ங்கள் பள்ளிக் காலங்களில்  வகுப்பறைக்கு வரும் ஆசிரியர் எங்களிடம் உங்கள் வருங்கால கனவு என்ன என கேட்கும்போது எங்களில் பெரும்பாலான மாணவர்கள் ஆசிரியர்கள் ஆகப் போகிறோம் என்று பதில் கூறுவர்.

அர்ப்பணிப்போடும் சமூக அக்கறையோடும் சக நண்பன் போல்ச் செயல்படும் சில ஆசிரியர்களைப் பார்த்து சில மாணவர்கள் இப்படிச் சொல்வதுண்டு.  ஆனால் இன்று ஆசிரியர் பணி என்றாலே முகம் சுழிக்கும் அளவிற்கு ஆசிரியர் பணியை மிகவும் நலிந்த நிலைக்கு மாற்றி வைத்துள்ளது அரசு. எப்போது பணி நிரந்தரம் செய்யப்படும்  என்ற எதிர்பார்ப்பிலேயே வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு இருக்கிறார்கள்  தற்காலிக ஆசிரியர்கள்.

நிரந்தர பேராசிரியருக்கு நிகராக அனைத்துத் தகுதிகளும் பெற்றிருந்த போதிலும் இவர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளம் என்பது சொற்பம் தான். பணிப் பாதுகாப்பு என்பதோ அரசு சலுகைகள் என்பதோ துளியும் இவர்களுக்குக் கிடையாது. நாள் தோறும் தினக் கூலிகளைப் போல வேலை செய்யும் இவர்கள் கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டு  நவீன கொத்தடிமைகளாக மாற்றப்படுகிறார்கள். இவர்கள் அரசைக் கேள்வி கேட்டால் உடனடியாக  வேலையை விட்டு துரத்தியடிக்கப்படும் நிலையில்தான் அரசு இவர்களை வைத்துள்ளது.

கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக சம வேலை, சம ஊதியம், பணி நிரந்தரம், மகப்பேறு விடுமுறை  என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள். ஆனால் அவர்களின் கோரிக்கைக்கு  செவி சாய்க்காத அரசு, அவர்கள் தற்காலிகமாக  பணி செய்யும் வயதை அல்லது கூலி அடிமையாய் மட்டும்  வேலை செய்யும் வயதை  60 -ஆக நீட்டித்துள்ளது. தன்னுடைய உரிமைகளைக் கேட்டு போராடிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களையும் போராட்டத்தை விடுத்து பணிக்குத் திறும்பவில்லை என்றால் இருக்கும் தற்காலிக வேலையையும் பறிக்கப்படும் என்று அரசு ஆசிரியர்களை மிரட்டுகிறது. நிரந்தர பணி கிடைக்குமென TET, SET ,NET என விதவிதமான ஆசிரியர்கள் தகுதித் தேர்வுகளை இவர்கள் எழுதினாலும்  இவர்களுக்கு நிரந்தர பணி கொடுக்க அரசு மறுக்கிறது.  பெயரளவில் மட்டும் தேர்வுகளை நடத்தி விட்டு ஆசிரியர்களை அரசு ஏமாற்றி வருகிறது.  2013 முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய 80,000-த்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு நிரந்தர பணி இந்நாள் வரை வழங்கப்படவில்லை. நிரந்தரமாக கூலி வேலையாட்களாய் மட்டுமே அரசு இவர்களை மாற்றி வைத்துள்ளது. பணிப் பாதுகாப்பு இல்லாமல் வேலைக்கு ஏற்ற ஊதியம் இல்லாமல் கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டு, கடன் தொல்லையில் வாழும் இவர்களின் கண்ணீர் ஓலங்கள் இந்த அரசின் காதுகளுக்கு  இன்னும் எட்டவில்லை.

படிக்க: கௌரவ விரிவுரையாளர்கள் : உயர்கல்வித் துறையின் நவீனக் கொத்தடிமைகள்!

அரசு கல்லூரிகளில் 10,000 க்கும் மேற்பட்ட காலி இடங்கள் இருந்த போதிலும், நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காமல் ஆசிரியர்களின் வாழ்க்கையை சீரழித்து வருகிறது அரசு.

