வங்கதேச ஆயத்த ஆடை தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கான போராட்டம் வெல்லட்டும்!

நாம் தரம் உயர்ந்தவை என்று வாங்கி அணியும் இந்த நிறுவன ஆடைகளின் மினுமினுப்பில் ஒளிந்திருக்கிறது வங்கதேச தொழிலாளர்களின் இரத்தம் தோய்ந்த உழைப்பு.

ங்கதேச நாட்டின் ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, கூலி உயர்வை வலியுறுத்தி அரசின் கடும் ஒடுக்குமுறைகளையும் மீறி போராடி வருகின்றனர். வங்கதேசத்தில் 3,500-க்கும் மேற்பட்ட ஆயத்த ஆடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. 40 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் அந்நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். பெரும்பாலானோர் பெண் தொழிலாளர்கள். மிகச்சொற்ப அளவிலான கூலியே அவர்களுக்கு வழங்கப்படுகிறது. தொழிலாளர்களின் போராட்டத்தின் விளைவாக மிகக் குறைந்த அளவிலான கூலி உயர்வும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது.

அந்தவகையில், வங்கதேச அரசு இந்த ஆண்டு தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும். விண்ணைமுட்டும் விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றால் தங்களின் அன்றாட வாழ்க்கைச் செலவீனங்களைக் கூட பூர்த்தி செய்துக்கொள்ள முடியாமல் அல்லல்பட்டு வரும் தொழிலாளர்கள், நியாயமான, குறைந்தபட்ச கூலி உயர்வுக்காக கடந்த அக்டோபர் மாத இறுதியிலிருந்து போராடி வருகின்றனர்.

தொழிலாளர்கள் தங்களது ஊதியத்தை 8,000 (6,058 ரூபாய்) டாக்காவிலிருந்து 23,000 (17, 418 ரூபாய்) டாக்காவாக உயர்த்த வேண்டும் என்று போராடி வரும் சூழலில், வங்கதேச அரசோ, கடந்த நவம்பர் 10 அன்று வெறும் 12,500 (9,466 ரூபாய்) டாக்காவாக ஊதியத்தை உயர்த்தி அரசிதழிலில் அறிவித்திருக்கிறது.

வங்கதேச தொழிலாளர் சட்டம் 2006-இன் படி, குறைந்தபட்ச ஊதிய வாரியம்தான் (Minimum Wage Board) சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் தொழிற்துறை முதலாளிகள் தரப்பினரிடமிருந்து முன்மொழிவுகள் பெற்று, கூலி உயர்வு குறித்து முடிவு செய்யும் அமைப்பாகும். வாரியத்தின் முடிவுகள் தொழிலாளர் துறைக்கு அனுப்பப்பட்டு, தொழிலாளர் துறை இறுதி முடிவு எடுத்து, அதனை அரசிதழில் வெளியிட்டு சட்டமாக்குவது என்பதே அந்நாட்டு நடைமுறையாகும்.

எனவே, குறைந்தபட்ச ஊதிய வாரியத்திற்கு தொழிலாளர்கள் மற்றும் தொழிற்துறை முதலாளிகள் தரப்பிலிருந்து 200-க்கும் மேற்பட்ட முன்மொழிவுகள் அனுப்பப்பட்டிருக்கின்றன. ஊதியத்தை 25,000 (18,933 ரூபாய்) டாக்கா வரை உயர்த்த வேண்டும் என்று தொழிலாளர்கள் தரப்பிலிருந்தும், 12,500 டாக்காவாக உயர்த்தியதை 10,400 (7,876 ரூபாய்) டாக்காவாக குறைக்க வேண்டும் என்று முதலாளிகள் தரப்பிலிருந்தும் முன்மொழிவுகள் அனுப்பப்பட்டிருக்கின்றன. இவற்றின்மீதான இறுதி முடிவு வருகிற நவம்பர் 26 அன்று எடுக்கப்படும் என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன.


