உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டங்கள் – பாகம் 1

உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டங்கள் – பாகம் 2

விளையாட்டில் திறமையை அளவிடும் திறன்

இத்தகைய விளையாட்டுகளில் திறமையின் கூறுகளை எவ்வாறு அளவிடுவது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்களிடையே பல்வேறு வழிமுறைகள் உள்ளன. ஒரு பொதுவான சோதனையானது, ஒரு குழுவில் ஒருவர் மற்றொருவருடன் தொடர்ந்து விளையாட அனுமதித்து, ஒவ்வொரு ஆட்டத்திற்குப் பிறகும் ஆட்டக்காரர்களின் முடிவை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடுவதும் ஆகும். சிலரால் மற்றவர்களை தொடர்ந்து தோற்கடிக்க முடிந்தால், அந்த விளையாட்டில் திறமையின் கூறு உள்ளது, மேலும் அது நிலையான வெற்றியாளர்களைக் கொண்டுள்ளது. இதுபோன்ற மற்றொரு நிலையில், குறைந்த தர மதிப்பீட்டை பெற்ற வீரர், அதிக மதிப்பீட்டைப் பெற்ற வீரரை தோற்கடிக்கும் எண்ணிக்கையை வைத்து விளையாட்டின் சீரற்ற தன்மையின் ஆதிக்கம் தீர்மானிக்கப்படுகிறது. இதில் அதிக மதிப்பீட்டைப் பெற்ற வீரர் கணிசமான முறையில் தொடர்ந்து தோற்கடிக்கப்படும் போது அவற்றில் மற்ற காரணிகளின் தாக்கமும் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை கண்டறியமுடியும். இதையே விளையாட்டில் உள்ள சீரற்ற தன்மை என்கிறோம்.

இத்தகைய சோதனைகள் முடிவுகள் பலவிதமான விவரங்களை வழங்குகின்றன. இதன் மூலம் இரண்டு வகையான விளையாட்டுகளுக்கும் (திறன் அல்லது வாய்ப்பு) இடையேயான எல்லைகளை வரையறுக்க முடியும். இத்தகைய தொழில்நுட்ப முடிவுகள் வசதியானவை, இவற்றிலிருந்து விளையாட்டுகளை வாய்ப்பு அடிப்படையிலானதா அல்லது திறன் அடிப்படையிலானதா என எளிதில் வகைப்படுத்தலாம். ஆனால் வீரர்கள் ஏன் இவ்வகை விளையாட்டுகளில் மூழ்கி, யதார்த்த உணர்வை இழந்து மீண்டும் மீண்டும் விளையாட தூண்டப்படுகிறார்கள் என்பதை ஆராய்ச்சியாளர்கள் விளக்கவில்லை.

நீதிமன்றங்கள் இந்த விளையாட்டுகள் தொடர்பான தந்திரமான கேள்விகளை சரியான கோணத்தில் விவாதிக்குமேயானால், இவை வாய்ப்பு அல்லது திறன் அடிப்படையிலானது என்பதையும் தாண்டி வேறு நிலைக்கும் செல்லக்கூடும். இங்கே கவனிக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய கேள்வி என்னவென்றால், ‘லுடோ’வில் அதிர்ஷ்டத்தை முயற்சி செய்ய ஒருவரைத் தூண்டுவது எது?”என்பதாகும்.

“தொடக்கத்தில் நான் சில ஆட்டங்களில் வெற்றி பெற்றேன், பணம் சம்பாதிக்க இது எளிதான வழியாக இருக்கும் என்று நினைத்தேன்” என்கிறார் மகேஷ்.


படிக்க : ஆன்லைன் சூதாட்டம் : கார்ப்பரேட்டுகளின் இலாபவெறிக்காக தொடரும் படுகொலைகள் ! என்ன செய்ய வேண்டும்?


இத்தகைய சூதாட்டங்கள் விளையாடுபவரை அதிக பணத்தை வெல்ல முடியும் என்ற கற்பனையில் மூழ்கடிக்கும் தன்மையை கொண்டுள்ளன. போட்டியில் பணத்தை வெல்ல தனக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக நினைக்கும் போது மட்டுமே ஒரு வீரர் அந்த விளையாட்டில் பங்குபெறுகிறார். அவர் தன்னை புத்திசாலி என்று கற்பனை செய்து கொள்வதோடு, குறைந்த முயற்சிகளுக்கு ஈடாக பெரிய வெகுமதிகளை வெல்ல முடியும் என நம்புகிறார். இது யதார்த்தத்தை புறக்கணிப்பவர்களின்  கருத்தாகும்.

