பாலியல் வன்கொடுமை குற்றவாளியுடன் கூட்டாளியாக செயல்பட்ட விருத்தாச்சலம் போலீசு

பெண் காணாமல்போன வழக்கில் பாலியல் வன்புணர்வு பிரிவை சேர்க்குமாறு கோரியுள்ளனர். அப்போதுதான் விருத்தாச்சலம் போலீசு தனது கோரமுகத்தைக் காட்டத் தொடங்கியது.

மனவளக் குறைபாடுடைய, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைக் கடத்தி, சுமார் 21 நாட்கள் பல ஊர்களுக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்புணர்வு செய்த ஒரு குற்றவாளியை போலீசு எப்படி அணுகியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? “தப்பி ஓடும்போது கீழே விழுந்து கால் உடைந்த குற்றவாளி”, “காவல்நிலைய கழிவறையில் வழுக்கி விழுந்த குற்றவாளியின் கைகள் உடைந்தன” இப்படி அன்றாடம் நாம் செய்தி ஊடகங்களில் பார்க்கின்ற நபர்களில் ஒருவராக அக்குற்றவாளி இருந்தானா என்றால்? நிச்சயமாக இல்லை!

மாறாக, அக்குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்வதற்கே 130 நாட்கள் ஆகிவிட்டன, பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல அதற்கும் மேற்பட்ட நாட்கள் ஆகிவிட்டன. இவையும் ஏதோ எளிதாக நடந்துவிடவில்லை, குற்றவாளியை காப்பாற்றிய போலீசுக்கு எதிராக நடத்தப்பட்ட பல்வேறு போராட்டங்களின் விளைவாகவே நடந்தேறின.

மனவளக் குறைபாடுடைய பெண்ணை வன்புணர்ந்த கொடூரன்

ள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், பாலி கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட பெண் ஜெயா. இவர் அரசுப் பள்ளி விடுதி ஒன்றில் ரூ.6,500 ஊதியத்திற்கு தூய்மை பணியாளராக வேலை செய்துக் கொண்டிருக்கிறார். வெளிநாட்டில் வேலை செய்துவந்த இவரது கணவர், தற்போது வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு தமிழ்நாடு அரசால் மாதம் ரூ.1,000 நிதியுதவி கொடுக்கப்படுகிறது. இவரை மாதம் ஒருமுறை ஜெயா சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து சென்று கொண்டிருக்கிறார். இவர்கள் தங்களுடைய முதல் மகளின் திருமணத்திற்கு வாங்கிய கடனுக்காக மாதம் ரூ.4,000 வரை வட்டியும் முதலும் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இத்தகைய வறிய சூழலில்தான் இவர்களின் குடும்பம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இவர்களின் இரண்டாவது மகள்தான் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட மனவளம் குன்றிய (Intellectual Disablity 50%) 21 வயதுடைய பெண். இவர் விருத்தாச்சலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இப்பெண்ணின் மனநலம் கருதி அவர் கொளஞ்சியப்பர் கல்லூரி அரசு விடுதியிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளார். கல்லூரியில் படித்தாலும் இப்பெண்ணால் சுயமாக தேர்வு எழுத முடியாது என்ற காரணத்தால் இவர் கூற, வேறொருவரே இவருக்காக தேர்வு எழுதுவார்.

இப்பெண்ணிற்கு சமூகவலைதளம் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி, அருமை நல்லூரைச் சேர்ந்த ஆண்டணி ஆகாஷ் என்பவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த மே 18 அன்று காலை திடீரென்று விருத்தாச்சலம் பேருந்து நிலையத்திற்கு வந்த ஆண்டனி ஆகாஷ், அப்பெண்ணை பார்க்க வேண்டுமென அழைக்க இப்பெண்ணும் சென்றிருக்கிறார். அப்பெண்ணை சந்தித்த உடனேயே அவர் மனவளம் குன்றியவர் என்பதை புரிந்துக்கொண்டு அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஆண்டனி ஆகாஷ், பெண்ணின் கையைப்பிடித்து இழுத்துச் சென்றிருக்கிறான். தனக்கு விருப்பம் இல்லை என்பதற்கான மறுப்பைக்கூட தெரிவிக்கத் தெரியாத அப்பெண் வேறுவழியின்றி அவனுடன் சென்றுள்ளார்.

