முதலில் பிள்ளையாரை உடைப்போம்! | பெரியார்

சொல்லப்போனால், பிள்ளையார் உடைப்பு இயக்கம் எடுப்பது முன்னிலும் இப்போது முக்கியமானதாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ் பாசிச கும்பலுக்கு, பிள்ளையார் என்பது இஸ்லாமிய, கிறிஸ்துவ மக்கள் மீது வன்முறை தொடுப்பதற்கும் கலவரங்களை கட்டமைப்பதற்குமான கருவியாக உள்ளது.

1953-இன் தொடக்கத்தில் பெரியார் கடவுள் சிலைகளை உடைக்கும் இயக்கத்தை முன்னெடுத்தார். அதன்பொருட்டு, முதலில் பிள்ளையார் சிலைகளை உடைக்கலாம் என்று முடிவுசெய்யப்பட்டு, பல மாதங்கள் பிரச்சாரம் செய்து திராவிடர் கழக தோழர்களால் தமிழ்நாடு முழுக்க பிள்ளையார் சிலைகள் உடைக்கப்பட்டன. இது பார்ப்பன கும்பலை பின்னெரிச்சல் முன்னெரிச்சல் அடைய வைத்தது.

பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் வழக்கை விசாரித்த நீதிபதி, “இவர்கள் திடீரென்று உடைக்கவில்லையே! பிள்ளையார் உருவ உடைப்பைப்பற்றி 3-மாத காலமாக பிரச்சாரம் செய்து வந்தார்கள். அவர்கள் உடைக்கும் இடத்திற்கு முட்டாள் தனமாக நீங்கள் ஏன் போனீர்கள்? போய் ஏன் வயிற்றெறிச்சல் படுகிறீர்கள்” என்று கேட்டதால் பார்ப்பன கும்பலின் மூக்கு உடைபட்டு போனது.

ஆனால், அப்போது இருந்ததைக் காட்டிலும் நிலைமை இப்போது மோசமடைந்துள்ளது. சொல்லப்போனால், பிள்ளையார் உடைப்பு இயக்கம் எடுப்பது முன்னிலும் இப்போது முக்கியமானதாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ் பாசிச கும்பலுக்கு, பிள்ளையார் என்பது இஸ்லாமிய, கிறிஸ்துவ மக்கள் மீது வன்முறை தொடுப்பதற்கும் கலவரங்களை கட்டமைப்பதற்குமான கருவியாக உள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்டு பல மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ். சங்க பரிவார கும்பல் கால் ஊன்றுவதற்கு இந்த பிள்ளையார் சதுர்த்தியும் ஒரு காரணமாக அமைந்தது. ஒவ்வொரு ஆண்டும், பிள்ளையார் சதுர்த்தி உள்ளிட்ட இந்து பண்டிகைகளிகளின் போதும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத கும்பல் எங்கெங்கெல்லாம் சிறுபான்மையினருக்கு எதிராக கலவரத்தைத் தூண்டும் என்ற அச்சத்திலேயே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, பெரியாரை போல ஆர்.எஸ்.எஸ் காவி கும்பலுக்கு எதிராக களத்தில் இறங்கி வேலைசெய்ய வேண்டிய தேவை தற்போது அதிகரித்துள்ளது.

***

முதலில் பிள்ளையாரை உடைப்போம்!

ம்மை சூத்திரனாக தாழ்ந்த ஜாதி மகனாகப் பிறப்பித்து இன்னொருவனை மேல் ஜாதிக்காரனாக, பிராமணனாகப் பிறப்பித்து ஒருவன் சதா காலமும் உழைத்துப் போட்டு ஒன்றுமில்லாமல் வாடவும், தற்குறியாய் இருக்கவும், இன்னொருவன் பாடுபடாமல், உழைக்காமல், மேல் ஜாதிக்காரனாக இருக்கவுமான அமைப்புக்குக் காரணமாக இருக்கிற இன்றைய கடவுள்கள் என்பவைகளை ஒழிக்க வேண்டும். உடைத்துத்தள்ள வேண்டும்.

ஓவ்வொரு கடவுளாக உடைக்கும் பணியை திராவிடர் கழகம் விரைவிலே ஆரம்பிக்கப் போகிறது. அதற்காக விரைவில் ஒரு நாள் போடப் போகிறேன். சென்னை சென்றவுடன் நாள் குறித்து “விடுதலை”யில் எழுதுவேன். திராவிடர் கழக தோழர்களே! தயாராக இருங்கள்!

