வங்கதேச நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: தெற்காசியாவில் சரியும் அமெரிக்க மேலாதிக்கம்!

அமெரிக்காவின் ஒற்றைத்துருவ உலக மேலாதிக்கத்திற்குப் போட்டியாக வளர்ந்துவரும் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் தெற்காசிய நாடுகள் வர்த்தக ரீதியாகவும் ராஜதந்திர ரீதியாகவும் தொடர்ந்து நெருக்கமாகி வருகின்றன.

ங்கதேசத்தில் கடந்த ஜனவரி மாதம் 7-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. ஆளுங்கட்சியான அவாமி லீக் தேர்தலை நடத்துவதன் மீது நம்பிக்கையில்லை என்று கூறி, பிரதான எதிர்க்கட்சியான வங்கதேசத் தேசியவாதக் கட்சி உள்ளிட்ட பதினேழு எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்தன. மொத்தமுள்ள 300 இடங்களில் 223 இடங்களைப் பெற்று, ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் வெற்றியடைந்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து நான்காவது முறையாக வென்று பிரதமராகியுள்ளார் ஷேக் ஹசீனா.

முறைகேடுகள், எதிர்க்கட்சியினர் மீதான கைது நடவடிக்கைகள் மற்றும் வன்முறை வெறியாட்டங்களுக்கு மத்தியில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளதால், இத்தேர்தல் முடிவுகள் செல்லாது என அறிவிக்க வேண்டுமென்றும் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டுமென்றும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் ஷேக் ஹசீனா

பொதுவாக முதலாளித்துவ நாடாளுமன்றத் தேர்தல்கள், மக்களை ஏய்ப்பதற்கான ஒரு சடங்காகவே எல்லா நாடுகளிலும் நடத்தப்படுகின்றன. வங்கதேசத் தேர்தலோ சொல்லிக்கொள்ளப்படும் போலி ஜனநாயகச் சடங்குகளை கூட பின்பற்றாமல் முற்று முழுதான எதேச்சதிகாரமான முறையில் நடத்தப்பட்டுள்ளது.

தேர்தல் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே, எதிர்க்கட்சித் தலைவர்களையும் அவர்களது ஆதரவாளர்களையும் வேட்டையாடத் தொடங்கியது ஷேக் ஹசீனாவின் அரசு. கடந்த சில மாதங்களில் மட்டும், வங்கதேசத் தேசியவாதக் கட்சி (பி.என்.பி.) உட்பட பெரும்பாலான எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 20,000-க்கும் அதிகமானோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, கடந்த அக்டோபர் 28 அன்று எதிர்க்கட்சிகள் முன்னெடுத்த பேரணி வன்முறையில் முடிந்ததை அடுத்து ஏறக்குறைய 8,000 பேர் வரை கைது செய்யப்பட்டனர். தேர்தல் நடப்பதற்கு முந்தைய நாள் வரை இந்த வேட்டையை தொடர்ந்த ஹசீனா அரசு, ஜனவரி 6 அன்று வங்கதேசத்தில் ஏற்பட்ட ரயில் தீ விபத்தைக் காரணம் காட்டியும் எதிர்க்கட்சியினரை கைது செய்து சிறையிலடைத்தது. சிறையிடப்பட்ட பலர் அடுத்தடுத்து சிறையிலேயே உயிரிழந்து வருகின்றனர். மேலும், 2009-ஆம் ஆண்டிலிருந்து 600-க்கும் மேற்பட்டோர் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு காணாமல் போனவர்களின் குடும்பத்தினருக்காக ‘‘மேயர் டாக்’‘ என்னும் தனி அமைப்பே இயங்கி வருகிறது.


படிக்க: வங்கதேச ஆயத்த ஆடை தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கான போராட்டம் வெல்லட்டும்!


பொய்க் குற்றச்சாட்டு சுமத்தி கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக்க பலர் காடுகளில் தஞ்சம் புகுந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர். காட்டுப்பகுதியில் கூடாரம் அமைத்து தலைமறைவாகத் தங்கியுள்ள பி.என்.பி. கட்சியின் ஆதரவாளரான 28 வயது பெண் ஒருவர் பி.பி.சி-க்கு அளித்த பேட்டியில், ‘‘நாங்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக தலைமறைவாக உள்ளோம், நாங்கள் எங்கள் மறைவிடங்களை மாற்றிக் கொண்டிருக்கிறோம். எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை’‘ என்கிறார்.

