2025 புத்தாண்டின் தொடக்கத்தில் ஜனவரி 5 அன்று, மாருதி சுசுகி போராட்டக் கமிட்டியின் அழைப்பை ஏற்று புதிய தொழிற்சங்கத்தின் ஸ்தாபகப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ராஜஸ்தான், பீகார், ஹரியானா, ஒரிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் மாருதி சுசுகி தொழிற்சாலையின் நான்கு கிளைகளிலும் தற்காலிக, நிரந்தரமற்ற மற்றும் பயிற்சி மாணவர்களாக சில ஆண்டுகள் பணியாற்றிவிட்டு தற்போது வேலை கிடைக்காமல் வெளியே இருப்பவர்கள்.
நீண்ட காலத்திற்கு பிறகு ஒன்று சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் நண்பர்களை ஒருவருக்கொருவர் வர்க்க உணர்வுடன் ஆறத் தழுவி உற்சாகமடைந்தனர். பங்கேற்ற தொழிலாளர்களின் ஏகோபித்த வரவேற்புடனும் ஒப்புதலுடனும் மாருதி சுசுகி அஸ்தானி மஸ்தூர் சங்க் (Maruti Suzuki Asdhani Mazdoor Sangh) என்னும் தொழிற்சங்கம் தொடங்கிவைக்கப்பட்டது. வந்திருந்த தொழிலாளர்கள் அனைவரும் உணர்வு பொங்க தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். ஹரியானா மற்றும் டெல்லியை சுற்றிலும் உள்ள பல தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் இந்த தொழிற்சங்கத் தொடக்க விழா கூட்டத்தில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு தொழிற்சங்கங்களிடமிருந்து வாழ்த்துச் செய்திகள் வந்து குவிந்தன.
உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட வெவ்வேறு தொழிற்சங்க பணிகளுக்கான பணிக் குழுக்களையும் தொழிற்சங்க நடவடிக்கைகளை முடிவு செய்து தலைமை தாங்கி வழிநடத்துவதற்கான தலைமை ஒருங்கிணைப்பு குழுவையும் தேர்வு செய்தனர். அத்துடன் உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு கையொப்பமிட்ட கோரிக்கை பட்டியல் முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த கோரிக்கை பட்டியலை ஜனவரி 9 அன்று நிர்வாகத்திடமும் ஜனவரி 10 அன்று பெரும் பேரணியாகச் சென்று தொழிலாளர் நலத்துறையின் ஆணையரிடமும் சமர்ப்பிப்பது என்றும் முடிவானது.
அவ்வாறே ஜனவரி 9 அன்று கோரிக்கை பட்டியலை மாருதி சுசுகி நிர்வாகத்திடம் தொழிலாளர் பிரதிநிதிகள் சமர்ப்பித்தனர். ஜனவரி 10 அன்று இந்நாள் மற்றும் முன்னாள் தற்காலிக மற்றும் நிரந்தரமற்ற ஊழியர்கள் பயிற்சி மாணவர்கள் என்று அனைவருமாக ஆயிரக்கணக்கானவர்கள் கூர்கான் துணை ஆணையர் அலுவலகத்தின் முன்னால் திரண்டு அங்கிருந்து பேரணியாகச் சென்று தொழிலாளர் நலத்துறை செயலாளரிடம் தங்களது கோரிக்கை பட்டியலை சமர்ப்பித்தனர்.
இந்தப் பேரணியில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் கம்பெனி கேட்டில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மானேசர் சவுக் என்கிற இடத்தில் கூடி ஒரு கூட்டம் நடத்தினர். தொழிலாளர்களில் சிலர் தங்களது உணர்வுகளை கொட்டி தீர்த்தனர். வேறு சிலர் பிரச்சினைகளை விளக்கி உரையாற்றினர். பகதூர்கர் என்கிற தொழிலாளி “நிர்வாகம் விரும்பிய போதெல்லாம் தங்களை உதைத்து தள்ளுவதற்கு நாங்கள் ஒன்றும் கால்பந்து இல்லை” என்றும், “தாங்கள் எப்போதும் நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் முடிவில்லாமல் அலைக்கழிக்கப்படுகிறோம்” என்றும் ஆவேசமாக பேசினார்.