இப்பெண் அன்றைய நாளுக்கான தேர்வுக்கு வரவில்லை என அவருக்காக தேர்வெழுத வந்தவர் தகவல் தெரிவித்தபோதுதான், பெண் காணாமல் போனதே குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. பெண்ணை தேடி அலைந்த குடும்பத்தினர், மறுநாள் பெண்ணை காணவில்லை (Women Missing FIR 265/2024) என்று விருத்தாச்சலம் போலீசு நிலையத்தில் புகாரளித்தனர்.

இந்நிலையில், அப்பெண்ணை பல இடங்களுக்கு அழைத்துச்சென்று மூன்று வாரங்களுக்கும் மேலாக பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியுள்ளான் ஆண்டனி ஆகாஷ். ஜூன் மாதம் எட்டாம் தேதியன்று விருத்தாச்சலம் பேருந்து நிலையத்தில் அப்பெண்ணை விட்டுச் செல்ல முயன்றபோது, அங்கு தூய்மை பணியாளராக வேலை செய்துக்கொண்டிருந்த பெண்ணின் உறவினர் ஒருவரிடம் சிக்க, செல்போனை மட்டும் தவறவிட்டுவிட்டு அவரிடமிருந்து தப்பியோடியுள்ளான்.

இதனையடுத்து, ஆண்டனி ஆகாஷிடமிருந்து கைப்பற்றிய செல்போனையும் பாதிக்கப்பட்ட பெண்ணையும் விருத்தாச்சலம் போலீசு நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணின் குடும்பத்தினர், பெண் காணாமல்போன வழக்கில் பாலியல் வன்புணர்வு பிரிவை சேர்க்குமாறு கோரியுள்ளனர். அப்போதுதான் விருத்தாச்சலம் போலீசு தனது கோரமுகத்தைக் காட்டத் தொடங்கியது.

விருத்தாச்சலம் போலீசின் கோரமுகம்

பெண் காணாமல் போனதாக பதிவுசெய்யப்பட்ட வழக்கில் பாலியல் வல்லுறவு என்ற பிரிவை சேர்க்குமாறு கூறியதற்கு, விருத்தாச்சலம் தலைமைக் காவலர் வேல்முருகன் “ஆகாஷ் ஐம்பதாயிரம் பணம் தருவதாகச் சொல்கிறான், வாங்கிக்கொண்டு செல்” என்று அராஜகமாக நடந்துகொண்டுள்ளார். “எங்களுக்கு பணம் எதுவும் வேண்டாம், அந்தப் பையனை தூக்கி ஜெயில்ல போடுங்க” என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் ஜெயா சொல்லியுள்ளார். உடனே, உதவி ஆய்வாளர் இரவிக்குமாரோ, “உன் பொண்ணுக்கு வயசு அதிகம். பையனுக்கு 20 வயசுதான் ஆகுது. அதனால உன் பொண்ணைத்தான் ஜெயில்ல போடணும்” என்று மிரட்டியுள்ளார். “மனவளர்ச்சிக் குன்றிய பெண்ணை ஜெயில்ல போடுவீங்களா? போடுங்க சார், அந்தப் பையனையும் ஜெயில்ல போடுங்க” என்று சீறியிருக்கிறார் ஜெயா. இது ஒருபுறமென்றால் இன்னொருபுறம் ஆண்டனி ஆகாஷின் சித்தப்பா பெண்ணின் குடும்பத்தினரை தொடர்புகொண்டு, “புகாரை திரும்பப்பெறவில்லையென்றால் என் மகன் தற்கொலை செய்து கொள்வான். அப்படி நடந்தால் நடப்பதே வேறு” என்று மிரட்டியுள்ளான்.