தனக்கு போட்டியாக உள்ள பி.என்.பி. கட்சியை செல்வாக்குமிக்க தலைவர்கள் இல்லாத கட்சியாக ஒடுக்கிய பிறகே தேர்தலை எதிர்கொண்டார் ஷேக் ஹசீனா. பி.என்.பி. கட்சியின் தலைவரும் வங்கதேசத்தின் முன்னாள் பிரதமருமான கலிதா ஜியா ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மகனும் கட்சியின் செயல் தலைவருமான தாரிக் ரஹ்மான் நாடு கடத்தப்பட்டு லண்டனில் உள்ளார். இவ்வாறு அக்கட்சியின் பெரும்பாலான தலைவர்கள் தேர்தலுக்கு முன்னரே சிறையில் அடைக்கப்பட்டு விட்டனர்.

எதிர்க்கட்சிகளே பங்குபெறாமல் தேர்தலை எதிர்கொண்ட ஷேக் ஹசீனா, இது நேர்மையான முறையில் நடத்தப்படும் தேர்தல்தான் என்ற பிம்பத்தை ஏற்படுத்த, சுயேட்சை வேட்பாளர்கள் என்ற பெயரில் அவாமி லீக் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களையே தேர்தலில் பங்குகொள்ள வைத்தார். மேலும் தனது கூட்டாளியான ஜாதியா கட்சியை (எர்ஷாத்) எதிர்க்கட்சியாக தேர்தலில் பங்குகொள்ள வைத்து, தனது கட்சிக்கு தேர்தலில் போட்டி இருப்பதாகக் காட்டிக்கொண்டார். இதன் காரணமாக மக்கள் அதிருப்தியடைந்ததனால் வெறும் 41 சதவிகித வாக்குகளே இத்தேர்தலில் பதிவாகின. ஒட்டுமொத்தத்தில், நாடாளுமன்றத் தேர்தலின் வழியாகவே ‘‘ஒரு கட்சி சர்வாதிகாரம்’‘ வங்கதேசத்தில் நிலைநாட்டப்பட்டிருக்கிறது. இத்தகைய எதேச்சதிகாரியான ஷேக் ஹசீனாவை இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் வாழ்த்துவதும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டவை விமர்சிப்பதும், அந்தந்த நாடுகளின் நலன் சார்ந்தே நடந்து வருகிறது.

‘ஜனநாயத்திற்காக’ நீலிக்கண்ணீர் வடிக்கும் அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள்

வங்கதேசத் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளரான மேத்யூ மில்லர், ‘‘இந்தத் தேர்தல் சுதந்திரமாகவோ அல்லது நியாயமாகவோ நடைபெறவில்லை என்ற கருத்தை அமெரிக்கா மற்ற பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்கிறது. மேலும், தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கவில்லை என்பதற்கு நாங்கள் வருந்துகிறோம்’‘ என்று கூறியிருக்கிறார்.

‘‘ஜனநாயகத் தேர்தல்கள் நம்பகமான, வெளிப்படையான மற்றும் நியாயமான போட்டியைச் சார்ந்தவை. மனித உரிமைகளுக்கான மரியாதை, சட்டத்தின் ஆட்சி மற்றும் உரிய செயல்முறை ஆகியவை ஜனநாயக செயல்முறையின் இன்றியமையாத கூறுகள். ஆனால் நடந்து முடிந்துள்ள தேர்தலில் இந்தத் தரநிலைகள் பூர்த்தி செய்யப்படவில்லை’‘ என்று விமர்சித்துள்ளது பிரிட்டன்.

வாக்குப்பதிவு நாளுக்கு முன்னதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கணிசமான எண்ணிக்கையில் கைது செய்யப்பட்டிருப்பது கவலை அளிப்பதாகக் கூறிய பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம், ‘‘பிரச்சார காலத்திற்கு முன்னும் பின்னும் நடந்த மிரட்டல் மற்றும் வன்முறைச் செயல்களை நாங்கள் கண்டிக்கிறோம். அரசியல் வாழ்வில் இத்தகைய நடத்தைக்கு இடமில்லை’‘ என்றது.

