மீண்டும் டெல்லி சலோ: பாசிஸ்டுகளை வீழ்த்த மக்கள் போராட்டங்களே திறவுகோல்!

2022-23 பட்ஜெட்டில் வேளாண் துறைக்கான நிதியை பாதியக குறைத்தது பாசிச மோடி - நிம்மி கும்பல். இதுபோன்று பல்வேறு வழிமுறைகளில் வேளாண் துறையை அதானி - அம்பானி போன்ற கார்ப்பரேட் கும்பலுக்கு படையல் வைப்பதற்கு நயவஞ்சகமாக முயன்று வருகிறது மோடி அரசு.

வம்பர் 19, 2021 அன்று பாசிச மோடி அரசாங்கம் விவசாயிகளின் ஒன்றரை ஆண்டு வீரம் செறிந்த போராட்டத்திற்கு பணிந்து மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றது. குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக்குவது, மின்சார திருத்த மசோதாவை திரும்ப பெறுவது, விவசாயிகளின் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெறுவது என பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மோடி கும்பல் அன்று வாக்குறுதி அளித்தது. நமது ’பிதாமகன்’ மோடியின் வாயில் இருந்து வாக்குறுதிகள் வந்தால் என்ன ஆகும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே!

இன்றுவரை பாசிச மோடி கும்பல் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் மீண்டும் டெல்லி சலோ என்ற முழக்கத்தின் அடிப்படையில் விவசாயிகள் நாளை போராட்டத்தை அறிவித்துள்ளனர். விவசாய விலைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பீகார், கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.

சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஜ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200 விவசாய அமைப்புகள் நாடுமுழுவதும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளனர். அழைப்பை ஏற்று 3,000 டிராக்டர்கள், 20,000 – 30,000 விவசாயிகள் கலந்துகொள்ள உள்ளனர்.  விவசாயிகளை ஒடுக்குவதற்கு டெல்லி எல்லைப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, சாலைகள் முழுவதும் இரும்பு ஆணிகள் தடுப்புகள் கான்கிரீட் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 7 மாவட்டங்களில் இணைய சேவைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மூன்று வேளாண் சட்ட மசோதாக்களில், விவசாயிகளின் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) பற்றி வேளாண் சட்டத்தின் எந்தவொரு பகுதியிலும் குறிப்பிடவில்லை. 23 விவசாய விளைப் பொருட்களுக்கு மட்டுமே குறைந்த பட்ச ஆதாரவிலை மத்திய அரசு கொடுத்துவருகிறது. சந்தை விலை ஏற்ற இறக்கத்திலிருந்து விவசாயிகளை காப்பதே இந்த MSP தான். MSP இருந்தால் தான் குறைந்தபட்சம் விளைபொருட்களுக்கான உள்ளீட்டு செலவையாவது விவசாயிகள் திரும்ப பெறமுடியும்.

அதிகப்படியான விவசாயப்பொருள்களை MSP-க்குள் கொண்டுவருவதும் அதனை அரசே கொள்முதல் செய்வதும்தான் (APMC மூலமாக) விவசாயிகளை காப்பாற்ற இருக்கக்கூடிய குறைந்தபட்சத் தீர்வு. ஆனால் வேளாண் சட்டமோ MSP, APMC இனி இல்லை என்கிறது. விவசாயப் பொருட்களை கார்ப்பரேட்டிடம் விற்கச் சொல்கிறது. எனவே தான் விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலையை உத்தரவாதப்படுத்த அதனை சட்டமாக்க வேண்டும் என்பதை விவசாயிகள் முக்கிய கோரிக்கையாக வைத்துள்ளனர். இன்று வரை அதற்காக போராடியும் வருகின்றனர்.


படிக்க: பாசிச மோடியின் ஆட்சியை வீழ்த்த டெல்லியை முற்றுகையிடும் விவசாயிகளை வரவேற்போம்!


மூன்று வேளாண் விரோத சட்டங்களைத் திரும்பப் பெறும்போது, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான குழுவை அமைப்பதாக உறுதியளித்த எட்டு மாதங்களுக்குப் பிறகு, ஜூலை 19, 2022 அன்று குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) குறித்த குழுவை மத்திய அரசு அமைத்தது.   இக்குழுவின் தலைவராக முன்னாள் வேளாண் துறை செயலாளர் சஞ்சய் அகர்வால்  நியமிக்கப்பட்டுள்ளார். மூன்று வேளாண் சட்டங்களையும் உருவாக்கியவர் இவரே. மேலும் ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பலின் ஆதரவாளர்கள் இக்குழுவில் இடம் பெற்றனர் இந்த யோக்கியர்கள் தான் விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நியமிக்க இருந்தார்கள்.

மேலும் 2022-23 பட்ஜெட்டில் வேளாண் துறைக்கான நிதியை பாதியக குறைத்தது பாசிச மோடி – நிம்மி கும்பல். இதுபோன்று பல்வேறு வழிமுறைகளில் வேளாண் துறையை அதானி – அம்பானி போன்ற கார்ப்பரேட் கும்பலுக்கு படையல் வைப்பதற்கு நயவஞ்சகமாக முயன்று வருகிறது மோடி அரசு. விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தின்று ஏப்பம் விட்டு விவசாயிகளை ஒடுக்கி வருகிறது.

பாசிஸ்டுகளை வீழ்த்துவதற்கான ஒரே திறவுகோல் ஒன்றிணைந்த மக்கள் போராட்டங்களே! அதற்கு நாம் விவசாயிகளிடம் இருந்தே கற்க வேண்டி உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஹரியானா மாநிலத்தில் ஆர். எஸ். எஸ் வானரப் படைகளால் கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டபோது இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக விவசாய சங்கங்களால் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதேபோல், மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்; சமீபத்தில் நாடாளுமன்றத்தில் புகை குப்பி வீசிய இளைஞர்களுக்கு ஆதரவாக நின்றன. டெல்லி  சலோ போராட்டத்தில் பெற்ற வர்க்க உணர்வே விவசாயிகளைப் பிற தரப்பு உழைக்கும் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கச் செய்துள்ளது.

இந்த வர்க்க உணர்வை வரித்துக் கொண்டு ”விவசாயத்தில் கார்ப்பரேட் ஆதிக்கத்தை திணிக்காதே! மரபணு மாற்றப்பட்ட விதைகளை தடை செய்! விலை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம்  விவசாயிகளுக்கே!” போன்ற கோரிக்கைகளை முன்வைத்து முன்னேற வேண்டும். அதேபோன்று அனைத்து வர்க்கங்களும் அவரவர் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இவைதான் பாசிஸ்டுகளை வீழ்த்தும்!


இருள்மதி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க