கடவுள் என்று சொல்லப்படுகிற இந்த பொம்மைகளை ரோட்டிலே போட்டு உடைப்பதற்கு, விரைவில் நாள் தரப் போகிறேன். இப்போதே மண்ணுடையாரிடம் சொல்லி வைத்து அட்வான்சாக ‘கடவுள்’ என்று சொல்லப்படுகிற உருவத்தைப் போல மண்ணிலே செய்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்; அல்லது கடைகளிலே விற்கிறதே வர்ண பொம்மைகள் அதையாவது வாங்கி ரெடியாக வைத்துக் கொள்ளுங்கள்.

நான் தேதி கொடுத்தவுடன் பொம்மைகளை எடுத்துக் கொண்டு கூட்டம் சேர்த்துக் கொண்டு ஏதாவது ஒரு இடத்திலே நடுரோட்டிலே, முச்சந்தியிலே பலர் கூடுகிற இடத்திலே கொண்டு போய்ப் போட்டு, “இன்ன காரணத்துக்கு ஆக பொம்மையை உடைக்கிறேன்; என்னை கீழ் ஜாதியாகப் பிறப்பித்ததற்கு ஆக உடைக்கிறேன் என்னை சூத்திரன் – வேசி மகன் என்று கற்பித்ததற்காக உடைக்கிறேன்” என்பதாகச் சொல்லிக் கொண்டு உடைக்க வேண்டும்!

உடைப்பதற்கு முதல் “கடவுளாக” எல்லோரும் எதுவும் செய்வதற்கு முதலாக பிள்ளை போட்டு ஆரம்பிப்பார்களே, அந்தப் பிள்ளையாரையே தேர்ந்தெடுக்கிறேன்! தோழர்களே! தயாராய் இருங்கள்! பொம்மைகளை இப்போதிருந்தே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். விரைவில் நாள் கொடுப்பேன்.

விக்ரகங்களை உடைக்கிறேன் என்றவுடன், (குழவிக் கற்களை) கோயிலுக்குள் போய் புகுந்து உடைப்போம் என்று யாரும் கருதவேண்டாம். இந்தப்படி கோயிலுக்குள்ளே புகுந்து கலாட்டா செய்வோம் என்று யாரும் அஞ்ச வேண்டியதில்லை.

கோயிலுக்குள் ஒருவரும் போக மாட்டோம்; குயவரிடத்தில் மண் கொண்டு இன்றைய கோயிலில் இருக்கிற சாமியைப் போல செய்துதரச் சொல்லி, அல்லது கடைகளிலே விற்கிறதே வர்ணம் அடித்த பொம்மைகள் அதை வாங்கிக் கொண்டு வந்து, ஒரு தேதியில் இப்படி இதை உடைக்கப் போகிறோம் என்பதாக எல்லோருக்கும் தெரிவித்து விட்டு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு நடுரோட்டிலே போட்டு உடைப்போமே தவிர, கோயிலில் புகுந்து விக்ரத்தை பெயர்த்துக் கொண்டு வரும் வேலையையோ, அல்லது அவைகளுக்குச் சேதம் ஏற்படுகிற மாதிரியோ யாரும் நடந்துக் கொள்ளமாட்டார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இதுபற்றின பூரா விவரங்களையும் சென்னை சென்றவுடன் தெரிவித்து உடைப்பதற்கு தேதியும் கொடுக்கிறேன்.

இந்தப் புத்தாண்டு திட்டமாக சில காரியங்கள் செய்ய வேண்டுமென்று, “விடுதலை”யில் கொஞ்ச நாளைக்கு முன் எழுதியிருந்தேன். அதன் அடிப்படையிலேயே இந்தக் காரியம் துவங்கப்படுகிறது.

பல தோழர்கள் எனக்குப் பல ஊர்களிலிருந்தும் கடிதம் எழுதியிருக்கிறார்கள். அதாவது திராவிடர் கழகத்தார் கோவிக்குக்குள் புகுந்து கோயில் விக்கிரகங்களை சித்திரை துவக்க நாளில் உடைக்கப் போகிறார்கள் என்று கருதி பலத்த போலீசு பாதுகாப்பு வைத்திருப்பதாகவும், இந்தப்படி உடைக்கப் போகிறார்களா? என்று போலீசார் கழக நிர்வாகிகளைக் கூப்பிட்டுக் கேட்டதாகவும் இன்னும் சி.அய்.டி.கள் தொடருவதாகவும் எழுதியிருக்கிறார்கள்.