படிக்க: வங்கதேசத்தில் ஆடைத் தொழிலாளர்கள் போராட்டம்!


கடந்த ஜனவரி மாதத்தில் வங்கதேச தொழிலாளர் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆயத்த ஆடை தொழிலாளர்களது வாழ்வாதாரத்திற்கான குறைந்தபட்ச மாதாந்திர ஊதியமாக 33,368 (25,271 ரூபாய்) டாக்கா நிர்ணயிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வையும், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தேவைகளையும் கணக்கில்கொண்டுதான் ஊதியத்தை நிர்ணயித்துள்ளது, ஆய்வு நிறுவனம்.

ஆயத்த ஆடைத் தொழிலாளார்களோ ஆய்வு நிறுவனம் நிர்ணயித்ததை விடக் குறைவாக தங்களது ஊதியத்தை 23,000 டாக்கா உயர்த்தினால் போதுமென்று போராடி வருகின்றனர். அந்த ஊதியத்தைக் கூட வழங்காமல் தொழிலாளர்களின் போராட்டத்தை மிருகத்தனமான ஒடுக்கிவருகிறது, வங்கதேச அரசு.

தொழிலாளர்களின் போராட்டத்திற்கான காரணம்!

தொழிலாளர்களுக்கான ஊதியத்தை மிகக்குறைந்த அளவில் வழங்கும் உலகின் பல நாடுகளில் வங்கதேசமும் ஒன்று. வங்கதேச ஆயத்த ஆடை தொழிலாளர்களின் தற்போதைய ஊதியமான 8000 டாக்கா என்பது, 2018 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஊதிய உயர்வாகும். இந்திய ரூபாய் மதிப்பில் 6,058 ரூபாய் ஆகும். அதாவது மிகக் குறைவான ஊதியத்தில் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டப்படுகிறது.

மேலும் கழிவறை, சுத்தமான குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் இன்றி தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகள் நடந்து தொழிலாளர்கள் கொத்துகொத்தாக உயிரிழக்கின்றனர். 2013 ஆம் ஆண்டு 1100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பலிகொண்ட எட்டு மாடிகளைக் கொண்ட ராணா பிளாசா கட்டிட விபத்தே அதற்கு சான்றாகும்.

இக்கட்டிட விபத்திற்கு பிறகு, பாதுகாப்பு வசதிகள் ஓரளவுக்கு முன்னேறியிருக்கின்றன என்று கூறப்பட்டாலும், பாதுகாப்பு வசதிகள் மோசாமாகத்தான் இருக்கிறது. அதுமட்டுமின்றி, தொழிற்சங்க உரிமையின்மை, ஆபாசமான வார்த்தைகளில் திட்டுவது, பெண் தொழிலாளர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் போன்ற ஒடுக்குமுறைகளால் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு வருகின்றனர்.

தொழிலாளர்கள் தொழிற்சங்க உரிமை பேசினால் அவர்களை “காணாமல் ஆக்குவது” என்பதுதான் வங்கதேச ஆயத்த ஆடை முதலாளிகளின் வழக்கமாகும். புதியதாக தொழிற்சங்கத்தை பதிவு செய்ததற்காக பிப்லப் என்ற தொழிலாளர் உட்பட 11 தொழிலாளர்கள், காணாமல் போயிருக்கின்றனர் என்கிறது, சர்வதேச தொழிலாளர் அமைப்பு. கடந்த ஜூன் மாதத்தில், வங்கதேச ஆயத்த ஆடை தொழிலாளர் கூட்டமைப்பின் காசிபூர் தலைவரான ஷாகிதுல் இஸ்லாம், காசிபூரைச் சேர்ந்த ஆயத்த ஆடை தொழிற்சாலை நிர்வாகத்தால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். அவரது இறப்பிற்கு காரணமானவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்தியிருக்கின்றனர்.

