வேத வாரிய பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு மருத்துவம், பொறியியல் போன்ற உயர் கல்வியிலும் சேர அனுமதி!

காவி – கார்ப்பரேட் பாசிசத்தின் அடுத்த கட்ட விரிவாக்கம் இந்துராஷ்டிரப் பள்ளிகள்“!

ரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அமைப்பான இந்தியப் பல்கலைக் கழகங்களின் சங்கம் (AIU), ஆகஸ்ட் 2 அன்று நடைபெற்ற அதன் ஆட்சிக் குழுக் கூட்டத்தில் வேதக் கல்வி, அது தொடர்பான படிப்புகள் மற்றும் சான்றிதழ்களை அங்கீகரிக்க ஒப்புக்கொண்டது.

அதைத்தொடர்ந்து வேத வாரியங்கள் வழங்கும் பத்தாம் வகுப்பு (வேத பூஷன்) மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு (வேத விபூஷன்) தேர்ச்சி பெறும் மாணவர்கள், நாடு முழுவதும் உள்ள மற்ற வாரிய மாணவர்களுக்கு இணையாக மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்விக்கான எந்தக் கல்லூரியிலும் சேர தகுதி பெறுவார்கள்  என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏ.ஐ.யு.வின் முடிவைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சகம் மாநில தலைமைச் செயலாளர்கள், பல்கலைக் கழக மானியக் குழு, தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கவுன்சில் (ஏஐசிடிஇ) மற்றும் அனைத்துப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களுக்கும் கடிதம் எழுதி, மகரிஷி சாந்தீபனிக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரம் குறித்துத் தெரிவித்தது.

அதைத் தொடர்ந்து, AICTE அதன் அதிகார வரம்பிற்குட்பட்ட கல்லூரிகளுக்கு, மற்ற வழக்கமான வாரியங்களைப் போலவே வேதக் வாரியங்களின் மாணவர்களையும் சேர்க்கைக்குக் கருத்தில் கொள்ளுமாறு தெரிவித்தது.

படிக்க : ‘கல்வியை காவிமயமாக்குதலில் என்ன தவறு’ : நவீன குலக்கல்விக்கு எத்தனிக்கும் காவிக்கும்பல் !

“எனவே, MSRVVP (மகரிஷி சாந்திபனி பிரதிஸ்தான்) விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு சான்றிதழ்களுக்கு சமமான வேதபூஷன் மற்றும் வேத விபூஷன் சான்றிதழ்களை முறையே கல்வி நோக்கங்களுக்காக பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்” என்று AICTE சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பாரதிய சிக்ஷா வாரியம் (பிஎஸ்பி), மகரிஷி சாந்திபனி ராஷ்ட்ரிய வேத சமஸ்கிருத சிக்ஷா வாரியம் (எம்எஸ்ஆர்விஎஸ்எஸ்பி) மற்றும் மகரிஷி சாந்திபனி ராஷ்ட்ரிய வேத் வித்யா பிரதிஸ்தான் (எம்எஸ்ஆர்விவிபி) ஆகிய வேத வாரியங்களைச் சேர்ந்த மாணவர்கள் தேசிய திறந்தநிலைப் பள்ளியின் மற்றொரு தேர்வில் பங்கேற்க வேண்டியதில்லை என்ற நிலைமையை  உருவாக்கியுள்ளார்கள்.

இதுபோன்ற அறிவிப்புகள் வேத கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளை மேலும் அதிகப்படுத்துவதாக அமையும்.

ஒழுங்குமுறை ஆணையம் நவீன பாடங்களை கற்பிப்பது உட்பட, வேத வாரியம் பின்பற்ற வேண்டிய சில நிபந்தனைகளை வகுத்தது.

பதஞ்சலியின் BSB போர்டு இணையதளத்தின்படி, அது வழங்கும் கல்வியின் கவனம் “வேதக் கல்வி, சமஸ்கிருதக் கல்வி, சாஸ்திரங்கள் மற்றும் தரிசனங்கள் …  பாரதிய பரம்பரை ” ஆகியவற்றில் மட்டுமே உள்ளது, இருப்பினும் நவீன பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. இதேபோல், MSRVSSB வாரியம் வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் “பாடத்திட்டத்தின் முக்கிய அங்கமாக” இருக்கும் என்று கூறுகிறது, ஆனால் நவீன பாடங்களும் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.

