‘பெரு’வின் தேவை : இளஞ்சிவப்பு அல்ல, புரட்சிப் பேரலை!

ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு கொண்ட மக்களை இப்போலி இளஞ்சிவப்பு பாதைக்கு வெளியே புரட்சிப்பாதையில் அணிதிரட்ட, மக்கள் அடித்தளம் கொண்ட புரட்சிக்கரக் கட்சியைக் கட்டியமைப்பதுதான் பெரு மக்களுக்கு மட்டுமல்ல ‘இளஞ்சிவப்பு அலை’ மாயையில் கட்டுண்டு கிடக்கும் தென்னமெரிக்க நாடுகளின் மக்களுக்கு அவசர அவசிய தேவையாக உள்ளது.

தென்னமெரிக்க நாடான பெருவில், கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிப் பெற்று ‘சுதந்திர பெரு’ என்ற ‘இடதுசாரி கட்சி’யைச் சேர்ந்த பெட்ரோ கேஸ்டிலோ அதிபரானார். இவரது வெற்றியை உலகம் முழுவதும் உள்ள கம்யூனிசத் திரிபுவாதிகள் பெரிதும் போற்றி வரவேற்றனர். தற்போது பெரு அதிபர் பெட்ரோவின் துரோக ஆட்சியும் அவருக்கு எதிரான ஆட்சிக் கவிழ்ப்பும் ‘இளஞ்சிவப்பு அலை’யின் உண்மை முகத்தை மீண்டும் ஒருமுறை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

‘சட்டப்பூர்வ’ ஆட்சிக் கவிழ்ப்பு

பெட்ரோ கேஸ்டிலோ அதிபரான 18 மாதங்களில் அவர் மீதும் அவரது அரசாங்க அமைச்சர்கள் மீதும் ஊழல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதிபர் பெட்ரோவுக்கு எதிராக ஊழல் புகார் குறித்து பெரு காங்கிரஸ் (நாடாளுமன்றம்) டிசம்பர் 7-ஆம் தேதி கூடி விவாதிக்க தீர்மானித்திருந்தது. பெட்ரோவுக்கு எதிராக காங்கிரஸ் மேற்கொள்ளும் இத்தகைய நடவடிக்கை என்பது முதல்முறை நடப்பதல்ல; இதற்கு முன்னர் இதே ஊழல் குற்றச்சாட்டின்கீழ் பெட்ரோவை பதவிநீக்கம் செய்ய காங்கிரஸ் இரண்டு முறை முயற்சித்தது. ஆனால், பெரும்பான்மை வாக்கு கிடைக்காததால் அவரது பதவி நீக்கம் சற்று தள்ளிப்போனது.

இம்முறை ஆட்சியைத் தக்கவைத்து கொள்ள காங்கிரஸ் கூடுவதற்கு முன்னரே தொலைக்காட்சி ஊடகத்தில் காட்சியளித்த பெட்ரோ, “அவசரகால சட்டத்தைக் கொண்டு காங்கிரசைக் கலைத்துவிட்டு, புதிய தேர்தலை நடத்தப் போவதாக” அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

ஏற்கனவே, பெட்ரோவின் ஆட்சியைக் கலைக்க காத்துக்கொண்டிருந்த வலதுசாரிகள் பெரும்பான்மைக் கொண்ட பெரு காங்கிரசுக்கு இதுவொரு நல்வாய்ப்பாக அமைந்துவிட்டது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட காங்கிரஸ், “அரசாங்கத்திற்கு எதிராக பெட்ரோ கேஸ்டிலோ சதி செய்ததாக” குற்றஞ்சாட்டி அதிபர் பதவியில் இருந்து நீக்கியதோடு, கைது செய்து சிறையிலும் அடைக்க உத்தரவிட்டது. மேலும், ‘நிரந்தர தார்மீக திறமையற்றவர்’ என்ற அடிப்படையில் காங்கிரஸில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 130-க்கு 101 என்று பெட்ரோவுக்கு எதிராக வாக்குப் பதிவானது.