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திரு. வி. க  அரசு கல்லூரியில் நிரந்தர ஆசிரியர்களுக்கு நிகரான எண்ணிக்கையில்  கௌரவ விரிவுரையாளர்கள்  உள்ளனர். திரு.வி. க கல்லூரியைச் சேர்ந்த காட்சி தொடர்பியல் துறையில் துறைத் தலைவரைத் தவிர்த்து அனைத்து ஆசிரியர்களும் கௌரவ விரிவுரையாளர்கள் தான். இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு மேல் பணி அனுபவம் இருந்தாலும் இவர்களை நிரந்தரம் செய்ய அரசு முன்வரவில்லை. இதனால் பிஎச்டி சேர‌‌ வரும் மாணவர்கள் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது. அடுத்து இதழியல் துறையைப் பொறுத்தவரை இங்கு 100க்கும்  மேற்பட்ட மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும் போதும், ஆண்டிற்கு ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கை அதிகாரித்து வரும் போதும், இந்தத் துறையில் நிரந்தர பேராசிரியர்கள் என்று யாருமே கிடையாது; எல்லா ஆசிரியர்களும் தற்காலிக பணியாளர்கள் தான். விலங்கியல் துறையில் போதைய ஆசிரியர்கள் கிடையாது; இருக்கும் குறைந்தபட்ச ஆசிரியர்கள் தான் எல்லாப் பாடங்களையும் நடத்தி வருகின்றனர். இதேபோல் மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரி மற்றும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் 30-க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் பணி புரிகின்றனர். இதே நிலைதான் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளிலும் இருக்கிறது. ஆட்சிக்கு வந்தால் அனைவரையும் நிரந்தரம்  செய்து விடுகிறேன் என்று சொன்ன திமுக  அரசு, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததும் அதிமுக செய்த அதே வேலையைத் திரும்பச் செய்கிறது.

ஆண்டுதோறும் வறுமையில் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் ஏழை எளிய உழைக்கும் மக்களின் பிள்ளைகளுக்கு புகலிடமாக இருந்து வருவது அரசு கல்லூரிதான். இந்த அரசு கல்லூரிகள்தான் தன் வாழ்க்கை என நம்பி அனைத்து ஏழை மாணவர்களும்  அரசு கல்லூரியை நோக்கி வருகின்றனர். ஆனால் கல்வியை கடைச் சரக்காக்கி விற்றுக் கொண்டிருக்கும் தனியார் கார்ப்பரேட் முதலாளிகளின் கண்களுக்கு அரசு கல்லூரிகள் என்பது தூசிபோல் கண்களில் உருத்திக் கொண்டிருக்கிறது.

கடைக்கு அழைத்துச் செல்லப்படும் சிறுவன் எப்படி கடைகளில் உள்ள அனைத்துப் பொருட்களையும் வாங்கச் சொல்லி அடம் பிடிப்பனோ, அதே போல் இந்தியாவிற்குள் நுழைந்த அந்நிய கார்ப்பரேட்  முதலாளிகள் எப்படியாவது எல்லாத் துறைகளையும்  வாங்கிக் கொள்ள துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

படிக்க: 13000 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உத்தரவு: இது பள்ளிக்கல்வித்துறையின் ‘அக்னிபாத்’

அதன் ஒருபகுதியாகத்தான், எப்படியாவது அரசு கல்வி கட்டமைப்பை நொறுக்கி விட்டு மாணவர்களைத் தன் பக்கம் ஈர்க்கும் வேலையில் தனியார் முதலாளிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஏழை மாணவர்களின் நம்பிக்கையாக இருக்கும் அரசு கல்வி கட்டமைப்பையும் செல்களை போல தினம்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக அரித்துத் தின்று கொண்டிருக்கிறார்கள் கார்ப்பரேட் முதலாளிகள். அதற்கு, மேலும் படையல் இடும் வகையில்தான் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காமல் தற்காலிக ஆசிரியர்களை மட்டும் நியமித்தது இந்தக் கல்விக் கட்டமைப்பை நொறுக்கி வருகிறது அரசு.

இந்த நிலை மேலும் தொடர்ந்தால் ஆசிரியர்கள் இல்லாத கல்லூரிக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறையும். குறைந்த  மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட இக்கல்லூரிகளை எளிதில் அரசு மூடிவிடும். இதுதான் கார்ப்பரேட் முதலாளிகளின் திட்டமும்.

இவை எல்லாவற்றையும் கண்டித்து கடந்த ஆண்டு சென்னை DPL அலுவலகத்தின் முன் போராட்டம் , தொடர்ச்சியாக கோயம்புத்தூரில் போராட்டம், அக்டோபர் மாதம்  மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கல்லூரி போராட்டம் மற்றும் திருவாரூர் திரு.வி.க கலைக் கல்லூரியில் போராட்டம் என கௌரவ விரிவுரையாளர்களின் போராட்டம் தொடர் கதையாகி உள்ளது. இதற்குத் தீர்வு ஆசிரியர்கள் கைகளில் மட்டும் இல்லை; ஆசிரியர்கள் போராட்டத்தோடு மாணவர்களும் கைகோர்க்காவிட்டால் நாளைய ஏழை மக்களின் பிள்ளைகளுக்குக்  கல்வி என்பது எட்டாக் கனியாகிவிடும்.

பாரி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க