வங்கதேசத்தில் வெடித்த பிரம்மாண்டமான மாணவர் போராட்டம்

நேற்று (ஜூலை 15) டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் போராடிய நூற்றுக்கணக்கான மாணவர்களை ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் அமைப்பான சத்ரா லீக் அமைப்பினர் கற்களை வீசியும், தடிகள் – இரும்புக் கம்பிகளைக் கொண்டும் தாக்கினர்.

0

ங்கதேசத்தில் 1971 விடுதலைப் போராட்ட வீரர்களின் சந்ததியினருக்கு சிவில் சேவை வேலைகளில் கணிசமான இட ஒதுக்கீடு வழங்கும் முடிவை எதிர்த்து ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் தெருக்களில் இறங்கி உள்ளனர். அந்நாட்டின் பல்வேறு நகர்களில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

விடுதலைப் போராட்ட வீரர்களின் சந்ததியினருக்கு வேலைவாய்ப்பில் வழங்கப்பட்டு வந்த 30 சதவிகித ஒதுக்கீட்டை மீட்டெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து இந்த மாதத் தொடக்கத்தில் போராட்டங்கள் தொடங்கின. கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைத்த போதிலும் இப்போராட்டம் தொடர்ந்து வருகிறது.

ஜூலை 14 அன்று “பாகுபாட்டிற்கு எதிரான மாணவர் இயக்கம்” (Students Movement Against Discrimination) என்ற பதாகையின் கீழ், மாணவர்கள் நாட்டின் ஜனாதிபதி முகம்மது ஷஹாபுதீனிடம் ஒரு மனுவை சமர்ப்பித்தனர். அதில் வேலைக்கான இந்த இட ஒதுக்கீட்டை சீர்திருத்துவதற்குத் தேவையான சட்டத்தை இயற்றுவதற்கு நாடாளுமன்ற அவசரக் கூட்டத்தைக் கூட்டுமாறு கேட்டுக்கொண்டனர்.

வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில், ஜூலை 14 அன்று அரசாங்க வேலைகளுக்கான ஒதுக்கீட்டு முறையில் சீர்திருத்தம் கோரி ஜனாதிபதி மாளிகையை நோக்கி மாணவர்கள் அணிவகுத்துச் சென்றனர்.

நீதிமன்ற நடவடிக்கைகளைக் காரணம் காட்டி, மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பிரதமர் ஷேக் ஹசீனா மறுத்ததால், ஜூலை 14 இரவு போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்தன. மேற்குறிப்பிட்ட வேலைக்கான இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களை 1971 விடுதலைப் போரின் போது பாக்கிஸ்தான் இராணுவத்துடன் ஒத்துழைத்தவர்கள், ‘ரசாக்கர்கள்’ என்று ஷேக் ஹசீனா முத்திரை குத்தினார். அவரது கருத்துகள், ஆயிரக்கணக்கான டாக்கா பல்கலைக்கழக மாணவர்களைத் தங்கள் தங்குமிடங்களை விட்டு நள்ளிரவில் வெளியேறி எதிர்ப்புத் தெரிவிக்கத் தூண்டியது.

டாக்கா பல்கலைக்கழக மாணவர்களைத் தொடர்ந்து மற்ற அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


படிக்க: வங்கதேச ஆயத்த ஆடை தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கான போராட்டம் வெல்லட்டும்!


தற்போது கொண்டுவரப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டு முறை பாரபட்சமானது என்றும், ஏற்கெனவே ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருப்பவர்களை அரசு வேலைகளில் நியமிக்க வழிவகை செய்கிறது என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் கூறுகின்றனர். தகுதியின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு முறை வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

அரசு வேலைகளில் இன சிறுபான்மையினர் மற்றும் ஊனமுற்றோருக்கு வழங்கப்படும் 6 சதவிகித இட ஒதுக்கீடு மட்டுமே இருக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறினர். “நாங்கள் இட ஒதுக்கீட்டு முறையில் சீர்திருத்தத்தை விரும்புகிறோம்” என்று டாக்கா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவி கூறினார்.