சூழல் தனக்கு எதிராக இருப்பதைப் புரிந்து கொண்ட பெட்ரோ, தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மெக்சிகோ, அர்ஜென்டீனா நாடுகளின் தூதரகத்தை அடைய முயன்றபோது அவரது பாதுகாப்பு அதிகாரிகளாலேயே கைது செய்யப்பட்டார். பெரு இராணுவம், போலீசுதுறை மட்டுமல்ல துணை அதிபர் உள்ளிட்ட பெட்ரோவின் சொந்த அமைச்சரவை உறுப்பினர்களே பெட்ரோவுக்கு எதிரணியில் நின்றனர்.


படிக்க: சிறிதெனினும், சிவப்பு இவர்களை அச்சுறுத்துகிறது!


பெட்ரோவை அதிபர் பதவியில் இருந்து நீக்கிய உடன், அவரது அரசாங்கத்தில் துணை அதிபராக இருந்த டினா பொலுவார்டே என்பவரை அதிபராக நிறுத்தியதன் மூலம் இதனை ‘சட்டப்பூர்வ’ ஆட்சிக் கவிழ்ப்பாக காட்டி, மக்களின் எதிர்ப்பினை திசைத்திருப்பலாம் என்று எண்ணிருந்தது பெரு காங்கிரஸ். ஆனால், தேர்ந்தெடுத்த அதிபரின் பதவியைப் பறித்ததோடு, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத புதிய அதிபரை நியமித்த பெரு காங்கிரஸ்மீது கடும் கோபமடைந்த மக்கள், “பெட்ரோவை விடுதலை செய்; புதிய அதிபரை பதவி நீக்கு. காங்கிரசைக் கலைக்கவேண்டும்; மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்” போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பெரு தலைநகர் லிமா, அரேகுய்பா, ட்ரூஜில்லோ உள்ளிட்ட பல பகுதிகளில் இரண்டு வாரத்திற்கு மேலாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொலுவார்டேவுக்கு பெரு வலதுசாரிகள், அமெரிக்க ஆதரவு

பெட்ரோவின் அதிபர் பதவி பறிக்கப்பட்ட இரண்டு மணிநேரத்திற்குள்ளேயே, துணை அதிபராக இருந்த டினா பொலுவார்டே என்பவரை அதிபராக்கியது பெரு காங்கிரஸ். ஊழலுக்கு எதிராகவும் நாட்டை முன்னோக்கி எடுத்து செல்லவும் கூட்டணி அரசாங்கத்தை அமைக்க பொலுவார்டே அழைப்பு விடுத்ததற்கு தனது முழு ஆதரவையும் அளிப்பதாகத் தெரிவித்திருக்கிறார் தேர்தலில் பெட்ரோவை எதிர்த்து நின்றவரும் “பாப்புலர் ஃபோர்ஸ்” என்ற வலதுசாரி கட்சியைச் சேர்ந்தவருமான கெய்கோ புஜிமோரி.

டினா பொலுவார்டே அதிபரானதையும் தேசிய ஒற்றுமைக்கான அவர் விடுத்திருக்கும் அழைப்பையும் வரவேற்றுள்ளது அமெரிக்க நாடுகளின் அமைப்பு (Organisation of American States (OAS)). “ஜனநாயகம், அமைதி, அமைப்புமுறைகள் மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அதிகாரப்பூர்வ ஆதரவு அளிப்பதாக” தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தேவையை குறிப்பறிந்து செய்து முடிக்கக்கூடிய இந்த ஓ.ஏ.எஸ். அமைப்பு அளித்திருக்கும் இத்தகைய ஆதரவு என்பது பெட்ரோ பதவி நீக்கப்பட்டத்தையும் பொலுவார்டே நியமிக்கப்பட்டதையும் அமெரிக்கா ஆதரிக்கிறது என்பதையே குறிக்கிறது.