அதனால் தான் சொல்லுகிறேன் நாங்கள் கோயிலுக்குள்ளே புகுந்து அந்தக் கோவில் விக்ரகங்களை உடைப்போம் என்று யாரும் பயப்படத் தேவையில்லை என்று.

மேலும் இந்த நாட்டில் வழிவழியாய் இருந்து வரும் சமுதாய அமைப்பை விளக்கியும் இப்படிபட்ட அமைப்பின் காரணமாக ஒரு ஜாதி வேதனைப்படவும், இன்னொரு ஜாதி சுகப்படவுமான தன்மை இருந்து வருகிறது என்பதைத் தெளிவுபடுத்தி, வேத சாஸ்திரங்கள் என்பவைகளின் பித்தலாட்டத்தை விளக்கியும், இந்தக் கடவுள்கள் என்பவைகளின் யோக்கியதையை விளக்கியும், நடத்தையின் ஆபாசங்களை எடுத்துக் காட்டியும், இன்றைய சமுதாய அமைப்பு மாறினால் தான் இந்த நாட்டில் இருக்கிற கஷ்டங்களுக்குப் பரிகாரம் காண முடியுமே தவிர, பொருளாதார உரிமை, ஜனநாயகம் என்று பேசிக் கொண்டிருப்பதால் எந்தவித பலனும் ஏற்பட்டு விடாது!

விடுதலை நாளிதழ் (04-05-1953)


படிக்க: நூல் அறிமுகம் : பிள்ளையார் அரசியல்


தோழர்களே 27.05.1953 ஞாபகமிருக்கட்டும்

பிள்ளையார் உருவத்தை உடைப்பதில் ஒன்றும் அதிசயப்படவேண்டியதில்லை. தயங்க வேண்டியதில்லை! பிள்ளையார் சதுர்த்தி பண்டிகையின் போது நாடு முழுவதும் எத்தனை எத்தனை ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான மண்ணு பிள்ளையாரை மக்கள் குயவனிடம் வாங்கி பிள்ளையார் சதுர்த்தி முடிந்தவுடன் கடலில் ஆற்றில் ஓடையில் ஏரியில் குளத்தில் கிணற்றில் புனலில் வயலில் எறிந்து விடுகிறார்கள். அது உடன் கரைந்து நீரோடு நீராக மண்ணோடு மண்ணாக ஆகி விடுவதில்லையா? இது தெரிந்தே மக்கள் நீரில் போடுவதில்லையா? அதுபோன்ற செய்கை தான் இந்த உடைத்துத் தூளாக்கி மண்ணோடு மண் ஆக்குவதுமாகும்.

நாம் காசு போட்டு வாங்குகிறோமே ஒழிய வேறு எந்த மனிதனுக்கும் உரிமை இருக்கிற வஸ்துவிடமும் நாம் செல்லவில்லை. தொடவில்லை. நாமாக வாங்கி உடைப்பதும் நமக்குப் பிள்ளையார் கடவுளல்ல! வேத சாஸ்திர ஆதாரம் என்பதின்படியும் அது – கணபதி கடவுளல்ல! கடவுளுக்கு எந்த உருவமும் இல்லை! கணபதி கடவுள் என்பதால் மனிதன் காட்டுமிராண்டி ஆக்கப்படுகிறான். அதற்கு கோவில் பூசை நைவேத்தியம் உற்சவம் முதலியவைகளால் நம் அறிவும் செல்வமும் நேரமும் முற்போக்கும் பாழாகிறது. உண்மையான கடவுள் என்பதும் நாஸ்திகமாகிறது.

கணபதிக்கு கற்பிக்கப்பட்டிருக்கிற பிறப்புக்கும் குணங்களுக்கும் மிகுதியும் கீழ்த்தரமானவை அறிவுள்ள மானமுள்ள கடவுள் தன்மை அறிந்த மக்களுக்கு ஏற்றதல்ல. பொறுத்துக் கொள்ளக் கூடியதல்ல! காட்டுமிராண்டி காலத்தில் 1000-2000 ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டினரால் ஏற்பட்ட இந்த தேவர் – தெய்வங்கள் உணர்ச்சியே தான் இந்த 1953-ஆம் (விஞ்ஞான) ஆண்டிலும் நமக்கு இருக்க வேண்டுமா?

