புதுச்சேரி காமாட்சி அம்மன் கோயில் நிலத்தை அபகரித்துள்ள பி.ஜே.பி எம்எல்ஏக்கள்

மோசடியின் முதன்மைக் குற்றவாளிகளான பிஜேபி எம்எல்ஏக்கள் ஜான்குமாரும், ரிச்சர்ட் ஜான்குமாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

புதுச்சேரி மாநிலம், உழவர்கரை நகராட்சி, சாரம் வருவாய் கிராமத்தில் அமைந்துள்ளது காமாட்சி அம்மன் கோவில். இந்த கோவிலுக்கு சொந்தமான 64 ஆயிரம் சதுர அடி கொண்ட நிலத்தை சட்டவிரோதமாக கிரயம் செய்து  அபகரித்துள்ளனர், புதுச்சேரி பி.ஜே.பி எம்எல்ஏ க்களான ஜான்குமாரும், அவரது மகன் ரிச்சர்ட் ஜான் குமாரும். இந்நிலத்தின் சந்தை மதிப்பு 50 கோடி ரூபாய்.

புதுச்சேரி நகரத்தின் மையமான இடத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்கு 1935 ஆம் ஆண்டில் முத்துசாமி என்பவர் 64 ஆயிரம் சதுரஅடி நிலத்தை உயிலாக எழுதி வைத்துள்ளார். கோவிலுக்கு நிலத்தை எழுதி வைத்தவர் இறந்த பிறகு, அவர் எழுதிய உயிலை அவரே ரத்து செய்ததாகவும், வேறு ஒரு நபர் அனுபவிக்கலாம் என மாற்று உயிலை எழுதியதாகவும் மோசடி ஆவணம் தயாரித்து பிஜேபி எம்எல்ஏக்கள் இருவரும் இந்த நிலத்திருட்டை செய்துள்ளனர்.

நில உரிமையாளரின் இறப்புச் சான்றிதழையும் போலியாக தயாரித்துள்ளனர். 1995 ஆம் ஆண்டு ஹலீல் பாஷா என்ற நோட்டரி முன்னிலையில் புதிய மோசடி உயிலானது பதிவு செய்யப்படுகிறது. 1995 தேதியிட்ட இந்த ஆவணத்தை தயார் செய்த நோட்டரியின் சீலில் பத்து எண்கள் கொண்ட செல்போன் எண் குறிப்பிடப்பட்டுள்ளது. BSNL நிறுவனத்தின் செல்போனே வராத காலத்தில் பதியப்பட்ட இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்ட அந்த எண் 2008 ஆம் ஆண்டில் இருந்துதான் செயல்படத் தொடங்கி இருக்கிறது. உயிலில் சாட்சி கையெழுத்திட்டவர்கள் யாரென்றே தெரியவில்லை.


படிக்க: வீரபத்ர சுவாமி கோவில் நிலம் காக்க விவிமு போராட்டம் !


இதன்பிறகு, பிஜேபி எம்எல்ஏக்கள் இருவர் மற்றும் அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் பெயரில் அந்நிலத்தை வீட்டுமனைகளாக பதிவு செய்ய ஆரம்பித்துள்ளார்கள். 2021 செப்டம்பர் 22 அன்று அவசரகால நடவடிக்கை என்ற பெயரில் வருவாய்த்துறை அதிகாரிகளால் பதிவு வேலைகள் உடனடியாக முடித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மூன்றே மாதத்தில் அவர்களது உறவினர்கள் பெயரில் பட்டா மாற்றப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் பத்திரப்பதிவு செய்யக் கோரிய மனுக்கள் ஆண்டுக்கணக்கில் காத்துக்கிடக்க பிஜேபி எம்எல்ஏக்களின் விண்ணப்பங்கள் மட்டும் மின்னல் வேகத்தில் நகர்ந்திருக்கின்றன.

இந்த மோசடிக்கு எதிராக கோவில் நிர்வாகத்தால் 2022-ஆம் ஆண்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நிலம் கிரயம் செய்யப்பட்ட காலகட்டமான 2021-இல் தாசில்தாராக இருந்த பாலாஜியும், நில அளவைத்துறையின் இயக்குநராக இருந்த ரமேஷும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட, அவர்கள் தலைமறைவானார்கள். வழக்குப்பதிவு செய்யப்பட்ட காலகட்டத்தில் பாலாஜி மீன்வளத்துறையின் இயக்குநராகவும், ரமேஷ் உழவர்கரை நகராட்சி ஆணையராகவும் இருந்தனர் என்பது அதிகாரவர்க்கத்தின் இயல்பான மக்கள் விரோதத்தன்மைக்கும், என்ன தவறு செய்தாலும் அதிகாரிகளால் தப்பித்துக் கொள்ள முடியும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

இந்த விவகாரம் தற்போது மக்கள் மத்தியில் ஆதாரப்பூர்வமாக அம்பலப்பட்டு போன நிலையில் மோசடிக்கு உடந்தையாக இருந்த மாவட்ட பதிவாளர் மற்றும் அதிகாரிகள் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால் மோசடியின் முதன்மைக் குற்றவாளிகளான பிஜேபி எம்எல்ஏக்கள் ஜான்குமாரும், ரிச்சர்ட் ஜான்குமாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.


படிக்க: அதிகாரவர்க்கத்தின் துணையோடு விதிகளை மீறிய ஜக்கி வாசுதேவ் !!


“மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் உண்மையாக பணியாற்ற வேண்டும். கோயில் சொத்துக்கள், பொதுச்சொத்துக்கள் என்பதால் எம்எல்ஏக்கள் அவற்றைப் பாதுகாக்க வேண்டும். அதனால் கோயில் நிலத்தை இரண்டு எம்எல்ஏக்களும் உடனே ஒப்படைத்து, தங்கள் நேர்மையை நிரூபிக்க வேண்டும். அத்துடன் தங்களை விசாரணைக்கும் உட்படுத்திக் கொள்ள வேண்டும்” என மென்மையாக கூறி விசாரணையைத் தள்ளி வைத்துள்ளார் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்.

சாதாரண பொதுமக்கள் மீதான வழக்குகளில் இந்த அணுகுமுறையை எப்போதாவாது நாம் காண முடியுமா?

மேற்கண்ட சம்பவத்தில் இருந்து இரண்டு விடயங்கள் முக்கியமானதாக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி சங்கப்பரிவார பாசிச கும்பல் கோவில்களையெல்லாம் இந்து சமய அறநிலையத்துறையிடம் இருந்து அதாவது அரசின் கையில் இருந்து பிடுங்க வேண்டும் என்று கூப்பாடு போட்டு வருகிறது. அறநிலையத்துறையின் கையில் கோவில்கள் இருக்கும்போதே அதிகாரவர்க்கத்தின் துணையோடு இந்தளவுக்கு கொள்ளையடிக்க முடிகிறது என்றால் தனியாரிடம் ஒப்படைத்தால் சங்கிக்கூட்டம் என்ன செய்யும் என்று யூகித்துப் பாருங்கள்.

மற்றொன்று அதிகார வர்க்கத்தில் உள்ளவர்கள் எத்தகைய தவறுகள் செய்தாலும், மோசடியில் ஈடுபட்டாலும் அவர்களை ஒன்றும் செய்ய முடியாத என்ற வகையில் இந்த அரசுக்கட்டமைப்பு உள்ளது என்பதுதான். இதைப் பயன்படுத்திக் கொண்டுதான் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலும் கிரிமினல் வேலைகளை செய்து வருகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

இந்த ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பலை விரட்டியடித்தால் தான் கோயில் சொத்துகளைக்கூட பாதுகாக்க முடியும்.


அய்யனார்

செய்தி ஆதாரம்: தீக்கதிர், ஜூனியர் விகடன்



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க