சீரற்ற நிலையில் இருக்கும், ஆனால் பந்தயம் கட்டப்படாத ‘லுடோ’ விளையாட்டில், நகர்த்துவதற்கு ஒரு துண்டைத் தேர்ந்தெடுப்பது மட்டுமே விளையாட்டில் வெற்றிபெறத் தேவைப்படும். இருப்பினும், பந்தயம் கட்டப்பட்ட சூதாட்டத்தில், வீரர்கள் வெற்றி பெறுவது மட்டுமல்லாமல், பந்தயம் கட்டப்படும் பணத்தை பெறவேண்டும் என்ற அழுத்தின் காரணமாக கடினமாக போராட வேண்டியுள்ளது. ஒரு பெரிய வெகுமதி பெற போகிறோம் என்ற எதிர்பார்ப்பின் மாயையில் இத்தகைய சூதாட்டங்களை விளையாடுகிறவர்கள், இதில் பந்தயம் கட்டப்பட்ட பணத்தை சேமிக்க அல்லது சம்பாதிக்க தம்மால் செலுத்தப்பட்ட உழைப்பை மறந்துவிடுகின்றனர்.

“நான் சிறப்பாகவே வியூகம் வகுத்தேன், இருப்பினும் தொடர்ந்து பணத்தை இழந்து கொண்டே இருந்தேன்,” – மகேஷ்.

இதனால் ‘லுடோ’வில் திறன் கூறு இல்லை என்பதல்ல வாதம்; வெல்வதற்கு வீரர்கள் சிந்தித்தே செயல்படுகிறார்கள். ஆனால், அவர்களின் சிந்தனை ‘பகடையின் எண்’ என்ற அதிர்ஷ்டத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கிறது. பகடை விரும்பத்தகாத எண்ணைக் கொண்டிருந்தால் ஒரு வீரர்களால் சிறப்பான தேர்வுகளைச் செய்ய முடியாது. வீரர்கள் ஒரு நகர்வைச் செய்ய ‘திறமையை பயன்படுத்துகிறார்கள், அதனாலேயே அவர்களின் தேர்வுகள் தான் விளையாட்டின் முடிவுகளை தீர்மானிப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் விளையாட்டிற்குள் அவர்களின் சிந்தனையும், தேர்வும் பகடை எண்களால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை அவர்கள் உணரத் தவறிவிடுகிறார்கள். அவர்கள் மோசமாக செயல்பட்டால் தம் தேர்வுகளால் தான் காரணம் என தங்களையே குற்றம் சாட்டிக் கொள்கிறார்களே தவிர, பகடையின் சீரற்ற தன்மை குறித்து சிறிதும் சிந்திப்பதில்லை.

“விளையாடுவதற்காக நான் கடன் வாங்க வேண்டியிருந்தது. நான் அதை மீண்டும் வெல்ல முடியும், பகடை எனக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்தேன்” – மகேஷ்

மகேஷ் எந்த அளவிற்கு அதிகமாக விளையாடினரோ, அந்த அளவிற்கு அதிக பணத்தை இழந்தார்.

சீற்ற காரணிகள்

தனது பணம் முழுவதையும் இழந்த பிறகும், மகேஷ் அதை மீண்டும் வெல்ல முடியும் என்று நினைத்தார்.

பகடை உருட்டப்படும் ஒவ்வொரு புதிய நிகழ்விலும், அதிர்ஷ்டம் தனக்கு சாதகமாக இருக்கும் என்று வீரர் நம்புகிறார். விளையாட்டின் சீரற்ற தன்மையின் கூறுகள், வீரர்களின் மனநிலையை தொடர்ந்து எதிர்பார்ப்பு நிலையில் இருக்கும்படி செய்கின்றன. மேலும் இந்த எதிர்பார்ப்பு அவரை தொடர்ந்து விளையாடவும் தூண்டுகிறது. இந்த உணர்வுகளே ஒரு வீரரின் மனதை அடிமையாக்கும் தன்மையையும் கொண்டிருக்கின்றன. எனவே, ஆன்லைன் விளையாட்டுகளில் அதன் சீரற்ற தன்மை எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதை ஆராய்வது மிகவும் முக்கியமானது.