ஆற்றங்கரையில் மூக்கைப்பிடித்து ஜெபித்துக் கொண்டு ஏழையாய் பிச்சை எடுத்து வாழ்ந்து கொண்டிருக்க வேண்டிய பிராமணர் (பார்ப்பான்) இன்று சக்கரவர்த்தியாக அதாவது 565- தேசங்களுக்கு தேசாதிபதியாக பிரதமாக இருந்து உரிமை அடையும்படி தனது நிலையை மாற்றிக் கொண்டிருக்கும் போது கல்லை- செம்பை- மண்ணை- அழுக்கு உருண்டையை வணங்கிக் கொண்டிருக்கச் செய்யப்பட்ட காட்டுமிராண்டிகளான நாம் மனிதத் தன்மை பெற்று உண்மை சத்தியம் (சத்து) கண்டுபிடித்து மண் பொம்மையை அழிக்கப்படாதா என்று கேட்கிறேன்.

இதில் அக்கிரமம் அநீதி அசத்தியம் அறிவில்லாமை அடாது செய்தல் என்ன இருக்கிறது? யார் தான் ஆகட்டும்! ஆத்திரப்படக் காரணம் என்ன இருக்கிறது? மற்றும் இன்று ஆரியப் பார்ப்பனர்களில் சங்கராச்சாரி பார்ப்பனர் முதல் மடிசந்தி பார்ப்பனர் ஈறாக அரசியல் பார்ப்பனர் முதல் சீர்த்திருத்த பார்ப்பனர் ஈறாக ஜட்ஜீ பார்ப்பனர் முதல் அட்டண்டர் பார்ப்பனர் ஈறாக லஞ்சம் ஃபோர்ஜரி பாங்கி மோசடி பார்ப்பனர் முதல் குச்சு நுழைவு மாமா குடி சூதாட்ட பார்ப்பனர் வரை கட்டுப்பாடாக தமிழர்களை மனுகால சூத்திரராகச் செய்து வரும் பார்ப்பன ஆதிக்கப்பிரச்சாரத்திற்கு அரசியல், கல்வி, இயல், மத இயல்களில் செய்துவரும் நிரந்தர பந்தோபஸ்தான சுயநல ஏற்பாட்டிற்கு தமிழர்களே சூத்திரர்கள் பஞ்சமர் என்பவர்களே என்ன செய்யப் போகிறீர்கள்?

இதைவிட வேறு வழி இருந்தால் சொல்லுங்கள்- சூத்திர மந்திரிகளே!

சூத்திர பார்லிமெண்ட் சட்டசபை மெம்பர்களே! வைஸ் சேன்ஸ்லர் முதல் கல்விமான்களே! உலகப் பிரசித்தி கோடீஸ்வரர்களே! புலவர்களே! பிரபுக்களே! மாஜி ஜமீன்தார் களே! மாஜி மகாராஜாக்களே ஸ்ரீ-ல-ஸ்ரீ! ஸ்ரீ-ள-ஸ்ரீ!! பண்டார் சந்நிதிகளே சொல்லுங்கள். கேட்க தலை வணங்க சித்தமாக இருக்கிறேன்!

விடுதலை நாளிதழ் (07-05-1953)


படிக்க: பிள்ளையார்-கலவரம்-மதம்-அரசியல் | தோழர் அமிர்தா வீடியோ


விநாயகரை உடைத்தோம்!
இனி ஒரு முக்கிய வைணவக்கடவுளை உடைப்போம்!

நாமும் இந்தக் கடவுள் உடைப்புத் திட்டத்தை விட்டு விடாமல் உடைப்பதற்குப் பொருத்தமான நாளைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

அதற்கேற்றாற் போலவே மே மாதம் 27 ம் தேதி புத்தர் நாள் என்பதாகக் கொண்டாட வேண்டும் என்றிருந்தோம். அதற்கு ஆக சர்க்கார் விடுமுறையும் விட்டார்கள். புத்தர் நாள் தான் இந்த ஆரியக் கடவுள்கள் உடைப்புத் துவக்கத்திற்கு சரியான நாள் என்பதாக நாம் முடிவு செய்து முதலாவதாக எந்தச் சாமியை உடைப்பது என்று யோசித்து, எதற்கும் முதல் சாமியாக இழுத்துப் போட்டுக் கொள்கிறார்களே, அந்தச் சாமியாகி கணபதி உருவத்தை முதலாவதாக உடைப்பது என்று முடிவு கொண்டு மே மாதம் 27 ம் தேதியன்று உடைத்தோம்.

