பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் 100-ஆம் ஆண்டு நினைவு தினம்!

லெனினது நினைவுகள் இன்றும் நமக்குத் தேவைப்படுகின்றன, நூற்றாண்டு கடந்தும் இந்திய உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்கான விடை தோழர் லெனின்.

1924 ஜனவரி 21 அன்று, அந்த செய்தியைக் கேட்ட பிறகு உலகப் பாட்டாளி வர்க்கம் உறைந்துதான் போனது. வார்த்தைகள் இல்லை; கண்களில் நீர் தாரைதாரையாய் வழிந்தது. உலகப் பாட்டாளி வர்க்கம் தன் தலைவனின், ஆசானின் ஈடு செய்ய முடியாத இழப்பை எண்ணி வருந்தியது.

இந்த ஆண்டு, நாடு கடந்து உலகப் பாட்டாளி வர்க்கத்தால் நேசிக்கப்பட்ட, 1917-இல் ரசிய சோசலிசப் புரட்சியை நிகழ்த்தி, அழுக்கு சட்டைகளின் அதிகாரத்தை நிலைநிறுத்திய தோழர் லெனினின் 100-ஆம் ஆண்டு நினைவுதினம்.

தோழர் லெனின் நோயுற்றிருந்த தருணத்தில் தோழர் ஸ்டாலின் அவரைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்: “தோழர் லெனினைப் பார்த்தவுடன் நமது மனதில் பட்டுத் தெறிக்கும் விசயம், செய்திகளை அறிவதற்கான அவரது தணியாத தாகம்; கடமையாற்றுவதற்கான அடங்காத – அடக்கவே முடியாத அவரது துடிப்பு; இவற்றில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால், அவர் ஏதோ பட்டினி போடப்பட்டவர் போல காணப்பட்டார் என்பது தெளிவாகத் தெரிந்தது”.

“எல்லா உழைப்பாளர்களின்பாலும் அவரது நெஞ்சம் ஆர்வமிக்க அன்பு கொண்டு துடித்தது” என்று “லெனின் சமகாலத்தவர்களின் நினைவுகள்” என்ற நூலில் குறிப்பிடுகிறார் கர்பீன்ஸ்கி.

“லெனின் மனிதக்குலம் அனைத்துக்கும் மேலே நிற்கிறார், நமக்குப் புலப்படாத உண்மைகளைத் தமது அசாதாரண சிந்தனைத்திறன் காரணமாகவே அவரால் காண முடிகிறது என்று எனக்குத் தென்பட்டது” எனக் கூறுகிறார் போல்ஷ்விக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான அலெக்சாந்தரா கொலந்தாய். ரத்தக்களறியும் குழப்பமும் நிறைந்த அந்தக் காலகட்டத்தில் லெனினது அச்சமற்ற உறுதியைக் கண்டு வியக்கிறார் கொலந்தாய். ஆம், அவரது அசாதாரண சிந்தனைத்திறன் என்பது மார்க்சியத்தைத் தொடர்ச்சியாக இடைவிடாமல் நடைமுறையில் இருந்து கற்றுக்கொண்டிருந்ததோடு தொடர்புடையது.


படிக்க: சாமானிய உழைப்பாளி மக்களை லெனின் நேசித்தார் – கர்பீன்ஸ்கி


லெனின் ஒரு புரட்சியாளர் என்பதற்காக மட்டும் நாம் அவரை நினைவுகூரவில்லை, பாட்டாளி வர்க்கத்திற்காக மண்ணில் ஒரு சொர்க்கமான சோசலிச ரஷ்யாவிற்கு அடித்தளமிட்டவர்; பாட்டாளி வர்க்க அரசு வந்தவுடன் பெண்களின் கைகளிலிருந்து கரண்டிகளையும், துணிகளையும், பாத்திரங்களையும் பிடுங்கி எறிந்துவிட்டு அவர்களது கைகளில் புத்தகங்களையும், டிராக்டர்களையும் கொடுத்து, உழைப்பு சுரண்டலிலிருந்து விடுவித்த பெண்ணியவாதி; ரஷ்ய நாட்டை மின்மயமாக்கியவர்; பொது சுகாதாரக் கட்டமைப்பு, பொது ரேசன், மகளிருக்கு சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு, ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை இலவசக் கல்வி, தொழிலாளர்களுக்கு எட்டு மணிநேர வேலை, எட்டு மணிநேர ஓய்வு, எட்டுமணி நேர உறக்கம் என உலகப் பாட்டாளி மக்கள் குறைந்தபட்சமாவது பெற்றிருக்கிறோம் என்றால் அதன் அடிநாதம்தான் தோழர் லெனின்.

