உத்தரப் பிரதேசம்: மீண்டுமொரு தில்லி போராட்டம் – மோடியை எச்சரிக்கும் விவசாயிகள்!

இந்தமுறை தில்லியில் மட்டுமல்ல நாடு முழுவதும் வீரியமான விவசாயிகள் போராட்டம் நடைபெறும் என்று மோடி அரசை எச்சரித்தார் எஸ்.கே.எம் தலைவர் ஹன்னன் மொல்லா!

0

வம்பர் 26 அன்று அதிகாலை முதலே கையில் கொடிகளுடன் டிராக்டர்கள் மூலமாகவும் பேருந்துகள் மூலமாகவும் விவசாயிகள் உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவிற்கு வந்தடையத் தொடங்கினர். இரத்து செய்யப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் துவங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் விதமாக நடைபெற்ற மஸ்தூர் – கிஷான் மகாபஞ்சாயத்தில் (Mazdoor – Kisan Mahapanchayat) கலந்து கொள்ள அவர்கள் அங்கு வந்தனர்.

மோடி அரசு விவசாயிகளுக்கு கொடுத்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாக அங்கு திரண்ட விவசாயிகள் குற்றம் சாட்டினார். பஹ்ரைச், லக்கிம்பூர் கேரி, தியோரியா, பாலியா, அசம்கார், ஹர்தோய், பைசாபாத், ஷாஜஹான்பூர், பிலிபிட், மீரட், பிஜ்னோர் மற்றும் முசாபர்நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மகா பஞ்சாயத்தில் கலந்து கொண்டனர்.

சம்யுக்தா கிஷான் மோச்சா (SKM) அழைப்பு விடுத்ததை ஏற்று பாரதிய கிசான் சங்கம் (BKU), அகில இந்திய விவசாயிகள் சங்கம் (AIKS) உட்பட பல்வேறு விவசாய சங்கங்கள் இதில் கலந்து கொண்டன.


படிக்க: மோடி அரசை எதிர்த்து நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த விவசாயிகள் சங்கம்!


எஸ்.கே.எம் தலைவர் ஹன்னன் மொல்லா மோடி அரசாங்கம் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து விட்டதாகவும், விவசாயிகளின் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றும் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில் “மூன்று வேளாண் சட்டங்களை இரத்து செய்தபோது, குறைந்தபட்ச ஆதார விலைக்கு (MSP) சட்டம் இயற்றுவதாகவும், விவசாயிகள் மீதான அனைத்து கிரிமினல் குற்றச்சாட்டுகளையும் வாபஸ் பெறுவதாகவும், போராட்டத்தின் போது பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர்கள் உட்பட அனைத்து வாகனங்களையும் திருப்பி அளிப்பதாகவும், லக்கிம்பூர் கேரி படுகொலையின் குற்றவாளிகளை தண்டிப்பதாகவும் மோடி அரசு வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் அவற்றை நிறைவேற்றும் நோக்கம் தமக்கில்லை என்பதை மோடி அரசு தற்போது வெளிப்படுத்தியுள்ளது. கார்ப்பரேட்டுகளை பாதுகாப்பது தான் அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது” என்று கூறினார். இந்தமுறை தில்லியில் மட்டுமல்ல நாடு முழுவதும் வீரியமான விவசாயிகள் போராட்டம் நடைபெறும் என்று மோடி அரசை எச்சரித்தார்.

கரும்பின் விலையை குவின்டாலுக்கு ரூ.500 உயர்த்துவது, பயிர் எச்சங்களை எரிப்பதற்காக விவசாயிகள் மீது நடவடிக்கை எடுப்பது, விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்குவது, தெருக்களில் சுற்றித் திரியும் கால்நடைகளால் ஏற்படும் தொல்லைகளை கட்டுப்படுத்துவது, பருவம் மாறிய மழையால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவது போன்றவையும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளாக இருந்து வருகின்றன.


படிக்க: இமாச்சலப்பிரதேசம்: ஆப்பிள் விவசாயிகள் போராட்டம் – வஞ்சிக்கும் மோடி அரசு!


பாரதிய கிசான் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் “விவசாயிகள் டிராக்டரையும் டுவிட்டரையும் பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். அவை மோடி அரசாங்கத்திற்கு எதிராக போராடுவதற்கு உதவும்” என்று பேசினார்.

மேலும் அவர் “2047 இல் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறும் என்று மோடி கூறுகிறார். ஆனால் அதற்குள் விவசாயிகளாகிய நாம் நிலமற்றவர்களாக மாற்றப்படுவோம். சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற காலகட்டத்தை விட மோசமான ஒரு சூழலில் தற்போது இருக்கிறோம். நாம் விழித்துக் கொள்ளவில்லை என்றால் துப்பாக்கி முனையின் கீழ் பிரகடனப்படுத்தப்படாத அவசர நிலையில் வாழ வேண்டி வரும்” என்று கூறினார்.

உதான் (UDAN) திட்டத்தின் கீழ் உத்தரப் பிரதேசத்தின் அசம்காரில் உள்ள விமான ஓடுதளம் விரிவாக்கம் செய்யப்பட்டு சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட உள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்ற அங்குள்ள எட்டு கிராமங்களைச் சேர்ந்த 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதனால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படும். இத்திட்டத்தை எதிர்க்கும் அப்பகுதி மக்களும் “வீட்டையும் விவசாய நிலத்தையும் பாதுகாப்போம்” என்ற முழக்கத்துடன் விவசாயிகளின் மகா பஞ்சாயத்தில் கலந்து கொண்டனர்.

விவசாயிகளின் போராட்ட இயக்கத்தை அடுத்த கட்டமாக எப்படி எடுத்துச் செல்வது என்பது குறித்து முடிவெடுப்பதற்காக டிசம்பர் 8 அன்று பொதுக்கூட்டம் ஒன்றை எஸ்.கே.எம் நடத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொம்மி
நன்றி: நியூஸ் கிளிக்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க