பிரதமர் ஷேக் ஹசீனாவை ஆதரிக்கும் அரசாங்க சார்பு குழுக்களின் குழந்தைகளுக்கு இந்த முறை பயனளிக்கும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

பிரதமர் ஷேக் ஹசீனா மாணவர்களின் கோரிக்கைகளை நிராகரித்ததோடு அல்லாமல் போராடும் மாணவர்களை கடுமையாகச் சாடியுள்ளார். ஆளும் அவாமி லீக் தலைவர்களும் அமைச்சர்களும் மாணவர்கள் மீது பல்வேறு அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர். போலீசு மற்றும் ஆளும் கட்சியினரின் அச்சுறுத்தல்களைக் கடந்து போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

வங்கதேச உயர் நீதிமன்றம் கடந்த வாரம் இந்த இட ஒதுக்கீட்டைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. ஆனால் தாங்கள் எதிர்க்கும் திட்டத்தின் பகுதிகள் முற்றிலுமாக அகற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் கூறியுள்ளனர்.

டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் போராடிய நூற்றுக்கணக்கான மாணவர்களை ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் அமைப்பான சத்ரா லீக் (Chhatra League) அமைப்பினர் நேற்று (ஜூலை 15) தாக்கினர். கற்களை வீசியும், தடிகள் – இரும்புக் கம்பிகளைக் கொண்டும் தாக்கப்பட்டதால் தங்களைத் தற்காத்துக்கொள்ள வேண்டிய நிலைக்குப் போராடும் மாணவர்கள் தள்ளப்பட்டனர்.


படிக்க: வங்கதேச நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: தெற்காசியாவில் சரியும் அமெரிக்க மேலாதிக்கம்!


இட ஒதுக்கீடு எதிர்ப்பு போராட்டங்களின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நஹித் இஸ்லாம் கூறுகையில், தங்களின் அமைதியான ஊர்வலம் கம்பிகள், கம்புகள் மற்றும் கற்களை ஏந்திய நபர்களால் தாக்கப்பட்டது என்றார். மேலும், “அவர்கள் எங்கள் பெண் போராட்டக்காரர்களை அடித்தனர். 30 பெண்கள் உட்பட குறைந்தது 150 மாணவர்கள் காயமடைந்தனர், 20 மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது” என்று அவர் கூறினார்.

எதிர்க்கட்சியினரை வேட்டையாடி சிறையில் அடைத்து வங்கதேசத்தில் கடந்த ஜனவரியில் தேர்தல் நடத்தப்பட்டது. இதனால், எதிர்க்கட்சிகள் அங்கு தேர்தலைப் புறக்கணித்தனர். எதேச்சதிகாரமாகத் தேர்தலில் நான்காவது முறையாக ஷேக் ஹசீனா வென்ற பின்னர் அந்நாட்டில் நடைபெறும் மிகப்பெரிய போராட்டம் இது.

ஒருதலைபட்சமான இட ஒதுக்கீட்டுக்கு எதிரான இப்போராட்டம் ஜனநாயகம் வேண்டி எதேச்சதிகாரமான தனது அரசுக்கு எதிரான போராட்டமாக மாறக்கூடும் என்ற அச்சத்தில் ஷேக் ஹசீனா உள்ளார். போராட்டக்காரர்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்றெல்லாம் அச்சத்தில் உலறுகிறார். இப்போராட்டத்தை ஒடுக்க கடுமையாக முயற்சி செய்து வருகிறார்.

முகரம் பண்டிகையை முன்னிட்டு நாளை (ஜூலை 17) மட்டும் போராட்டம் நடைபெறாது என்று மாணவர்கள் கூறியுள்ளனர். எவ்வளவு ஒடுக்கினாலும் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தைக் கைவிடத் தயாராக இல்லை என்று மாணவர்கள் கூறியுள்ளனர்.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க