‘லுடோ’ போன்ற ஆன்லைன் பகடை அடிப்படையிலான விளையாட்டுகளில், பகடையில் விழும் எண்கள் வீரர்களிடம் எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆஃப்லைனில் ‘லுடோ’ விளையாடும் போது, பகடை நியாயமாகவே இருக்கிறது என்ற நம்பிக்கை வீரர்கள் மத்தியில் உள்ளது. ஆனால் ஆன்லைனில் இது அப்படியா என்றால் இல்லை என்றே கூறவேண்டும். இன்னும் தெளிவாக கூற வேண்டுமானால் மற்ற வீரர்கள் மனிதர்களா என்பதை கூட சரிபார்க்க வழி இல்லை. மனிதர்கள் விளையாடுவதாக நினைத்து, அதிக தொகை கொண்ட போட்டிகளை விளையாடும் நிகழ்வுகளும் நடக்கின்றன. விளையாட்டில் சீரற்ற தன்மையின் ஆதிக்கம் எதுவாக இருந்தாலும், வீரர்கள் தங்கள் தவறுகள் தான் விளையாட்டைப் பாதிக்கிறது என்றும், தாங்கள் சரியாக செயல்பட்டால் போட்டியில் வெல்ல முடியும் எனவும் கற்பனை செய்துகொள்கிறார்கள். ஆட்ட துண்டின் நிறத்தைத் தேர்ந்தெடுக்கும் செயல்களாலும், பகடை வெவ்வேறு வழிகளில் உருட்டப்படும் காட்சிகளை காண்பதாலும், போட்டி நேர்மையாகவே நடக்கிறது என்ற மாயை உருவாக்கப்படுகிறது.

“எனது சேமிப்பு அனைத்தும் போய்விட்டது, நான் எவ்வளவு பணம் இழந்தேன் என்பதை நான் கணக்கிடவே முடியவில்லை” – மகேஷ்.

ஒரு வீரர் மாதம் வருமானம் ரூ.20,000 சம்பாதிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம், அதில் ரூ.5,000 சேமித்து ரூ.4,000-தை சூதாட்டத்தில் இழக்கிறார். கணித ரீதியாக அவர் இழந்த தொகை என்பது அவரது வருமானத்தில் 20 சதவீதம் மட்டுமே, ஆனால் அவரது சேமிப்பில் 80 சதவீதம் ஆகும். ஒரு ஆன்லைன் சூதாட்டத்தில், இந்த வீரரின் பந்தயம் குறைவாகவும், மற்ற செலவுகளுடன் ஒப்பிடும் போது பெரிதாகத் தெரிவதில்லை. ஆனால் பந்தயம் விளையாடும் போது, வீரர்கள் பணத்தை சேமிப்பாக நினைப்பதை நிறுத்திவிட்டு, அவர்களுக்கு இருக்கும் உண்மையான செலவுகளை மறந்துவிடுகிறார்கள். அவர்களின் சேமிப்பு மற்றும் வருமானம் ஆகியவற்றுடன் பந்தயம் கட்டப்படும் பணத்தின் விகிதத்தை அவர்கள் கற்பனை கூட செய்து பார்ப்பதில்லை. பந்தயம் கட்டப்பட்ட தொகை வெறும் எண்ணாக மட்டுமே திரையில் தோன்றுகிறது. வீரர்கள் எவ்வளவு இழந்தார்கள் என்ற புள்ளி விவரங்களின் பதிவுகள் பெரும்பாலும் காட்டப்படுவதில்லை. இது வீரரை ஏமாற்றும் மற்றொரு வேலையாகும். இத்தகைய சூதாட்டங்கள் அவசர காலங்களில் தேவைப்படும் சேமிப்பு பணத்தின் உன்னதத்தை மறைக்கின்றன. தனது சேமிப்புப் பணத்தை இந்த செயலிகள் வெறும் எண்களாக மட்டுமே காட்டுவதாலேயோ அல்லது அதிக பணத்தை வெல்ல முடியும் என்ற எதிர்பார்ப்பை தூண்டும் மாயைகளாலேயோ சேமிப்பின் இழப்பையும், அந்த இழப்புகளின் விளைவுகளையும் விளையாடுபவர் மறந்துவிடுகிறார்.

முதலில், ஒரு வீரர் தனது முயற்சிகள் விளையாட்டின் முடிவை மாற்றும் என்று உறுதியாக நம்ப வைக்கப்படுகிறார். ஆனால் தேர்வுகள் பகடையைச் சார்ந்தது என்பதால் இது மிகப்பெரிய ஏமாற்று வேலையாகும்.