லெனினது நினைவுகள் இன்றும் நமக்குத் தேவைப்படுகின்றன, நூற்றாண்டு கடந்தும் இந்திய உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்கான விடை தோழர் லெனின்.

அம்பானி-அதானி கும்பலுக்கான மோடி-அமித்ஷாவின் பாசிச பேயாட்சியில், தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை மறுக்கப்படுகிறது; உழைக்கும் வர்க்கத்தின் வாழ்வாதாரங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு படையல் வைக்கப்படுகிறது; காவிகளின் சாதி-மதக் கலவரங்களால் உழைக்கும் மக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர்; போலி ஜனநாயக உரிமைகள் கூட பறிக்கப்படுகின்றன; பெண் என்பவள் அடிமை என்கிற பார்ப்பனிய சித்தாந்தத்திற்கு எதிராகவும் கார்ப்பரேட் சுரண்டலுக்கு தடையாகவும் இருப்பதால் பெண்களுக்கான மாதவிடாய்கால விடுப்பு மறுக்கப்படுகிறது. இத்தகைய கொடூர சூழலில் உழலும் இந்திய உழைக்கும் மக்களாகிய நமக்கு அமெரிக்க ஏகாதிபத்திய அடிமைத்தளையிலிருந்து விடுபடவும், பாசிச அபாயத்தை முறியடிக்கவும் தோழர் லெனின் தேவைப்படுகிறார்.

1914, முதல் உலகப்போர் காலகட்டத்தில் காவுத்ஸ்கி தலைமையிலான இரண்டாம் அகிலத் தலைவர்கள் மார்க்சியத்தைத் திரித்துப் புரட்டி புரட்சியை நீர்த்துப் போகச் செய்யும் பணியை செய்து கொண்டிருந்தனர்; புரட்சியெல்லாம் தேவையில்லை, முதலாளித்துவத்தின் கீழேயே மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்று முதலாளித்துவ அடிமைத்தனத்தைப் பரப்பிக் கொண்டிருந்தனர், சந்தர்ப்பவாதப் புதைசேற்றில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருந்தனர்; இன்னொரு பக்கம் ரசியாவில் மார்க்சியத்தை அறிமுகப்படுத்திய பிளக்கானவ் உள்ளிட்டோர் ஏகாதிபத்திய போர்களைப் பயன்படுத்தி உள்நாட்டில் புரட்சியை நடத்துவது பற்றிய பார்வையின்றி தேசவெறியில் மூழ்கினர்.

அந்தப் பிற்போக்கான சூழலில்தான், முதலாளித்துவத்தை ஆய்வு செய்து, “ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சககட்டம்” என்ற நூலின் மூலம் முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக பரிணமித்திருக்கிறது என்று உலகிற்கு அறிவித்தார் லெனின். ஏகாதிபத்தியமாய் வளர்ந்த முதலாளித்துவத்தை வீழ்த்த பாட்டாளி வர்க்கப் புரட்சிதான் தீர்வு என்று அதற்கான புரட்சிகர நடைமுறையையும், புதிய பாணியிலான போல்ஷ்விக்மயமான கம்யூனிஸ்ட் கட்சியையும் கட்டியமைத்தார். ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சி என்பது காலனிய நாடுகளின் விடுதலை எழுச்சியுடன் தொடர்புடையது என்று ஆசான் மார்க்சின் “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!” என்ற முழக்கத்துடன் “ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுங்கள்” என்ற முழக்கத்தை இணைத்து மார்க்சியத்தை லெனினியமாக வளர்த்தெடுத்தார்.

ரஷ்ய சோசலிசப் புரட்சி மூலம் உள்நாட்டு-வெளிநாட்டு ஏகாதிபத்தியங்களை ஒருசேர வீழ்த்தி, காலனிய நாடுகளின் விடுதலைக்கு ஒளியூட்டினார். அந்த ஒளியில்தான், சீனா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் புரட்சிகள் வெடித்தன. உலகின் ஆறில் ஒரு பங்கு மக்கள் உண்மையான விடுதலையை அடைந்தனர்.

