பாசிச அடக்குமுறைகளைத் தகர்த்து முன்னேறுகிறார்கள் விவசாயிகள்!
போராட்டத்தீயை அணையாமல் பாதுகாப்போம்!
விவசாயிகள் போராட்டம் 4-வது நாளை எட்டியுள்ளது. டெல்லிக்குள் நுழைவதற்காக பல்லாயிரக்கணக்கில் பேரணியாக வந்து அரியானா எல்லையில் முற்றுகையிட்டிருக்கின்றனர் விவசாயிகள்.
பாசிச பாஜக அரசின் அத்துணை அடக்குமுறைகளையும் தகர்த்தெறிந்து விட்டுத்தான் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். புல்டோசர்கள், முள் ஆணி தடுப்புகள், முள்கம்பி வேலிகள், தடுப்பு வேலிகள், டயர் கில்லர்கள், ஒலி (Sonic) ஆயுதங்கள், ட்ரோன்கள் மூலம் தொடர்ச்சியான கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல்கள் அனைத்தையும் எதிர்கொண்டுதான் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். விவசாயிகள் போராட்டம் நடத்தும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.
பாசிச மோடி அரசு தனது கார்ப்பரேட் எஜமானர்களுக்காக வெளிப்படையாக ஒரு போரை போராடும் விவசாயிகள் மீது நடத்திக் கொண்டிருக்கிறது.
அரியானா மாநிலம் ஷம்பு எல்லையில் போராட்டத்தில் பங்கேற்ற 63 வயதான விவசாயி கியான் சிங் கண்ணீர் புகைக்குண்டு வீச்சின் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார். அதேபோல் ஹரியானா மாநிலம் பானிபட் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ரயில்வே போலீஸ் அதிகாரியான ஹீரா லால் (65), ஷம்பு எல்லையில் நடத்தப்பட்ட கண்ணீர் புகைக்குண்டுவீச்சு தாக்குதலால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார்.
From amputations and fractures to corneal and head injuries, nearly 100 protesting farmers have been hospitalised with serious injuries after clashing with the Haryana Police on the Shambhu and Khanauri borders over the last 2 days#farmerprotests2024 #KisanAndolan2024 #Farmers pic.twitter.com/H2l9mnrwK0
— karamprakash (@karamprakash6) February 16, 2024
மேலும் ஷம்பு எல்லையில் ஹரியானா போலீசார் நடத்திய 20 நிமிட கண்ணீர் புகைக்குண்டு மற்றும் பெல்லட் குண்டு தாக்குதலில் 10 க்கும் மேற்பட்ட விவசாயிகள் காயமடைந்த நிலையில், 3 பேரின் கண்பார்வை பறிபோயுள்ளது. 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
படிக்க: பாசிச மோடி கும்பலை பணியவைக்கும்வரை விவசாயிகள் போராட்டம் ஓயாது
பிப்.16 அன்று ஹரியானாவில் உள்ள ரேவரியில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார் பாசிஸ்டு மோடி. “ராமரை கற்பனை என்றவர்கள் தற்போது ஜெய் ஸ்ரீராம் என்கிறார்கள்” என்று அந்தக் கூட்டத்தில் காங்கிரஸை விமர்சித்துப் பேசியுள்ளார். ஆனால் ஒரு வார்த்தை கூட விவசாயிகள் போராட்டம் பற்றியோ, கோரிக்கைகள் பற்றியோ பேசவில்லை. மக்கள் மீது எந்த மனிதாபிமானமும் இல்லாத, கொடூரமான மனநிலை கொண்ட பாசிச சர்வாதிகாரி எப்படி இருப்பான் என்பதற்கு இதை விட சிறந்த சான்று எதுவும் இருக்க முடியாது.
ஒருபக்கம் விவசாயிகள் மீது தாக்குதலை நடத்திக்கொண்டே, வக்கிரமாக இன்னொரு பக்கம் பேச்சுவார்த்தை நாடகத்தை பாசிச மோடி கும்பல் விவசாயிகளிடம் நடத்தியது. ஒன்றிய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் ஆகியோர் பேச்சுவார்த்தை நாடகத்தை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், பஞ்சாப் நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா ஆகியோரும் பங்கேற்றனர். 5 மணி நேரம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
உலகமே கவனிக்கும் வகையிலான ஒரு போராட்டத்தை விவசாயிகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் கார்ப்பரேட் ஊடகங்களோ விவசாயிகள் போராட்டத்தை ஒரு சாதாரண செய்தியைப் போல ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன. செய்தித்தாள்களும் உட்பக்க செய்தி என்ற அளவிற்கே எழுதிக் கொண்டிருக்கின்றன. இது மோடிகும்பலின் மீதான அச்சமும், கார்ப்பரேட் விசுவாசமும் அன்றி வேறென்ன?
பாசிச மோடி கும்பல், வேறு பிரச்சினைகளைக் கிளப்பிவிட்டு விவசாயிகள் போராட்டத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்கான முயற்சிகளை கண்டிப்பாக எடுக்கும். இதற்குத் தகுந்தாற்போலத்தான் முதுகெலும்பில்லாத கார்ப்பரேட் ஊடகங்கள் அனைத்தும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஆனாலும் விவசாயிகள் உறுதியாக, விடாப்பிடியாக போராடிக் கொண்டிருக்கின்றனர். நாடு முழுவதும் மக்கள் மத்தியில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு பெருகிக் கொண்டே வருகின்றது.
படிக்க: பிப்.16: விவசாயிகளின் நாடுதழுவிய போராட்டம் வெல்லட்டும்!
ஐக்கிய விவசாயிகள் முன்னணி – அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து கூட்டாக பிப் 16 அன்று நடத்திய நாடுதழுவிய தொழிலாளர் – விவசாயிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இலட்சக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.
பாசிச மோடி கும்பலுக்கு விவசாயிகள் போராட்டம் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நாளை (பிப்.18) மீண்டும் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் பாசிச மோடி அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறது. ஆனால் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை விவசாயிகள் பின்வாங்கப் போவதில்லை.
ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி – அம்பானி, அதானி பாசிசம் தான் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் முதன்மையான எதிரி. மக்கள் மத்தியில் இந்தக் கும்பல் அம்பலப்பட்டு விட்டது. இந்த பாசிசக் கூட்டத்தை வீழ்த்துவதற்கான பாதையில் கடும் அடக்குமுறைகளையும் தாண்டி விவசாயிகள் வீறுநடை போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இந்தப் போராட்டத்தீயை அணையாமல் பாதுகாக்க வேண்டும். அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் விவசாயிகளோடு ஒன்றிணைய வேண்டும். அப்போதுதான் இந்தப் பாசிசக் கும்பலை வரலாற்றின் குப்பைத் தொட்டியில் தூக்கியெறிய முடியும்.
இனியன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube