத்திருந்த பணத்தை வைத்து விளையாடியதுடன், கடன் பெற்றும் விளையாடியுள்ளார். தற்போது பணம் அனைத்தையும் இழந்து, கடனை திரும்ப செலுத்த முடியாத நிலையில் உள்ளார்.

ஆரம்பத்தில் இவை பரவலாகவே உபயோகப்படுத்தப்பட்டன. ஆனால் தொற்றுநோய் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்த போது, வெற்றியாளர்களுக்கு நிறைய பணம் என இந்த சூதாட்டங்களைப் பற்றிய ஆயிரக்கணக்கான வஞ்சகத்தனமான குறுஞ்செய்திகள் மக்களுக்கு அனுப்பபட்டன. இதில் “வரவேற்பு தொகை ரூ. 2,000, லூடோ விளையாடுங்கள் பணத்தை வெல்லுங்கள், மேலும் இலவசமாகப் பதிவு செய்யுங்கள்” என்பதும் ஒன்றாகும். யூடியுபில் பிரபலமாக இருபவர்கள் அவர்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறார்கள் என்று பெருமை பேசி, இந்த செயலிகளை பெரிய அளவில் விளம்பரப்படுத்தினர். மேலும் இந்த சூதாட்டங்களின் மூலம் நிலையான தினசரி வருமானத்தை திரட்டுவதற்கான குறிப்புகளையும், தந்திரங்களையும் அவர்கள் பகிர்ந்தனர். எதிர்விளைவுகளை பற்றி சிறிதும் சிந்திக்காமல் செய்யப்படும் இத்தகைய கீழ்த்தரமான விளம்பரங்களுக்கு மகேஷ் போன்றவர்கள் எளிதில் இரையாகிவிடுகின்றனர்.


படிக்க : ஆன்லைன் சூதாட்டம் : கார்ப்பரேட்டுகளின் இலாபவெறிக்காக தொடரும் படுகொலைகள் ! என்ன செய்ய வேண்டும்?


வேலை நீக்கம் அதிகரித்து, ஊதிய குறைப்பு போன்றவை மிகவும் சாதாரணமாகிப்போன அந்த சமயத்தில், பலர் நிச்சயமற்ற வாழ்க்கையை எதிர்நோக்கியிருந்தனர். ஆனால் அவர்கள் தங்கள் வாழ்வை மீட்டு கட்டமைக்க தேவையான முயற்சிகளை செய்வதை விடுத்து, கைப்பேசியில் நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்தனர். மேலும் சூதாட்டங்களில் மூலம் தனது ஒவ்வொரு வெற்றிக்கும் பணத்தை பரிசாக பெறமுடியும் என எண்ணி, சிறிது பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியில் இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்யத் தொடங்கினர்.

“வரவேற்பு தொகையில் எனது அதிர்ஷ்டத்தை முயற்சி செய்ய சில ஆட்டங்கள் மட்டும் விளையாடலாம் என்று நினைத்தேன்,” என மகேஷ் கூறினார்.

ஆரம்பத்தில் மக்கள் தாங்கள் கட்டுப்பாட்டில் தான் இருப்பதாக நம்பி, வரவேற்பு தொகையில் மட்டும் விளையாடி விட்டு எவ்வித பாதிப்பும் இல்லாமல் தப்பித்து விடலாம் என எண்ணுகின்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இது அரிதாகவே நிகழ்கிறது. ஏனெனில் பெரும்பாலான செயலிகளில் வரவேற்பு தொகையை பெறுவதற்கு ஆரம்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியுள்ளது. இதற்காக நீங்கள் உங்கள் வங்கி கணக்கை இதனுடன் இணைக்கும் படி செய்துவிடுகின்றனர். எனவே செயலியில் உள்ள பணத்தை இழந்தவுடன், இழந்ததை மீட்க நாம் தன்னிச்சையாகவே வங்கி கணக்கில் உள்ள பணத்தை மீண்டும் அந்த செயலியில் கொட்ட இது வழிவகுக்கிறது. இதுவே இத்தகைய விளையாட்டுகளில் ஆரம்ப நிலையாகும். வரவேற்பு தொகையை தொடக்கத்திலேயே பயன்படுத்தும் நிலை இருந்தால் அதை மட்டும் வைத்து விளையாடிவிட்டு தம்மால் இதில் வெற்றி பெறமுடியாது என்பதை உணர்ந்தது வெளியேறிவிடுவர் என்பதை திட்டமிட்டே இந்த கன்னி வைக்கப்பட்டுள்ளது.

