‘திறந்தவெளியில் மலம் கழிக்கும் வழக்கம் இந்தியாவில் இல்லை’ என்கிறார் மோடி | உண்மை நிலை என்ன?

2019 ஆம் ஆண்டிலேயே பிரதமர் மோடி இந்தியாவில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் வழக்கம் ஒழிக்கப்பட்டு விட்டதாக சவடால் அடித்தார். ஆனால், அதை மறுக்கும் விதமாக மத்திய அரசின் தரவுகளே அமைந்துள்ளன.

0

திறந்தவெளியில் மலம் கழிக்கும் வழக்கம் இந்தியாவில் இல்லை! ஆனால் மோடியின் இல்லத்திற்கு அருகாமையில் மட்டும் இருக்கிறது!

2019 ஆம் ஆண்டு காந்தியின் 150வது பிறந்தநாளன்று பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் வழக்கம் ஒழிக்கப்பட்டு விட்டதாக சவடால் அடித்தார். இந்தியாவில் 60 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டதை உலகமே வியந்து பாராட்டியதாகக் கூறினார்.

கிர்பி பிளேஸ் (Kirby Place) என்ற சேரிப்பகுதி தில்லி பாசறை மன்றக்குழுவின் (Delhi Cantonment Board) நிர்வாகத்தின் கீழ் வரும் பகுதியாகும். பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இராணுவ நிலங்களை பராமரிக்கும் தலைமை இயக்குனரால் (Directorate General, Defence Estates DGDE) நிர்வகிப்படுகிறது இந்த மன்றக்குழு. கிர்பி பிளேஸ் புது தில்லியில் உள்ள பிரதம மந்திரியின் இல்லத்திலிருந்து வெறும் 10 கிலோமீட்டர் தொலைவில் தான் உள்ளது. இப்பகுதி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திறந்தவெளியில் மலம் கழிக்கும் வழக்கம் இல்லாத பகுதி என்று அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்வச் பாரத் அபியான் (தூய்மை இந்தியா திட்டம்) இணையதளம் இப்பகுதியில் உள்ள அனைத்து கழிவறைகளும் முறையாக இயங்குவதாகவும் பராமரிக்கப்படுவதாகவும் கூறுகிறது; இங்கிருந்து வெளிவரும் கழிவுகளும் முறையாகக் கையாளப்படுவதாகவும் கூறுகிறது.


படிக்க: மோடியின் தூய்மை இந்தியா! காறி உமிழ்ந்த ஐ.நா !


நியூஸ் லாண்டரி (Newslaundry) குழுவின் கள ஆய்வு முற்றிலும் வேறோரு காட்சியை வெளிப்படுத்துகிறது. தில்லி பாசறை மன்றக்குழு அப்பகுதியில் நடமாடும் கழிப்பறைகளை (mobile toilets) அமைத்துள்ளது என்றபோதிலும், அவை எதுவும் முறையாக இயங்குவதில்லை அல்லது பயன்படுத்த முடியாத வண்ணம் உள்ளன. இதனால் அங்கு குடியிருக்கும் 3,000-ற்கும் மேற்பட்டவர்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலைதான் உள்ளது.

அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் ஆண்கள் குழந்தைகள் என அனைவரும் அருகாமையில் உள்ள காட்டுப்பகுதிக்கு தான் மலம் கழிக்கச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. காலையில் எழுந்து கையில் சொம்பு அல்லது தண்ணீர் பாட்டில்களை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். ஆண்களும் அதே இடத்தைப் பயன்படுத்துவதால், அவர்களுக்கு முன்னதாகவே பெண்கள் அதிகாலையில் எழுந்து சென்று வரவேண்டும். அதிக பேர் பயன்படுத்துவதால் அவ்விடம் மிகவும் அசுத்தமானதாக மாறியுள்ளது.

கிர்பி பிளேஸ் பகுதியில் மொத்தம் 20 நடமாடும் கழிப்பறைகள் உள்ளன. ஆனால், வெறும் 10 கழிப்பறைகள் மட்டுமே பயன்படுத்தும் நிலையில் உள்ளன. பல கழிப்பறைகளுக்கு கதவு இல்லை. நடமாடும் கழிப்பறைகள் தரை மட்டத்திலிருந்து சுமார் 4 அடி உயரத்தில் உள்ளன; மேலே ஏறுவதற்கு படிகள் கூட முறையாக இருப்பதில்லை.

கழிப்பறையை சுத்தம் செய்பவர்களுக்கு மாதம் வெறும் ரூ. 8000 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. ஆனால் ஒப்பந்ததாரர் கழிப்பறைகளை பராமரிப்பதற்கென மாதம் ரூ. 2 லட்சத்துக்கும் அதிகமான தொகையை நகராட்சியிடம் இருந்து பெற்றுக் கொள்கிறார்.

ஆதித்ய தன்வர் என்பவரால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி, நவம்பர் 2021 முதல் பிப்ரவரி 2022 வரை 24 நடமாடும் வேன்களை சுத்தம் செய்ய மாதத்திற்கு ரூ. 2,05,440 மற்றும் மார்ச் 2022 முதல் ஆகஸ்ட் 2022 வரை 26 கழிப்பறைகளுக்கு மாதத்திற்கு ரூ. 2,22,560 ஒப்பந்ததாரரால் நகராட்சியிடமிருந்து பெறப்பட்டுள்ளது.


படிக்க: ஸ்வச் பாரத் : வெறும் வாய்ச்சவடாலும் அவமானப்படுத்துதலுமே – காணொளி !


மேலும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஐந்தாவது தேசிய குடும்ப நல கணக்கெடுப்பின்படி (2019 – 2021) இந்தியா முழுவதிலும் 19.4 சதவிகித வீடுகளைச் சேர்ந்தவர்கள் திறந்த வெளியில் மலம் கழிக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது. கிராமப்புறங்களில் 26 சதவிகித வீடுகளைச் சேர்ந்தவர்களும், நகர்ப்புறங்களில் 6 சதவிகித வீடுகளைச் சேர்ந்தவர்களும் திறந்தவெளியில் மலம் கழிக்கின்றனர்.

பிரதமர் மோடி கூறுவதை மறுக்கும் விதமாக மத்திய அரசின் தரவுகளே அமைந்துள்ளன. பொய்ப் பிரச்சாரம் செய்வது என்பது பாசிஸ்டுகளுக்கு ஒன்றும் புதிதல்ல. 2020 ஆம் ஆண்டில் டிரம்ப் வருகையின் போது, தீண்டாமை சுவரெழுப்பி சேரிகளை மறைத்தவர்கள் தானே இவர்கள்!

பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க