மாருதி சுசுகி நிர்வாகம் என்பது மற்ற பிற தொழில் நிர்வாகங்களை போன்றதல்ல. முற்றிலும் தனிச்சிறப்பானது என்கின்றனர் அனுபவப்பட்ட தொழிலாளர்கள். ஒரு தொழிற்சாலையில் நிர்வாகத்திற்கும் தொழிலாளருக்குமான உறவில், மாருதி சுசுகி நிர்வாகம் தங்களின் வசதிக்கும் தேவைக்கும் ஏற்ப, புதிய வகையில் குறுகிய கால வேலை (Short Term Work) அடுத்தடுத்த காலங்களில் வேலை (Intermittent Work) பகுதி அளவு வேலை (Part Time Work) என்று பலப் பல வகையான உழைப்பு முறைகளை கண்டறிந்து புகுத்தி இருக்கிறது.
தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டுவதிலும் அவ்வாறே. நிரந்தரமற்ற தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு உடல் சோர்வுடன் மன அழுத்தமும் ஏற்படுகின்ற அளவு மிகக் கடுமையான உழைப்பு நிலைமைகள். உற்பத்தி இலக்குகளை எட்டவில்லை என்றால் ஊதியத்தில் கணிசமான தொகை பிடித்தம் செய்யப்படும். எந்தவித மனிதத்தன்மையோ மனசாட்சியோ இல்லாமல் உணவு இடைவேளை அரை மணி நேரம் என்று வைத்துள்ளது. இதில் வேலை இடத்திலிருந்து உணவு கூடத்திற்கு ஒரு கிலோமீட்டர் வரை நடந்து செல்ல வேண்டும். தேநீர் இடைவேளை ஏழு நிமிடங்கள் என்பது இன்னும் கொடுமை. அதற்குள் சிறுநீர் கழித்து விட்டு தேநீரும் அருந்தி விட்டு வேலை இடத்துக்கு வந்து விட வேண்டும். இவற்றில் ஏற்படும் காலதாமதம் என்பது வினாடிகளில் கணக்கிடப்பட்டு அவற்றுக்குரிய தொகை ஊதியத்தில் பிடிக்கப்படும்.
தொழிலாளர்களின் மீதான மாருதி சுசுகி நிர்வாகத்தின் அணுகுமுறைகளும் தொழிலாளர்களை இறுக்கிப்பிழிய அது மேற்கொள்ளும் சுரண்டல் முறைகளும் தொழிலாளர்களை அடக்கி ஒடுக்குவதற்கு அது கையாளும் குரூர வழிமுறைகளும் கிழக்கத்திய (Oriental) கொடுங்கோன்மை எனப்படும் வகையைச் சேர்ந்தவையாகும்.
இதே போன்றவற்றைத்தான் சமீபத்தில் சாம்சங் தொழிலாளர் போராட்டத்தில் தமிழகம் கண்டது. ஜப்பான் தென்கொரியா இரண்டுமே கிழக்கத்திய வகையைச் சேர்ந்தவையேயாகும்.
அதனால்தான் 2012 ன் கொடுமையான சம்பவங்களுக்கு பின்னரும் கூட நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை. அதே கடுமையான வேலை நிலைமைகள்தான் இன்றும் நீடிக்கின்றன.
இப்போது பணியில் இருக்கும் 36,000 தொழிலாளர்களில் 17 சதவீதத்தினர் மட்டுமே நிரந்தர தொழிலாளர்கள். மற்ற அனைவருமே அதாவது சற்றேறக்குறைய 30,000 பேர் நிரந்தரமற்ற தொழிலாளர்கள் (Non-Permanent Workers), தற்காலிக தொழிலாளர்கள் (Temporary Workers), காஷுவல் தொழிலாளர்கள் (Casual Workers), ஒப்பந்தத் தொழிலாளர்கள் (Contract Workers), தொழிற்பயிற்சி மாணவர்கள் (Student Trainees) மற்றும் அரசு ஊதியம் பெறும் அப்ரண்டீசு பயிற்சியாளர்கள் (Apprentice Trainees) ஆவர். இவர்களில் மாருதி தொழிற்சாலையில் இயங்கும் தொழிற் பயிற்சி மையத்தின் மாணவர்கள் மற்றும் அரசு ஊதியம் பெறும் அப்பிரன்டிஸ் பயிற்சி பெறும் மாணவர்கள் சேர்ந்து 21 சதவீதமாகும். அதாவது சற்றேறக்குறைய 7,500 பேர்கள் ஆகும்.
தற்காலிகத் தொழிலாளர்கள் முதலில் tw1 என்று தெரிவு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுகின்றனர். பிறகு 7 மாதம் முதல் ஒரு ஆண்டு கழித்து அவர்களில் 10% பேர் மட்டும் tw2 என்று மாற்றப்படுவார்கள். பின்னர் ஏழு மாதம் முதல் ஓர் ஆண்டு கழித்து அவர்களில் விரல் விடக்கூடிய சிலர் மட்டும் tw3 என்று பணியமர்த்தப்படுவர்.