இத்தகைய கொடூர உழைப்புச் சுரண்டலும், தொழிலாளர் உரிமையின்மையும், விலைவாசி உயர்வும்தான் வங்கதேச ஆயத்த ஆடை தொழிலாளர்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அரசின் அடக்குமுறையை எதிர்கொண்டு உறுதிமிக்க வகையில் போராடி வருவதற்கு அடிப்படையாகும்.

தொழிலாளர்களின் போராட்டத்தை காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்கும் ஷேக்ஹசீனா அரசு!

கடந்த அக்டோபர் 30 அன்று, காசிபூரில் உள்ள டாக்கா-மைமென்சிங் மற்றும் டாக்கா-டாங்கைல் தேசிய நெடுஞ்சாலைகளில் போராடிய தொழிலாளர்கள் மீது கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் தாக்குதல் நடத்தியிருக்கிறது, வங்கதேச காவல்துறை. அதுமட்டுமின்றி தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தியிருக்கிறது. இதில், 26 வயதான ரசல் என்ற தொழிலாளி கொல்லப்பட்டிருக்கிறார்.

ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்றும் வரும் போராட்டத்தில், 3 தொழிலாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்; நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் படுகாயமடைந்திருக்கின்றனர். பெயரைக் குறிப்பிட்டு 200 தொழிலாளர்கள் மீதும், பெயர் குறிப்பிடாமல் 18,000 தொழிலாளிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையும், முதலாளிகளின் குண்டர்படையும் கூட்டுச் சேர்ந்துகொண்டு தொழிலாளர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கியிருக்கின்றன. மிர்பூரில் நடைபெற்ற போராட்டத்தில், மமுசுமா அக்தார் என்ற பெண் தொழிலாளியை மூன்று குண்டர்கள் துரத்திச் சென்று தாக்கியிருக்கின்றனர். “அவர்கள் எனது முதுகு, தொடை, கை ஆகிய இடங்களில் கொடூரமாக தாக்கினர்” என்கிறார். இத்தாக்குதலால் அவரது கை உடைந்துள்ளது.

“அவர்கள் இரக்கமற்ற முறையில் என்னைத் தாக்கினார்கள். எனது வாழ்வாதாரமே எனது கைகளை நம்பித்தான் இருக்கிறது, ஆனால் அவர்கள் கைகளையே குறி வைத்து தாக்கினர்” என்கிறார், புஷ்ரா பேகம் என்ற மற்றொரு பெண் தொழிலாளி. “போராட்டங்களில் கலந்து கொள்ளாமல் இருப்பதுதான் உங்களுக்கு நல்லது” என்று மிரட்டியதாகவும் கூறுகின்றனர், தொழிலாளர்கள்.

தொழிலாளர்களின் நியாயமான ஊதிய உயர்வு கோரிக்கை பற்றியும் போலீசின் அடக்குமுறை பற்றியும் எதுவும் பேசாத வங்கதேசப் பிரதமர் ஷேக்ஹசீனா, தொழிலாளர்கள் போராட்டத்தால் 19 தொழிற்சாலைகள் தாக்கப்பட்டதாக அவதூறை அள்ளி வீசுகிறார்; தொழில் தடைபட்டுள்ளதாக வருத்தப்படுகிறார். மேலும், “உயர்த்தப்பட்ட ஊதியத்தைக் கொண்டு வேலை செய்யுங்கள்; சிலரின் தூண்டுதலால் போராட்டம் நடத்தினால், உங்கள் வேலையை இழக்க வேண்டி வரும்; உங்களது கிராமங்களுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும்” என்று மிரட்டுகிறார்.

தொழிலாளர்களின் ரத்தம் குடிக்கும் கார்ப்பரேட் ஓநாய்கள்!