வங்கதேசத்தில் போலி ஜனநாயக நாடாளுமன்ற விதிமுறைகளைக் கூட மதிக்காமல், எதேச்சதிகாரமான முறையில் தேர்தல் நடந்திருப்பது முதன்முறையல்ல. கடந்த 15 ஆண்டுகால ஷேக் ஹசீனா ஆட்சியில், அந்நாட்டில் நடந்த அனைத்துத் தேர்தல்களும் வெவ்வேறு அளவுகோல்களில் இதே எதேச்சதிகாரத் தன்மையுடனேயே நடந்துள்ளன. குறிப்பாக, 2008-ஆம் ஆண்டு ஷேக் ஹசீனா ஆட்சிக்கு வந்த பிறகு வங்கதேசம் படிப்படியாக எதேச்சதிகார நாடாக மாற்றப்பட்டு வருகிறது. சிறுபான்மையினர், தொழிலாளர்கள், விவசாயிகள், உழைக்கும் மக்கள் மீதான தாக்குதல்களும் அடக்குமுறைகளும் சுரண்டலும் தீவிரமடைந்து வருகின்றன. இடதுசாரிகள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் எதிரிகள் ஆகியோர் கைது செய்யப்படுவது, காணாமல் ஆக்கப்படுவது, கொலை செய்யப்படுவது என காட்டுமிராண்டித்தனமான முறையில் வேட்டையாடப்பட்டு வருகின்றனர்.

2008-க்குப் பிறகு இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் ஆளும் அவாமி லீக் கட்சி பல்வேறு தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டும், மேற்கு நாடுகள் அதைக் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தன. இந்தத் தேர்தல் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதற்காக பல பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டதோடு, பலர் கொல்லப்பட்டும் உள்ளனர். ஷேக் ஹசீனா அரசாங்கம் தேர்தல் நடத்துவதன் மீது நம்பிக்கை இல்லை என்று கூறி 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலையும் எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.

அப்போதெல்லாம் வங்கதேசத்தின் ’ஜனநாயகம்’ கேள்விக்குள்ளாக்கப்பட்டது குறித்து அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் வாயைத் திறந்ததில்லை. இதே ஷேக் ஹசீனாவின் ஆட்சியில்தான் வங்கதேசத்தின் ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் மிகக் கடுமையாகச் சுரண்டப்பட்டு வருகின்றனர். இந்தச் சுரண்டலின் மூலம் ஆதாயமடைந்து வருபவை அமெரிக்க, ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்களே. ஆனால், இந்தத் தேர்தலின்போது ஷேக் ஹசீனாவின் எதேச்சதிகார போக்கும் நடந்து முடிந்த தேர்தலும் உலகம் முழுக்க பேசுபொருளானதற்கு, மேற்குலக ஊடகங்கள் திட்டமிட்டு இதனைக் கையிலெடுத்ததே காரணம். அமெரிக்க – பாகிஸ்தான் ஆதரவு கலிதா ஜியா கட்சியின் மீதான கடுமையான ஒடுக்குமுறையும், சீனா- ரஷ்யாவுடன் ஷேக் ஹசீனா அரசு நெருக்கமான உறவுகளை உருவாக்கி வருவதுமே அமெரிக்க – ஐரோப்பிய நாடுகளின் கூப்பாடுக்குக் காரணம்.

வங்கதேசத்திலும் ஆட்டம் காணும் அமெரிக்க மேலாதிக்கம்

அமெரிக்காவின் ஒற்றைத்துருவ உலக மேலாதிக்கத்திற்குப் போட்டியாக வளர்ந்துவரும் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் தெற்காசிய நாடுகள் வர்த்தக ரீதியாகவும் ராஜதந்திர ரீதியாகவும் தொடர்ந்து நெருக்கமாகி வருகின்றன. இந்நிலையில், தற்போது வங்கதேசமும் அந்த பட்டியலில் இணைந்திருப்பது அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மீண்டும் ஷேக் ஹசீனா ஆட்சியை பிடித்திருப்பதன் மூலம் வங்கதேசம் மென்மேலும் சீனாவின் கட்டுப்பாட்டிற்குக் கீழ் செல்வதை இந்த ஏகாதிபத்தியங்கள் விரும்பவில்லை.