இதே முறையில் தான் காண்ட்ராக்ட் ஒப்பந்த தொழிலாளர்கள் cw1, cw2, cw3 என்று பணியமத்தப்படுகின்றனர். அதன் பிறகு மீண்டும் புதியவர்கள் உள்ளிழுக்கப்படுவர்.
இந்நிலையில் மாருதி சுசுகி தொழிற்சாலையில் மொத்த உற்பத்தியுமே இந்த வகை தொழிலாளர்களை சார்ந்தே நடைபெறுகிறது. 6000 எண்ணிக்கையில் உள்ள நிரந்தர தொழிலாளர்கள் அதிகபட்சமாக இது போன்றவர்களின் வேலைகளை நெறிப்படுத்துவதும் மேற்பார்வையிடுவதுமே.
தொழிற்பயிற்சி மாணவர்கள் மற்றும் அப்ரண்டீசுகள் இரண்டு ஆண்டுகள் பணி செய்து தொழில் பயிற்சி கல்வி சான்றிதழ் பெறுகிறார்கள். அவர்களுக்குப் பொதுவான தொழில் திறனை வளர்த்துக்கொள்ளும் வகையிலான பயிற்சி இல்லாமல் அவர்கள் அனைவருமே நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். எனவே சிலருக்கு ஆண்டு முழுவதும் திருகாணிகளை முடுக்குவதே வேலையாகிப் போய் விடுகிறது. பலரும் இவ்வாறு வெவ்வேறு வகையான தனித்த வேலைகளிலேயே ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஆகவே பயிற்சியின் முடிவில் இவர்கள் தருகின்ற சான்றிதழ் வேறு தொழிற்சாலைகள் எதிலும் மதிக்கப்படுவதில்லை. சமீபத்தில் 25 வயதான சந்தீப் என்ற தொழிலாளி அரசு வேலைக்கு விண்ணப்பித்ததில் மாருதியில் பெற்ற சான்றிதழை அவர்கள் ஏற்றுக் கொள்ளவே மறுத்துவிட்டனர். இதை எதிர்த்து அவர் தனிப்பட்ட முறையில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
தொழிலாளர்களின் கோரிக்கைப் பட்டியல்
- நிரந்தரத் தன்மை உள்ள வேலைகளுக்கு நிரந்தர தொழிலாளர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். அவ்வகையில் இருக்கின்ற நான்கு தொழிற்சாலைகளிலும் 30,000 நிரந்தர பணியாளர்களை பணியமர்த்த வேண்டும்.
- இவை தவிர அரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் கார்க்கோடா நகரில் புதிதாக தொடங்கப்பட இருக்கும் புதிய தொழிற்சாலையில் நிரந்தரப் பணியிடங்களுக்கு ஏற்கெனவே மாருதி தொழிற்சாலைகளில் பணிபுரிந்து இப்பொழுது வேலைக்காக காத்திருக்கும் தொழிலாளர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்.
- இந்த இடைக்காலத்தில் எல்லா வகை தற்காலிக நிரந்தரமற்ற பணியாளர்களுக்கும் உடனடியாக 40% ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். அத்துடன் நிரந்தர தொழிலாளர்களுடன் உள்ள ஊதிய வேறுபாட்டைக் கணக்கிட்டு ஈட்டுத்தொகையாக (Clearance Amount) மாதந்தோறும் வழங்க வேண்டும்.
- பயிற்சி மாணவர்களை (Student Trainee & Apprentice) நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்துவதை நிறுத்த வேண்டும். மாணவர்கள் தங்கள் தொழில் திறனை வளர்த்துக் கொள்ளும் வகையில் பல்துறை பயிற்சி அளிக்க வேண்டும்.
இந்த புதிய தொழிற்சங்கமும் அதன் நடவடிக்கைகளும் தன்னழுச்சியாக திடீரென்று தொடங்கி விடவில்லை. மாருதி சுசுகி தொழிலாளர் சங்கம் வேலை நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் தொழிலாளர்களின் வழக்குகளிலிருந்து விடுவிக்கவும் மீண்டும் பணியில் சேர்க்கவுமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கென்று தனிச்சிறப்பாக மாருதி சுசுகி போராட்ட கமிட்டி (Maruti Suzuki Struggle Committee) ஒன்றை அமைத்திருந்தது.
