மணிப்பூர்: வன்முறையைத் தீவிரப்படுத்த ஆயத்தமாகும் காவிக் கும்பல்

மணிப்பூர் போலீசு ஜபல்பூரில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையிலிருந்து 7.62 மி.மீ. எம்.எம்.ஜி. (Medium Machine Guns) வாங்கியுள்ளதாகவும் அவற்றைப் பயன்படுத்த 21 நாள் பயிற்சி அளிக்குமாறு இந்திய இராணுவத்தைக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

ணிப்பூரில் வன்முறையும் மோடி கும்பலுக்கு எதிரான மக்கள் போராட்டங்களும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சகமானது மேற்கு இம்பால் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது, செப்டம்பர் 15 வரை இணைய சேவையையும் முடக்கியுள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதத்தில், சமவெளியில் வாழும் மெய்தி இன மக்களுக்கும் பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற நயவஞ்சகமான உத்தரவை மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை பொறுப்பு நீதிபதி முரளிதரன் வழங்கினார். இதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். காவி கும்பலின் தலைமையில் மெய்தி இன வெறியர்கள் குக்கி பழங்குடியின மக்கள் மீது திட்டமிட்ட கலவரத்தைக் கட்டவிழ்த்துவிட்டனர். இந்த இனவெறி கலவரத்தில் இதுவரை 200-க்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சமீபத்தில் மணிப்பூர் முதல்வரும் இந்துத்துவ பயங்கரவாதியுமான பைரன் சிங், “மணிப்பூர் கலவரத்தைத் தொடங்கியது தான்தான்” என்று பேசியிருந்த ஆடியோ வெளியானதையடுத்து மணிப்பூரில் மீண்டும் வன்முறை தீவிரமடைந்துள்ளது. முன்பு உருட்டுக் கட்டைகள், துப்பாக்கிகளைக் கொண்டு வன்முறை நடத்தப்பட்ட நிலையில், தற்போது டிரோன்கள், வெடி மருந்துகள் நிரம்பிய ஏவுகணைகளைக் கொண்டு கொடூரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி ஜரிபாம் மாவட்டத்தில் ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர் தாக்குதல்களில் இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.


படிக்க: பயங்கரவாதி பைரன்சிங்கின் ஒப்புதல் வாக்குமூலம்!


இன்னொருபுறம், கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் மெய்தி இன மாணவர்கள் ஒன்றிய அரசின் துணை ராணுவப் படையினர் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாகவே நேற்றைய தினம் மெய்தி இன மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து வன்முறையைக் கட்டுப்படுத்த முடியாத போலீசுத்துறை தலைமை இயக்குநர் (டி.ஜி.பி.), மாநில அரசின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை முன்வைத்து ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாகச் சென்றனர்.

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட வேண்டும், வன்முறைக்குக் காரணமாய் இருப்பவர்களைக் கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பி ஆளுநர் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த அமைதி வழி போராட்டத்தைப் பாதுகாப்புப் படையைத் தடுத்ததையடுத்து போராட்டம் வன்முறையாக மாற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அமித்ஷாவின் உருவபொம்மையும் எரிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்தே வன்முறையைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் ஒன்றிய உள்துறை அமைச்சகமானது மேற்கு இம்பால் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து செப்டம்பர் 15 வரை இணைய சேவையையும் முடக்கியுள்ளது.

ஆனால், இது அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சி என்று மணிப்பூர் பா.ஜ.க. அரசு சொல்வது அப்பட்டமான பொய்யாகும். குக்கி பழங்குடியின மக்கள் மீதான அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடுவதற்கும் இரு சமூக மக்களுக்கிடையே மீண்டும் வன்முறை வெறியாட்டங்களைத் தீவிரப்படுத்துவதற்குமே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதற்கான ஆயத்த வேலைகளைக் காவிக் கும்பல் ஏற்கெனவே தொடங்கிவிட்டது.


படிக்க: மணிப்பூர்: மோடி அரசே அமைதியை நிலைநாட்டு! கிளர்ந்தெழும் குக்கி – சோ பழங்குடியின மக்கள்


மணிப்பூர் போலீசு ஜபல்பூரில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையிலிருந்து 7.62 மி.மீ. எம்.எம்.ஜி. (நடுத்தர இயந்திரத் துப்பாக்கிகள் – Medium Machine Guns) வாங்கியுள்ளதாகவும் அவற்றைப் பயன்படுத்த 21 நாள் பயிற்சி அளிக்குமாறு இந்திய இராணுவத்தைக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. எம்.எம்.ஜி எனப்படும் இந்த துப்பாக்கியானது சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திலிருந்து, சுமார் 150 மீ X 75 மீ பரப்பளவிற்கு எதிரியை நோக்கிக் கடக்க முடியாத, நகரும் சுடும் மண்டலத்தை (mobile zone of fire) உருவாக்க இராணுவத்தால் பயன்படுத்தப்படும் ஓர் ஆயுதமாகும். இந்த தாக்குதல் பரப்பளவில் உள்ள அனைவரும் சில நொடிகளில் கொல்லப்படுவர். இந்த ஆயுதம் ராணுவத்தால் போரின் போது மட்டுமே பயன்படுத்தப்படும் ஒன்று.

சட்டம் – ஒழுங்கைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில், வெறும் 21 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு மாநில போலீசிடம் இந்த கொடூர ஆயுதத்தை வழங்குவது மிகவும் ஆபத்தானதாகும். போலீசு நிலையத்திலுள்ள ஆயுதங்களைப் போலீசே போராளிக் குழுக்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுவரும் நிலையில், இதுபோன்ற கொடூர ஆயுதங்கள் அவர்கள் கைகளில் கிடைத்தால் அது மிகப்பெரிய பேரழிவாக மாறும்.

ஆக, மணிப்பூரில் வன்முறையைத் தடுப்பதற்கோ மீண்டும் அமைதி திரும்புவதற்கு மாநிலத்தில் உள்ள பைரன் சிங் தலைமையிலான அரசும் மத்தியில் உள்ள மோடி தலைமையிலான அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவது கிடையாது, மாறாக நிலைமையை இன்னும் மோசமாக்கி அதில் ஆதாயம் தேடவே காவி கும்பல் விரும்புகிறது. எனவே மெய்தி இன மக்களும் குக்கி இன மக்களும் ஒன்று சேர்ந்து போராடுவதன் மூலமே மாநிலத்தில் அமைதியை நிலை நாட்டவும் வன்முறையைக் கட்டுப்படுத்தவும் முடியும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க