பெட்ரோவின் சாயம் வெளுத்தது

பெட்ரோ அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்றிருந்தாலும் 79 இடங்களைப் பெற்ற வலதுசாரிகளை பெரும்பான்மையாகக் கொண்டிருக்கிறது பெரு காங்கிரஸ். தற்போது நடந்திருக்கும் ஆட்சிக் கவிழ்ப்புக்கு முன்னரும் பெட்ரோ மீதும் அவரின் அமைச்சர்கள் மீதும் ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த காங்கிரஸ் இரண்டு முறை அதிபர் பதவியில் இருந்து நீக்கவும் முயன்றது.

பெரு காங்கிரசில் எதிர்ப்பு இருந்த அதேநேரம் சொந்த கட்சிக்குள்ளும் பெட்ரோவுக்கு எதிரான மனநிலை வளர்ந்து வந்தது. பெட்ரோ அதிபராக பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் ஐந்து பிரதமர்கள் தங்களது பதவியினை ராஜினாமா செய்தனர். அதேபோல், தான் நிராகரித்த பிரதமரை பெட்ரோ நியமித்ததால், தான் வகித்த கூடுதல் மந்திரி பதவியை இரண்டு வாரத்திலேயே ராஜினாமா செய்தவர்தான் தற்பொது அதிபராக பதவியேற்றிருக்கும் டினா பொலுவார்டே. காங்கிரசை கலைப்பது குறித்த பெட்ரோவின் அறிவிப்பு வெளியானதும் முற்றிலும் எதிரணியில் நின்றார் பொலுவார்டே.

அமைச்சரவையில் நிலவிய கருத்து முரண்பாடுகளாலும், வலதுசாரி மற்றும் அமெரிக்காவின் கைப்பாவையாக விலைபேசப்பட்ட சொந்த உறுப்பினர்களாலும் தனது அமைச்சரவையிலேயே எதிர்ப்பு வளர்ந்து, பலமிழந்து வந்த பெட்ரோ, மக்கள் மத்தியிலும் ஆதரவினை இழந்துவந்தார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தான் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் குறித்து அதிபரான பின்னர் வாயே திறக்கவில்லை என்பது மக்களின் ஆதரவினை இழக்க முக்கிய காரணமாக அமைந்தது.

பெட்ரோவின் முகத்திரை கிழிய வெகு நாட்கள் பிடிக்கவில்லை. பெட்ரோவின் முதல் பிரதமர், எரிவாயு துறையை தேசியமயமாக்குவதாக உறுதியளித்தபோது, “அத்தகைய திட்டம் எதுவும் இல்லை” என மறுத்தார் அதிபர் பெட்ரோ. இரண்டாவது, பிரதமர் மிர்தா வாஸ்குவஸ், “தனியாருக்கு சொந்தமான தங்கம் மற்றும் வெள்ளிச் சுரங்கங்கள் மூடப்படும்” என அறிவித்தவுடன் வட, தென் அமெரிக்க நாடுகளில் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுவரும் பிரிட்டனைச் சேர்ந்த ஹோச்ஸ்ஷைல்டு (Hochschild) என்ற தனியார் நிறுவனம் 25 சதவிகித பங்கு மதிப்பை இழந்தது.


படிக்க: சிலியின் வசந்தம் !


பிரதமரின் இத்தகைய அறிவிப்பு வெளியான ஒருசில நாட்களிலேயே, “சுரங்கங்களை மூடும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை; சட்ட வழிகளில் நடத்தப்படும் சுரங்க நிறுவனங்களின் உரிமங்கள் நீட்டிக்கப்படும்” என தனது ஏகாதிபத்திய விசுவாசத்தைக் காட்டினார். இதன்மூலம் தனது ஆட்சியை தற்காலிகமாக தக்கவைக்கப் பயன்படுத்திக் கொண்டார். பெட்ரோவின் அறிவிப்புக்கு முன்னர்தான் “சுரங்கங்கள் பாதுகாப்பான சுற்றுச்சூழல் தரத்தின் கீழ் செயல்படும்” என்று தெரிவித்திருந்தது ஹோச்ஷைல்டு நிறுவனம்.

பெட்ரோ ஆட்சியிலும் தங்களது வாழ்வாதாரத்தில் ஏதும் மாற்ற மேற்படாமல் மேலும் பாதிக்கப்பட்டு குமுறிக் கொண்டிருந்த மக்கள் வீதியில் திரண்டனர். சென்ற ஆண்டு மார்ச் – ஏப்ரல் மாதங்களில் பல நாட்கள் நடந்தப் போராட்டங்களில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

ஆம், “இளஞ்சிவப்பு அலை”யின் வெற்றியால் தனியார்மயக் கொள்கையை ஒழிக்கமுடியாது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்பது மட்டுமல்ல, “இளஞ்சிவப்பு” வீரரான பெட்ரோ கேஸ்டிலோ அந்த நேர்மையுடையவரும் அல்ல என்பதைதான் அவரது நடவடிக்கைகளும் அதற்கு எதிரான மக்களின் போராட்டங்களும் உணர்த்துகின்றன.

அமெரிக்காவிடம் சரணடைந்த பிழைப்புவாதி பெட்ரோ

பொதுவாக, தான் வகுத்துக் கொண்ட கொள்கையையும் மக்கள் நலத் திட்டங்களையும் நிலவுகின்ற அரசு கட்டமைப்புக்குள் செயற்படுத்த முடியாமல் திணறும்; தாங்கள் ஏற்றுகொண்ட கொள்கைகளுக்கு உண்மையாக செயல்படுத்த முயன்று எதிரிகளால் கொல்லப்பட்ட தலைவர்கள் பலரை “இளஞ்சிவப்பு அலை” பார்த்துள்ளது. ஆனால், இத்தகைய பட்டியலில் பெட்ரோவின் பெயரை ஒருபோதும் சேர்க்க முடியாது.

தனக்கு எதிராக வளர்ந்து வரும் மக்கள் போராட்டங்கள் ஒருபக்கம். நிலைக்குலைந்திருக்கும் அமைச்சரவை, ஆட்சியைக் கவிழ்க்க கழுகுபோல் அமெரிக்க ஆதரவோடு காத்துக்கொண்டிருக்கும் பெரு காங்கிரஸ் ஆகியவை மற்றொரு பக்கம். இம்மூன்று கத்திகளுக்கு இடையில் சிக்கியிருக்கும் பெட்ரோ இறுதியாக தனது ஆட்சியினை தக்கவைத்துக் கொள்ள புகலிடம் தேடி சென்றது அமெரிக்காவிடம்.

தனக்கு எதிராக ஆட்சிக் கவிழ்ப்பு அச்சுறுத்தல் வளர்ந்து வருவதை எதிர்கொள்ளவும் பெரு ஜனநாயகத்தை பாதுகாக்கவும் தனக்கு உதவுமாறு கடந்த அக்டோபர் மாதம், அமெரிக்க கட்டப் பஞ்சாயத்து அமைப்பான ஓ.ஏ.எஸ்-சை நாடினார் பிழைப்புவாதி பெட்ரோ. ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள ஓ.ஏ.எஸ்-சை நாடிய போது, பெருவின் அரசியல் நிலைமையை ஆய்வு செய்ய தனது உயர்மட்டக் குழுவை பெருவுக்கு அனுப்பிய ஓ.ஏ.எஸ், பெருவின் ஜனநாயக நிறுவனங்கள் ஆபத்தில் உள்ளதாகவும் ஸ்திரத்தன்மையின்மையால் பெரு நாட்டை நிர்வகிப்பதும் அவசர பிரச்சினையில் தலையிடுவதும் கடினம் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்ததன் மூலம் பெட்ரோவை கைகழுவிவிட்டது.

அதன் பின்னர் நெருக்கடி முற்றி முட்டுசந்தில் நின்ற பெட்ரோ தனது ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள மேற்கொண்ட சமீபத்திய நடவடிக்கைதான் காங்கிரசை கலைத்து அவசர தேர்தலுக்கான அறைகூவலாகும்.

மக்கள் படும் துன்ப துயரங்களையும் மக்களிடையே நிலவிய ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வையும் கவர்ச்சிகரமான முழக்கங்களை முன்வைத்து வாக்குகளாக மாற்றி வெற்றிப் பெற்று அதிபரான பெட்ரோ, தனியார்மயக் கொள்கைகளை அமல்படுத்தியதோடு அமெரிக்க ஏகாதிபத்தியத்திடமே சரணாகதி அடைத்திருப்பது அப்பட்டமான பிழைப்புவாதம், பச்சை துரோகமாகும்.

தற்போது அவரது ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராகவும் பெட்ரோ சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிராகவும் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் திரண்டி போராடி வருகின்றனர். இதில் 34-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்டு பலர் படுகாயமுற்றிருக்கின்றனர். இதற்குக் காரணம், மக்களிடம் அடங்காது கொழுந்துவிட்டு எரியும் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு – ஜனநாயக உணர்வின் வெளிப்பாடுகளாகும்.


படிக்க:பிராந்திய மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்ளவே துருக்கியின் ஸ்வீடன் எதிர்ப்பு!


தங்களை ஆண்ட வலதுசாரிகளின் ஆட்சியில் அனுபவித்த துன்பதுயரங்கள் பெட்ரோ ஆட்சியிலாவது மாறாதா என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். பெட்ரோ மக்களின் அந்த எதிர்பார்ப்புக்கு துரோகமிழைத்தாலும், ஏகாதிபத்திய அடிவருடி வலதுசாரிகளுக்கு பெட்ரோவை கைது செய்ய அருகதை இல்லை என்பதே மக்கள் போராட்டங்களின் வெளிப்பாடாகும். மக்களின் இந்த நம்பிக்கைக்கு சிறிதும் அருகதையில்லாதவர்தான் இந்த பெட்ரோ.

அதுதான் அமெரிக்காவிடம் பெட்ரோ சராணாகதியடைந்துவிட்டாரே பிறகு ஏன் ஆட்சிக் கவிழ்க்கப்பட்டது என கேள்வி எழலாம். “தனியார்மயத்தை ஒழிப்பேன், அரசுடைமையாக்குவேன்” என்று பேச்சளவிலும்கூட இருக்கக்கூடாது என்பதே அமெரிக்க மேலாதிக்கத்தின் எண்ணம்.

டினா பொலுவார்டேவுக்கு பெருவின் வலதுசாரி கட்சிகளும் அமெரிக்காவும் ஆதரவு அளித்திருப்பதன் காரணம் என்னவென்றால், தான் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்புக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கொடுப்பதற்காகவும் தனது கைப்பாவையாக அரசை மாற்றுவதற்காகதான். தேவையில்லையென்றால் பொலுவார்டேவை மாற்றி தனது ஆதரவாளர்களை அதிபராக்கவும் சிறந்த வழி இதுவே. 2026-ஆம் ஆண்டு வரை இருந்த அதிபர் பதவி காலத்தை குறைத்து 2024 ஆண்டில் தேர்தல் நடத்தப்போவதாக பெரு காங்கிரஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்பது புதிய அதிபர் நியமனத்தை எதிர்த்து வளர்ந்துவரும் மக்கள் போராட்டத்தின் வீரியத்தினை தணிக்கதான்.

எனவே, ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு கொண்ட மக்களை இப்போலி இளஞ்சிவப்பு பாதைக்கு வெளியே புரட்சிப்பாதையில் அணிதிரட்ட, மக்கள் அடித்தளம் கொண்ட புரட்சிக்கரக் கட்சியைக் கட்டியமைப்பதுதான் பெரு மக்களுக்கு மட்டுமல்ல ‘இளஞ்சிவப்பு அலை’ மாயையில் கட்டுண்டு கிடக்கும் தென்னமெரிக்க நாடுகளின் மக்களுக்கு அவசர அவசிய தேவையாக உள்ளது.

வெண்பா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க