கடந்த 2010-ஆம் ஆண்டு முதலே வங்கதேசத்திலும் அவாமி லீக் கட்சியிலும் தனது செல்வாக்கை அதிகரித்து வருவதன் மூலம் அங்கு சீனா மேலாதிக்கம் பெற்று வருகிறது. குறிப்பாக, தெற்காசியாவில் உள்ள மியான்மர் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளைப் போல வங்கதேசத்தையும் சீனாவை சார்ந்துள்ள நாடாக மாற்றும் இலக்கில், அங்கு சீனாவின் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன.

கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதியிட்ட ‘‘தி பிசினஸ் ஸ்டாண்டர்டு’‘ இதழின் கட்டுரையொன்று பின்வருமாறு குறிப்பிடுகிறது: ‘‘சாலை முதல் ரயில், துறைமுகம் மற்றும் விமான நிலையம் வரை, ஆற்றுக்கு அடியில் சுரங்கப்பாதை முதல் உயரமான அதிவிரைவுச் சாலை வரை, நீர் பயன்பாடு முதல் மின் ஆளுமை வரை, நிலக்கரி முதல் சூரிய ஆற்றல் வரை, நிதி, தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவத்துடன் சீனா தனது இருப்பை வங்காளதேசத்தில் எங்கும் உணர வைக்கிறது.’‘

இக்கூற்றை நிரூபிக்கும் வகையில், 2016 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் மட்டும் சுமார் 26 பில்லியன் டாலர்களை வங்கதேசத்தில் சீனா முதலீடு செய்துள்ளது. 2022-ஆம் ஆண்டில் 940 மில்லியன் டாலர் முதலீட்டுடன் வங்கதேசத்தின் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டாளராக சீனா மாறியது. மேலும், வங்கதேசத்தின் முதன்மையான முதலீட்டாளராகவும் வர்த்தக பங்குதாரராகவும் சீனா இருந்து வருகிறது.


படிக்க: வங்கதேசத்தில் ஆடைத் தொழிலாளர்கள் போராட்டம்!


தற்போது இந்தியப் பெருங்கடலை அடைவதற்காக சீனா பயன்படுத்திவரும் மலாக்கா நீரிணையில் அமெரிக்கா அவ்வப்போது தொந்தரவு செய்து வருகிறது. இதனால், சீனா-மியான்மர் பொருளாதார வழித்தடத்தில் வங்கதேசத்தை இணைத்து, வங்கதேசத்தின் கங்கா-பத்மா-பிரம்மபுத்ரா நதியை பயன்படுத்துவதன் மூலம் கூடுதல் வழியை உருவாக்கவும் வர்த்தகத்தை விரிவுபடுத்தவும் சீனா திட்டமிட்டுள்ளது. மேலும், பட்டுப்பாதை திட்டத்தில் வங்கதேசத்தை இணைத்து 40 பில்லியன் டாலர் மதிப்பீட்டிலான திட்டங்களை நடைமுறைப்படுத்த ஒப்பந்தம் செய்திருக்கிறது சீனா.

சமீப காலமாக ரஷ்யாவும் வங்கதேசத்தில் தனது முதலீடுகளை அதிகரித்து வருகிறது. வங்கதேசத்தில் 2,400 மெகாவாட் திறன் கொண்ட ரூப்பூர் அணுமின் நிலையத் திட்டத்தில் ரஷ்யா 12 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளது. இதனால் அமெரிக்கா எரிச்சலடைந்து தடைகள் விதித்ததன் காரணத்தினால், கடந்த 2022-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அணுசக்திப் பொருட்களை ஏற்றிச் செல்லும் ரஷ்யக் கப்பலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் இந்தியாவின் தலையீட்டினால் சரக்குகள் சாலை வழியாக கட்டுமானத் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. அணுமின் நிலையக் கட்டுமானத்திற்கான இந்தக் கடனை சீன யுவானில் திருப்பிச் செலுத்துவதன் மூலம் ரஷ்யா மீதான அமெரிக்கப் பொருளாதராத் தடைகளைக் கடந்து செல்ல இருநாடுகளும் முடிவு செய்துள்ளன.

