01.06.2023

மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளில்
மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரம் ரத்து!

தேசிய மருத்துவ ஆணையத்தின் ஓரவஞ்சனை!

கண்டன அறிக்கை!

டந்த மூன்று தினங்களுக்கு முன்பு எல்லா பத்திரிகைகளிலும் வந்த செய்தி தேசிய மருத்துவ ஆணையம் தமிழ்நாட்டின் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரத்தை ரத்து செய்தது. இதனால் 500 மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக்கு 16,000 ரூபாய் செலவில் மருத்துவம் படிக்க முடியும்.அதிலும் ஏழை மாணவர்களுக்குத் தான் இது போன்ற வாய்ப்புகள் பெரும் பலனைக் கொடுக்கின்றன. அதில் விழுந்த பெரிய அடி தான் இது.

தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த நடவடிக்கை வன்மம் நிறைந்தது என்பதை சமூக சமத்துவத்திற்கான டாக்டர் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் அவர்கள் அம்பலப்படுத்தியுள்ளார். அதாவது மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் பயோமெட்ரிக் வருகை பதிவேட்டைச் சரிவர ஏற்பாடு செய்யவில்லை கண்காணிப்பு கேமராக்களை முறையாக வைத்துக் கொள்ளவில்லை போன்ற சிறிய விஷயங்களுக்கெல்லாம் அங்கீகாரத்தை ரத்து பண்ணுவது அதே வேலையில் தனியார் மருத்துவமனை கல்லூரிகளில் முறையான வசதிகள் இல்லை, உள் நோயாளிகள் இல்லை அதற்கெல்லாம் தேசிய மருத்துவ ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காது இதெல்லாம் உள்நோக்கம் கொண்டது எனப் பதிவு செய்துள்ளார்.

ஸ்டான்லி அரசு மருத்துவமனை போன்ற பல துறைகளைக் கொண்டுள்ள 24 மணி நேரமும் இயங்கக்கூடிய சிக்கலான அமைப்பு கொண்ட கல்லூரிகளுக்குத் தேசிய மருத்துவ ஆணையம் குறிப்பிட்டுள்ள அம்சங்களைச் சரி செய்யச் சற்று காலம் எடுத்துக் கொள்ளும், அதனைக் கணக்கில் கொண்டு எந்திர கதியாக அணுகாமல் கால அவகாசத்தைக் கூடுதலாகக் கொடுத்திருக்க வேண்டும் என்பதையும் பதிவு செய்துள்ளார்.


படிக்க: கார்ப்பரேட் – காவிமயமாகும் மருத்துவத்துறை ! தமிழகமெங்கும் மாணவர்களின் போராட்டம் !!


தேசிய மருத்துவ ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்தாத தமிழ்நாடு அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சரிதான். ஆனால் அங்கீகாரத்தை ரத்து செய்வதென்பது வன்மம் நிறைந்ததே. அப்படிப் பார்த்தால்இன்னும் ஒரு செங்கல்லை கூட நட்டு வைக்காத எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரிக்கு ஆள் சேர்க்கை நடத்த அனுமதித்த தேசிய மருத்துவ ஆணையத்தின் மீது யார் நடவடிக்கை எடுப்பது?

இந்திய மருத்துவ கவுன்சில்-இன் ஊழல் முறைகேடுகளுக்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்டது தேசிய மருத்துவ ஆணையம் என்பதெல்லாம் ஒரு அண்டப் புளுகு. ஏனென்றால் ஊழலும் முறைகேடுகளும் எல்லாம் இன்னும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

தேசிய மருத்துவ ஆணையம் பொறுப்பேற்ற உடனே தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களுக்கு எந்த கட்டுப்பாடும் ஆணையம் விதிக்காது என கை கழுவிக் கொண்டது. இந்த 50 விழுக்காடு இடங்களுக்குத் தனியார் கல்லூரிகள் முடிவு செய்வது தான் கட்டணம் இன்னும் எல்லாம். இதேபோன்று 50% புதிய பாடப்பிரிவுகளைத் தனியார் மருத்துவக் கல்லூரிகளே உருவாக்கி நடத்திக் கொள்ளலாம் எனவும் அனுமதி அளித்துள்ளார்கள். இந்த சட்டத் திருத்தங்கள் எல்லாம் தனியார் மருத்துவக் கல்லூரிகள் கொள்ளை அடிப்பதற்கான ஏற்பாடு தான். இதுபோக மருத்துவக் கல்லூரிகள் புதிதாகத் திறக்கும் போதும் அந்த கல்லூரியை நேரில் ஆய்வு செய்யாமலேயே அனுமதி வழங்கலாம் எனவும் விதிகளைத் திருத்தி அமைத்துள்ளார்கள்.

முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தேசிய மருத்துவ ஆணையத்தை வரவேற்றுப் பேசும்போது முந்தைய இந்திய மருத்துவ கழகம் இன்ஸ்பெக்டர் ராஜ் என்ற கண்காணிப்பை வைத்துள்ளது அது தேவையற்றது எனப் பேசினார். குறைந்தபட்ச கண்காணிப்பு இருக்கும்போதே இவ்வளவு ஊழல் என்றால் கண்காணிப்பே அற்றுப்போகும் இந்த தேசிய மருத்துவ ஆணையம் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் கார்ப்பரேட்டுக்கும் ஒரு வரப்பிரசாதம் தான். ஆகவே இவர்கள் கண்டிப்பாக நடந்து கொள்வது போல் நடிப்பதெல்லாம் ஏமாற்று வித்தைதான்.


படிக்க: சீரழிந்து வரும் அரசு மருத்துவ கட்டமைப்பு! பலியாகும் அப்பாவி உழைக்கும் மக்கள்!


இதுபோக தமிழக அரசின் மாநில பட்டியலில் தான் மருத்துவம் சுகாதாரம் போன்ற அனைத்து விவகாரங்களும் இருந்தன. அதெல்லாம் படிப்படியாக காலி செய்யப்பட்டு வந்தது இன்று தேசிய மருத்துவ ஆணையத்தின் மூலமாக அது ஒட்டுமொத்தமாக முடிவுக்கு வரும் நிலைக்கு வந்துவிட்டது. நீட் தேர்வு மூலமாக மருத்துவ இடங்கள் பறிபோனது. தேசிய மருத்துவ ஆணையத்தின் மூலமாக ஒட்டுமொத்த அரசு மருத்துவமனைகளும் பறிபோகப் போகிறது. நீட்டின் தொடர்ச்சி தான் தேசிய மருத்துவ ஆணையம்.

தனியார்மயத்தின் ஏஜெண்டு தான் தேசிய மருத்துவ ஆணையம்; நீட் கியூட் அனைத்தும் தனியார்மயப்படுத்தத்தான். கல்வியை மாநில பட்டியலுக்குக் கொண்டு வருவதற்கான போராட்டத்தையும் தனியார்மயத்தை ஒழித்துக் கட்டுவதற்கான போராட்டத்தைத் தீவிரப் படுத்தும்போது தான் மருத்துவம் என்பது தரமாகவும் சேவை அடிப்படையிலும் கிடைக்கப் பெறும். செங்கோல் நிறுவப்பட்டது போதும், வேறு என்ன மோடி நமக்குச் செய்ய வேண்டும் என்ற ஆதீனங்கள் வழியில் நாம் சென்றால் கழுத்தில் கத்தி வைக்கப் போவது நிதர்சனமான உண்மை.


தோழர் ரவி,
மாநில ஒருங்கிணைப்புக்குழு,
பு.மா.இ.மு, தமிழ்நாடு.
9444836642.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க