இதனையடுத்து, ஆண்டனி ஆகாஷ் மீது உரிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்ய வலியுறுத்தி மக்கள் அதிகாரம், சி.பி.ஐ(எம்.எல்) லிபரேசன், சி.பி.ஐ(எம்) உள்ளிட்ட கட்சியினர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துடன் போலீசு நிலையத்தில் போராட்டம் நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த காவல் ஆய்வாளர் முருகேசன், பெண்ணின் தாய் ஜெயாவை அழைத்து, “நீ தனியா வந்து என்ன வேணும்னாலும் கேளு, கண்ட கண்ட கட்சிக்காரனுங்கள கூட்டிட்டு வராத, அவனுங்க எல்லாம் பெரிய மயிரா, அவனுங்க கேக்குற கேள்விக்கு நான் பதில் சொல்லணுமா?” என்று இழிவாக பேசி மிரட்டியுள்ளார்.

மேலும், “ஆண்டனி ஆகாஷை பிடிக்க வேண்டுமென்றால் கன்னியாகுமரி செல்ல கார் வைக்க வேண்டும்” என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் ஜெயாவிடம் ஏட்டு வேல்முருகன் கூறி, துளியும் கூச்சமின்றி பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயிடமே ரூ.10,000 வரை பிடுங்கி தின்றுள்ளனர். மேலும், போலீசுடன் குற்றவாளியை பிடிப்பதற்காக ஜெயாவும் கன்னியாகுமரி அருமைநல்லூருக்கு சென்றுள்ளார். ஆனால், விசயமறிந்து ஆண்டனி ஆகாஷ் வீட்டிலிருந்து தப்பியுள்ளான். ஒரு வாரத்தில் தன் மகனை போலீசு நிலையத்தில் ஒப்படைப்பதாக அவனின் அம்மா தெரிவித்த நிலையில், ஒப்படைக்காமல் இழுத்தடித்துள்ளார். இவையெல்லாம் விருத்தாச்சலம் போலீசின் துணையுடனேயே நடந்தேறியது.

இருப்பினும் பல்வேறு அவமானங்களுக்கு பிறகும் ஆண்டனி ஆகாஷை கைது செய்வதில் விடாப்பிடியாக இருந்த தாய் ஜெயாவின் உறுதித்தன்மை காரணமாகவும் புரட்சிகர, ஜனநாயகக் கட்சிகளின் போராட்டத்தாலும் வேறுவழியின்றி விருத்தாச்சலம் போலீசு ஆண்டனி ஆகாஷை ஜூலை 10 அன்று போலீசு நிலையத்திற்கு வரவைத்தது. ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் வருவதற்குள்ளேயே, குற்றவாளியை பத்திரமாக அனுப்பி வைத்தது. இது தெரியாமல் போலீசு நிலையத்தில் போராடிக்கொண்டிருந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரும் கட்சியினரும் பின்னர் ஆண்டனி ஆகாஷின் வழக்குரைஞரை பிடித்து வைத்தனர். அவர்களிடமிருந்து வழக்குரைஞரை மீட்ட போலீசு குறிப்பிட்ட தேதியில் ஆண்டனி ஆகாஷை ஒப்படைக்கிறேன் என்று எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பியது. இவ்வாறு இருபது முறைகளுக்கு மேல் விருத்தாச்சலம் போலீசு நிலையத்திற்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் வந்தாலும் அவர்கள் திட்டமிட்டே அலைக்கழிக்கப்பட்டனர்.