1970 களிலிருந்தே, வங்கதேசமானது மேற்குல நாடுகளைச் சேர்ந்த கார்ப்பரேட் ஆயத்த ஆடை நிறுவனங்களின் முக்கியமான உற்பத்தி சாலையாக இருந்து வருகிறது. சீனாவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய ஆயத்த ஆடை உற்பத்தி நாடாக வங்கதேசம் இருக்கிறது. வங்கதேச நாட்டின் பொருளாதாரமும் பிரதானமாக ஆயத்த ஆடை ஏற்றுமதியை சார்ந்து இருக்கிறது. கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் ஆயத்த ஆடை ஏற்றுமதியின் மூலம் வங்கதேசத்திற்கு 55 பில்லியன் டாலர் (4,58,400 கோடி ரூபாய்) வருவாய் கிடைத்திருக்கிறது.

உலகளவில் அறியப்பட்ட ஆயத்த ஆடை நிறுவனங்களான நைக், பூமா, லெவிஸ், மார்க்ஸ் & ஸ்பென்சர், சி &ஏ, பி.வி.எச், ஜாரா, எச் & எம், கேப் மற்றும் ப்ரைமார்க் ஆகியவை வங்கதேசத்தில் அயல்பணி (அவுட்சோர்சிங்) மூலம் தான் தங்களது நிறுவனத்திற்கு தேவையான ஆடைகளை உற்பத்தி செய்கின்றன. மிகக் குறைந்த செலவில் ஆடைகளை உற்பத்தி செய்து தங்களது நிறுவனத்தின் அடையாளக் குறியை (ஸ்டிக்கர்) ஒட்டிக்கொள்கின்றன. அமேசான், வால்மார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும் ஆயத்த ஆடைகளுக்கு வங்கதேசத்தை தான் சார்ந்து இருக்கின்றன.

அமேசான், பிளிப்காட் போன்ற ஆன்லைன் வர்த்தக தளங்களில் ஆயிரம் முதல் மூவாயிரம் ரூபாய் வரை விற்கப்படும் டி-சர்ட்கள், அவற்றின் உற்பத்தி செலவுக்கும் குறைவான விலையில்தான் வங்கதேசத்திலிருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன. இதற்காக கார்ப்பரேட் நிறுவனங்கள், உற்பத்தி செய்த ஆடைகளுக்கான பணத்தைத் தாமதமாகக் கொடுப்பது, உற்பத்திக்கான ஆர்டர் கொடுத்துவிட்டு தாமதமாக ஆர்டரை ரத்து செய்வது, உற்பத்தி செய்த பொருட்களை தாமதமாகக் கொள்முதல் செய்வது, உற்பத்தி நிறுவனங்களுக்கும், ஆர்டர் கொடுக்கின்ற நிறுவனங்களுக்கும் இடையில் இடைத்தரகர்களை நியமித்துக் கொள்வது என பல உத்திகளைக் கையாளுகின்றன.


படிக்க: ஐஃபோன் – ஆயத்த ஆடை : சீன – வங்கதேச தொழிலாளரைச் சுரண்டும் அமெரிக்கா – ஜெர்மனி !


வங்கதேசத்தில் உள்ள 1000 ஆயத்த ஆடை தொழிற்சாலைகளில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த அபர்டீன் பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில், கார்ப்பரேட் நிறுவனங்கள் நிலையான செயல்முறை செலவை (Operating Cost) (வாடகை, ஊதியம், நிர்வாகம், உற்பத்திக் கருவிகள் பராமரிப்பு, காப்பீடு உள்ளிட்டவை சேர்த்து) நிர்ணயிப்பதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் எந்நேரத்திலும் இந்த செயல்முறைச் செலவைக் குறைக்கும் நிலைமை இருக்கிறது; தொழிற் போட்டியின் காரணமாக அக்குறைந்த செலவிலும் உற்பத்தி செய்ய வேண்டியிருக்கிறது என்கிறது ஆய்வு.