சூதாட கவர்ந்திழுக்கப்படும் பயனாளர்கள்

இந்த செயலிகள் தங்கள் சதித்திட்டங்களை இத்துடன் நிறுத்திக் கொள்வதில்லை, இதன் பின்னர் பயனாளர்களை சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் பற்றிய அறிவிப்புகளை இடைவிடாமல் அனுப்புவதன் மூலம் செயலியில் மேலும் அதிகப் பணத்தை கொட்ட பலவிதமான நுட்பங்களை இந்நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.

எச்சரிக்கையானவர்கள் இதில் உள்ள பொறிகளை விரைவாக உணர்ந்து அதிக பணத்தை இழக்கும் முன் வெளியேறிவிடுகின்றனர். இச்செயலிகளின் நோக்கங்களை கணிக்க தெரியாதவர்கள் மென்மேலும் அதிக பணத்தை இழக்கிறார்கள். இன்னும் சில ஏமாளிகளோ பணத்தை இழப்பதுடன், வாழ்க்கையையே இழந்ததாக எண்ணி தற்கொலை முடிவை நாடுகின்றனர். இது இந்த வகையான சூதாட்டங்களினால் ஏற்பட்ட கடன் தொல்லைகளின் காரணமான தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையில் இருந்து தெளிவாக தெரிகிறது.

இந்த ஆன்லைன் சூதாட்டங்களில் புழங்கும் பணம் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு (FICCI) மற்றும் எர்ன்ஸ்ட் &யங் (EY) ஆகியவற்றால் வெளியிடப்பட்ட மதிப்பீட்டின் படி, 2022-இல் பரிவர்த்தனை அடிப்படையிலான இவ்வகையான சூதாட்டங்களின் மூலம் ரூ.8,500 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இதில் ஈடுபடும் நிறுவனங்களில் ஒரு நிறுவனத்தின் மதிப்பு மட்டும் சுமார் ரூ.61,000 கோடியாகும். இதை இன்னும் தெளிவாக  கூற வேண்டுமானால், விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) இன் சந்தை மதிப்பை விட இது அதிகமாகும். மற்ற வணிகங்களுடன் ஒப்பிடும் போது இந்நிறுவனங்களின் முதலீடு மிக குறைவாக இருப்பதால், இதன் செலவுகள் பெருமளவில் விளம்பரத்திற்காக மட்டுமே செலவிடப்படுகின்றன. இதைத்தான் அனைத்து தளங்களிலும் அன்றாடம் காண்கிறோம்.

மேற்கண்ட விவரங்கள் நன்கு அறியப்பட்டவையாக இருந்தாலும், சூதாட்டங்களில் தொடர்புடையவர்களின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்களை எவரும் கணக்கில் கொள்வதில்லை. எங்கள்  மதிப்பீடுகளின் படி, சுமார் 10லட்சத்திற்கும் மேற்பட்டோர் இது போன்ற விளையாட்டுகளால் ‘மனச்சோர்வு, கவலை, தற்கொலை எண்ணம் மற்றும் தற்கொலை முயற்சிகள்’ உள்ளிட்ட ஆபத்தான பழக்கங்களின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றனர்.

நடத்தையில் ஏற்படும் மாற்றம்

மகேஷுக்கு அவரது விரக்தி கோபமாக மாறிவிட்டது. “இந்த ஏமாற்றுக்காரர்கள் எனது பணத்தை பறித்துக்கொண்டனர், அரசாங்கம் அவற்றைத் தடை செய்ய வேண்டும்,” என்று அவர் கூறுகிறார்.

இத்தகைய செயலிகள், சூதாட்டங்களின் பின்னணியில் என்னென்ன நாசகர வேலைகளை செய்கின்றன என்பது தெரியவில்லை. மேலும் அவை எவ்வளவு நேர்மையானவை என்பதைக் கண்டறிவது சாத்தியமற்றதாகவே உள்ளது. வாடிக்கையாளரின் ‘உடல்நலம் – நிதி’ ஆகியவற்றின் அபாயத்தை உள்ளடக்கிய வணிகங்களில் குறிப்பாக ‘மருந்துப் பொருட்கள், புகையிலை மற்றும் பங்குச் சந்தைகள்’ போன்றவை அரசால் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அதே நேரத்தில், நிதி ஆபத்து சம்பந்தப்பட்ட இத்தகைய சூதாட்டங்களை கண்காணிக்கும் அமைப்பும், அதற்கான ஒரு ஒழுங்குமுறையும் இந்தியாவில் இல்லை.

தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள் ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்வதற்கானத் தனி சட்டங்களை சமீபத்தில் இயற்றியது. இருப்பினும், இந்நிறுவனங்கள் இந்த சட்டங்களின் மீது விரைவாக நீதிமன்றங்களில் முறையீடு செய்தன. நீதிமன்றமும் இவற்றை சூதாட்டமாக எண்ணாமல் “திறமை சார்ந்த விளையாட்டுகள்” எனவும், இவற்றை தடை செய்வது அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் கூறி இத்தனிச் சட்டங்களை ரத்து செய்து உத்தரவிட்டது. இதில் நீதிமன்றத்தின் கருத்து என்னவென்றால் “திறமைக்கான ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது அரசியலமைப்பின் 19 வது பிரிவுக்கு எதிரானது’’ என்பதாகும். ஏனெனில் “திறமை சார்ந்த விளையாட்டுகள்” பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமையின் கீழ் பாதுகாக்கப்படுகிறது. இந்த வழக்கின் மையப்புள்ளியானது, “எவை திறமை சார்ந்த விளையாட்டுகள்?” என்பது தொடர்பான விளக்கத்தில் உள்ளது.

சதுரங்கம் போன்ற விளையாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி திறமை சார்ந்த விளையாட்டுகளாகும், ஏனெனில் அவை சீரற்ற தன்மையில் இயங்குவது இல்லை. இவ்விளையாட்டில் வீரர்கள் தங்களிடம் உள்ள திறமையின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறார்கள். உதாரணமாக,


படிக்க : ஆன்லைன் சூதாட்டம் : கார்ப்பரேட்களின் இலாபவெறிக்காக தொடரும் படுகொலைகள்


‘அதிக மதிப்பீட்டைப் பெற்ற ஒரு வீரர் சதுரங்கத்தில் புதியவர்களை எப்போதும் தோற்கடிக்கிறார்’, என ஒரு கிராண்ட்மாஸ்டர் கூறுகிறார்.

மறுபுறம், ‘பாம்புகள் மற்றும் ஏணிகள்’ விளையாட்டை பார்க்கும் பொழுது அது ஒரு வாய்ப்பு விளையாட்டாக உள்ளது. அது முழுவதும் பகடையில் விழும் எண்களை சார்ந்து உள்ளது, ஆனால் பகடையின் எண்ணானது சீரற்றதாக உள்ளது. இந்த விளையாட்டில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் அல்லது எல்லா வீரர்களுக்கும் விளையாட்டில் வெற்றி பெறுவதற்கு சமமான வாய்ப்பு உள்ளது, அதனால் தான் குழந்தைகள் அதை விளையாட விரும்புகிறார்கள். இதுவே ‘லுடோ’ போன்ற விளையாட்டுகளை எடுத்துக்கொண்டால், இதில் திறன் மற்றும் வாய்ப்பு ஆகிய இரண்டு கூறுகளும் உள்ளன. இதுவே இந்த விளையாட்டின் ஒவ்வொரு நிகழ்வையும் புதியதாகவும், வீரர்களுக்கு உற்சாகத்தை அளிப்பதாகவும் இருக்கிறது.

‘லுடோ’-வில், ஒரு துண்டு எவ்வளவு நகர்கிறது என்பது பகடையில் விழும் சீரற்ற எண்ணை சார்ந்தும் (வாய்ப்பு அம்சம்) மற்றும் எந்த துண்டை நகர்த்துவது என்பது வீரரை (திறன் அம்சம்) சார்ந்ததும் அமைகிறது. எனவே, இத்தகைய விளையாட்டுளை ‘திறமை சார்ந்த விளையாட்டா அல்லது “வாய்ப்பு சார்ந்த விளையாட்டா’ என தீர்மானிக்க கடினமாக உள்ளது. இந்த கேள்விதான் நீதிமன்றத்திலும் வந்துள்ளது.

கிரெய்ல் பிரைவேட் லிமிடெட் (லுடோ சுப்ரீம் ஆப் டெவலப்பர்கள்) மீது கேசவ் முலே தாக்கல் செய்த மனுவில், ‘லுடோ’ திறமை சார்ந்த விளையாட்டா அல்லது வாய்ப்பு சார்ந்த விளையாட்டா என்பதை மும்பை உயர்நீதிமன்றம் தான் தீர்மானிக்க வேண்டும். இது திறமை சார்ந்த விளையாட்டு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தால், பணத்துடன் ‘லூடோ’ விளையாடுவது சட்டப்பூர்வமாக இருக்கும்; இல்லையெனில், பணத்தை வைத்து விளையாடுவது சூதாட்டமாகவும், இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் சட்ட விரோதமாகவும் கருதப்படும்.

(தொடரும்…)

GIRISH DALVI AND MALAY DHAMELIA

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க