இந்தக் காரியமும், எப்படி ரயிலில் உள்ள இந்தி எழுத்துக்களை 500க்கு மேற்பட்ட ஊர்களில் 1000-க் கணக்கிலே, 10000-க் கணக்கிலே ஒருமித்து அழிக்கப்பட்டதோ அதைப் போலவே, இந்த விநாயகர் உடைப்பு ரயில் இல்லாத ஊர்களிலும் சேர்ந்து உடைக்கப்பட்டது! தமிழ்நாட்டின் எல்லா பாகங்களிலும், மூலைமுடுக்குகளிலும்கூட விநாயகர் உருவங்கள் செய்யப்பட்டு உடைக்கப்பட்டன.

ஆனால், இந்தப்படி நாம் உடைத்தால் விநாயகரே ஒழிந்துவிட்டதா? இல்லை. இன்னும் சொன்னால் இப்போது கொஞ்சம் அதிகமாயிற்று. சும்மா கிடந்த பிள்ளையாருக்கெல்லாம் பூஜை புனஸ்காரம் நடத்தினார்கள்.

அதைப்பற்றி நமக்குக் கவலை இல்லை. ஏனென்றால் முன்பு இருந்த 2 லட்சத்தோடு இப்போது ஒரு 3,000 சேர்ந்திருக்கலாம்.

அதனால் என்ன பலன்? இந்த 2 லட்சம் பிள்ளையார் ஒழியும் போது, தானாக இந்த 3,000 பிள்ளையாரும் ஒழிந்து தானே போகும்? அல்லது இப்போது புதிதாக இந்த 3000 பிள்ளையார்கள் போல் உற்பத்தியானதால் இந்த லட்சம் 2 பிள்ளையார்கள் ஒழியாமல் இவைகளால் பாதுகாத்து விட முடியுமா? அது ஒன்றும் இல்லை!

சும்மா எதிர்ப்பு என்கிற பேரால் விளையாடுகிறார்கள். ஆமாம் விளையாட்டுத்தான்; இதைப்பற்றி வேறு என்ன சொல்லுவது? ஏன் இந்தப்படி சொல்லுகிறேன் என்றால், நாம் ஒன்றும் விளையாட்டுக் காரியத்துக்காக இந்தச் சாமிகள் என்பவைகளை உடைக்கவில்லை.

இந்தச் சாமிகள் என்று கொண்டாடப்படுபவைகள் ஆபாசமானது, அசிங்கமானது, அக்கிரமமானது, நம்மை சூத்திரனாகவும், தாசி மகனாகவும், மற்றவர்களுக்கு உழைத்துப் போட்டுவிட்டு ஒன்றும் இல்லாமல் கிடக்க வேண்டியவனாகவும் வைத்திருக்கிறது. அன்னக்காவடிப் பார்ப்பானை, அழுக்குப் பிடித்த பார்ப்பானை, அயோக்கியப் பார்ப்பானை, மேல் ஜாதிக்காரனாகவும், பாடுபடாமல் ஊரார் உழைப்பிலேயே வயிறு வளர்ப்பவனாகவும், சுகபோக வாழ்வுக்காரனாகவும் ஆக்கி வைத்திருப்பது இந்தக் கடவுள் தான்.

எனவே நம்முடைய கீழ்நிலைமை காட்டுமிராண்டித் தன்மை ஒழிய வேண்டும் என்றால், இக்கடவுள்கள் என்பவைகள் ஒழிய வேண்டும் என்று இப்படிப் பல காரணங்களை எடுத்துச் சொல்லி நாம் இந்தக் கடவுள் என்பவைகளை உடைக்கிறோம்.

ஆனால், நமக்கு எதிர்ப்பாளர்கள், எதிரிகள் என்பவர்கள் இதற்குச் சரியான சமாதானம், தெளிவான பதில், நீ சொல்வது தப்பு, அப்படியல்ல, இப்படியல்ல என்று தெளிவான பதிலைச் சொன்னால் ஓப்புக் கொள்ள கொஞ்சம் கூட தயங்கமாட்டோம். அதை ஒருவருமே சொல்லவில்லையே! சொல்ல முடியவில்லையே! சும்மா! அதோ! அதோ! ராமசாமி நாயக்கன் சாமியை உடைக்கிறேன் என்கிறான். அதனால் நம்முடைய சாமி போச்சு, என்று வெத்துக் கூச்சலிடுவதும் அதற்கு என்ன செய்வதும் என்றால் புதிய சாமிகளை உற்பத்தி செய் என்பதும், தான் அவர்களால் செய்ய முடிந்தது.