வங்கதேச ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியின் சுமை முழுவதும் தொழிலாளர்கள் மீதுதான் சுமத்தப்படுகிறது. ஒரு முழுக்கை சட்டையை 45 நிமிடத்திலும், டி-சர்ட்-யை 8 நிமிடத்திலும் உற்பத்தி செய்ய வேண்டிய நிலைக்குத் தொழிலாளிகள் தள்ளப்படுகின்றனர். குறைவான உற்பத்தித் திறன் கொண்ட இயந்திரங்களைக் கொண்டு அதிக எண்ணிக்கையிலான பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு உள்ளாகின்றனர்.

அத்தியாவசிய வாழ்வாதாரத்திற்கு தேவையானதைவிட குறைந்த கூலிதான் நிர்ணயிக்கப்படுவதால், தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள அதிகபட்ச நேரம் உழைக்கும் நிலைமைக்குத் தள்ளப்படுகின்றனர். இவ்வாறு மேற்குலக நாடுகளின் கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கதேசத் தொழிலாளிகளை ஒட்டச் சுரண்டி கொழுத்த லாபமடைகின்றன. நாம் தரம் உயர்ந்தவை என்று வாங்கி அணியும் இந்த நிறுவன ஆடைகளின் மினுமினுப்பில் ஒளிந்திருக்கிறது வங்கதேச தொழிலாளர்களின் இரத்தம் தோய்ந்த உழைப்பு.

எனவேதான், ஹசீனா அரசு தனது எஜமானர்களான மேற்கத்திய ஏகாதிபத்திய மற்றும் உள்நாட்டு தரகு முதலாளிகளின் லாபத்தை உத்திரவாதம் செய்ய தொழிலாளர்களின் கூலியை உயர்த்த மறுக்கிறது; தொழிலாளர் போராட்டங்களை ஒடுக்குகிறது.

தொழிலாளர்களின் போராட்டத்தினால் உற்பத்தி பாதிக்கப்பட்டவுடன், தொழிலாளர்களின் ரத்தம் குடித்த ஏகாதிபத்திய ஓநாய்கள் தனது அடிவருடி ஹசீனா அரசை பெயரளவிற்கு கண்டிப்பது, தொழிலாளர்களுக்காக கண்ணீர் சிந்துவது என நாடகமாடுகின்றன. மார்க்ஸ் & ஸ்பென்சர் மற்றும் சி & ஏ நிறுவனங்கள், தொழிலாளர்கள் மீதான வன்முறையைக் கண்டிப்பதாகவும், உற்பத்தி சங்கிலியில் தொழிலாளர்களின் பாதுகாப்பையும், குறைந்தபட்ச கூலியையும் உத்திரவாதம் செய்வதாகவும் அறிக்கை வெளியிட்டிருக்கின்றன.

மேலும், எச் & எம் நிறுவனமானது தொழிலாளர்களின் உயர்த்தப்பட்ட கூலியை ஈடு செய்வதற்காக வங்கதேசத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளின் உற்பத்தி செலவை உயர்த்திக் கொடுக்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. இந்த செய்தியானது, தொழிலாளர்களின் ஒரு மாதப் போராட்டத்தின் பலனாகும்.

எனவே ஆயத்த ஆடை தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை மேலும் வளர்த்தெடுக்க வேண்டும்; தங்களது கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொள்ள நிர்பந்திக்கும் வகையில் இதர உழைக்கும் வர்க்கங்களுடன் இணைந்து மாபெரும் மக்கள்திரள் போராட்டங்களாக கட்டியமைக்க வேண்டும். அப்போராட்டங்களை ஏகாதிபத்திய நுகத்தடியில் சிக்கியிருக்கும் வங்கதேசத்தை விடுவிக்கும் போராட்டமாக வளர்த்தெடுக்க வேண்டும்.அப்பொழுதுதான் தொழிலாளி வர்க்கத்தின் உண்மையான விடுதலை சாத்தியமாகும்.

அந்த வகையில் வங்கதேச தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கான போராட்டத்தை ஆதரிக்க வேண்டியது இந்திய தொழிலாளி வர்க்கத்தின் கடமையாகும்.


அப்பு

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க