மேலும், பாட்டாளி வர்க்கப் புரட்சியின் ஊடாகத்தான் உண்மையான தேசிய இன விடுதலையைப் பெற முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினார். தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை குறித்து கோட்பாட்டு ரீதியாகவும், பல்வேறு தேசிய இனங்கள் விருப்பப்பூர்வமாக ஒருங்கிணைந்திருந்த சோவியத் யூனியனை உருவாக்கி நடைமுறை ரீதியாகவும் வழிகாட்டினார், லெனின். ஒரு தேசிய இனம் மற்றொரு தேசிய இனத்தோடு சேர்ந்து வாழவே முடியாது என்ற முதலாளித்துவ தேசியவாதத்தை, கோட்பாடு, நடைமுறை ஆகிய இரண்டு அம்சங்களிலும் அடித்து நொறுக்கினார்.


படிக்க: பொதுவுடைமைவாதப் பத்திரிகை எப்படி இருக்க வேண்டும்? – தோழர் லெனின்


லெனினின் நினைவுநாளில், உழைப்பாளி வர்க்கத்தின் மீதான நேசமும், புரட்சியின் மீதான உறுதியும், மார்க்சியத்தை இடைவிடாது கற்றுக்கொண்டு செயல்படுத்திய அவரது அரசியல் மேதைமையும் நாம் அவரிடமிருந்து இறுகப் பற்றிக்கொள்ள வேண்டிய பண்புகள்.

எனினும், இவற்றையெல்லாம் தாண்டி, தோழர் லெனினது மகத்தான பங்களிப்புகளில் இன்று நாம் முதன்மையாக நினைவுகூர வேண்டியது, பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு வழிகாட்டுகின்ற, உறுதிமிக்க ஒரு போல்ஷ்விக்மயமான கட்சியைக் கட்டியமைத்ததைத்தான். ஏனெனில், இன்றைய உலகப் பாட்டாளி வர்க்கத்தின் முதன்மைத் தேவை அதுதான். ஏகாதிபத்திய-முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிரான பாட்டாளி வர்க்கத்தின் ஆயுதம் அமைப்பு, “அமைப்பு மட்டுமே!”

கம்யூனிஸ்ட்டுகளின் பணி தொழிற்சங்கப் போராட்டங்கள் என்று புரட்சியிலிருந்து தொழிலாளி வர்க்கத்தைப் பிரித்து, முதலாளித்துவத்திற்கு சேவைசெய்த லெனின் காலத்து திரிபுவாதிகளைப் போல இன்றும் சித்தாந்தத்தை, கொள்கைகளை முதலாளித்துவத்திடம் அடகுவைத்துவிட்டு சொல்லில் சோசலிசம் பேசுகின்ற பலவண்ண திரிபுவாதிகள் உலகெங்கும் இருக்கின்றனர்.

உலகெங்கும் நடைபெறுகிற உழைக்கும் வர்க்கப் போராட்டங்கள், எழுச்சிகளைப் புரட்சியை நோக்கி வளர்த்துச் செல்லாத இத்திரிபுவாதிகள்தான் புரட்சியின் தடையரண்கள். மனிதவளம், இயற்கைவளம் என ஒட்டுமொத்த புவிக்கோளத்தையும் தனது கட்டற்ற லாபவெறிக்காக சுரண்டும் முதலாளித்துவத்தால் பட்டினி, பசி, போர், அகதிகளாகப் புலம்பெயர்வு, தேசிய இன அடக்குமுறைகள், சூழலியல் நெருக்கடிகள் என உலகமே பேரிடர்களை எதிர்கொண்டிருக்கிறது. இந்த வலிகளுக்கு விடுதலையும், இளைப்பாறுதலும் கொடுப்பது பாட்டாளி வர்க்கப் புரட்சி மட்டுமே! அத்தகைய புரட்சியை நடத்துவதற்குரிய, லெனினியக் கட்சியை உடனடியாகக் கட்டியமைப்பதன் மூலமே இந்தியப் பாட்டாளி வர்க்கமாகிய நாம் தோழர் லெனினை நினைவுகூர்வதற்கு உரிமையுள்ளவர்களாவோம்!


இனியன்

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க