சரி, புதிய சாமிகளை உண்டாக்குவது என்றால் யார் உண்டாக்குவார்கள்? ஏற்கெனவே பழைய சாமிகளுக்குக் கும்பிடு போடுகிறவன்தானே புதிய சாமிகளையும் உண்டாக்குவான்! இதுவரையிலே சாமி கும்பிடாதவன், அவைகள் எல்லாம் பித்தலாட்டம் என்று கருதி சொல்லிக் கொண்டிருப்பவன் அந்த சாமிகளையே உடைத்துத் தூள் தூளாக்கத் துணிந்தவன் எவனும் புதிய சாமிகளை உண்டாக்க மாட்டானே! அப்புறம் அதைப்பற்றி நமக்கென்ன கவலை. எப்போதும் முட்டிக் கொள்ளுகிற முட்டாள்கள் முட்டிக் கொண்டு போகட்டுமே! இதில் புதுசென்ன? பழசென்ன?

இன்னும், நாம் பிள்ளையார் உடைக்கிறோம் என்றவுடன், திராவிடர் கழகத்துக்காரனின் பிரச்சாரத்திற்கு எதிர் பிரசாரமாக நமது புண்ணிய புராணங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று ஏற்பாடு செய்து புராணப் பிரச்சாரம் செய்கிறார்கள். அதைப்பற்றியும் நமக்குக் கவலை இல்லை. நாமும் புராணங்களை எடுத்துச் சொல்லி அவைகளில் உள்ள ஆபாசங்களை, அநியாயங்களை, அக்கிரமங்களை, அறிவுக்குப் பொருந்தாத செயல்களை எடுத்துக் காட்டித்தானே அவைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்லுகிறோம்.

விநாயகரை உடைக்க வேண்டும் என்றால், விநாயகரைப் பற்றிய கதைகள், அவரின் புராணங்கள் எல்லாவற்றையும் எடுத்துக் காட்டித்தானே உடைக்க வேண்டும் என்று கூறுகிறோம். அதுபோலவே இராமயணத்தைக் கொளுத்த வேண்டும் என்றால், இராமாயணத்தை பக்கம் பக்கமாக கொளுத்த வேண்டும் என்றால் இராமாயணத்தை பக்கம், பக்கமாக, காண்டம், காண்டமாக எடுத்துக் காட்டித்தானே கொளுத்த வேண்டும் என்று கூறுகிறோம்.

நாம் ஒன்றும் சும்மா உடைக்க வேண்டும் – கொளுத்த வேண்டும் என்று சொல்லவில்லையே! இன்னும் சொல்லப் போனால் புராணங்களை அவர்கள் பிரச்சாரம் செய்வதன் மூலம், அந்தப் புராணங்கள் என்பவைகளின் யோக்கியதை என்ன என்பதை எல்லா மக்களுக்கும் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படும். ஆதலால் இப்படிப்பட்ட எதிர்ப்பு பிரச்சாரங்கள் பற்றியும் புதிய சாமிகள் உற்பத்தியைப் பற்றியும் நமக்குக் கவலையில்லை. அதனால் ஒன்றும் நட்டம் ஏற்படவே ஏற்படாது!

நாம் விநாயகரை உடைத்தோமே, அதோடு நின்று விடவா போகிறது? இல்லை. இனி மேலும் தொடர்ந்து வரிசையாக இந்தக் கடவுள்களை உடைத்துக் கொண்டே வருவோம்.

முதலில் விநாயகரை உடைத்தோம். அது ஒரு சைவ முக்கிய கடவுள் ஆகும். இனி அடுத்தபடியாக ஒரு வைணவ முக்கிய கடவுளை உடைப்போம். இதைப்போலவே அல்லது அல்லது வேறு அந்தச் சாமியின் விசேஷ நாளிலே உடைப்போம் – உடைக்கத்தான் போகிறோம். இப்போதே சொல்லி வைக்கிறேன் எல்லோரும் தயார் செய்து கொள்ளுங்கள்!

(05-07-1953 அன்று திருச்சியில் நடந்த திராவிட நாடு பிரிவினை நாள் பொதுக் கூட்டத்தில் பெரியார். விடுதலை நாளிதழ் 11-07-1953)விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க