இரண்டாவதாக, பெரிய எழுத்துக்களில் திரைப்படுத்தப்படும் வெகுமதிகளுடன் ஒப்பிடும்போது விளையாட்டில் அவரது கடினமாக போராட்டத்தை மிக சொற்பம் என்று அவர் எண்ணுகிறார்.

கடைசியாக, அவர் வென்ற தொகை முழுமையானது என்றும், அதில் தனது பங்களிப்பையும் தன் போராட்டங்களையும் மறந்துவிடுகிறார்.

இவை அனைத்தும் வாய்ப்பை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் விளையாட்டின் கூறுகளே தவிர வேறில்லை. எனவே ஒரு விளையாட்டில் ‘திறமை மேலாதிக்கம் அல்லது வாய்ப்பு மேலாதிக்கம்’ என்பதை தீர்மானிப்பது பணம் சம்பந்தப்பட்ட விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவதை மட்டுமே அடிப்படையாக கொண்டிருக்கக்கூடாது.

இத்தகைய சூதாட்டங்களிலிருந்து பெற்ற உண்மையான அனுபவத்திலிருந்து, அவை நடத்தையில் ஏற்படுத்தும் விளைவுகள் மற்றும் அவற்றின் சமூக பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவையும் இதன் பகுதியாக இருக்க வேண்டும்.

மக்களை கவர்ந்திழுத்து அவர்களை வீரர்களாக மாற்றும் இவற்றின் விளம்பரங்கள் அனைத்து தளங்களிலும் மண்டிகிடக்கின்றன். கேஷ் பேக் மற்றும் வெகுமதிகள் வழங்கப்படுகின்றன, பிரபலங்கள் தன் சுய லாபத்திற்காக இத்தகைய செயலிகளை அங்கீகரிப்பதுடன், விளம்பரங்களில் அவற்றின் நம்பகத் தன்மையைச் சரிபார்க்காமல் சான்றுகளையும் வழங்குகின்றனர். ஆனால் விளையாட்டிற்குள் “பகடையில் விழும் எண் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது?” போன்ற பல கேள்விகள் இன்னும் பதிலளிக்கப்படாமலே உள்ளன. மேலும் நீதிமன்றங்களிலும் இன்னும் இது போன்ற கேள்விகள் எழுப்பப்படவும் இல்லை.


படிக்க : ஆன்லைன் சூதாட்டம் : கார்ப்பரேட்களின் இலாபவெறிக்காக தொடரும் படுகொலைகள்


இவ்வகையான நிறுவனங்கள் பணத்திற்காக விளையாடும் விளையாட்டுகளை அறிமுகப்படுத்தும் முன் அவற்றின் உள்ள நேர்மையின் தன்மை வெளிப்படையாக பரிசோதிக்கப்பட வேண்டும், மேலும் அது ஒரு முறைப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.

சமூகத்தில் ஏற்படுத்தப்படும் தாக்கம்

மகேஷின் இழப்பானது ஒரு உதாரணம் மட்டுமே, இவை நாம் வசிக்கும் தெருக்களிலேயே கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது.

திறமைகளை வளர்த்துக்கொள்வது மற்றும் கடினமாக உழைப்பதே ஒரு சிறந்த வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்று இனியும் நம்பாத ஒரு சமூகம்; அதற்கு மாற்றாக அதிர்ஷ்டம் என்ற கற்பனை குதிரையின் மூலம் பொருளாதார விடுதலையை அடையமுடியும் என நம்புகிறது.

எத்தகைய விளையாட்டுகளையும் சட்ட-ஒழுங்குமுறை முன் வைக்கும் கேள்விகளுக்கும் அப்பால் நாம் பார்க்க வேண்டியுள்ளது. விளையாட்டுகள் சமூகத்தின் கூறு மற்றும் சமூகநலன்களை அடிப்படையாக கொண்டவைகளாக இருக்க வேண்டும் என்பதே நம் எண்ணமாகும். எனவே இவற்றை மதிப்பிட புதிய கட்டமைப்புகள் தேவைப்படுகின்றன, அவை சட்டம் மற்றும் சட்டமன்றத்தின் நடைமுறைகளுக்கு அப்பாற்பட்ட கட்டமைப்புகளைப் பெற்றிருப்பதோடு, ஒரு விளையாட்டு தனிநபர் மற்றும் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆராயும் தன்மையையும் கொண்டிருக்க வேண்டும்.

(முற்றும்)

GIRISH DALVI AND MALAY DHAMELIA

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க