இளைஞர்களின் உயிரைக் குடிக்கும் ஆன்லைன் கடன் செயலிகள்!

பல உயிர்கள் சைபர் மோசடி கும்பல்கள் மூலம் பறிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதில் சில நிகழ்வுகளும் மரணங்களும்தான் வழக்குகளாக பதியப்படுகின்றன. ஏராளமானவை வெளியுலகிற்கு தெரிய வருவதே இல்லை.

ன்லைன் சைபர் மோசடி கும்பலின் துன்புறுத்தல்களால் இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாகியுள்ள நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் திருமணமான 47 நாட்களில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவந்த 27 வயதான இளைஞர் நரேந்திரன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வானிலை மாற்றம் காரணமாக கடலுக்கு செல்லாததால், தன்னுடைய செலவிற்காக ஆன்லைன் கடன் செயலி மூலம் ரூ.2,000 கடன் பெற்றுள்ளார்.

பின்னர், தான் பெற்ற கடனை செலுத்திவிட்ட போதிலும், அதிக பணத்தை வட்டியாக கட்டச்சொல்லி ஆன்லைன் மோசடி கும்பலானது நரேந்திரனை தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளது. ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் நரேந்திரன், “நீங்கள் கேட்ட வட்டிப் பணத்தை தரமுடியாது” என்று மோசடி கும்பலிடம் தெரிவித்திருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த மோசடி கும்பல் உளவியல் ரீதியாக நரேந்திரனை துன்புறுத்தி வந்துள்ளது. இதற்கிடையில் கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி நரேந்திரனுக்கு திருமணமாகியுள்ளது. அதற்கு பின்பு மோசடி கும்பலானது இருவரையும் மிரட்டி வந்துள்ளது. மேலும், இருவரின் புகைப்படங்களையும் ஆபாசமாக சித்தரித்து அதனை இருவரின் நண்பர்களுக்கும் வாட்ஸ்அப்-இல் அனுப்பி இருக்கிறது.

இதனால் மனமுடைந்த நரேந்திரன் கடந்த டிசம்பர் 7 அன்று தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து நரேந்திரனின் உறவினர்கள் போலீசிடம் தெரிவித்தப் பின்னரே இச்செய்தி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதற்கு முன்பாக கடந்த மே மாதம் சென்னையின் புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கோபிநாத் “குயிக் கேஷ்” (Quick Cash) என்கிற ஆன்லைன் கடன் செயலியில் கடன் வாங்கி, அதற்கான வட்டியையும் அசல் தொகையையும் திருப்பி செலுத்தியுள்ளார். இருந்தபோதிலும் சைபர் மோசடி கும்பலானது கூடுதலாக பணம் கேட்டு அவரை மிரட்டி வந்துள்ளது. இறுதியில், “கேட்ட பணத்தைக் கொடுக்காவிட்டால் உன்னுடைய படத்தை ஆபாசமான முறையில் மார்பிங் செய்து உன்னுடைய நண்பர்களுக்கு அனுப்பிவிடுவோம்” என்று அக்கும்பல் மிரட்டியுள்ளது. இதனால் மனமுடைந்த கோபிநாத் தன்னுடைய அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் .


படிக்க: இந்தியாவில் அதிகரித்துவரும் மாணவர்கள் தற்கொலைகள்


கடந்த அக்டோபர் மாதம் செங்கல்பட்டை அடுத்த அனுமந்த புத்தேரி பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் ஆன்லைன் செயலி மூலம் கடன் பெற்றுள்ளார். சைபர் மோசடிக் கும்பலானது கடனை உடனடியாக திருப்பி செலுத்துமாறு அவரை வற்புறுத்தியுள்ளது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில், மின்விசிறியில் தூக்குப்போட்டு யுவராஜ் தற்கொலை செய்து கொண்டார்.

இவர்களைப் போன்ற பல உயிர்கள் சைபர் மோசடி கும்பல்கள் மூலம் பறிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதில் சில நிகழ்வுகளும் மரணங்களும்தான் வழக்குகளாக பதியப்படுகின்றன. ஏராளமானவை வெளியுலகிற்கு தெரிய வருவதே இல்லை.

நாட்டின் இன்றைய பொருளாதார சூழலில், அடித்தட்டு மக்கள் தங்களின் வாழ்வாதாரத் தேவைக்காக, எளிதாக பணம் கிடைக்கும் இத்தகைய ஆன்லைன் கடன் செயலிகளில் கடன் வாங்குவதை நோக்கி தள்ளப்படுகின்றனர். மக்களின் இந்நிலையை பயன்படுத்திக் கொண்டு மோசடிக் கும்பலானது, அவர்களை மிரட்டி மன உளைச்சலுக்கு உள்ளாக்கி, இறுதியில் அவர்களின் உயிரையும் பறித்து விடுகிறது.

இதுபோன்ற சைபர் குற்றங்களை தடுப்பதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதன் விளைவாகவே, இதுபோன்ற சைபர் மோசடிக் கும்பல்ககளின் எண்ணிக்கையும் குற்றங்களும் சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்து வருகின்றன.

எனவே, உழைக்கும் மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறிவரும் உயிர்பறிக்கும் ஆன்லைன் கடன் செயலிகளை அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும். மனிதநேயம் கொண்ட ஒவ்வொருவரும் இதற்காக குரல் கொடுக்க வேண்டும். இருப்பினும், மக்கள் நலன்சார் அரசும் மாற்று பொருளாதார கட்டமைப்பும்தான் இத்தகைய சைபர் மோசடி கும்பல்களை தடுப்பதற்கு நிரந்தர தீர்வாக அமையும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க