ஒரு கட்டத்தில் காவல் ஆய்வாளர் முருகேசன், ஏட்டு வேல்முருகன் உள்ளிட்டோர்தான் குற்றவாளியைப் பாதுகாக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொண்ட பெண்ணின் பெற்றோர் மாவட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளரை சந்தித்து அவரிடம் முறையிட்டிருக்கிறார்கள். ஆனால், மூன்று முறைக்குமேல் புகாரளித்தும் ஒவ்வொரு முறையும் அவர்கள் அளித்த புகார் மனுவானது அடுத்தமுறை ‘காணாமல் போகும்’ விந்தை நடந்தேறியுள்ளது. அதேபோல், பெண் துணைக் காவல் கண்காணிப்பாளர் பெண்ணின் பெற்றோரை மகளிர் போலீசு நிலையத்துக்கு அனுப்ப, அவர்களோ காவல் ஆய்வாளர் முருகேசனை மீறி தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள். இரண்டுமுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரையும் சந்தித்து பெண்ணின் பெற்றோர் மன்றாடியிருக்கிறார்கள். ஆனால், யாரிடம் சென்றாலும் விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் முருகேசனிடமே மீண்டும் சென்று நிற்க வேண்டிய அவலநிலை பெண்ணின் பெற்றோர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மனவளர்ச்சிக் குறைபாடுடைய, தாழ்த்தப்பட்ட பெண் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமையைவிட, நீதி கிடைக்கும் என்று சென்ற இடத்தில், விருத்தாச்சலம் போலீசு காவல் ஆய்வாளர் முருகேசன் மற்றும் ஏட்டு வேல்முருகன் ஆகியோரின் கீழ்த்தரமான நடவடிக்கையும் அவர்களுக்கு துணையாக விருத்தாச்சலம் மாவட்ட போலீசுத்துறை அலைக்கழித்ததும்தான் பாதிக்கப்பட்ட தரப்பினரை மேலும் அதிகமாக பாதித்தது.

கொடூரத்தைெளிச்சத்திற்கு கொண்டு வந்த
உண்மை அறியும் குழு அறிக்கை

இந்நிலையில்தான், இது தொடர்பாக உண்மையை முழுமையாக அறிவதற்காக மக்கள் அதிகாரம் செய்தித் தொடர்பாளரும் வழக்குரைஞருமான தோழர் மருது (எ) இராமு, வழக்குரைஞர் கலைமதி, வழக்குரைஞர் கருணாகரன், மக்கள் அதிகாரம் விருத்தாச்சலம் பகுதிச் செயலாளர் தோழர் அசோக் குமார் ஆகியோரை உள்ளடக்கிய உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டு, மேற்கண்ட அதிர்ச்சிகரமான உண்மைகளை வெளிக்கொண்டு வந்தது. உண்மை அறியும் குழு அறிக்கையை 12.10.2024 அன்று வி.சி.க-வின் தலைவர் முனைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டார். அந்த அறிக்கை பல அரசியல் கட்சியினரிடமும் ஊடகங்களிடமும் கொண்டு செல்லப்பட்டது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத்தலைவர் திரு. நெல்லை முபாரக் அவர்கள் இந்நிகழ்வைக் கண்டித்து கண்டன அறிக்கையை வெளியிட்டார்.

அன்றைய தினமே ஆண்டனி ஆகாஷ் மீது பாலியல் வன்புணர்வு, கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது. மேலும், பாலியல் குற்றவாளியுடன் இணைந்து 130 நாட்கள் முதல் தகவல் அறிக்கையை திருத்தாமலும் பெண்ணை உடனே மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பாமலும் இருந்து அறிவியல் தடயத்தை அழித்த போலீசு ஆய்வாளர் முருகேசனை அதே வழக்கில் கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

விசயம் பூதாகரமாகிக் கொண்டிருப்பதை உணர்ந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எதுவுமே தெரியாததுபோல் “அந்தப் பெண் மாற்றுத்திறனாளியா, மனவளம் குன்றிய பெண்ணா?” என்று புதிதாகக் கேட்டுவிட்டு, வழக்கை விசாரிக்க டி.எஸ்.பி-யை நியமித்தார். அடுத்தடுத்த நாட்கள் போலீசு எந்திரம் வேகமாக சுழன்றது. உடனே பாதிக்கப்பட்டப் பெண்ணிடம் விசாரணை செய்யப்பட்டு, அடுத்தநாளே கன்னியாகுமரியில் இருந்த ஆண்டனி ஆகாஷ் மீது 14.10.2024 அன்று பாலியல் வன்புணர்வு (இ.த.ச. 376), ஏமாற்றுதல் (இ.த.ச. 417) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்து சிறையிலடைத்தார் காவல் ஆய்வாளர் முருகேசன். அதற்கு அடுத்தநாள் பாதிக்கப்பட்டப் பெண் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

