மீண்டும் மாருதி தொழிலாளர் போராட்டம்

தற்போது 2024 செப்டம்பர் 10லிருந்து மானேசர் மாதிரி டவுன்ஷிப் (Model Township) பகுதியில் வேலை இழந்த தொழிலாளர்களின் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.

2012 ஆம் ஆண்டு மானேசரில் உள்ள மாருதி சுசுகி தொழிற்சாலையில் நிர்வாகத்தினால் தொழிற்சாலைக்குள் அனுப்பப்பட்ட குண்டர் படைகளினால் ஏற்பட்ட வன்முறை அசம்பாவிதங்களைத் தொடர்ந்து துரதிருஷ்டவசமாக மனித வளத்துறையைச் சேர்ந்த மேலாளர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து 2500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதும் 147 தொழிலாளர்கள் கிரிமினல் குற்றம் சுமத்தப்பட்டு சிறையிலிடப்பட்டதும் பின்னர் 2017 இல் வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பில் ஆகப்பெரும்பான்மையான தொழிலாளர்கள் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டதும் பலரும் அறிந்த செய்திகள்.

ஆயினும் அதன் பிறகு வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்று மாருதி சுசுகி தொழிலாளர் சங்கம் அதற்கென போராட்டக் கமிட்டி ஒன்றை அமைத்து பல கட்ட போராட்டங்களை நடத்தி வருவதைப் பற்றி எவரும் பேசுவதில்லை. தேசிய ஊடகங்கள் அரசுடன் சேர்ந்து திட்டமிட்டு இருட்டடிப்பு செய்து வருகின்றன. இந்நிலையில் தற்போது 2024 செப்டம்பர் 10லிருந்து மானேசர் மாதிரி டவுன்ஷிப் (Model Township) பகுதியில் வேலை இழந்த தொழிலாளர்களின் தர்ணா போராட்டம் நடைபெற்று வருவதைப் பற்றியும் போராட்டக் கமிட்டி மற்றும் மாருதி சுசுகி தொழிலாளர் சங்கத்தின் செயல்பாடுகள் பற்றியும் போராட்டக் கமிட்டி ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது. அதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் செய்திகளை வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று கருதி அப்படியே தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிடுகிறோம்.

இப்போராட்டம் குறித்த விரிவான கட்டுரைகள் வரும் நாட்களில் வெளியிடப்படும்.

***

பத்திரிகை செய்தி

 மாருதி சுசுகி போராட்ட கமிட்டி
(மாருதி சுசுகி தொழிலாளர் சங்கம்)

தொழிலாளர்களின் நீதிக்கான போராட்டத்தை 2012 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பல வழிகளில் நடத்தி வரும் மாருதி சுசுகி வேலை நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் தொழிலாளர்கள் தற்போது மானேசரில் ஒரு தர்ணா (Sit – In) போராட்டத்தை ஒழுங்கமைத்து நடத்தி வருகின்றனர்.

2011 ஆம் ஆண்டில் நிரந்தர ஒப்பந்த மற்றும் பயிற்சி தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து அடுத்தடுத்து மூன்று போர்க்குணம் மிக்க வேலைநிறுத்த போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவற்றில் இரண்டு வேலை நிறுத்தங்களின் போது மொத்த தொழிற்சாலையையே ஆக்கிரமித்துக் கொள்ளும் வகையில் தொழிலாளர்கள் ஒன்றுபட்டு நின்றதில் நிர்வாகம் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க நிர்ப்பந்திக்கப்பட்டது.

புதிதாகத் தோன்றிய மாருதி சுசுகி தொழிலாளர் சங்கம் தனது கோரிக்கைப் பட்டியலில், தொழிற்சாலை வளாகத்திற்குள் ஒப்பந்த (Contract) தொழிலாளர் முறையை ரத்து செய்ய வேண்டும் என்பதைத் தனது முதல் கோரிக்கையாக வைத்தது. தொழிற்சங்கத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று சதித்திட்டம் போட்ட நிர்வாகம் 2012 ஜூலை 18 அன்று வாடகைக்கு அமர்த்தப்பட்ட குண்டர் படையைத் தொழிற்சாலை வளாகத்திற்குள் அனுப்பி தொழிலாளர்களைத் தாக்கி மோதலில் ஈடுபட்டு கலவரத்தைத் தூண்டியது. நிர்வாகத்தின் குண்டர் படைக்கும் தொழிலாளர்களுக்கும் ஏற்பட்ட மோதல் கலவரத்தின் போது அலுவலகத்தின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்ததில் ஏற்பட்ட புகை மூட்டத்தால் மூச்சுத் திணறி ஒரு மனிதவளத்துறை மேலாளர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழக்க நேர்ந்தது. இதை அப்போதிருந்த மாருதி நிறுவனத் தலைவர் (Chairman) R.C. பார்க்கவா “இது ஒரு வர்க்கப் போர்” என்று கூறினார். அதைத்தொடர்ந்து மாருதி நிர்வாகம், அரசு எந்திரம், நீதித்துறை எல்லாமுமாகச் சேர்ந்து இதுவரையிலும் எங்குமே நடந்திராத மிகக் கொடுமையான அடக்கு முறையைக் கட்டவிழ்த்து விட்டன.

எவ்வித விசாரணையும் இல்லாமல் 546 நிரந்தர தொழிலாளர்கள் உள்ளிட்டு 2500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். 147 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தொழிற்சாலையில் உற்பத்தி நடக்கும் இடங்களில் தொழிலாளர்களைக் கண்காணிக்கப் போலீசுப் படை நிறுத்தப்பட்டது. நிர்வாகத்துடன் சேர்ந்து கொண்டு ஆளும் கட்சிகளும் பெரிய தேசிய ஊடகங்களும் போராடும் தொழிலாளர்களைக் கொலைகாரர்கள் என்றும் கிரிமினல்கள் என்றும் அவதூறு செய்து தூற்றின. இருந்தபோதிலும் இந்த அவதூறுகள் நீங்கலாக மாருதி சுசுகி தொழிலாளர்கள் போராட்டம் உலகெங்கும் வரலாறு காணாததாக அறியப்பட்டது. இந்தியா முழுவதிலும் உள்ள தொழிலாளர்களுக்கு உணர்வூட்டியது மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இப்போராட்டம் பெரும் வரவேற்பையும் பலரின் ஆதரவையும் பெற்றது.

பின்னர் 2014 ஆம் ஆண்டில் போராடும் மாருதி சுசுகி தொழிலாளர்கள் தங்களின் தொழிற்சங்கத்தை மீண்டும் மறு ஒழுங்கமைப்பு செய்து கட்டமைத்தார்கள். தொழிலாளர் நீதிமன்றத்திலும் குற்றவியல் நீதிமன்றத்திலும் வழக்குகளை நடத்தியதுடன் வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியிலமர்த்த வேண்டும் என்றும், பொய் வழக்குகளை அரசு ரத்து செய்ய வேண்டுமென்றும், தொழிலாளர்களுக்கான நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்தது.

ஹரியானா அரசால் இதற்கென அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவினாலும் (Special Investigation Team) செஷன்ஸ் நீதிமன்ற விசாரணையிலும் ஆகப் பெரும்பான்மையான தொழிலாளர்கள் மீது எந்த குற்றத்தையும் நிரூபிக்க முடியவில்லை. 546 நிரந்தரத் தொழிலாளர்களில் 419 பேர் நிரபராதிகள் மற்றும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 117 தொழிலாளர்களின் குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்பதனால் நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டனர். ஆயினும் வழக்கின் போது பிணை வழங்காமல் 5 ஆண்டுகள் அநீதியான முறையில் சிறையிலிடப்பட்டிருந்தனர்.

2017 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில் விடுவிக்கப்பட்டவர்கள் தவிர மற்றவர்களுக்கு வெவ்வேறு அளவுகளில் சிறைத் தண்டனை வழங்கப்பட்டன. அதில் 12 தொழிற்சங்க முன்னோடிகள் உட்பட 13 தொழிலாளர்களுக்கு அரசு மற்றும் நிர்வாகத்தால் பொய்யாகப் புனையப்பட்ட குற்றங்களுக்காக ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. தொழிலாளர் இயக்கங்களை இப்படி கிரிமினல்களாக நடத்தி தண்டனை வழங்கியதை எதிர்த்து மானேசரில் உள்ள டஜன் கணக்கான தொழிற்சாலைகளில் இந்தியா முழுவதிலும் மற்றும் சில வெளிநாடுகளிலும் பல தொழிற்சாலைகளில் தொழிலாளர் போராட்டங்கள் வெடித்தன.

வேலை நீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்ட தொழிலாளர்கள் தங்களைத் தனி அமைப்பாக ஒழுங்கமைத்துக் கொண்டு தொழிற்சங்கத்தின் உதவியுடன் தொடர்ந்து போராடி 2022 ஆம் ஆண்டில் சிறைப்படுத்தப்பட்டிருந்த எல்லா தொழிலாளர்களையும் வெற்றிகரமாகப் பிணையில் வெளியே கொண்டு வந்து விட்டனர். அதன்பிறகு தங்களை மீண்டும் பணியமர்த்தக் கோரி தொடர்ச்சியாக கூர்கான் நகர வீதிகளில் பல பொதுக் கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் என்று பலவகையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அவ்வகையில் தற்போது தங்களை மஸ்தூர் சபா என்ற பெயரில் அமைப்பாக்கிக் கொண்டு 2024 செப்டம்பர் 10 அன்று மானேசரில் காலவரம்பற்ற தர்ணா போராட்டத்தை நடத்தி வருகின்றனர். வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் 300 பேர் அளவில் ஹரியானா மாநிலத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் குடும்பத்துடன் திரண்டு வந்து அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் தொடங்கிய அன்று டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியம் (NCR – Delhi National Capital Region) மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த பல தொழிற்சங்கங்கள் போராடும் தொழிலாளர்களுக்கு தங்களின் ஒன்றுபட்ட ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் வந்து கலந்து கொண்டனர்.

தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி போராட்டங்களை வழிநடத்தும் மாருதி சுசுகி தொழிற்சங்கத்தின் அங்கமான போராட்டக் கமிட்டியின் தோழர்கள் குஷி ராம் மற்றும் சதீஷ் இருவரும் இந்தக் கூட்டத்தை ஒழுங்கமைத்து நடத்தினர். மேலும் நடந்து வருகின்ற போராட்ட நடவடிக்கைகள் குறித்து போராட்ட கமிட்டி சார்பாக விரிவாக விளக்கினார் தோழர் கத்தார் சிங்.

ஐந்து ஆண்டுகள் சிறைப்பட்டிருந்த தோழர் அமித் நயன் 2012 இல் தொழிலாளர் போராட்டங்களின் போது நடந்த சம்பவங்கள் பற்றி விளக்கிப் பேசினார். அவருடன் டாய்க்கின் யூனியன் (Daikin Union) சார்பாக மன்மோகனும் பெல் சோனிக்கா (Bell Sonica) யூனியன் சார்பாக அஜித் என்பவரும் மாருதி சுசுகி தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தமது ஆதரவைத் தெரிவித்துப் பேசினர். மற்றும் பல தொழிற்சங்க தலைவர்களும் மாணவர்கள் அமைப்பு தலைவர்களும் தொழிலாளர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களும் கூட்டத்தில் உரையாற்றினர்.

கூட்டத்தில் பேசியவர்கள் 2012 க்கு பின்னர் மாருதி சுசுகி தொழிலாளர்களின் இடைவிடாத போராட்ட நடவடிக்கைகள் பற்றியும் தற்போது நடக்கும் இந்த தர்ணா போராட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும் மாருதி சுசுகி தொழிற்சாலைகளில் இயங்கும் மூன்று தொழிற்சங்கங்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே செட்டில்மெண்ட்டுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றியும் வரும் நாட்களில் தொழிலாளர்கள் எதிர்கொள்ள இருக்கும் சவால்கள் பற்றியும் விளக்கிப் பேசினர்.

தற்போது மானேசரில் நடந்து வரும் தர்ணா போராட்டம் அரசையும் தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தையும் முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு முன்வர நிர்ப்பந்தித்திருக்கிறது. ஹரியானா தலைநகரான சண்டிகரில் செப்டம்பர் 30 அன்று தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற முத்தரப்பு கூட்டத்தில் மாருதி சுசுகி நிர்வாகத்தின் திமிரான மற்றும் வறட்டுத்தனமான நடைமுறையால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. வரும் நாட்களில் தொழிலாளர்கள் தங்களது போராட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த இருக்கின்றனர். 2024 அக்டோபர் 10 முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளனர். நீதியை வென்றெடுக்கும் வரை போராட்டம் தொடரும்.

நன்றி: புரோகிரஸிவ் இண்டர்நேசனல் (Progressive International)

மொழியாக்கம்: சுந்தரம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க