இப்போது அந்தப் போராட்ட கமிட்டியின் வழிகாட்டுதலின் பேரில்தான் புதிய தொழிற்சங்கம் தனியே தொடங்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே வேலை நீக்கம் செய்யப்பட்ட தங்களை மஸ்தூர் சபா (Mazdoor Sabha) என்ற தனி அமைப்பாக அணி திரட்டி கொண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களும் இந்த புதிய போராட்ட முயற்சிகளுக்கு ஆதரவளித்துள்ளனர்.
எனவே மாருதி சுசுகி தொழிலாளர்கள் தங்களை பணியில் இருக்கும் தொழிலாளர்கள், வேலை நீக்கம் செய்யப்பட்டவர்கள், வேலை இல்லாமல் வெளியே இருக்கும் தற்காலிக நிரந்தரமற்ற தொழிலாளர்கள் என்று அனைவரும் தனித்தனி தொழிற்சங்கங்களாக அமைத்துக் கொண்டு அனைத்து தொழிலாளர்களுக்குமான கோரிக்கைகளுக்கான போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இவை தொழிலாளர்களை வர்க்கம் என்ற முறையில் ஒற்றுமைப்படுத்தும் நோக்கம் கொண்டது என்பதனால் இந்திய தொழிலாளி வர்க்கம் முழுவதினுடைய கவனத்தை ஈர்க்கக்கூடிய ஒன்றாகும். பிற நாடுகளின் தொழிலாளி வர்க்கத்துக்கும் கூட முன்னுதாரணமாய் அமையக் கூடியதாகும்.
மாருதி சுசுகி தொழிலாளர்கள் எதிர் கொண்ட நிர்வாகம் மற்றும் அரசின் அடக்குமுறைகள் மற்றும் அச்சுறுத்தல்கள், சமூகத்திலும் குடும்பங்களிலும் அவர்கள் எதிர்கொள்ள நேர்ந்த துன்ப துயரங்கள், மனக்குமுறல்கள், உளைச்சல்கள் மற்றும் தடுமாற்றங்கள் என்று எழுத்தில் விவரித்திட இயலாத பலவற்றையும் தங்களின் சக தொழிலாளர்களுடன் கைகோர்த்து வர்க்க ஒற்றுமையால் வென்று கடந்திருக்கின்றனர். 12 ஆண்டுகள் ஆன பின்னரும் முதலாளிகளின் ஆதிக்கத்தினை ஏற்றுச் சரணடைய அவர்கள் ஒப்பவில்லை. வர்க்க உணர்வை இழக்கவில்லை. தங்களின் போராட்டத்தை கைவிடவுமில்லை. இவையெல்லாம் இந்திய தொழிலாளி வர்க்கம் பெருமை கொள்ளக் கூடிய அம்சங்களாகும். மாருதி சுசுகி தொழிலாளர்களின் வர்க்க உணர்வு மெச்சிப் போற்றத்தக்கதாகும். இந்த வர்க்க ஒற்றுமையின் மேன்மையை நாம் நாடெங்கும் பரப்ப வேண்டும். இந்தியத் தொழிலாளி வர்க்கத்திற்கு நம்பிக்கையூட்டிப் போராட தூண்ட வேண்டும்.
தொழிலாளி வர்க்கத்திற்கு வெளியே இருக்கும் சிறு குறு தொழில் உடமையாளர்களும், வணிகர்களும், விவசாயிகளும், மீனவர்களும் கார்ப்பரேட் முதலாளிகளாலும் அவர்களுக்கு சேவை செய்யும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலின் ஆட்சியினாலும் பலவிதமான ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகின்றனர். கூலித் தொழிலாளர்களாக உழைத்து தேயும் பல கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்நிலையோ சொல்லொணாத் துயரங்கள் நிறைந்தவை. எனவே நாட்டில் ஒடுக்கப்படும் சுரண்டப்படும் எல்லா மக்களையும் தன்னோடு சேர்த்து விடுதலை செய்யும் வரலாற்றுக் கடமையும் பொறுப்பும் தொழிலாளி வர்க்கத்திற்கு உண்டு என்பதறிந்து தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் அவர்களையும் உள்ளடக்கிய நாடு தழுவிய ஒரு கூட்டமைப்பை உருவாக்கும் தேவையையும் உணர்ந்து செயல்பட வேண்டிய வரலாற்றுத் தருணம் இது.
மாருதி சுசுகி தொழிலாளர்கள் முன்னெடுக்கும் இந்த வர்க்கப் போராட்டத்திற்கு இந்திய உழைக்கும் மக்கள் அனைவரும் துணை நிற்க வேண்டும். அவர்களது போராட்டத்தின் வெற்றிக்கு தங்களால் ஆனது அனைத்தையும் செய்ய முன்வர வேண்டும்.
சுந்தரம்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram