கடந்த நான்கு மாதங்களில் எனது நட்பு வட்டத்தில் இருக்கும் நண்பர்கள் சிலர் சாதி மறுப்பு திருமணம் செய்திருக்கிறார்கள். ஆனால் அதில் ஒன்று கூட சடங்கு மறுப்பு, சுயமரியாதை திருமணமாக இருக்கவில்லை என்பதுதான் வருத்தம்.
இது பற்றி நண்பர்கள் சொல்லும்போது, “சடங்கு மறுப்பு சுயமரியாதை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விருப்பம்தான். ஆனால் குடும்பத்தினரை உறவினர்களை அதற்கு சம்மதிக்க வைப்பது இயலாத காரியம்” என்றனர்.
இப்படி சொன்ன நண்பர்கள் அனைவரும் பெரியாரியம், மார்க்சியம் போன்ற கருத்துக்களை வாசிக்கக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அமைப்புக்களில் சேர்ந்து இயங்கக் கூடியவர்கள் அல்ல.
இவர்களுக்கு சடங்கு மறுப்பு சுயமரியாதை திருமணத்தின் நோக்கமும் முக்கியத்துவமும் புரியவில்லை என்பது ஒருபக்கமிருக்கட்டும், இங்கே குறிப்பான பிரச்சினை என்னவென்றால், இந்த நண்பர்கள் அமைப்புக்களில் இயங்காத காரணத்தால் சாதியும் மதமும் சமூகத்தில் எப்படி நிறுவனமயமாக இயங்குகிறது என்ற கள யதார்த்தம் இவர்களுக்கு புலப்படுவதில்லை.
தாங்கள் பேசுவது முற்போக்கான கருத்து அதனால் தங்களது பெற்றோர்களை தங்களது வழிக்கு கொண்டுவந்து விடலாம் என்று இவர்கள் நினைக்கின்றனர். ஆனால் குடும்பம் எப்படி நிறுவனமயப்பட்ட அதிகாரமாக இருக்கிறது என்பதை நண்பர்கள் புரிந்துகொள்வதில்லை. அந்த அதிகார மையத்தை உதிரிகளாக இருக்கும் நமது நண்பர்களால் எதிர்கொள்ள முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
படிக்க: சமுதாயப் புரட்சிப் பிரகடனமாய் சாதி – தீண்டாமை மறுப்பு மணவிழா!
மேலும் சாதியை ஒரு பிரச்சினையாக கருதாமல் காதல் திருமணங்களுக்கு ஒப்புக்கொள்ளும் பெற்றோர்கள் கூட, ஏன் சடங்கு மறுப்பை ஏற்றுக்கொள்வதில்லை என்பதில் இருந்துதான் குடும்பம் உறவினர்கள் என்ற வடிவத்தில் யதார்த்த வாழ்வில் சாதி எப்படி நிறுவனமயப்பட்ட அதிகாரமாக இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்.
சமீபத்தில் “நடுவயதுப் பார்ப்பார் மறைவழி காட்டிடத் தீவலம் செய்து” நடந்தி வைத்த, அதாவது பார்ப்பன சடங்குகளைப் பின்பற்றி நடத்தி வைத்த, தமது மகனின் திருமணம் பற்றி எழுத்தாளர் பெருமாள் முருகன் அருஞ்சொல் இணைய இதழில் ஒரு சுயவிளக்கக் கட்டுரையை எழுதியிருந்தார்.
அவரது திருமணமும் அவரது மகனின் திருமணமும் சடங்கு மறுப்பு முறையில் இல்லாமல் போனதற்கான காரணங்களாக அவர் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது இரண்டு விஷயங்கள் தான்.
ஒன்று சடங்கு செய்ய வேண்டும் என்ற உறவினர்களின் “அன்புக் கட்டளைகளை” மீற முடியாமல் இருப்பது, மற்றொன்று சடங்கு மறுப்பு செய்வதில் இரு வீட்டாருக்கும் இருக்கு சிக்கல்கள் என்று இரண்டை பற்றிதான் எழுதுகிறார்.
இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நமது எளிய நண்பர்களும், சமூகத்தின் “முன்னோடிகள்” ஆன எழுத்தாளர்களும் எதிர்கொள்ளவது ஒரே விதமான பிரச்சினையைதான். ஆனால் பெருமாள் முருகன் அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. “சடங்கு மறுப்பு சுயமரியாதை திருமணங்களில் உறவினர்களுக்கு எந்த பங்கு இல்லை. பெற்றோருக்கூட இடமில்லை. பரிதாபமாக ஒரு மூலையில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஒலிவாங்கியை பிடித்து வெகுநேரம் முழங்கும் அரசியல் பரப்புரை மேடையாக மணமேடை மாறிவிடுகிறது” என்று தனது ஆதங்கத்தை பதிவு செய்கிறார்.
படிக்க: சாதி – தீண்டாமை ஒழிப்பு புரட்சிகர மணவிழாக்கள் நடந்த 25 ஆம் ஆண்டை நினைவு கூர்வோம்!
இங்கே சாதியை சடங்கு வழியாக கட்டிக் காக்கும் சாதாரண சாதியவாதிக்கும் இந்த ’முற்போக்கு எழுத்தாளருக்கும்’ எந்த வேறுபாடும் இல்லை. ஏன் இவர் திருமணத்தில் உறவினர்களின், பெற்றோரின் “இடங்கள்” பற்றி இவ்வளவு கவலைப்படுகிறார்? சடங்கு சாதியை எப்படி தக்கவைப்பதாக உள்ளது? என்ற கேள்விகளுக்கு நாம் விடை சொல்ல வேண்டியிருக்கிறது.
முதலில், “சடங்கு” என்பது ஒரு அதிகார மையத்தை பொது வெளியில் நிறுவிக் கொள்வது என்று அர்த்தம். உதாரணமாக, ஆதியில் பழங்குடி மக்கள் மழை வேண்டி தாங்கள் புரியும் நடனம் தான் “சடங்காக” இருந்தது. அதை அந்த பழங்குடி இனத் தலைவர் தான் தொடங்கி வைப்பார்.
பின்னர் அதில் மற்றவர்களும் கலந்து கொண்டு நடனமாட வேண்டும். இதில் முதலில் நடனம் புரியும் உரிமை “தலைவருக்கே உண்டு”. ஒவ்வொரு முறை அந்த தலைவர் தான் முதலில் நடனம் புரிந்து “நான் தான் தலைவர்” என்று பொதுவில் நிறுவிக்கொள்வது தான் சடங்காக இருந்தது.
இந்த சடங்கு தான் தற்போது “ஆகம விதிகள்” என்ற பெயரில் சூத்திரர்கள் கோவில் கருவறைக்குள் வரக்கூடாது, சிதம்பரம் கோவிலில் தமிழில் பாடக்கூடாது என்பதாக பரிணாம வளர்ச்சி அடைந்திருந்தது. இதுதான் சடங்கு முறையில் நடக்கும் திருமணங்களிலும் நிகழ்கிறது.
ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு விதமான சடங்கு இருக்கிறது. அதை பொதுவில் நிகழ்த்திக் காட்டுவதன் மூலமாக தங்கள் சாதியை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். இதன் வழி சாதியை, மதத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள். குறிப்பிட்ட சாதியில் குறிப்பிட்ட உறவு முறைகள் முக்கியத்துவமுடையதாக இருக்கிறது.
சில சாதிகளில் “தாய்மாமன் உறவு”, சில சாதிகளில் “சித்தாப்பா, பெரியப்பா உறவு”. இப்போது சடங்கு மறுப்பு திருமணம் செய்தால் இந்த நபர்களுக்கான முக்கியத்துவம் இருக்காது. இது யதார்த்தத்தில் சாதி வழங்கும் சிறப்புரிமைகளை மறுப்பதாக இருக்கிறது. இது சாதியத்திற்கு நிறுவன ரீதியான அடியாகும்.
இவ்வாறு “சடங்கு மறுப்பு சுயமரியாதை திருமணம்” என்பது பொது வெளியில் சாதி அதிகார மையங்களை கேள்விக்குள்ளாக்குவது என்பதாகும், சாதியின் அதிகாரத்தை கீழறுப்பதாகும். இதில் தான் சடங்கு மறுப்பு சுயமரியாதை திருமணத்தின் முக்கியத்துவம் உள்ளது.
இதனால்தான் நாம் “சடங்கு மறுப்பு திருமணம்” செய்ய வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறோம். வறட்டு கௌரவத்திற்காக அல்ல. “மணமேடை அரசியல் முழங்கும் மேடையாக மாறுவது”, “சடங்கு மறுப்பு திருமணத்தின்போது உறவினர்களின் மனம் நொந்து கொள்வது” எல்லாம் பெருமாள் முருகனுக்கு பிடிக்கவில்லை என்றால் அது சாதி அவருக்கு தரும் சிறப்புரிமைகளை அவர் இழக்க விரும்பவில்லை என்றே பொருள்படுகிறது.
இதில் அதிகம் விவாதிக்க ஒன்றுமில்லை. ஆனால் “சடங்கு மறுப்பு சுயமரியாதை திருமணம்” இத்தனை முக்கியத்துவமுடையது என்று நாம் விளக்கிய பிறகும், யதார்த்த வாழ்க்கையில் அதை நண்பர்களால் சாத்தியப்படுத்திக் காட்ட தடையாக இருப்பது குடும்பம், உறவினர்கள் என்ற அதிகார நிறுவனங்கள்தான். அதை உதிரிகளாக நாம் எதிர்கொள்ள முடியாது என்பதை நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
படிக்க: தினமலர் | திருமணம் – பொது வாழ்க்கை | கொரோனா வைரஸ் | அர்ஜுன் ரெட்டி | சாதி மறுப்பு | கேள்வி – பதில் !
முற்போக்கு இயக்கங்களை சுற்றி சித்தாந்த ரீதியாக, அமைப்பு ரீதியாக அணி திரளும்போதே ஓர் நிறுவனமயப்படுத்தப்பட்ட அதிகாரத்தை நம்மால் எதிர்கொள்ள முடியும். அமைப்பில் இணைந்து பணி செய்ய முடியாத நண்பர்கள், முற்போக்கு இயக்கங்களின் நட்பு சக்திகளாக அணி திரள்வதில் எந்த பிரச்சினையும் இருக்கப்போவதில்லை.
ஒரு அமைப்பின் பத்திரிகையை சந்தா செலுத்தி வாங்குவது, அந்த அமைப்பு நடத்தும் கூட்டங்களில் முடிந்த வரை பங்கேற்பது, அந்த அமைப்புத் தோழர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது என முற்போக்கு இயக்கங்களின் நட்பு சக்திகளாக இருப்பதன் வழியாகவே சாதிய மத அதிகார மையங்களை எதிர்கொள்ள முடியும்.
இந்துத்துவ பாசிச சக்தி அதிகாரத்தில் இருக்கும் இந்த சூழலில் நம் வாழ்வில் ஒவ்வொரு அரங்கிலும் பிற்போக்கு தாக்குதல்களை சந்தித்து வருகிறோம். இந்த நிலையில் வெறுமனே வாய் வீச்சில் மட்டும் முற்போக்காக இருந்தால் போதாது. சங்கப் பரிவார அமைப்புகளில் இருப்பவர்கள் அமைப்பு ரீதியாக செயல்படும் போது, முற்போக்கு பேசும் நாம் உதிரிகளாக இருப்பதில் பயன் எதுவுமில்லை.
அதனால் அரசியல் இயக்கங்களில் இணைந்து அல்லது அரசியல் இயக்கங்களை சுற்றி நட்பு சக்திகளாக திரண்டு சாதி – சடங்கு மறுப்பு சுயமரியாதை திருமணம் போன்ற அனைத்து வாய்ப்பையும் பயன்படுத்தி சாதியையும் மதத்தையும் அமைப்பு ரீதியாக எதிர்கொள்வோம் நண்பர்களே. காவி பாசிசத்தை வீழ்த்துவதில் கலாச்சாரத்தின் பங்கு இன்றியமையாதது.
ராஜன்