குறைந்தபட்ச ஆதாரவிலைக்கான போராட்டமும் – பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசின் இன்றியமையாத் தேவையும்

குறைந்தபட்ச ஆதாரவிலை என்பது விவசாயிகளுக்கு லாபம் தருவதாக இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, உற்பத்தி, பதப்படுத்துதல், விநியோகம் என அனைத்திலும் அரசின் பங்களிப்பு இருக்க வேண்டும். இதை சட்டப்பூர்வமாக உறுதி செய்யும்போதுதான் இந்திய விவசாயிகளின் வாழ்க்கையில் ஒளி வீசும்.

வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. டெல்லிக்குள் நுழைவதற்காக பஞ்சாப், அரியானா எல்லைப் பகுதிகளில் குவிந்துள்ளனர் விவசாயிகள்.

இந்நிலையில், பாசிச மோடி அரசை கண்டித்து அரியானாவில் விவசாயிகள் பிப்.17 அன்று பேரணி நடத்தினர். அதேபோல் பஞ்சாபில் முக்கிய நகரங்களில் உள்ள பாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிட்டு தர்ணா போராட்டமும் நடத்தியுள்ளனர்.

இதற்கிடையே, ஷம்பு எல்லையில் பேட்டியளித்த விவசாய சங்கத் தலைவர் சர்வன் சிங் பந்தேர் “விசாயிகள் போராட்டத்திற்கு தீர்வு காண நினைத்தால் குறைந்தபட்ச ஆதார விலைக்கான அவசர சட்டத்தை ஒரே இரவில் ஒன்றிய அரசு கொண்டு வரலாம். அதன் பிறகு மற்ற கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம்” என்று கூறியுள்ளார். ஒன்றிய அமைச்சர்களுடன் இன்று நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில் பந்தேர் இவ்வாறு கூறியிருப்பது முக்கியமானது.

வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையை சட்டப்படி அமல்படுத்த வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் 2020 ஆம் ஆண்டில் டெல்லியில் நடத்திய மாபெரும் போராட்டத்திற்கான பிரதான காரணம், அந்தச் சட்டங்கள் குறைந்தபட்ச ஆதார விலை எனும் உரிமையை அடியோடு பறித்துவிடும் என்பதுதான்.


படிக்க: விவசாயிகள் போராட்டமும் எதிர்க்கட்சிகளின் சந்தர்ப்பவாதமும்


இந்தியாவில் விவசாயிகள் தொடர்ச்சியாக நட்டத்திற்கு ஆளாவதற்கும், அதன் காரணமாக ஏற்படும் நெருக்கடியின் காரணமாக லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்வதற்கும் அடிப்படையான காரணங்களில் மிகவும் முக்கியமானது குறைந்தபட்ச ஆதார விலை எனும் உரிமை விவசாயிகளுக்கு இல்லாததாகும்.

நெல், கோதுமை தவிர மற்ற வேளாண்பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை உறுதி செய்யப்படாத நிலையே இன்று உள்ளது. அதிலும் பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்களில் மட்டுமே நெல், கோதுமை ஆகியவை முழுமையாக அரசாங்கத்தால் கொள்முதல் செய்யப்படுகிறது. மற்ற மாநிலங்களில் இந்த நிலை இல்லை. பெரும்பாலும் இடைத்தரகர்களால்தான் கொள்முதல் செய்யப்படுகின்றன.

ஒரு பக்கம் அதிகமாகிக் கொண்டே செல்லும் மூலதனச் செலவுகள், இன்னொரு பக்கம் விலையேற்றத்தால் ஏற்படும் வாழ்வாதாரச் செலவுகளின் உயர்வு காரணமாக இந்திய விவசாயிகள் கடும் நெருக்கடியில் உள்ளனர். விவசாயிகளின் இந்த நெருக்கடியான பொருளாதார நிலையைப் பயன்படுத்திக் கொண்டு இடைத்தரகர்களும், கமிசன் மண்டிகளும் விவசாயிகளை சுரண்டுகின்றனர். நிர்ணயிக்கப்பட்ட விலைக்குக் குறைவாகவே விவசாயிகளிடம் கொள்முதல் செய்கின்றனர். இதையெல்லாம் தடுப்பதற்கு எந்த அரசும் எந்த நடவடிக்கையும்  எடுப்பதில்லை.

ஒன்றிய அரசு ஒவ்வொரு ஆண்டும் 23 பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையை நிர்ணயிக்கிறது. ஆனால் நெல், கோதுமை தவிர மற்ற பயிர்களுக்கு உறுதி செய்யப்பட்ட அரசு கொள்முதல் கிடையாது. இது விவசாயிகளை சந்தை சக்திகளின் பிடியில் விட்டுவிடுகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் அரசு நெல் கொள்முதல் செய்வதில் உள்ள ஊழலும், குளறுபடிகளும், அலட்சியமும் அதனால் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபடுவதும் வழக்கமான ஒன்றாக மாறிப் போய்விட்டது. மற்ற பயிர்களைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. அவற்றுக்கெல்லாம் குறைந்தபட்ச ஆதாரவிலை இருக்கிறதா என்பது பற்றி பெரும்பான்மையான விவசாயிகளுக்கே தெரியாத நிலைதான் உள்ளது.

இந்தியாவின் உணவு தானிய இருப்பை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று உலக வர்த்தகக் கழகம் அழுத்தம் கொடுக்கிறது. இதன் மூலம் கார்ப்பரேட்டுகள் சந்தையில் கொள்ளையடிக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். அதற்கேற்பவே ஒன்றிய அரசுகளும் செயல்பட்டு வந்தன. இந்திய உணவுக் கழகத்திற்கான மானியங்களை வெட்டுவது, கொள்முதலை குறைப்பது, மோசமான பராமரிப்பு இவையெல்லாம் உலக வர்த்தகக் கழகத்தின் ஆணைக்கு அடிபணிந்தே நடைபெறுகின்றன.

உண்மையில், இதுவரை அரசு கடைப்பிடித்து வந்த குறைந்தபட்ச ஆதாரவிலை என்பதே சந்தையில் முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு ஏற்பத்தான் நிர்ணயிக்கப்பட்டு வந்தது. சந்தை சக்திகளின் பிடியில்தான் ஏற்கெனவே விவசாயிகள் சிக்கிக் கொண்டிருக்கின்றனர். எந்த வித சுயசார்பு நிலையிலும் விவசாயிகள் வாழ அரசு உதவி செய்வது கிடையாது.

இதனால்தான் விளைபொருள்கள் அதிகமாக விளையும் போது சந்தை சக்திகளால் குறைவான விலை நிர்ணயிக்கப்பட்டு விவசாயிகள் கடன் நெருக்கடி, தற்கொலைக்குத் தள்ளப்படுவதும், விளைச்சல் இல்லாதபோது பதுக்கிவைக்கப்பட்ட விளைபொருள்களைக் கொண்டு கார்ப்பரேட், சந்தைக் கும்பல் கொள்ளையடிப்பதும் தொடர்ச்சியாக நடக்கிறது.


படிக்க: பாசிச அடக்குமுறைகளைத் தகர்த்து முன்னேறுகிறார்கள் விவசாயிகள்! போராட்டத்தீயை அணையாமல் பாதுகாப்போம்!


ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வரத் துடிக்கும் மூன்று வேளாண்திருத்தச் சட்டங்களோ குறைந்தபட்ச ஆதாரவிலை என்ற ஒன்றையே இல்லாமல் செய்து கார்ப்பரேட்டுகளிடம் கையேந்துபவர்களாக விவசாயிகளை மாற்றி விடும். மூலப்பொருள்கள், உற்பத்தி, பதப்படுத்துதல், விநியோகம் என எல்லா அம்சங்களிலும் விவசாயிகள் கார்ப்பரேட் கும்பலை நம்பி வாழ வேண்டிய மோசமான நிலைக்கு தள்ளப்படுவர். பன்மடங்கு விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரிக்கும். இதனையெல்லாம் தெளிவாக உணர்ந்துதான் விவசாயிகள் தீவிரமாக போராடுகின்றனர்.

குறைந்தபட்ச ஆதாரவிலை என்பது விவசாயிகளுக்கு லாபம் தருவதாக இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, உற்பத்தி, பதப்படுத்துதல், விநியோகம் என அனைத்திலும் அரசின் பங்களிப்பு இருக்க வேண்டும். இதை சட்டப்பூர்வமாக உறுதி செய்யும்போதுதான் இந்திய விவசாயிகளின் வாழ்க்கையில் ஒளி வீசும்.

விவசாயிகளின் போராட்டம் ஏற்படுத்திய நிர்ப்பந்தத்தால் தற்போது ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும் என்று கூறுகிறார். அதேபோல் பாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்துவதாக இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் அரசாங்கம் தற்போது அறிவித்துள்ளது. இவையெல்லாம் போராட்டம் ஏற்படுத்திய நிர்ப்பந்தத்தில் தான் அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர முழுமையான தீர்வை அளிக்கப் போவதில்லை. ஏற்கனவே கூறியபடி, கார்ப்பரேட் சந்தையின் ஆதிக்கத்திற்குட்பட்டே, உலக வர்த்தகக் கழகத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டுதான் இவர்களால் செயல்பட முடியும்.

இதனைக்கூட ஏகாதிபத்திய கார்ப்பரேட் கும்பலும், அதானி – அம்பானி கார்ப்பரேட் கும்பலும் விரும்பாது. இந்த தனியார்மய – தாராளமய பொருளாதார, நிர்வாக கட்டமைப்புக்குள், கார்ப்பரேட்டுகளின் அதிகாரக் கட்டமைப்புக்குள் நின்று கொண்டு இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழி எதுவும் இல்லை; ஏமாற்றங்கள்தான் மிஞ்சும்.

அப்படியெனில், தீர்வு தான் என்ன? விவசாயிகளுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரம் வழங்கக் கூடிய மாற்றுக் கட்டமைப்பை, அதாவது பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை உருவாக்குவதுதான் ஒரே தீர்வு. விவசாயிகளுக்கு எதிரான அனைத்து சட்டங்களையும் ரத்து செய்வதும், அவர்களுக்கான கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் ஏற்படுத்துவதும், நியாயமான விலை கிடைக்கச் செய்வதும் அப்போதுதான் சாத்தியமாகும். தனியார்மய – தாராளமய கொள்கைகளை முறியடித்து விவசாயிகளின் நலனை முதன்மையாகக் கொண்ட கொள்கைகளும், செயல்பாடுகளும் அங்குதான் சாத்தியமாகும்.

விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதார விலைக்கான போராட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தப் போராட்டத்தை பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை அமைப்பதற்கான போராட்டத்துடன் அடுத்தக்கட்டமாக இணைத்து எடுத்துச் செல்ல வேண்டும். விவசாயிகளை மட்டுமல்ல, நமது நாட்டின் விடிவிற்கான ஒரே தீர்வும் அதுதான்.


இனியன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



1 மறுமொழி

  1. உள்நாட்டு உற்பத்தியை குறைத்துவிட்டு இறக்குமதி செய்யவே அரசாங்கம் திட்டங்கள் கொண்டுவருகின்றன.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க