இது மட்டுமின்றி, வங்கதேசத்தின் ஆயுத இறக்குமதியில் சீனாவும் ரஷ்யாவும் முதலிரண்டு இடங்களில் இருந்து வருகின்றன. மேற்சொன்ன அடிப்படையில் எல்லா வகையிலும் இவ்விரு நாடுகளின் மேலாதிக்கம் வங்கதேசத்தில் வளர்ந்து வருகிறது என்பது புலனாகிறது.

வங்கதேசத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கம் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதால், கடந்த சில ஆண்டுகளாகவே வங்கதேசத்திற்கு எச்சரிக்கை விடுப்பது, குடைச்சல் கொடுப்பது போன்ற வேலைகளில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. 2021 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில் நடந்த ஜனநாயக உச்சி மாநாட்டிற்கு வங்கதேசத்திற்கு அழைப்பு விடுக்காமல் தவிர்க்கப்பட்டது. மேலும், 2021-ஆம் ஆண்டு டிசம்பரில் மனித உரிமை மீறல்களை காரணம்காட்டி வங்கதேசத்தின் உயரடுக்கு துணை ராணுவப் படையான ரேபிட் ஆக்ஷன் பட்டாலியனுக்கு (ஆர்.ஏ.பி.) அமெரிக்கா தடை விதித்தது. அதனோடு, பல மூத்த ஆர்.ஏ.பி. அதிகாரிகளின் சொத்து முடக்கம் மற்றும் விசா தடை ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆர்.ஏ.பி. தலைவர்களை ‘‘மரணக் குழுக்கள்’‘ என்று குறிப்பிட்டதோடு, வங்கதேசத்தில் பலர் காணாமல் போனதுடன் அந்த அதிகாரிகளை தொடர்புபடுத்தியது. இந்த நிகழ்வு அச்சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் உச்சமாக, கடந்த செப்டம்பர் மாதத்தில் ‘‘வங்கதேசத்தில் ஜனநாயகத் தேர்தல் செயல்முறையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நபர்கள்’‘ என்று கூறி வங்கதேசத்தின் ஆளும்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் விசா கட்டுப்பாடுகளை விதிப்பதாக அமெரிக்கா அறிவித்தது.

இந்நிலையில், நோபல் பரிசு பெற்றவரும் ஹிலாரி கிளிண்டனின் நெருங்கிய நண்பருமான வங்கதேசத்தை சேர்ந்த முகமது யூனுஸை வைத்து வங்கதேசத்தில் ஆட்சி மாற்றத்தை கொண்டுவர அமெரிக்கா முயற்சி செய்கிறது என்று செய்திகள் வெளியானதையடுத்து, முகமது யூனுஸ் மற்றும் அவரது நண்பர்களை கைதுசெய்து சிறையில் அடைத்தது ஷேக் ஹசீனா அரசு.

அமெரிக்காவிற்கு மாறான இந்தியாவின் அணுகுமுறை

ஷேக் ஹசீனாவின் வெற்றி குறித்து அமெரிக்காவிற்கு நேரெதிரான அணுகுமுறையை இந்தியா கையாண்டிருப்பது அமெரிக்காவிற்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி சீன சார்பு கட்சியாக உள்ளதால் பி.என்.பி. தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம். ஆனால், பி.என்.பி. பாகிஸ்தான் சார்பு கட்சி என்பதாலும் கடந்த காலங்களில் வர்த்தகம், எரிசக்தி மற்றும் பாதுகாப்பு போன்ற எந்த விவகாரத்திலும் இந்திய ஆளும் வர்க்கத்துடன் அக்கட்சி ஒத்துழைக்கவில்லை என்பதாலும் ஷேக் ஹசீனாவே மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமென்று இந்தியா விரும்பியது.

இதன் காரணமாக, ஷேக் ஹசீனாவின் வெற்றியை மேற்குலக நாடுகள் கடுமையாக விமர்சித்தபோதும் ஷேக் ஹசீனாவை தொடர்புகொண்டு அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார் மோடி. மேலும், மேற்குலக நாடுகள் ஷேக் ஹசீனாவை கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்தபோது கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் வங்கதேசத் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ரா, ‘‘வங்கதேசத் தேர்தல் என்பது அவர்களின் உள்விவகாரம், வங்கதேச மக்கள் தான் தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும்’‘ என்றார்.