“அறிவியல், சமூக அறிவியல் மற்றும் கணிதம் போன்ற நவீன பாடங்களை பாடத்திட்டத்துடன் இணைக்கும் திட்டம் உள்ளது. ஆனால் வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் போன்ற பிற நூல்கள் பாடத்திட்டத்தின் முக்கிய அங்கமாக இருக்கும்,” என்று ஒரு வாரியத்தின் உயர் அதிகாரி கூறினார்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யு) ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவர் , பெயர் தெரியாத நிலையில் டெலிகிராப்பிடம் பேசியபடி, வேத பலகைகள் “பிராமணமயமாக்கப்பட்ட பாடத்திட்டத்தை” மட்டுமே கற்பிக்கும். அத்தகைய பாடத்திட்டங்கள் மனு ஸ்மிருதி, வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் போன்ற நூல்களை ஊக்குவிக்கும் என்று அவர் கூறினார், “பிராமண பாரம்பரியத்தை ஒரே இந்திய அறிவு பாரம்பரியமாக முன்வைத்தது, போட்டியான ஷ்ராமன் தர்மத்தைப் புறக்கணித்தது” என்று அவர் கூறினார்

“சமத்துவம் பிராமண பாரம்பரியத்தில் ஒருபோதும் பரிந்துரைக்கப்படவில்லை அல்லது நடைமுறைப்படுத்தப்படவில்லை. பிராமண சிந்தனைகளின் மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதே வேதக் கல்வியை பிரதான நீரோட்டத்தில் கொண்டு வருவதன் நோக்கம்” என்று அவர் கூறினார்.

வெளிப்படையாகவே தெரிகிறது இனிமேல் வேத கல்வி வாரியம் மூலம் பல ஆயிரக்கணக்கான பள்ளிகளை உருவாக்குவார்கள் அந்தப் பள்ளிகளில் வேதங்களும் உபநிடதங்களும் மனுஸ்மிருதிகளும் முதன்மை பாடங்களாக கற்பிக்கப்படுமானால் இதுதான் காவி கும்பலின் இந்து இராஷ்டிரத்திற்கான பள்ளி. இதுதான் நவீன குருகுலம். இவர்களை அனைத்து துறைகளிலும் கொண்டுவந்து  இந்துராஸ்டிரத்தை கட்டமைப்பார்கள்.

மகாபாரதத்துடன் தொடர்புபடுத்திக் கொள்ளுதல் – ‘Connecting with the Mahabharata’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசியது” வரலாறு என்பது வெறும் புத்தகம் அல்ல. அது புவியியலும் மக்களும் சார்ந்தது. சில கிராமங்களுக்குச் சென்றால் அவர்கள் சீதா எங்கு குளித்தார். பீமன் எங்கு தனது அடையாளத்தை விட்டுச் சென்றார் என எல்லாவற்றையும் தெளிவாகச் சொல்வார்கள். அதுபோன்ற வரலாறுகளுடன் நாம் நம்மை தொடர்புபடுத்திக் கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் நாம் சாட்சிகளைத் தேட முடியாது. நாம் நமது வரலாற்றையே மறந்துவிட்டோம்.”

எல்லாவற்றிற்கும் சாட்சிகளை தேட முடியாது,சொல்வது அனைத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் இந்த இந்துத்துவ பயங்கரவாதி மோகன் பகவத்தின் கருத்து. அதைத்தான் இந்த வேத பாட வாரியங்களும் கற்றுத் தரப் போகிறார்கள். அதில் தேர்ச்சி அடையும் மாணவர்களுக்கு தான் அனைத்து   விதமான உயர்கல்வித் துறைகளிலும் நுழைய அனுமதி  அளித்துள்ளார்கள்.

படிக்க : பெரியார் பல்கலையில் ஆர்.எஸ்.எஸ்-ன் “வேத சக்தி” ஆய்வரங்கம் !

இது போக இந்த பாரதிய சிக்ஷா வாரியம் (பிஎஸ்பி) என்ற வேத பாட வாரியத்தை நடத்திவரும் பாபா ராம்தேவ் போன்ற கார்ப்பரேட் சாமியார்களும் கல்லா கட்டப் போகிறார்கள் என்பது துணை விளைவு.

ஒருபுறம் தேசிய உயர் கல்வித் தகுதிக்கான கட்டமைப்பு என்ற பெயரில் கலை அறிவியல் கல்லூரிகள் உட்பட அனைத்துக்கும் நுழைவுத் தேர்வு கொண்டு வருகிறார்கள் இது உழைக்கும் வர்க்கத்து வீட்டுப் பிள்ளைகளை உயர்கல்வியில் நுழைவதை ஒழித்துக் கட்டுவதற்காக கொண்டு வரப்படுகிறது. இன்னொரு புறம் இந்த வேத பாட வாரியங்கள் மூலமாக நேரடியாக பார்ப்பன மேலாதிக்கத்தை அனைத்து  உயர்கல்வி நிறுவனங்களிலும் கொண்டு வந்து ஒட்டுமொத்த சமூகத்தையும் பிற்போக்கிற்கு தள்ளப் பார்க்கிறது காவி பாசிச  கும்பல்.

காவி – கார்ப்பரேட் கும்பளுக்காக ஒட்டுமொத்த கல்வியும் கல்வித்துறையும் மாற்றி அமைக்கப்படும் காலத்தில் வாழ்கிறோம் நாம் இதை வீழ்த்திய தீர வேண்டும். இதற்காக பேராசிரியர்கள்,மாணவர்கள்,ஜனநாயக முற்போக்கு சக்திகள், உழைக்கும் மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு காவி – கார்ப்பரேட் பாசிச கும்பலை வீதியில் வைத்து வீழ்த்துவோம்.

ரவி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க