மேற்கண்ட நடவடிக்கைகள் எல்லாம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தன்னைக் காப்பாற்றிகொள்வதற்காக எடுத்த நடவடிக்கைகளே. மனவளம் குன்றிய பெண்ணை போலீசு நிலையத்தில் விசாரித்ததே முதலில் தவறு. உளவியல் நிபுணர்கள் மூலமே விசாரணை செய்யப்பட வேண்டும். ஆண்டனி ஆகாஷ் மீது கடத்தல், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் இப்போதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. குற்றவாளிக்கு உடந்தையாக இருந்த இன்ஸ்பெக்டர் முருகேசன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனையடுத்து, கடந்த அக்டோபர் 18 அன்று மக்கள் அதிகாரம் செய்தி தொடர்பாளரும் வழக்குரைஞருமான மருது முன்னிலையில் தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த ஆணையம், “எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஏன் பதியவில்லை” என்று பதிலளிக்கும்படி காவல் ஆய்வாளர் முருகேசனுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. அன்றைய நாளில் வழக்குப்பதிவு செய்வதற்காக நேரில் வந்திருந்த தாய் ஜெயா மக்கள் அதிகாரம் தோழர்களிடத்தில், “அந்தப் பையனை கைது பண்ணி ஜெயில்ல போடுவாங்கன்னு நெனச்சேப் பார்க்கல, எந்தப் போலீஸ் ஸ்டேசன்ல கேவலமா பிச்சக்காரங்க மாதிரி நடத்துனாங்களோ அந்த ஸ்டேசன்ல மரியாதையா உக்காரவச்சுப் பேசுனாங்க” என்று கண்களில் நீர் வழிந்தபடி கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அதேசமயத்தில் குற்றவாளி மீது குறைந்தபட்சம் வழக்கு பதிவு செய்வதற்கு கூட இத்துணை போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது என்பதே இந்த அரசு கட்டமைப்பின் அவலநிலையாகும்.

இந்த கொடுமை இந்த பெண்ணிற்கு மட்டும் நடக்கவில்லை. விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் முருகேசன் பல வழக்குகளை இப்படித்தான் கிடப்பில் போட்டுள்ளார். அதாவது விருத்தாச்சலம் பகுதியில் சுமார் 200 பி.சி.ஆர். வழக்குகள் உள்ளதாகவும் அவை அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய நிர்வாகி திரு. அய்யாத்துரை தெரிவிக்கிறார். அதிலும், தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணை போலவே பாதிக்கப்படுபவர்கள் வர்க்க ரீதியாகவும் சாதி ரீதியாகவும் தாழ்த்தப்பட்ட மக்களாக இருந்தால் நீதி கிடைப்பது அவ்வளவு எளிதல்ல.

இதனால்தான், மக்கள் அதிகாரம், ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய எமது புரட்சிகர அமைப்புகள் சார்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள “பெண்கள் மீதான பாலியல் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுவோம்” என்ற பரப்புரை இயக்கத்தில் “கஞ்சா, சாராயம் விற்பனையில் ஈடுபடும் கிரிமினல் கும்பல் மற்றும் பாலியல் குற்றவாளிகளுக்கு துணைபோகும் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் கைது செய்!” என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டிருந்தது. எனவே, பெண்ணை பாலியல் வன்புணர்ந்த ஆண்டனி ஆகாஷ் வழக்கில் காவல் ஆய்வாளர் முருகேசனையும் குற்றவாளியாக இணைத்து கைதுசெய்து சிறையிலடைக்க வேண்டும்.


தோழர் மருது

(புதிய ஜனநாயகம் – நவம்பர் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க