தமது நாட்டு ஆளும் வர்க்கங்களின் நலனையும், அவர்கள் வங்கதேசத்தில் போட்டுள்ள முதலீடுகளையும் முன்னிறுத்தியே இந்தியா இந்த அணுகுமுறையைக் கையாண்டு வருகிறது. குறிப்பாக, ஹசீனா ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்குமான நெருக்கம் அதிகரித்தது. சீன முதலீடுகள் வங்கதேசத்தில் அதிகரித்து வந்தாலும் இந்தியாவுடனான நெருக்கத்தை ஷேக் ஹசீனா துண்டித்துக் கொள்ளவில்லை. குறிப்பாக, வங்கதேச எல்லைப் பகுதியான வடகிழக்கு மாநிலங்களில் செயல்பட்டுவரும் கிளர்ச்சிக் குழுக்களை ஒடுக்குவதில் மோடியும் ஹசீனாவும் கைகோர்த்தனர். எனவே, கடந்த 2015-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தத்தை மேற்கொண்டதன் மூலம் இந்தியாவின் சில நிலப்பகுதிகளை விட்டுக்கொடுத்து 41 ஆண்டுகால எல்லைப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்தார் மோடி. இதன் விளைவாக, வங்கதேசத்தில் இந்தியாவின் முதலீடுகள் அதிகரிக்கத் தொடங்கின.

குறிப்பாக, ரூப்பூர் அணுமின் நிலையத்தை கட்டும் பணியில் ரஷ்யாவுடன் இந்தியாவும் இணைந்து ஈடுபட்டு வருகிறது. மேலும், கடந்தாண்டு வங்கதேசத்தில் உள்ள சட்டோகிராம் மற்றும் மோங்லா துறைமுகங்களில் போக்குவரத்து மற்றும் சரக்குக் கப்பல்களை அனுப்புவதற்கு இந்தியாவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் வங்கதேசத்திற்கு சரக்குகளை கொண்டு செல்லும் நேரத்தையும் செலவையும் குறைக்க முடியும். கடல் போக்குவரத்து மட்டுமின்றி இரு நாடுகளும் ரயில் போக்குவரத்தாலும் இணைக்கப்பட்டுள்ளன.

இது தெற்காசியாவில் இந்தியாவை தனது பேட்டை ரவுடியாக பாவித்து வந்த அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியாகும். அமெரிக்காவின் ஒற்றைத்துருவ உலக மேலாதிக்கம் சரிந்து வருவதன் விளைவாய் சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் அமெரிக்காவிற்கு போட்டியாக வளர்ந்து வருவது ஒருபுறம். மற்றொருபுறம், இத்தனை ஆண்டுகளாக அமெரிக்காவின் மேலாதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளின் தன்மையும் தற்போது மாறி வருகிறது. முன்பு போல அமெரிக்கா சொல்வதற்கெல்லாம் அடிபணிந்து போகாமல், தன் நாட்டு ஆளும் வர்க்கத்தின் நலனை முன்னிறுத்தி அணுகுவது என்ற நிலைக்கு பல நாடுகள் நகர்ந்துள்ளன.

இந்தியாவின் ஆட்சியதிகாரத்தில் அமர்ந்திருக்கும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக் கும்பலுக்கு தெற்காசிய நாடுகளை உள்ளடக்கிய ‘அகண்ட பாரதம்’ கனவு உள்ளதாலும், அக்கனவு அதானி-அம்பானிகளின் நலன்களுடன் பிணைக்கப்பட்டிருப்பதாலும் அதற்கேற்ற வகையில் தெற்காசிய பிராந்தியத்தில் காய் நகர்த்தி வருகிறது. வங்கதேசம் தொடர்பான இந்தியாவின் நடவடிக்கையிலிருந்து இதைத் புரிந்துகொள்ள முடியும். ஆனால், தனது மேலாதிக்கம் சரிந்து வருவதனால் அமெரிக்காவால் இந்தப் போக்கை தடுக்கவும் முடிவதில்லை.

மேலாதிக்கப் போட்டி: உழைக்கும் மக்களைச் சூழ்ந்து வரும் பேராபத்து

கடந்தாண்டில் தெற்காசியாவில் உள்ள இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் அடுத்தடுத்து பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டு, உழைக்கும் மக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். அவை அனைத்தும் அமெரிக்க-சீன மேலாதிக்கப் போட்டியின் விளைவாய் நடந்தவை.

இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் சீனாவின் கடனாலும் முதலீட்டாலும் சீன மேலாதிக்கத்திற்குக் கீழ் சென்று கொண்டிருந்தன. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அமெரிக்கா, அந்நாடுகளுக்கான சலுகைகளை ரத்து செய்வது, நிதியை முடக்குவது, சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் மறுகாலனியாக்கத் தாக்குதல்களை தொடுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இதனாலேயே அந்நாடுகள் அடுத்தடுத்துப் பொருளாதார நெருக்கடியில் சிக்கின. அந்த வகையில், வங்கதேசமும் தற்போது இத்தகைய சவாலை எதிர்கொண்டுள்ளது.

வங்கதேசத் தேர்தலுக்கு முன்பாகவே, அந்நாட்டின் முக்கியப் பொருளாதார ஆதாரமாக உள்ள பல பில்லியன் டாலர் மதிப்புகொண்ட ஆயத்த ஆடைத் தொழில் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்கும் அபாயம் உள்ளது என்ற பேச்சு அடிபட்டது. தொழிலாளர் உரிமைகளை ஷேக் ஹசீனா அரசு மதிக்கவில்லை என்ற காரணத்தை வைத்துக் கொண்டு இத்தகைய தடையை அமெரிக்கா முன்னெடுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. வங்கதேசத்தின் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் 80 சதவிகிதத்திற்கு அதிகமான பங்கைக் கொண்டுள்ள அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும், அதன் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தால் வங்கதேச மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாவர். மேலும், வெளிநாட்டவர்களுடன் இணைந்து பி.என்.பி. சதி செய்வதாகவும், வெளிநாடுகளில் இருந்து அவர்கள் உத்தரவுகளைப் பெறுவதாகவும் தேர்தல் பிரச்சாரத்தில் ஷேக் ஹசீனா கூறியது குறிப்பிடத்தக்கது.

இன்னொருபுறம், அமெரிக்காவின் பிடியில் இருக்கும் சர்வதேச நாணய நிதியத்திடம் இரண்டாம் கட்ட கடனைப் பெறுவதற்கான வேலைகளில் வங்கதேச அரசு ஈடுபட்டுள்ளது. இதன்மூலம், வருங்காலத்தில் வங்கதேச மக்கள் மீது விலைவாசி உயர்வு, சலுகை துண்டிப்பு, மக்கள் நல திட்டங்கள் ரத்து, மின்சாரம்-எரிபொருள் கட்டண உயர்வு போன்ற மறுகாலனியாக்கத் தக்குதல்கள் தொடுக்கப்படுவதற்கான அபாயமும் உள்ளது. இதனால், ஏற்கெனவே விலைவாசி உயர்வு, பணவீக்கம், ஊதிய வெட்டு போன்ற நெருக்கடிகளில் பாதிக்கப்பட்டுவரும் வங்கதேச மக்களின் வாழ்நிலை இன்னும் மோசமான நிலைக்குச் செல்லும்.

எனவே, வங்கதேசத்தின் உழைக்கும் மக்கள் இந்த அபாயத்தைப் புரிந்துகொண்டு இதற்கெதிரான போரட்டங்களை முன்னெடுப்பது அவசியமாகிறது. ஏற்கெனவே, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிரம்மாண்டமான போராட்டங்களில் ஆயத்த ஆடை தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், வங்கதேசத்தைக் குறிவைக்கும் அனைத்து ஏகாதிபத்தியங்களுக்கும், அவர்களது அடிவருடிகளான உள்நாட்டு ஆளும் வர்க்கங்களுக்கும் எதிரான போராட்டங்களாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். சீனா – அமெரிக்கா இடையிலான மேலாதிக்கப் போட்டியாலும், இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க நோக்கத்தாலும், நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள தெற்காசியவை சேர்ந்த அனைத்து நாட்டு உழைக்கும் மக்களும் இத்தகைய போராட்டங்களில் ஈடுபடுவதும், இதற்கேற்ப புரட்சிகர – ஜனநாயகச் சக்திகளின் ஒருங்கிணைப்பை உருவாக்குவதும் நமது கடமையாகும்.


துலிபா

(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க